Tuesday, December 15, 2020

ரன்னிங் டைரி - 160

  15-12-2020 8:30

தஞ்சோங் காத்தோங் ரோடு 

மிதமான வெய்யில்.  ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது இந்தியா சீன பொருட்கள் இறக்குமதியை எவ்வளவு நம்பியுள்ளது என்றுதான்.இந்திய அமைச்சர்கள் குழுவின் அறிக்கையிலேயே அந்த பட்டியல் உள்ளது.  அமெரிக்க-சீன வர்த்தகமும் அப்படியே. "Decoupling is almost impossible" என்றுதான் தோன்றியது. புதிய அமெரிக்க அரசு சீனாவை எவ்வாறு கையாளும் என்று யோசித்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Monday, December 14, 2020

ரன்னிங் டைரி - 159

 14-12-2020 8:35

தஞ்சோங் காத்தோங் ரோடு 

நல்ல வெய்யில். ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது நேற்று மீண்டும்  பார்த்த "klaus" திரைப்படம் தான் . கிறிஸ்மசை வைத்து பலவிதமான திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளன . கடந்த ஒரு மாதங்களாக தினமும் கிறிஸ்மசை மையமாக வைத்த திரைப்படங்களை நாங்கள் குடும்பத்தோடு பார்த்து வருகிறோம். கிட்டத்தட்ட அனைத்து படங்களுமே feel good  movies. "Klaus" ஒரு அற்புதமான படம். ஏனோ அந்த போஸ்ட்மேன் பாத்திரம் கண்முன்னே வந்து கொண்டே இருந்தது. இன்றும் ஒரு படம் பார்க்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.


ரன்னிங் டைரி - 158

 12-12-2020 5:35

கிழக்கு கடற்கரை பூங்கா 

குளிர் காற்று.கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தவுடன் என்னை அறையாமலேயே ஒரு புத்துணர்வு வந்தது. ஓட்டத்தில் வேகம் கூடியது. கடலைப் பார்த்துக் கொண்டே ஓடினேன்.இன்று வயதானவர்கள் அதிகம் இல்லை. ஆட்களே அதிகம் இல்லை. நேற்று மரங்களைப் பற்றி ஒரு கட்டுரைப் படித்தேன். ஏனோ அது மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. மரங்கள் ஒரு அதிசயம். எனக்கு மரங்களையும் ,நிலவையும் பார்க்க ரொம்ப பிடிக்கும் . கடற்கரையில் நிலவைப் பார்ப்பது ஒரு பெரும் அனுபவம். இன்று நிலவில்லை இருந்திருந்தால் நான்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டே  வீட்டை அடைந்தேன்.

Friday, December 11, 2020

ரன்னிங் டைரி - 157

 11-12-2020 9:05

உபியிலிருந்து வீடுவரை 

கடுமையான வெய்யில். யூனோஸ் வரும்வரை மனதில் எதுவும் தோன்றவில்லை. யூனோஸ் வளைவில் திரும்பியவுடன் ஞாபகத்தில் வந்தது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிதான். அதற்கு காரணம் இன்று அவர்கள் நியூசிலாந்து அணியுடன் இரண்டாவது டெஸ்ட் விளையாடுகிறார்கள். பல வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் முகம் எண்ணத்தில் வந்து கொண்டே இருந்தது. வீட்டை நெருக்கும் போது மெஸ்ஸியின் ஞாபகம் வந்தது... மெஸ்ஸியின் கோல்களை நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Thursday, December 10, 2020

ரன்னிங் டைரி - 156

 10-12-2020 8:40

வீட்டிலிருந்து கிழக்குக்கடற்கரை 

இதமான வெய்யில். இன்று காலை எழுந்தவுடனே முடிவு செய்துவிட்டேன் கிழக்குகடற்கரைக்கு செல்ல வேண்டுமென்று. ஓட ஆரம்பித்தவுடன் எதிரே ஒரு பாடி சாக்லேடை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.எனக்கு அதைப் பார்த்தவுடன் நான் எப்படி சிறு சிறு நிகழ்வுகளையும் கொண்டாட  முடிவு செய்து அதைச் செய்ய ஆரம்பித்தேன் என்ற யோசிக்க ஆரம்பித்தேன். Aljunied -ல் இருந்த போது சின்ன சின்ன விசயங்களுக்கு அருகில் இருந்த Cheers கடைக்கு சென்று ஏதாவது பிடித்ததை வாங்கிச் சாப்பிடுவேன். அதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த லாக்கடவுனில் அப்படி செய்ய முடியவில்லை. அப்போது சாப்பிட்டதெல்லாம் மனதில் வந்தது. கிழக்குக்கடற்கரை சிக்னல் வந்தது.என்னை அறியாமலேயே வேகம் அதிகரித்தது. கடலை பார்த்தவுடன் கண்ணில் கண்ணீர் வந்தது. ஓடுவதை நிறுத்தி விட்டு நின்று இரண்டு கைகளையும் நீட்டி கடல் காற்றை சுவாசித்தேன். கடல் ஒரு அதிசயம். கடல் ஒரு உணர்வு .. எப்படி ஏதேதோ மனதில் வந்து கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று கடலைப் பார்த்தேன். என்ன ஒரு ஆனந்தம்! கடலை விட்டு பிரிய மனமில்லாமல் வீட்டிற்கு திரும்பினேன்.

ரன்னிங் டைரி - 155

09-12-2020 9:05

உபியிலிருந்து வீடுவரை 

கடுமையான வெய்யில். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது இந்திய கிரிக்கெட் வீரர் நட்ராஜ் தான். நான் அவரது பௌலிங்கை ஹயிலைட்ஸில் தான் பார்த்திருக்கிறேன். நல்ல தொடக்கம். பார்ப்போம் என்றெண்ணிக் கொண்டேன். தாந்தேயின் "The Divine Comedy" புத்தகத்தை மீண்டும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இது எனது மூன்றாவது முறை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம்.பல வரிகள் மனதில் வந்து கொண்டே இருந்தன. தமிழில் ஏன் நல்ல மொழிப்பெயர்ப்பு வரவில்லை என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Wednesday, December 9, 2020

ரன்னிங் டைரி - 154

  07-12-2020 8:35

தஞ்சோங் காத்தோங் ரோடு 

நல்ல வெய்யில். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் மனதில் ஏதும் ஓடவில்லை. எண்ணம் முழுவதும் சுவாசத்தில் தான் இருந்தது. மவுண்ட் போட்டேன் ரோடு திருப்பத்தில் ஒரு வயதான தமிழ் தம்பதியர் சிரித்து பேசிக் கொண்டு எதிரே வந்துகொண்டிருந்தனர். எண்ணம் மூச்சில் இருந்து என் எதிர் வீட்டு தாத்தா பாட்டியிடம் சென்றது.பாட்டி சமீபத்தில் இறந்து விட்டார். தாத்தாவை ஒற்றை ஆளாக பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. பாட்டி என் மகளுக்கு எப்போதும் சாக்லட் மற்றும் சீன இனிப்புகள் வாங்கி வந்து தருவார். ஆங்கிலம் அதிகம் தெரியாதலால் புன்னகையே எங்கள் மொழியாய் இருந்தது. அவரைப் போல நானும் அதிகாலையில் எழுபவன். அவர்களின் உணவு அறை  எங்களின் சமையலறையில் இருந்து பார்த்தால் தெரியும். எங்கிருந்து எனக்கு கைகாட்டிச் சிரிப்பார். அவரை நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.


Tuesday, December 8, 2020

ரன்னிங் டைரி - 153

 06-12-2020 5:35

தஞ்சோங் காத்தோங் ரோடு 

இன்று ஓட வேண்டாமென்றுதான் நினைத்திருந்தேன்.ஆனால் எழுந்தவுடன் ஓடத் தோன்றியது. ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது " Basic Structure Doctrine"  தான். எனக்கு இதைப் பற்றி போன வாரம் வரை சரியாக தெரியாது . கடந்த சில நாட்களாக இதைப் பற்றி சில கட்டுரைகளை படித்தேன். மிக முக்கியமான ஒன்று.நாம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டியது என்று எண்ணிக் கொண்டேன். ஆண்டி முகர்ஜீ  எழுதிய கட்டுரை ஞாபகத்தில் வந்தது . நம்பிக்கையை இழப்பதென்பது ஒரு பெரிய வலி. நிலா இன்னும் ஒழி வீசிக்கொண்டிருந்தது. நிலாவை ஒரு நாள் டெலெஸ்கோப்பில் பார்க்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 152

  05-12-2020 05:55

வீட்டிலிருந்து பல வழிகளில் முஸ்தபா வரை 

மாமா வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன். நல்ல குளிர். "மாங்குயிலே பூங்குயிலே" வாக்மேனில் ஆரம்பித்தது. இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் சமீபமாக சிம்பொனி இசைதான் ஞாபகத்தில் வருகிறது. இளையராஜாவின் பின்னணி இசையை ஒரு opera மாதிரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தீடிரென்று "love jihad" எண்ணத்தில் தோன்றியது. உத்தரபிரதேசத்தில் இயற்றியுள்ள சட்டம் .. என்னத்த சொல்ல  . நான் அதை முழுவதும் படித்தேன்.  இப்போது நினைக்கையில் ஒரு விதமான உணர்வு எண்ணில் ஏற்பட்டது. அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டே முஸ்தபா அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 151

 04-12-2020 09:05

உபியிலிருந்து வீடுவரை 

மனதில் எந்த நினைப்பும் இல்லாமல் ஓடினேன். வெகு குறைவாகவே இப்படி அமையும்.

Thursday, December 3, 2020

ரன்னிங் டைரி - 150

03-12-2020 08:35

தஞ்சோங் காத்தோங் ரோடு

கடுமையான வெய்யில். முதலில் கோவிலுக்கு ஓடினேன். நேற்று என் பிறந்த நாள். கோவிலுக்கு செல்ல முடியாமல் போனது. அதனால் இன்று கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முன்னரே முடிவு செய்திருந்தேன்.மாதாவின் முன் நின்றேன்.சற்று நேரம் கழித்து பங்குத்தந்தை என்னைப் பார்த்து கை காட்டினார். நான் சிரித்தேன். சட்டென்று சென்ற வாரம் படித்த ஒன்று எண்ணத்தில் தோன்றியது.  புனித அகஸ்தின் எழுதிய "Teaching Christianity" என்று சிறிய புத்தகத்தில் எப்படி பிரசங்கம் வைக்க வேண்டுமென்று அவர் கூறுவது மிகவும் முக்கியமானவை. ஒரு நல்ல பிரசங்கம் எனபது பின்வரும் மூன்றையும் கொண்டிருக்கும் என்கிறார் அவர். அதாவது 

1.Teaching 

2.Delighting 

3.Persuading 

சிரித்துக் கொண்டே மீண்டும் ஓட ஆரம்பித்தேன். புனித அகஸ்தினின் பிரசங்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்று எண்ணிக் கொண்டே வேட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 149

30-11-2020 08:25

தஞ்சோங் காத்தோங் ரோடு 

மழை மேகம். ஓட ஆரம்பித்தவுடனே எண்ணத்தில் தோன்றியது மாரடோனாவின் இங்கிலாந்திற்கு எதிரான கோல் தான். நான் மெஸ்ஸியின் தீவிர ரசிகன். எல்லோரும் மரடோனாவிலிருந்து மெஸ்ஸியைப் பார்ப்பார்கள் ஆனால் நான் மெஸ்ஸியிடம் இருந்து மரடோனாவை பார்க்கிறேன். மெஸ்ஸியின் பல  கோல்கள் மாரடோனா கோல்கள் போல் தெரியும். இருவருமே குட்டை . Low center of gravity கொண்டவர்கள். களத்தில் இருவரின் செயல்பாடுகளும் ஒரே மாதிரி இருக்கும். நேற்றைய ஆட்டத்தில் மெஸ்ஸி கோல் அடித்த பின்னர் தன் பார்சிலோனா சட்டையை கழற்றி மாரடோனாவின் சட்டையை காண்பித்து தனது குருவுக்கு வணக்கம் செலுத்தினார். மெஸ்ஸியின் பத்தின் பாதியும் மாரடோனாவின் பத்தின் பாதியும் தெரியும் அந்த புகைப் படத்தைப் நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.


Friday, November 27, 2020

ரன்னிங் டைரி - 148

27-11-2020 09:06

உபியிலிருந்து வீடுவரை 

மழை மேகம். மழை வரும் என்று நினைத்துதான் ஓட ஆரம்பித்தேன். ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது  ஈட்ஸ் எழுதிய  "The Second Coming" என்ற கவிதைதான். எனக்கு பிடித்த கவிதை.மனதுக்குள் சொல்லி பார்த்தேன். என்னால் முழுவதையும் நினைவில் இருந்து சொல்ல முடியவில்லை.இந்த கவிதை எழுதி நூறு வருடங்கள் ஆகிவிட்டன. இரண்டு தினங்களுக்கு முன் அதைப் பற்றி ஒரு கட்டுரை வாசித்தேன் அதன் பாதிப்பு. யூனுஸ் வளைவில் சிறுவன் ஒருவன் அர்ஜென்டினா கால்பந்து அணியின் சட்டை அணிந்து எதிரில் வந்து கொண்டிருந்தான். அதில் "Messi " என்று எழுதியிருந்தது. பல தடவை இப்படி சட்டை அணிந்து ஓடுபவர்களை பார்த்திருக்கிறேன் ஆனால் இன்று அந்த சிறுவனை பார்த்தவுடன் மாரோடனா தான் எண்ணத்தில் தோன்றினார்.நான் அவர் விளையாடியதை யூடூபில் தான் பார்த்திருகிறேன். அவரைப் பற்றி பல புத்தகங்களில் படித்திருக்கிறேன் .அவருக்கு இரண்டு பக்கங்கள் உள்ளது .ஒன்று அற்புதமான கால்பந்தாட்டக்காரர். பந்திற்கும் அவருக்கும் ஒரு அற்புதமான உறவு உண்டு. அவர் சொல்வதையெல்லாம் அது கேட்டது. அது  சொல்வதையெல்லாம் அவர் கேட்டார். தனது அணிக்காக அனைத்தையும் கொடுத்தவர். களத்தில் அவரே எல்லாம். மற்றொன்று களத்திற்கு வெளிய ஆடிய மாரோடனா. அரசியல் போதை மருந்து மற்றும் பல விசயசங்களில் தன்னை ஈடுபத்தியவர். அவரைப் பற்றி சிந்தித்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Thursday, November 26, 2020

ரன்னிங் டைரி - 147

  26-11-2020 08:30

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் வந்தது தம்பியின் கல்யாணம் தான்.இன்று அவனுக்கு ஊரில் கல்யாணம். கடந்த பதினைந்து வருடங்களில் ஊரில் நடந்த எந்த கல்யாணத்திற்கும் செல்லவில்லை.இந்த கல்யாணத்திற்கு கண்டிப்பாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன் ஆனால் இந்த கொரோனாவால் முடியவில்லை. என் வயதுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் திருமணங்களுக்கு நான் சென்றதில்லை. கடந்த இரண்டு வருடமாக எனக்கு அடுத்த தலைமுறையினரின் திருமணங்களுக்கும் செல்ல முடியவில்லை. இவன் எங்களோடு வளர்ந்தவன். எங்கள் வீட்டிற்கும் அவர்களின் வீட்டிற்கும் அப்போது வேலி இல்லை. இரவில் வெளியே பாயைப் போட்டு நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டே பல நாட்கள் தூங்கி இருக்கிறோம். ஏனோ அவற்றை நினைத்து கண்ணீர் வந்தது. துடைத்துக் கொண்டே ஓடினேன்.  வாழ்வில் அனைத்தும் பெற்று நிறைவாக வாழ வேண்டுமென்று மனதினுள் வாழ்த்தினேன். அவனின் அம்மா என் அத்தாச்சி எனக்கு மிகவும் பிடித்தவர். என் பள்ளி நாட்களில் நாங்கள் அவர்கள் வீட்டில்தான் பெரும்போலும் நேரம் கழிப்போம். அத்தாச்சி எதிர்கொண்ட துன்பங்கள் மற்றும் அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதம் .... அத்தாச்சி is great ... என்று நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Wednesday, November 25, 2020

ரன்னிங் டைரி - 146

 25-11-2020 08:39

உபியிலிருந்து வீடுவரை 

குளிர்ந்த காற்று என்னை ஓட அழைத்தது.  சற்று நேரத்திலேயே எதிரே ஒரு குழி தோண்டும் வண்டி வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் எனக்கு ஊர் ஞாபகம் வந்தது. எனக்கு சிறு வயதிலிருந்தே இயந்திரங்கள் மீது ஈடுபாடு இருந்ததில்லை. நாண்பர்கள் கார் மற்றும் பைக் பற்றி பேசும் போது நான் அமைதியாக இருந்து விடுவேன். என் மகனுக்கு குப்பை எடுக்கும் வேண்டியென்றால்  உயிர்.  அவனுக்கு எப்படித்தான் அது வருவது தெரியுமோ வீட்டினுள் எங்கிருந்தாலும் பால்கனிக்கு வந்துவிடுவான்.  அவனுக்கு அந்த வண்டியைப் பார்ப்பதில் பேரானந்தம்.எனக்கு ஏன் வண்டிகளிலும் இயந்திரங்களில் ஆர்வமே வரவில்லை என்று யோசித்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.


ரன்னிங் டைரி - 145

 24-11-2020 08:30

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஓட ஆரம்பித்தவுடனேயே அம்மாச்சியின் ஞாபகம் வந்தது. அம்மாச்சி இல்லாத அம்மாச்சி வீட்டை நினைத்தே பார்க்க முடிவவில்லை. போனில் ஊரில் உள்ளவர்களிடம் பேசும் போதெல்லாம் அம்மாச்சி வீட்டுக்கு சென்றீர்களா ,அம்மாச்சி வீட்டில் மீன் பாடு எப்படி என்று கேட்காமல் இருந்ததே இல்லை. இனிமேல் அப்படி கேட்க முடியாதென்றே நினைக்கிறேன்.அம்மாச்சியை நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Saturday, November 21, 2020

ரன்னிங் டைரி - 144

 20-11-2020 08:45

உபியிலிருந்து வீடுவரை 

மழை மேகம். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது தருமராஜ் அவர்கள் எழுதிய "அயோத்திதாசர்" புத்தகம் தான். அவரின் ப்ளோக்கில் வந்த கட்டுரைகளை படித்துள்ளேன். கண்டிப்பாக  இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.யூனுஸ்  அருகில் வந்ததும் laksa நினைவில் வந்தது. அது சாப்பிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. முழு சைவ சாப்பாடு சாப்பிட்டும் பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்த வாரம் இவை இரண்டையும் சாப்பிட வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Thursday, November 19, 2020

இரண்டாயிரம் ஆண்டிற்குப் பிறகு வந்தச் சிறந்த தமிழ் நாவல்கள் - என் தேர்வு

நூல்கள் பட்டியல் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். புத்தகம் வாங்குவதற்கு அடிக்கடி நான் பட்டியல் போடுவேன். போன மாதம் ஒருவர் food court-ல் நான் புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து தமிழில் நீங்க படிச்ச நாவல்களை சொல்லுங்கள் என்றார். அப்போது கீழே உள்ள சில புத்தகங்களில் சிலவற்றை சொன்னேன். வீட்டுக்கு  வந்தவுடன் பட்டியலை தயாரிக்க ஆரம்பித்தேன். கதை மாந்தர்கள் கண்முன்னே வந்து சென்றனர். அந்தந்த புத்தகங்களை வாசித்த இடங்களின் ஞாபகமும் வந்தது. கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் படித்த புத்தங்களின்  ஞாபகங்களுடன் நேரம் செலவழித்தேன்.  கீழே கூறியுள்ள அனைத்து புத்தங்களையும் நான் படித்திருக்கிறேன். இரண்டாயிரம் ஆண்டிற்கு பிறகு வெளிவந்த நாவல்களில் எனக்கு பிடித்தவை கீழே : 

1)காவல் கோட்டம்  - சு.வெங்கடேசன் 

2) தாண்டவராயன் கதை -பா.வெங்கடேசன் 

3)உப்பு நாய்கள்  - லஷ்மி சரவணக்குமார் 

4)நீலகண்டம்  -சுனீல் கிருஷ்ணன் 

5)சுபிட்ச முருகன்  - சரவணன் சந்திரன் 

6)அஞ்ஞாடி  - பூமணி 

7)தீம்புனல் - ஜி. கார்ல் மார்க்ஸ் 

8) ஆழி சூழல் - ஜோ .டி  குருஸ் 

9)வேனல் - காலப்பிரியா 

10)பருக்கை  - வீரபாண்டியன் 

11)வலம்  -  விநாயக முருகன் 

12)துறைவன்  - கிறிஸ்டோபர் ஆன்றணி 

13)ரோல்ஸ் வாட்ச்  - சரவணன் சந்திரன் 

14) யாமம் - எஸ் . ராமகிருஷ்னன் 

15)புலிநகக் கொன்றை - பி ஏ கிருஷ்ணன் 

16) கடல்புரத்தில்  - வண்ண நிலவன் 

17)கூகை  - சோ.தர்மன் 

18)சிலுவைராஜ் சரித்திரம்  - ராஜ் கௌதமன் 

19)செடல் -இமையம் 

20)ஆப்பிளுக்கு முன் - சரவன்கார்த்திகேயன் 

21)கானகன்  - லஷ்மி சரவணக்குமார் 

22)கொரில்லா - ஷோபாசக்தி 

23)நடுகல் - தீபச்செல்வன் 

24) வெட்டுப் புலி  - தமிழ்மகன் 

25) வேள்பாரி - சு.வெங்கடேசன் 

26)மிளிர் கல் - இரா. முருகவேள் 

27)காடு - ஜெயமோகன் 

28)சுளுந்தீ - முத்துநாகு 

29)கங்காபுரம் -வெண்ணிலா 

30)பேய்ச்சி -நவீன் 

31)ஆறாவடு - சயந்தன்

32)அஞ்சுவண்ணம் தெரு  - தோப்பில் முஹம்மது மீரான் 

33) விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் - சி.மோகன் 

34)அழியாச்சொல் - குட்டி ரேவதி 

35) மீன்காரத் தெரு -கீரனுர் ஜாகீர் ராஜா 

36)கோட்டை வீடு  - ம.கா முத்துரை 

37)கழுதைப்பாதை -எஸ். செந்தில்குமார் 

38)மரயானை -சிந்து பொன்ராஜ் 

39)வாரணாசி  - பா.வெங்கடேசன் 

40)பட்டக்காடு  - அமலராஜ் பிரான்சிஸ் 

41)உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன் 

42)சலூன்  -வீரபாண்டியன் 

43)ஜெப்னா பேக்கரி - வாசு முருகவேள் 

44)காடோடி - நக்கீரன் 

45)இச்சா - ஷோபா சக்தி 

46)யாமம் - எஸ். ராமகிருஷ்ணன் 

47)கெடை காடு - ஏக்நாத் 

48)குற்றப்பரம்பரை - வேல ராமமூர்த்தி 

49)ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன் 

50)ஆதிரை - சயந்தன் 

51)சக்கை  - கலைச்செல்வி 

52) பார்த்தீனியம் - தமிழ்நதி 

53)ஏதிலி - அ.சி. விஜிதரன் 

54)ஏந்திழை  - ஆத்மார்த்தி 

55) உம்மத் -ஸர்மிளா செய்யத் 

56)இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா 

57)மலைக்காடு - சீ.முத்துசாமி 

58)பேட்டை - தமிழ்ப் பிரபா 

59)லாக்கப்  - சந்திரகுமார் 

60)இரவு  - ஜெயமோகன் 

61)கொற்கை - ஜோ .டி  குருஸ்

62)வெண்முரசு வரிசை நாவல்கள் - ஜெயமோகன் 

63) வாழ்க வாழ்க - இமையம் 

64)தூர்வை  -சோ.தர்மன்

65)பிறகு - பூமணி 

66)ராஜீவ்காந்தி சாலை  - விநாயக முருகன்

67)ஐந்து முதலைகளின் கதை -சரவணன் சந்திரன் 

68)கீதாரி - கலைச்செல்வி 

எனக்கு பிடித்த இன்னும் சில நூல்களின் வெளிவந்த வருடங்கள் தெரியவில்லை அதனால் அவற்றை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை .

*numbering is just for convenience 

ரன்னிங் டைரி - 143

 19-11-2020 08:20

தஞ்சோங் காத்தோங் ரோடு 

மழை மேகம். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது நேற்று வாட்சப்பில் நடந்த ஒரு உரையாடல்தான். ஒரு விசயத்தை பிடிக்கவில்லை என்று சொன்னால் உடனே "உனக்கு அது தெரியுமா இது தெரியுமா " என்று கேட்கிறார்கள்.  திரைப்படங்களைப் பற்றி பேசும்போது நம்மவர்கள் அதிகம் உணர்ச்சிவசப் படுகிறார்கள். அவர்களுக்கு பிடித்தது நமக்கும் பிடிக்க வேண்டுமென்று நினைக்கிறாரகள். நான் என்றுமே அப்படி நினைத்ததில்லை. மற்ற விசயங்களில் நாம் "facts, figures & statistics"-ஐ எடுத்துச் சொன்னால் அதை முழுமையாக படிப்பதும் இல்லை. முடிவு எடுத்த பின்னரே பேச ஆரம்பிக்கின்றனர். என்னத்த சொல்ல என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 142

 17-11-2020 08:25

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் வந்தது அந்திரேயா போச்சேலி (Andrea Boceli)-ன் பாடல்கள்தான். அவரின் புதிய பாடல் தொகுப்பு கடந்த வாரம் வெளி வந்ததிருக்கிறது.  எனக்கு அவரின் குரல் மிகவும் பிடிக்கும். அவர் பாடியதை முதலில் சேனல் 5-ல் பல வருடங்களுக்கு முன்பு கேட்டேன். அன்றிலிருந்து இன்றுவரை அவர் பாடல்  எங்கு ஓடினாலும் நின்று கேட்பேன். என்னிடம் அவரின் இரண்டு சிடி தொகுப்புகள் இருந்தன .ஏனோ காதில் ஓடிக் கொண்டிருந்த  பாடல்கள் எதுவும் மனதில் வரவில்லை. அந்திரேயா போச்சேலியின் பாடல்களை மனதில் எண்ணிக் கொண்டே ஓடி முடித்தேன்.

Monday, November 16, 2020

ரன்னிங் டைரி - 141

  16-11-2020 09:05

தஞ்சோங் காத்தோங் ரோடு 

இன்று ஓடுவதற்கு சற்று தாமதமானது. கடுமையான வெய்யில். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது நூலக புத்தங்களை திருப்பிக் கொடுப்பது பற்றித்தான். கிட்டத்தட்ட 21 புத்தங்கள் இந்த வார இறுதிக்குள் return செய்ய வேண்டும்.  21 புத்தங்களில் பதினாரை நான் படித்துவிட்டேன். "Caste: The Lies That Divide Us - Isabel Wilkerson" இந்த புத்தகத்தை நேற்றுத்  தான் வாசிக்க ஆரம்பித்தேன்.இந்த வாரத்திற்குள் அதை படித்து முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.   திடீரென்று "சூரரைப் போற்று" படம் எண்ணத்தில் தோன்றியது.  அந்த படம்  என்னைப் பெரிதும் கவரவில்லை. ஒரு முறை பார்க்கலாம். இந்த படத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Saturday, November 14, 2020

ரன்னிங் டைரி - 140

 14-11-2020 07:05

வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை வரை - மீண்டும் வீடுவரை 

இன்று தீபாவளி சற்று தூரம் ஓடுவோம் என்று முடிவு செய்து ஓடினேன்.ஓடி சற்று நேரத்திலேயே  தமிழர் ஒருவர் குடித்துவிட்டு நடைபாதையில் படுத்திருந்தார். என்னத்த சொல்ல. அவரை பார்த்தவுடன் ஊரில் எப்படி தீபாவளி நாள் இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன்.பண்டாரி அய்யா மற்றும் பக்கத்து வீட்டிலிருந்து வரும் பலகாரங்களுடன் நாள் தொடங்கும். தீபாவளி அன்று ஊரில் இருந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது. பட்டிமன்றம் புதுப்பாடல்கள் புதுப்படங்கள் அறிமுகம் மற்றும் ஸ்பெஷல் படங்கள் இப்படி பல நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கு போட்ட போட்டி நடக்கும். ஆனால் இன்றோ வீட்டில் முறுக்கு கூட இல்லை .நேற்று கடைக்கு சென்றபோது தீர்ந்து விட்டது என்றார். பலகாரம் இல்லாத தீபாவளி தீபாவளியா என்று எண்ணிக் கொண்டேன். வீட்டிற்கு திரும்பி ஓடிவரும்போதும் அவர் அங்கேயே கிடந்தார். அவரை எழுப்ப வேண்டும் என்று எண்ணம் வந்தது . நான் நின்று அவரை எழுப்பி அறைக்கு சென்று தூங்குங்கள் சென்று சொன்னேன். அவர் எழுந்து நின்றார். கை காட்டிவிட்டு வீட்டை அடைந்தேன்.


Friday, November 13, 2020

ரன்னிங் டைரி - 139

13-11-2020 09:10

உபியிலிருந்து தஞ்சோங் காத்தோங் ரோடு வரை 

மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தேன்.கடுமையான வெய்யில். ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது  இந்திய அரசு  அனைவரும் ஆராய்ச்சி கட்டுரைகளை இலவசமாக படித்துக் கொள்ள ஏதுவாக இந்தியா முழுவதும் ஒரே சந்தா என்ற முறையை செயல் படுத்த போதக முடிவு செய்திருப்பதை பற்றித்தான். எனக்கு இந்த மாதிரி கட்டுரைகளை படிப்பது மிகவும் பபிடிக்கும்.  அனைத்து துறைகள் பற்றியும் வாசிப்பேன். இந்த முடிவில் நல்லது கேட்டதென்று இரண்டுமே இருக்கிறது. எனக்கு இதில் நன்மையே அதிகம்.யூனுஸ் mrt வந்தபோது Toshio Saeki-ன் ஓவியங்கள் எண்ணத்தில் தோன்றின. என்ன ஒரு தனித்துவம். யோசிக்க முடியாத விசயங்களை மிக அழகாகவும் provocative - ஆகவும் வரைந்திருக்கிறார். எனக்கு ஜப்பான் ஓவியர்கள் மீது ஒருவிதமான ஈர்ப்பு உண்டு. அவரின் ஓவியங்களை எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Thursday, November 12, 2020

ரன்னிங் டைரி - 138

  12-11-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு 

கடுமையான காலை வெய்யில்.  ஓட ஆரம்பித்த உடனே எண்ணத்தில் தோன்றியது பீகார் தேர்தல் முடிவுகள்தான். காங்கிரஸின் வீழிச்சி தொடர்கிறது. யாராவது தலைமையோடு உட்கார்ந்து கள நிலவரத்தைப் புரியவைக்க வேண்டும். இல்லையென்றால் இந்த வீழிச்சி  மீண்டு எழ முடியாத ஒன்றாகிவிடும். எண்ணம் மீண்டு ஓடிக் கொண்டிருந்த "அடி ஆத்தாடி .." பாடலுக்கு சென்றது. ஜானகி அம்மாளுக்கு ஒரு தனி வகையான குரல். இந்த பாடலில் அது மிகவும் அழகா வெளிப்பட்டிருக்கிறது.அங்கிருந்து இன்று செய்ய வேண்டிய அலுவலக வேலைகள் எண்ணத்தில் வந்தன. இரண்டு demo-கள் இருக்கிறது. எல்லாம் தயாராக இருக்கிறது. பார்ப்போம் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.


ரன்னிங் டைரி - 137

  10-11-2020 16:40

வீட்டிற்குள்ளே 

மிக கடுமையான வெய்யில் அதனால் உள்ளேயே ஓடலாம் என்று முடிவு செய்து பதினைந்து நிமிடங்கள் ஓடினேன். மிக வேகமாக ஓடினேன்.எதை பற்றியும் சிந்திக்கவில்லை. பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு நின்றேன்.

Monday, November 9, 2020

ரன்னிங் டைரி - 136

 09-11-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு 

மழை மேகம். ஓட ஆரம்பித்தவுடன் காதில் எஸ்.பி.பி இளையநிலா பொழிகிறது என்று ஆரம்பித்தார். யாராவது இளையராஜா எஸ்.பி.பி கங்கை அமரன் அவர்களின் நட்பை திரைப்படமாக எடுக்க மாட்டார்களா என்று மனதில் தோன்றியது. மற்றொரு பாக்கம் எடுக்காமல் இருப்பதே நல்லது என்றும் தோன்றியது.திடீரென்று கடைக்கு சென்று வாங்க வேண்டிய பொருட்கள் பற்றிய எண்ணம் மனதில் தோன்றியது. இந்த கொரோனா நாட்களில் வீட்டுச் செலவு மிகவும் கூடி விட்டது. வீணாக எதுவும் வாங்குவதாக தெரியவில்லை ஆனாலும் கூடிக் கொண்டே போகிறது. அப்படியே கொரோனா தடிப்பு மருந்தைப் பற்றி வாசித்த கட்டுரை எண்ணத்தில் வந்தது. எப்போதும் போல இந்த தடவையும் ஏழை எளிய மக்களுக்குத்தான் இறுதியில் கிடைக்கும். என்னத்த சொல்ல என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 135

  08-11-2020 05:45

காலாங்கிலிருந்து லிட்டில் இந்தியா வரை 

நல்ல குளிர். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது அமெரிக்க தேர்தல் முடிவுகள் தான்.  நல்ல வேளையாக பைடன் வெற்றி பெற்றார். மற்றொரு ஐந்து ஆண்டுகள்  டிரம்ப்பின் தலைமையை நினைத்தாலே பயமாக இருக்கிறது. பைடன்  பெரும் மாற்றங்கள் கொண்டு வருவார் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் பேச்சில்  ஒரு  decency  இருக்கும் என்பதை என்னால் கூற முடியும். பாரீஸ் climate agreement  , NATO மற்றும் TPP  போன்றவற்றை இவர் மாற்றினார் என்றால் மிகவும் நல்லது. கமலா ஹரிஸ் பற்றி நம்மவர்கள் பேஸ்புக்கில் எழுதுவதை பார்த்தல் சிரிப்பதா அழுகுவாத என்று தெரியவில்லை. எதையுமே  முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கமே இல்லாமே நுனிப்புல் மேய்ந்து விட்டு வல்லுநர்களுடன் வாதாடுவதென்பது நம்மவர்களுக்கு அல்வா சாப்பிடுவதுபோல் என்று எண்ணிக் கொண்டே மாமாவின் வீட்டை அடைந்தேன்.

Friday, November 6, 2020

ரன்னிங் டைரி - 134

   06-11-2020 08:45

உபி முதல் வீடுவரை 

மகனைப் பள்ளியில் விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தேன் . நல்ல வெய்யில். நேற்று வாசித்த சில கட்டுரைகள் எண்ணத்தில் தோன்றின. "How to write anti-caste solidarity texts"  என்னை வெகுவாக கவர்ந்தது இந்த கட்டுரை. ரூபா விஸ்வநாத் எழுதிய "The Pariah Problem" ஒரு முக்கியமான நூல் அனைவரும் படிக்க வேண்டும். அந்த புத்தகத்தை நினைத்துக் கொண்டே ஓடி வீட்டை அடைந்தேன்.

Thursday, November 5, 2020

ரன்னிங் டைரி - 133

  05-11-2020 08:25

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் வந்தது அமெரிக்க தேர்தல் முடிவுகள்தான். நான் சிங்கப்பூர் வந்த பிறகுதான் அமெரிக்க மற்றும் உலக அரசியலை படிக்க ஆரம்பித்தேன். வெளியுறவு துறையே மிகவும் சுவாரசியமானது அவர்களின் ஒவ்வொரு சொல்லிற்கும் பல பொருட்கள் இருக்கும். இந்த தேர்தலில் மீண்டும் டிரம்ப் வந்தால் என்ன நடக்கும் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன் .

ரன்னிங் டைரி - 132

  03-11-2020 08:20

தஞ்சோங் காத்தோங் ரோடு 

இன்று சற்று குறைந்த தூரமே ஓட வேண்டுமென்று முடிவெடுத்து ஓட ஆரம்பித்தேன். ஆனால் ஓட ஓட ஒருவிதமான புத்துணர்வு ஏற்பட்டது அதனால் ஓடிக் கொண்டே இருந்தேன். மிகவும் சேர்வன பிறகுதான் நின்றேன். மிகவும் திருப்தியான ஒரு ஓட்டம். ஒரு சில நாட்கள் தான் அப்படி அமையும்.

ரன்னிங் டைரி - 131

 02-11-2020 08:30

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஒரு வாரத்திற்கு பிறகு இன்று ஓடினேன். ஓட ஆரம்பித்தவுடனே மனதுக்குள் ஒரே குழப்பம் எந்த பக்கம் ஓடுவதென்று. மெதுவாக நேர ஓடுவது நல்லது என்று முடிவு செய்து நேரே எந்த பக்கமும் திரும்பாமல் ஓடினேன். எதையும் கவனிக்க வில்லை. மனதில் எதுவும் தோன்றவும் இல்லை. அப்படியே வீட்டை அடைந்தேன்.


Wednesday, November 4, 2020

ரன்னிங் டைரி - 130

  26-10-2020 08:25

தஞ்சோங் காத்தோங் ரோடு 

மழை மேகம் .ஓட ஆரம்பித்தவுடனே எண்ணத்தில் வந்தது. "Failure to launch" திரைப்படம் தான். மகனை வீட்டை விட்டு வெளியேற்ற விரும்பும் பெற்றோர் மற்றும் அதை எதிர்கொள்ளும் மகனின் கதை. நமது கலாச்சாரத்திற்கும் அமெரிக்க கலாச்சாரத்திற்கும் இருக்கும் வேறுபாடு மிக வெளிப்படையாக இப்படத்தில் நமக்கு தெரிகிறது. ஒன்று சாகும்வரை பெற்றோருடன் வாழ்வதை பெருமையாக கருதுவது மற்றொன்று பதின் வயதில் பெற்றோரை விட்டு பிரிந்நது சென்று வாழ்வதை பெருமையாக கருதுவது. இரண்டிலும் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. எனக்கு அந்த படம் மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தை நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 129

 23-10-2020 08:35

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது அமெரிக்க தேர்தல் தான்.  அடுத்த வாரம் என்ன நடக்கும் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 128

 21-10-2020 06:05

தஞ்சோங் காத்தோங் ரோடு 

நல்ல குளிர். மழை வரும் என்று எண்ணிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன். முதலில் எண்ணத்தில் வந்தது நேற்று நடந்த உரையாடல் .மீண்டும் அந்த கஸ்டமர் நேற்று சாயங்காலம் அழைத்தார்.  ஆனால் இந்த முறை அவர்கள் ஏன் வேறொரு கம்பெனியை பயன்படுத்தினார்கள் என்பதை விளக்கினார். பெரிய கம்பெனிகளில் இப்படி நடப்பது சகஜம் தான். அது என்னவென்றால்  எங்களிடம் ஒப்பந்தம் செய்த முழு அணியும் இப்போது மற்றொரு துறைக்கு மாற்றப் பட்டர்கள். இப்போது புதிதாக வந்திருக்கும் அணி பழைய அணியோடு வேலை செய்த அனைத்து பாட்னர்களையும் ஓரம் கேட்டுகிறது. ஆனால் எங்களை அவர்களால் அப்படி செய்ய முடியவில்லை ஏனென்றால் எங்களுக்குத் தான் அவர்களின் அனைத்து wofklow தெரியும்.  இந்த புதிய அணியோடு எப்படி வேலை செய்ய வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.


Tuesday, November 3, 2020

ரன்னிங் டைரி - 127

 20-10-2020 16:10

தஞ்சோங் காத்தோங் ரோட்டிலிருந்து உபி வரை 

மகனை பள்ளியில் இருந்து அழைத்துவர வேண்டும். சரி ஓடலாம் என்று முடிவு செய்து. கண்ணாடி தொப்பி மற்றும்  பேருந்து கார்டு எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். நல்ல வெய்யில் . ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் வந்தது லத்தின் மொழிதான். ஏனோ அந்த மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு தெரிந்த முதல் லத்தீன் வார்த்தைகள்  "Totus tuus". போப் இரண்டாம் ஜான் பாலின் motto. அதன் அர்த்தம் "all yours" - எல்லாம் உமதே". அன்னை மரியிடம் அவருக்கு இருந்த பற்றால் இதை வைத்துக் கொண்டார். எனக்கும் இப்படி ஒரு லத்தீன் மொழியில் ஒரு motto வைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டே யூனுஸ் ஸ்டேஷனை அடைந்தேன். அங்கிருந்து பஸ் பிடித்து மகனின் பள்ளிக்குச் சென்றேன்.


ரன்னிங் டைரி - 126

20-10-2020 08:25

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓட ஆரம்பித்தவுடன் நேற்று இரவு கஸ்டமருடன் நடந்த உரையாடல்தான் ஞாபகத்தில் வந்தது. அவர்கள் நாங்கள் செய்த வெப்சைட்டை  முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டும் என்றார். நான் அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன். இறுதியில் அவர் கூறியதைக் கேட்டவுடன் எனக்கு என்ன சொல்லவேண்டுமென்று தெரியவில்லை. அவர்கள் ஏற்கனவே மற்றொரு கம்பெனியின் மூலம் அதை செய்துவிட்டார்கள். அதனால்  நான் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். என்னத்த சொல்ல!  நான் சரியென்றுதான் சொல்லியாக வேண்டும் ஏனென்றால் எங்களுக்கு அவர்களுடன் எங்களுக்கு  அக்ரீமெண்ட் உள்ளது.  ஏன் அவர்கள் அப்படி செய்தார்கள் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 125

 19-10-2020 08:20

தஞ்சோங் காத்தோங் ரோடு

மழை மேகம் மற்றும் குளிர்ந்த காற்று என்னை நீண்ட தூர ஓட்டத்திற்கு அழைத்து. இளையராஜா பாடல்களைப் போட்டு விட்டு ஓட ஆரம்பித்தேன். ஓடிய சற்று நேரத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் முக்கிய கதாப்பாத்திரம் எண்ணத்தில் வந்தார். அந்த பெரியவரைப்  போல் மனிதர்களைப் பார்ப்பது இந்த காலத்தில் அரிது. என்னால் எங்கள் ஊரிலிருந்த சில பெரியவர்களை மறக்க முடியாது. அனைவரும் என் சொந்தக்காரர்களே. ஒருவரை நாங்கள் ஜாண்டி ரோட்ஸ் என்று அழைப்போம். அவர்  எங்களை கம்பெடுத்து அடிக்க வருவார். நாங்கள் சிரித்துக் கொண்டே ஓடுவோம். மற்றொவர் எங்களிடம் நான்றாக பேசுவார் ஆனால் நாய்களைக் கண்டால் குடித்துக் கொண்டிருக்கும் பீடியை அதன் மேல் எரிவார். அவர்களை நினைத்துக் கொண்டே ஓடி வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 124

 12-10-2020 08:35

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது பீத்தோவனின் ஐந்தாவது சிம்பனிதான். நேற்று இரவு இருமுறை அதை கேட்டேன். என்னவொரு கோபம்! பல நேரங்களில் நான் இந்த இசைக் கோர்வையைக் கேட்டு பயந்திருக்கிறேன். ஆனால் ஓடும்போது எனக்கு பயம் வருவதில்லை மாறாக உற்சாகம் தான் வரும் . இன்றும் அப்படியே. சிம்பனி முடியும்வரை ஓடி வீடு திரும்பினேன்.


Friday, October 9, 2020

ரன்னிங் டைரி - 123 (அம்மாச்சியின் நினைவு )

 09-10-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு

இன்று நீண்ட தூரம் ஓட வேண்டுமென்று நேற்றே முடிவு செய்துவிட்டேன் . நேற்று எனக்கு மிகவும் பிடித்த என் மீது எல்லையில்லா பாசம் கொண்டிருந்த எனது அம்மாச்சி இறந்து விட்டார். அவரின் இறப்பு செய்தி எதிர்பார்த்ததென்றாலும் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அம்மாச்சியை எண்ணிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன். என்னை அறியாமல் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. எங்கே ஓடுவது என்று முடிவு செய்யமல் ஓடிக் கொண்டே இருந்தேன். அம்மாச்சியின் முகம் வந்து கொண்டே இருந்தது. சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது டிரக் டிரைவர் என்னை பார்த்து என்ன கண்ல கண்ணீர் வருது என்று கேட்டார். நான் ஒன்றும் சொல்லாமல் கண்ணைத் துடைத்துக் கொண்டே மீண்டும் ஓடினேன். அம்மாச்சி ஒரு சகாப்தம். எப்போதும் எனக்கு அது அம்மாச்சி வீடுதான்.தாத்தாவை விட அம்மாச்சியிடம் தான் எனக்கு பாசம்.நான் பல நேரங்களில் அவருடன் தனியாக  ஒரு சில நிமிடங்கள் இருந்திருக்கீறேன் . அதெல்லாம் அற்புதமான நேரங்கள். மறக்க முடியாதது. பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு உடம்பு சரியில்லாமல் போன நேரங்களில் எல்லாம் எனக்காக எங்கள் வீட்டில் வந்து நான் குணமாகும் வரை தங்கி இருப்பார். அவரைப் பார்த்தாலே எனக்கு  ஒரு தைரியம்.அவரே ஒரு பெரும் மருத்துவருக்கு சமம். சிங்கப்பூரில் இருந்து நான் செல்லும்போதெல்லாம் அம்மைச்சியைப் பார்க்க செல்வதென்பது ஒரு பெரும் நிகழ்வு எனக்கு . நான் வாங்கிச் சென்ற ஜெபமாலையை நான் அவரைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் என்னிடம் காண்பிப்பார் . நான் அதை அவரிடம் கொடுத்தபோது அவரின் கண்ணில் இருந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பலமுறை யாருக்கும் தெரியாமல் எனக்கு பணம் தந்தவர். மூன்று வருடங்களுக்கு முன்பு பார்க்க சென்றபோது ஒரு சிறிய பிளாஸ்டிக் பையை என்னிடம் கொடுத்தார். அதில்  கொஞ்சம் மிச்சர் மற்றும் இனிப்புகள் இருந்தன.அம்மாச்சி அம்மச்சிதான் ! எனக்கு திருமணமாகி பிறகு அவரை பார்க்கச் சென்றபோது என்னையும் என் மனைவியையும்  கட்டி அணைத்து மனதார வாழ்த்தினார். "ஒன்னும் கவலைப் படாதே எல்லாம் சரியாயிரும் " என்று என்னைத் திடப்படுத்தியவர் .அவர் படுத்த படுக்கையாய் இருந்தபோது கூட என் மகளுக்கு உடை யாரிடமோ சொல்லி வாங்கி வைத்திருந்தார்.  எனக்கு அவரின் கையைத் தொடுவது மிகவும் பிடிக்கும் . இறுதியாக அவரைப் பார்க்க சென்றபோது கூட அவரின் கையை நான் பற்றினேன். சென்ற வாரம் வாட்சப் வீடியோ அழைப்பில் அவரைப் பார்த்தேன் நான் மிகவும் வருத்தப்பட்டேன்.இன்று அவரின் நினைவில் இலக்கு இல்லாமல் ஓடினேன். நினைவுகள் முழுவதும் அம்மாச்சியின் மேல் தான் இருந்தது. போய் வாருங்கள் அம்மாச்சி ...

ரன்னிங் டைரி - 122

  07-10-2020 16:15

தஞ்சோங் காத்தோங் ரோடு - உபி 

மகனைப் பள்ளியில் இருந்து அழைத்து வர வேண்டும். காலையில் ஓடவில்லை அதனால் சாயங்காலம் ஓடலாம் என்று முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன். கடுமையான வெய்யில். நல்ல வேளையாக தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்திருந்தேன். ஓட ஆரம்பித்தவுடன் காலையில் எனக்கும் வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடல்தான் ஞாபகத்தில் வந்தது. கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு அவரைப் பார்த்தேன். இருவருக்கும் ப்ராஜெக்ட் நிருவாகத்தில் பல விசயங்களில் உடன்பாடில்லை என்றாலும் அவர் என் நலன் விரும்பி.ஒரு மணி நேரம் பேசினோம். அவர் எங்கு diaper மலிவாக வாங்கலாம் என்று என்னிடம் ஒரு சின்ன பட்டியலைக் கொடுத்தார். அந்த பட்டியலைக் நினைத்துக் கொண்டே மகனின் பள்ளியை அடைந்தேன்.


ரன்னிங் டைரி - 121

 06-10-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு

அருமையான வானிலை. ஓடுவதற்கு மிகவும் உவந்தது. ஓட ஆரம்பித்தவுடனேயே மனதில் தோன்றியது லண்டன் மாரத்தான் முடிவுகள் தான். எப்படியும் கிபிசோகே (Kipchoge) வெற்றி பெறுவார் என்று எண்ணிருந்தேன், ஆண்கள் பிரிவு முடிவுகள் எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தரவில்லை . ஆனால் பெண்கள் பிரிவின் முடிவுகள் எனக்கு பெரும் ஆச்சிரியத்தைத் தந்தது. Brigid Kosgei தனது முதல் நிலையை சென்ற ஆண்டு போல இந்த ஆண்டும் தக்கவைத்துக் கொண்டார். அவருக்கும் இரண்டாவது வந்த Sara Hall-ற்கும் பத்து வயது வித்தியாசம்.Brigid Kosgei  ஒரு லெஜெண்ட். அதிகம் அறியப்படாத ஒரு வீரர். அடுத்து நான் எப்போது மாரத்தான் ஓடுவேன் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Monday, October 5, 2020

ரன்னிங் டைரி - 120

 05-10-2020 8:35

தஞ்சோங் காத்தோங் ரோடு - டன்மன் ரோடு -ஸ்டில் ரோடு -மெரின் பரேட் 

நீண்ட தூரம் ஓட வேண்டுமென்று முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன். காதில் தெலுங்கு துள்ளல் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. எனது தெலுங்கு பாடல் லிஸ்ட்:

-புட்டமா புட்டமா 

-சுமம் பிரதி சுமம் 

-நக்கிலீசு கொலுசு 

-நூ நாதோ எமன்னாவோ 

என்னை அறியாமலேயே வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன். அதற்கு மேல உள்ள பாடல்கள்தான் காரணம் . நல்ல வேளையாக சிக்னல் வந்தது. சற்று நின்று பாடல் வரிசையை மாற்றிவிட்டு மீண்டும் ஓட ஆடம்பித்தேன்.எதிரே ஒரு இந்திய தம்பதியினர் நடந்து  வந்து கொண்டிருந்தனர் அவர்களைப் பார்த்தவுடன் நான் புன்னகைத்தேன் அவர்களும் ஹலோ என்றார்கள். அவர்களைக் கடந்தபோது வலது பக்கம் நர்சரி பள்ளி இருந்ததைக் கவனித்தேன் அங்கிருந்து எண்ணம் முழுவதும் நான் படித்த பள்ளிகளுக்கு சென்றது. தொடக்கப் பள்ளியில் படித்தவர்களில் மூவர் மட்டுமே வாட்சப் குரூப்பில் இருக்கிறார்கள்.  என்னை மிகவும் நேசிப்பவர்கள். அப்படியே எண்ணம் நேற்றைய ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டிகளுக்கு சென்றது. wow ! மூன்று அற்புதமான எதிர்பார்க்காத முடிவுகள். எனக்கு ஏனோ இந்த வருட லிவர்பூல் அணியை பிடிக்க வில்லை. எதிரே நூலகம் மூடிருந்தது. பல மாதங்களாக அங்கு செல்லவில்லை. விரைவில் நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் எடுக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன்.மூன்று வாரமாக வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் எண்ணத்தில் தோன்றியது . இந்த வருடம் நான்  வாசிக்க அதிக நாட்கள் எடுத்துக் கொண்ட புத்தகம் இதுதான். இந்த வாரம் கண்டிப்பாக வாசித்து முடித்து விட வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Friday, October 2, 2020

ரன்னிங் டைரி - 119

01-10-2020 18:05

தஞ்சோங் காத்தோங் ரோடு

இன்று காலையில் வேலை இருந்ததால் ஓட முடியவில்லை. அதனால் சாயங்காலம் நேரம் கிடைத்தததும் ஓட ஆரம்பித்தேன். கடுமையான வெய்யில். ஓட ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே திரும்பி சென்று விடலாமா என்று  தோன்றியது. அப்போதுதான் எனக்கு முன்னாள் ஓடிக் கொண்டிருந்தவரை கவனித்தேன். அவரைப் பின்தொடர்ந்து ஓடலாம் என்று முடிவு செய்து அவரைத் தொடர்ந்தேன். அவர் மிக அழகாக சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தார். அப்படி ஓடுபவர்களைப் பார்ப்பதே பெரும் அழகு. என் கவனம் முழுவதும் அவரின் கால்களில்தான் இருந்தது .கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் அவரின் பின்தொடர்ந்து ஓடினேன். அதற்கு பிறகு அவர் வேறு திசையில் சென்றுவிட்டார். அப்போதுதான் காதில் ஒலித்த பாடலைக் கவனித்தேன் .SPB  " உன்னை நெனச்சேன் " பாடிக் கொண்டிருந்தார். அவர் என்றும் வாழ்வார். அவரின் மறைவுக்கு மக்கள் பெரும் திரளாய் அஞ்சலி செலுத்தியதை நம் எழுத்தாளர் சாரு நிவேதிதா எப்படி அப்படி புரிந்து கொண்டார் என்று எனக்கு புரியவில்லை.  கலைஞர்களை ஒப்பிடுவது சரியல்ல அதுவும் வேறு வேறு துறையில் இருப்பவர்களை. அதற்கு விளக்கங்கள் கொடுப்பது பெரும் சிரிப்பிற்குரியது. அது என்னவோ நம் எழுத்தாளர்களில் பலருக்கு நம் திரைத்துறையை பிடிப்பதில்லை.  நல்லதோ கேட்டதோ கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக திரைத்துறை நம்மில் கலந்து விட்டது அதை ஏற்றுக் கொண்டுதான் ஆகா வேண்டும். இதையே எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன் .

Tuesday, September 29, 2020

ரன்னிங் டைரி - 118

 28-09-2020 06:35

தஞ்சோங் காத்தோங் ரோடு

மழை தூரிக் கொண்டிருந்தது. நான் காபி போட்டு குடித்துவிட்டு மழை நிற்கும் வரை காத்திருந்தேன். மழை நின்றவுடன் ஓட ஆரம்பித்தேன்.காதில் மொசார்டின் நாற்பத்தி ஒன்றாவது சிம்பொனி ஒலிக்க ஆரம்பித்தது. இந்த சிம்பொனி சீடியை (CD) வாங்கிய சம்பவம் ஞாபகத்தில் வந்தது. அப்போதெல்லாம் பூகிஸ் MRT அருகில் இசை CD-க்கள் விற்பார்கள் . அங்குதான் நான் Mozart Hits என்ற பெயரிட்ட CD-யை வாங்கினேன். கடைக்காரர் இந்த இசை உங்களின் மூளைக்கு நல்லது என்றார். நான் சிரித்துக் கொண்டே பணம் கொடுத்து வாங்கினேன். அப்போது நான் ஒரு வீட்டில் ஒரு அறையில் தனியாக தங்கி இருந்தேன். என்னிடம் அப்போது Panasonic music system இருந்தது. மதிய உணவிற்கு பிறகு அந்த CD-யை player போட்டு play செய்தேன். அதுவரை நான் கேட்டிராத ஒருவிதமான இசை. மனதில் பல எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தது. எனக்கு அதற்கு முன் அப்படி நடந்ததில்லை .அதன் பிறகு தேடித் தேடி சிம்பொனி இசையை கேட்க ஆரம்பித்தேன். இந்த தேடல் இன்றும் தொடர்கிறது. வீட்டிற்கு திரும்பும் போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி ஏய்ப்பு பற்றிய நியூயார்க் டைம்ஸின் கட்டுரை எண்ணத்தில் வந்தது. அப்படி ஒரு விரிவான கட்டுரையை இந்தியாவில் எழுதி விட முடியுமா என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 117

28-09-2020 06:05

தஞ்சோங் காத்தோங் ரோடு

நல்ல குளிர். பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பொனி ஒலிக்க ஆரம்பித்தது. எனக்கு பிடித்த சிம்பொனிகளில் இதுவும் ஒன்று. அதுவும் Bernstein conduct செய்த இந்த தொகுப்பு மிகவும் பிடிக்கும். முதல் ஐந்து நிமிடத்திலேயே நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்று விடுவார் பீத்தோவன். அதன் பிறகு நடப்பதெல்லாம் மேஜிக். எனது முழுக்கவனமும் அதில்தான் இருந்தது. இசையின் வேகம் கூடும் போதெல்லாம் நான் வேகமாக ஓடினேன் அதன் வேகம் குறையும் போதெல்லாம் என் வேகமும் குறைந்தது. எனக்கு இப்படி நடப்பது புதிதல்ல. பல துள்ளல் பாடல்களுக்கும் இப்படித்தான் நடக்கும். அது என்னவோ சிம்பொனிகளை கேட்கும் போதெல்லாம் இளையராஜாதான் எண்ணத்தில் வருவார். "The more you know about symphony the more you appreciate music of Ilaiyaraja"- எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.சிங்கப்பூர் வந்த பிறகுதான் மேற்கத்திய இசை கேட்க ஆரம்பித்தேன் அதன் பிறகுதான் இளையராஜாவின் இசையை என்னால் முழுவதும் உணர முடிந்ததது. Fourth Movement ஆரம்பித்த பொழுது நான் வீட்டை அடைந்திருந்தேன்.

Saturday, September 26, 2020

ரன்னிங் டைரி - 116

26-09-2020 05:25

தஞ்சோங் காத்தோங் ரோடு

கிழக்கு கடற்கரை பூங்கா செல்லலாம் என்று எண்ணி அந்த பக்கம் ஓட ஆரம்பித்தேன். எண்ணம் முழுவதும் SPB-யின் பாடல்களில் தான் இருந்தது. நேற்று இரவு அவரின் புகைப் படத்தைக் காட்டி "He is one of the greatest Singers of all time" என்றேன். அவர் இறந்த செய்தி கேட்டவுடன் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. அதுவே அவரின் வெற்றி. நம்மில் ஒருவர் . நம்மோடு ஒருவர். நமக்குள் ஒருவர். அவரின் இறந்த உடலை என்னால் பார்க்க முடியவில்லை. நல்ல வேளை எங்கள் வீட்டில் எந்த இந்திய டிவி சேனல்கள் இல்லை. திரும்ப திரும்ப அவரை அப்படி பார்ப்பது கொடுமை. நான் கிழக்கு கடற்கரை பூங்காவிற்குள் செல்லவில்லை கடலை சற்று தூரத்திலிருந்தே பார்த்து விட்டு வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தேன். என் காதில் Dvork-ன் "New World Symphony" ஒலித்துக் கொண்டிருந்தது. எனக்கு என்னவோ இந்த சூழ்நிலைக்கு இந்த சிம்பொனி தான் சரி என்று பட்டது. அதைக் கேட்டுக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Rest In  Peace Sir ! 


ரன்னிங் டைரி - 115

 25-09-2020 08:25

தஞ்சோங் காத்தோங் ரோடு - ஓல்ட் ஏர்போர்ட் ரோடு 

இன்று போனிலிருந்து பாடல்கள் கேட்கலாம் என்று ப்ளூடூத் இயர் போன்களை எடுத்து வந்திருந்தேன். எனது போனில் இரண்டே playlists தான். ஒன்று "Symphonies" மற்றொருன்று "Classical short". காதுகளில் வைத்துவிட்டு "Classical short"-ல் shuffle கிளிக் செய்து விட்டு ஓட ஆரம்பித்தேன். என்ன இசைக் கோர்வை வரும் என்று பெரிய ஆவலுடன் கவனம் முழுவதையும் அதில் செலுத்தினேன். முதலில் வந்தது "Godfather suite " என்ன ஒரு அற்புதமான இசை. என் மனது ஓடுவதில் இருந்து இசைக்கு மாறியது.Godfather பட வரிசைகள் என் கண்முன்னே வந்து சென்றன. "Finance is a gun. Politics is knowing when to pull the trigger." இந்த டயலாக் மறக்க முடியாதது.இந்த திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர் Nino Rota. மனுஷன் அணு அணுவா ரசிச்சு இசை அமைத்திருக்கிறார். இந்த இசையில் லயித்து கொண்டிருக்கையில் இந்த கோர்வை முடிந்து அடுத்தது ஆரம்பித்தது. என்னத்த சொல்ல . ஆரம்பித்த இசை கோர்வை  "The good the bad and the ugly theme" . மனம் ஓட்டத்தை முழுவதும் மறக்க ஆரம்பித்தது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு இசை அமைத்தவர் Ennio Morricone. இவர் ஒரு genuis. இது முடிந்தவுடன் வந்தது எனக்கு மிகவும் பிடித்த "Sabre Dance" .இதை இசை அமைத்தவர் Aram Khachaturian. என்ன ஒரு துள்ளலான இசை . எனக்கு Aram Khachaturian பற்றி ஒன்றும் தெரியாது இந்த இசைக் கோர்வையைத் தவிர. வீட்டிற்கு அருகில் வந்தவுடன் Richard Wagner-ன் "Ride of the Valkyries" ஆரம்பித்தது. ஓடுவதை நிறுத்தி விட்டு இசையை ரசித்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்

ரன்னிங் டைரி - 114

 24-09-2020 08:25

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓட ஆரம்பித்தவுடன் "sauvignon blanc" என்கின்ற இந்த வார்த்தைகள்தான்.இது ஒரு ஒயின் வகை. ஏன் இந்த பெயர் தற்போது எண்ணத்தில் தோன்றுகின்றது  என்று தெரியவில்லை. ஆனால் ஓடி முடிக்கும் வரை மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள்தான் வந்தது.

Thursday, September 24, 2020

ரன்னிங் டைரி - 113

23-09-2020 08:45

உபியில் இருந்து வீடு வரை 

கடுமையான வெய்யில்.ஓடுவதற்கு முன்பே அது என்னை அச்சுறுத்தியது. மெதுவாக ஓடவேண்டுமென்று முடிவெடுத்து ஓட ஆரம்பித்தேன்.வாக்மேன் இன்றும் வேலை செய்யவில்லை. ஓட ஆரம்பித்தவுடன் மனதில் தோன்றியது "inter-disciplinary'  என்ற வார்த்தைகள்தான். இன்றைய சூழலில் எந்த ஒரு வேலைக்கும் இது அவசியம். ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றிருப்பது நல்லது ஆனால் அதை சுற்றியுள்ள துறையில் அறிமுகம் இல்லை என்றால் வேலையில் நிலைத்து இருப்பது மிகவும் கடினம். நான் செய்த வேலைகளை யோசித்துக் கொண்டே ஓடினேன். நான் programmar-ஆக வேலையைத் தொடங்கினேன். ஆனால் என் boss நீ one dimention-அ சிந்திக்கக் கூடாது .நீ செய்வது ஒரு பகுதி என்றாலும் ஒரு ப்ராஜெக்ட் செய்தால் அதில் உள்ள அனைத்தையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு  தொடக்கத்திலேயே சுதந்திரம் கொடுத்தார். அதுவே எனக்கு பல துறைகளின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள உதவியது. எனக்கும் அந்த அணுகுமுறை புடித்து. எனக்கு சம்பந்தமே இல்லாத பல துறைகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.


Tuesday, September 15, 2020

ரன்னிங் டைரி - 112

  15-09-2020 08:18

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓட ஆரம்பித்தவுடனே எண்ணத்தில் வந்தது ராபர்ட் பிரஸ்ட்டின்  (Robert Frost) "Road Not Taken" கவிதை தான். அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் அடங்கிய புத்தகம் சென்ற வாரம் எனக்கு கிடைத்தது. ஒரு சில கவிதைகளை நேற்று இரவு வாசித்தேன் . எனக்கு பிடித்திருந்தது. அதிலும் மேல கூறிய கவிதை சிறு வயதில் மனப்பாடமாக தெரியும் . இப்போது கொஞ்சம் தெரியும். ஏன் அவரைப் பற்றி பெரிய அளவில் தமிழில் பேசப் படவில்லை என்று யோசித்துக் கொண்டே ஓடினேன்.எனக்கு பிடித்த தமிழ் கவிதைகளை பிரிண்ட் அவுட்  எடுத்து ஒரு புத்தகம் போல வைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Monday, September 14, 2020

ரன்னிங் டைரி - 111

 14-09-2020 08:20

தஞ்சோங் காத்தோங் ரோடு

இதமான வெய்யில்.ஓட ஆரம்பித்தவுடன் இளையராஜாதான் எண்ணத்தில் வந்தார்.அவரின் மலேசிய கச்சேரியை நேற்று இரவு பார்த்தேன். அதன் பாதிப்பு. திரும்ப திரும்ப அவரின் இசைக்கே நான் செல்கிறேன்.நான் அவரின் தெலுங்கு பாடல்களை கேட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறேன்.மௌண்ட்பேட்டன் ரோட்டில் ஒருவர் கையில் லேப்டாப் பையுடன் வேகமாக நடந்து கொண்டிருந்தார் அவரைப் பார்த்தவுடன் எனக்கு நேற்று படித்த ஒரு கட்டுரை தான் ஞாபகத்தில் வந்தது.   அதில் கூறப்பட்டுள்ளது போல எதற்காக வேலை செய்கிறோம் என்பதை சரியாக தெரிந்திருந்தால் அந்த வேலை மகிழ்ச்சியாக இருக்கும்  எனபது என்னை பொறுத்தவரை உண்மை. நான் பலபேரிடம் அதை சொல்லியுள்ளேன்.இன்று என்னென்ன செய்ய வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Sunday, September 13, 2020

ரன்னிங் டைரி - 110

13-09-2020 05:25

தஞ்சோங் காத்தோங் ரோடு

குளிர்ந்த காற்று.மழை வருமோ என்று எண்ணிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன்.சில நிமிடங்களிலேயே ஒரு சீரான வேகத்தை அடைந்தேன். மிக உற்சாகத்துடன் ஓடினேன். ஞாயிறு காலை எப்போதுமே என்னையறியாமல் ஒரு உற்சாகம் ஒட்டிக் கொள்ளும்.இன்றும் அப்படியே. எதிரே  ஒரு வெளிநாட்டவர்நடந்து வந்தார். என்னைப் பார்த்து சிரித்தார். நானும் "hi" என்று சொன்னேன். இரண்டாம் உலகப் போர் ஞாபகத்தில் வந்தது. நேற்று ஒரு டாக்குமெண்ட்ரி பார்த்தேன். நான்கு மணி நேரம் ஓடியது. பல இடங்களில் கண்ணில் கண்ணீர் வந்தது.ஒரு மனிதன் எவ்வளவு மோசமாக இருக்கக் கூடும் என்பதற்கு ஹிட்லர் மற்றும் அவரின் சகாக்களே உதாரணம். மேலும் இப்போரைப் பற்றி படிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன். எதிரே ஒரு முதிய ஜோடிகள் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் "hi" என்றார்கள் நானும் "hi" என்றேன். முக்கில் திரும்பும் போது பாரதியார் எண்ணத்தில் தோன்றினார்.  அவரைப் பற்றி இன்னும் நிறைய வாசிக்க வேண்டும். அதற்கென்றே ஒரு புத்தகப் பட்டியலை தயார் செய்திருந்தேன்.அடுத்த தடவை இந்தியா செல்லும் போது வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.மெயின் ரோட்டிற்கு வந்தபோது இன்று மார்க்கெட்டில் என்ன வாங்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே மார்க்கெட்டை அடைந்தேன்.

பாரதியார் பற்றிய புத்தக பட்டியல் :

1.பாரதி விஜயம்: மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் (தொகுதி 1) -- பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம். (சந்தியா பதிப்பகம்)

2.பாரதி விஜயம்: மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் (தொகுதி 2) -- பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்.(சந்தியா பதிப்பகம்)

3.பாரதியியல்: கவனம் பெறாத உண்மைகள் -- முனைவர் ய. மணிகண்டன்.(பாரதி புத்தகாலயம்)

4.மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும் -- முனைவர் ய. மணிகண்டன். (பாரதி புத்தகாலயம்)

5.பாரதியின் இறுதிக் காலம்: 'கோவில் யானை' சொல்லும் கதை -- ஆய்வும் பதிப்பும் முனைவர் ய. மணிகண்டன்.  (காலச்சுவடு)

6.பாரதியைப் பற்றி நண்பர்கள் -- தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன். (காலச்சுவடு)

7.பாரதியின் கடிதங்கள் -- தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன். (காலச்சுவடு)

8.பாரதியார் கவிநயம் -- தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன்.

9. பாரதி -கவிஞனும் காப்புரிமையும்: பாரதி படைப்புகள் நாட்டுமையான வரலாறு -- அ.இரா.வேங்கடாசலபதி

10. பாரதி கருவூலம்: 'ஹிந்து' நாளிதழில் பாரதியின் எழுத்துகள் (முதல் முறையாக நூல் வடிவில்) -- அ.இரா.வேங்கடாசலபதி

11.பாரதி: 'விஜயா' கட்டுரைகள் (முதன்முறையாக நூல்வடிவில்) -- தொகுப்பு அ.இரா.வேங்கடாசலபதி

12.எழுக, நீ புலவன்! : பாரதி பற்றிய கட்டுரைகள் --தொகுப்பு அ.இரா.வேங்கடாசலபதி 

13. என் குருநாதர் பாரதியார் - ரா. கனகலிங்கம்

14.மகாகவி பாரதியார் - வ.ரா

15.பாரதி நினைவுகள்: ம.கோ.யதுகிரி அம்மாள் -- மீள் பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் (சந்தியா பதிப்பகம்)

16.பாரதியார் சரித்திரம் -- செல்லம்மாள் பாரதி (பாரதி புத்தகாலயம்)

17. மகாகவி பாரதியார் கட்டுரைகள் -- தொகுப்பாசிரியர்கள் ஜெயகாந்தன் & சிற்பி பாலசுப்பிரமணியம் (சாகித்ய அகாதெமி )

18.பாரதியார் கட்டுரைகள் -- பூம்புகார் வெளியீடு

மேலும் பல நூல்களுக்கு இங்கே சொல்லவும் 

Friday, September 11, 2020

ரன்னிங் டைரி - 109

   11-09-2020 08:20

தஞ்சோங் காத்தோங் ரோடு

இதமான வெய்யில். வாக்மேனில் மொத்தம் பத்தே பாடல்களை வைத்து விட்டு மற்ற அனைத்தையும் டெலீட் செய்துவிட்டேன். வேகமாக ஓட ஆரம்பித்தேன். திடீரென்று நாம் தமிழர் கட்சிக்குள் நடக்கும் பிரச்சனை தான் ஞாபகத்தில் வந்தது. என்னத்த சொல்ல!  "conditioning" என்ற வார்த்தை ஞாபகத்தில் வந்தது.சுரேஷ் சம்பந்தம் அவர்களின் பேட்டியை நேற்று பார்த்தேன். அதில் அவர் இந்த வார்த்தையை பல முறை பயன் படுத்துகிறார். ஆனால் அவர் கூறுவது முற்றிலும் உண்மை சிலபஸ் தவிர வேற எதையும் சிந்திக்க நம்மை நம் கல்வியாளர்கள் அனுமதிப்பதில்லை. அந்த பேட்டியையே நினைத்துக் கொண்டு வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 108

  10-09-2020 12:05

தஞ்சோங் காத்தோங் ரோடு

இன்று காலையில் நல்ல மழை அதனால் ஓட முடியவில்லை. மதியம் வானம் மேக மூட்டத்துடன் இருந்தத. அதனால் ஓட ஆரம்பித்தேன். கிழக்கு கடற்கரை செல்லலாம் என்று எண்ணி அந்த பக்கம் ஓடினேன் ஆனால் டிராபிக் சிக்னல் வந்தவுடன் வலது பக்கம் திரும்பி நான் இந்த மாதங்களில் ஓடும் வழிக்கே சென்றேன்.வாக்மேனில் ஏதோ பிரச்சனை பாடல்கள் சரியாக கேட்கவில்லை. ஓடிக்கொண்டே அதைக் கழற்றி அணைத்து விட்டு மீண்டும் ஆன் செய்தேன் .சரியாக ஓடியது. ஓட ஓட வெய்யில் அதிகமாகியது. மனதில் எந்த எண்ணமும் வரவில்லை. உடலில் வெய்யில் சூட்டை என்னால் உணர முடிந்தது. நான் வீட்டை அடையும் போது என் உடலில் ஏதும் இல்லை. (hit the wall )!


ரன்னிங் டைரி - 107

 08-09-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓடுவதா வேண்டாமா என்று எண்ணிக் கொண்டே மெதுவாக ஓட ஆரம்பித்தேன். ஓடவே மனமில்லை அதனால் பத்து நிமிடங்கள் ஓடிய பிறகு வீட்டிற்கு திரும்பினேன்.

Monday, September 7, 2020

ரன்னிங் டைரி - 106

   07-09-2020 08:25

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓடும் முன் ஒரு பெரியவர் கேசட் வாக்மேனில் பாட்டு கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஓட ஆரம்பித்தவுடன் என் முதல் கேசட் வாக்மேன் ஞாபகத்தில் வந்தது. என் மாமா சிங்கப்பூரிலிருந்து கொண்டுவந்தது. அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். சில மாதங்கள் அந்த வாக்மேன்தான் எல்லாமும் ஆகி போனது.வால்க்மேனில் இருந்து கல்லூரி நாட்களுக்குச் சென்றது. இளையராஜாவும் ரஹ்மானும் எங்களை மகிழ்ச்சி படுத்திய காலம். ஹரிஹரன் ஹிட்ஸ் , மோகன் ஹிட்ஸ் மற்றும் பல ஹிட்ஸ்கள் கொண்ட கேசட்டுகள் ஹாஸ்டலில் வலம் வரும். மாறி மாறி ஏதோ ஒரு ஹிட்ஸை கேட்டுக் கொண்டிருப்போம். இடையில் சூரியன் FM வந்தது.எல்லோரும் அதற்கு மாறினோம்.பேக்கரியில் டீ குடித்துக் கொண்டே சூரியன் FM கேட்பதென்பது ஒரு அலாதியான சுகம்.அப்படியே ரேடியோ நாட்களை யோசித்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 105

  06-09-2020 05:25

தஞ்சோங் காத்தோங் ரோடு

நல்ல குளிர். காற்றில் ஈரத்தன்மை தெரிந்தது. வேகமாக ஓட ஆரம்பித்தேன். நிறைய வயதானவர்கள் நடந்தும் ஓடியும் கொண்டிருந்தனர்.நான் நிலா வெளிச்சத்தில் மரங்களைப் பார்த்துக் கொண்டே ஓடினேன். மரங்களைப் பற்றிய தமிழ் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். வளைவு வந்தவுடன் வேகத்தை குறைத்தேன். அங்கு இரண்டு காவலர்கள் டார்ச் லைட்டை என்னை நோக்கி அடித்தனர். நான் பயந்து மேலும் வேகத்தைக் குறைத்தேன். அவர்கள் "Sorry" என்று சொல்லிவிட்டு டார்ச் லைட்டை கீழே ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரில் அடித்தனர். நான் அவர்கள் என்ன தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டு தண்ணீரையே பார்த்துக் கொண்டு மார்க்கெட்டை நோக்கி ஓடினேன். சீரிய வேகத்தில் மார்க்கெட்டை அடைந்தேன்.

Friday, September 4, 2020

ரன்னிங் டைரி - 104

 04-09-2020 08:15

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓட ஆரம்பித்த சில நொடிகளிலேயே வாக்மேன் வேலை செய்யவில்லை. அதனால் அதை கழற்றி விட்டு ஓட ஆரம்பித்தேன். நல்ல வெய்யில். ஓடிக்கொண்டே வரிசையாக நின்றிருக்கும் மரங்களைப் பார்த்தேன். எனக்கு மரங்கள் மீது ஒருவித ஈர்ப்பு உண்டு. சிங்கப்பூர் வந்த புதிதில் நான் பல தடவை NParks-கு தன்னார்வு தொண்டு செய்துள்ளேன். அப்படித்தேன் ஒரு முறை "Heritage Trees" பற்றி பேச்சு நடந்தது. அதற்கு பிறகு நான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த மரங்களை பார்க்க ஆரம்பித்தேன். மரங்களின் பெயர்களை தெரிந்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன்.மரங்கள் பேரழகு என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Thursday, September 3, 2020

ரன்னிங் டைரி - 103

03-09-2020 08:28

தஞ்சோங் காத்தோங் ரோடு

லேசாக மழை தூர ஆரம்பித்திருந்தது அதனால் வேகமாக ஓட ஆரம்பித்தேன். கவனம் முழுவதும் மூச்சிலும் நிலத்திலும்தான் இருந்தது. பத்து நிமிடத்திற்கு பிறகு வெய்யில் அடிக்க ஆரம்பித்தது. நான் வேகத்தைக் குறைத்தேன். ஒரு சீரான வேகத்திற்கு விரைவிலேயே சென்றேன்.எனக்கு முன் ஒரு இந்திய ஜோடி தங்கள் குழந்தையுடன் நடந்து கொண்டிருந்தார்கள். அந்த குழந்தை என்னை பார்த்து கைக் காட்டியது. நானும் கைக் காட்டினேன். அந்த பெற்றோர்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள். நானும் சிரித்துக் கொண்டே அவர்களைக் கடந்து சென்றேன்.திடீரென்று மரியா ரெஸ்ஸா (Maria Ressa) ஞாபகத்தில் வந்தார். அவரின் கட்டுரைகள் பலவற்றை நான் படித்திருக்கிறேன். சம்பந்தமே இல்லாமல் அவர் ஏன் எண்ணத்தில் வந்தார் என்று யோசித்துக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

Tuesday, September 1, 2020

ரன்னிங் டைரி - 102

  31-08-2020 08:30

தஞ்சோங் காத்தோங் ரோடு

இன்று வேகமாக ஓட வேண்டுமென்று முடிவு செய்து வேகமாக சீராக ஓடினேன். தொடக்கம் முதல் கடைசி வரை ஒரே வேகத்தில் ஓடி முடித்தேன். இப்படி நிகழ்வது எப்போதாவதுதான். எண்ணம் முழுவதும் குடிக்க போகும் காபியில் தான் இருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு மோக்கா பாட் (Moka Pot) வாங்கினேன். அதில் காபி குடிப்பது எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. தினமும் ஒருமுறையாவது காபி போட்டு குடிக்கிறேன். நான் காபி மற்றும் டீ இரண்டையும் விரும்பி குடிப்பவன். இந்த கொரோன நாட்களில் காபி குடிப்பதென்பது ஒரு தவம் போல ஆகிவிட்டது. நிதானமாக ஒவ்வொரு மடக்காக ரசித்து குடிக்கும் போது ஏற்படும் இன்பம் அலாதியானது. அதையே நினைத்துக் கொண்டு வீட்டை அடைந்தேன்.

Monday, August 31, 2020

ரன்னிங் டைரி - 101

 31-08-2020 08:42

தஞ்சோங் காத்தோங் ரோடு

நல்ல வெய்யில். நல்ல வேலையாக இன்று நான் கண்ணாடி எடுத்துச் சென்றிருந்தேன். கண்கள் கூசும் அளவிற்கு வெய்யில்.மிதமான வேகத்தில் ஓட ஆரம்பித்தேன். "Act of God "  - இந்த வார்த்தைகள்தான் மனதில் வந்தன. என்னத்த சொல்ல சென்று எண்ணிக் கொண்டேன். வாக்மேனில் "ராக்கம்மா கைய தட்டு" ஓடிக் கொண்டிருந்தது. எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும். புத்துணர்வு தரக் கூடிய பாடல்.பாடல் முடித்ததும் கவனம் முழுவதும் பாதையில் சென்றது ஏனென்றால் அது ஏற்ற இரக்கமாக இருந்தது. மீண்டும் எண்ணம் மெஸ்ஸியின் பக்கம் சென்றது. இன்று என்ன நடக்குமோ என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 100

 29-08-2020 05:45

தஞ்சோங் காத்தோங் ரோடு

இன்று நீண்ட தூரம் ஓடவேண்டும் ஒன்று முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன்.  ஆனால் எந்த பக்கம் செல்வது என்று முடிவு செய்யாமல் ஓட ஆரம்பித்தேன்.  கால்கள் தானாகவே கிழக்கு கடற்கரை சாலையின் பக்கம் சென்றது. மெஸ்ஸியைப்  பற்றிய செய்திகள்  மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவரின் கோல்கள் மனதில் படம் போல ஓடிக் கொண்டிருந்தது. எனக்கு அவரின் முக்கியமான கோல்களின் ஆங்கில வர்ணனை மனப்பாடமாகத் தெரியும் அதிலும் ரே ஹட்ஸன் ,ராப் பாமர் மற்றும் மார்டின் டைலரின் வார்த்தைகள் மறக்கவே முடியாது. அவர் எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் மீண்டும் விளையாட வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Thursday, August 27, 2020

ரன்னிங் டைரி - 99

 27-08-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு -சாங்கி ரோடு -கிழக்கு கடற்கரை சாலை 

நல்ல வெய்யில். இன்று வேறு வழியில் ஓடலாம் என்று எண்ணி சாங்கி ரோட்டை நோக்கி ஓடினேன்.மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கவனம் எல்லாம் யார் மீதும் மோதாமல் ஓடுவதில்தான் இருந்தது. யுனோஸ் வளைவில் இருந்து மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை நான் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தேன். வீடுகள் மிக அழகாக இருந்தன. அனைத்து வீடுகளின் வெளிப்புறத்தில் கார்களும் நாய்களும் இருந்தன.நான் பராக்கு பார்த்துக் கொண்டே ஓடினேன்.திடீரென்று மெஸ்ஸியின் ஞாபகம் வந்தது.மீண்டும் பார்சிலோனாவிற்கு மெஸ்ஸி விளையாடுவாரா என்று  எண்ணிக் கொண்டே அவரின் பல கோல்கள் கண்முன்னே படமாக வந்தன. வரம் வரம் எனக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துக் கொண்டிருக்கும் வீரனுக்கு இப்படி ஒரு நிலை என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.


Wednesday, August 26, 2020

ரன்னிங் டைரி - 98

    26-08-2020 08:30

தஞ்சோங் காத்தோங் ரோடு

இன்று குறைவான தூரமே ஓட வேண்டுமென்று முடிவெடுத்திருந்தேன். அதன்படி இன்று குறைவான தூரமே ஓடினேன். மிக வேகமாக ஓடினேன்.  எண்ணம் முழுவதும் சுவாசத்தில்தான் இருந்தது. வீட்டை அடைந்ததே தெரியவில்லை.

ரன்னிங் டைரி - 97

   25-08-2020 08:35

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓட ஆரம்பித்ததே வேகமாகத் தான். எப்போதும் மெதுவாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்டுவதுதான் சரி. சில கிலோமீட்டர்களுக்கு பிறகு வேகத்தைக் குறைத்தேன். சரியான வேகம் வரும் வரை வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் ஓடினேன். சீரான வேகம் எது என்பது ஒரு வீரனுக்கு தெரியும். எனக்கு என் வேகம் எது என்பது தெரியும். அப்படித் தெரியும் என்பதால் நான் உடனே அந்த வேகத்தை அடைய முடியாது. பல நேரங்களில்அந்த வேகத்தைக் கண்டடையாமல் ஓடுவதை நிறுத்தி நடந்திருக்கிறேன். இன்று என்னால் எனது சீரான வேகத்தை அடைய முடிந்தது. ஏனோ மனதில் "Civilization State " என்று வார்த்தைகள் வந்து கொண்டே இருந்தது.சென்ற வாரம் இதைப் பற்றி இரண்டு கட்டுரைகளை படித்தேன். அந்த கட்டுரைகளின் சாராம்சத்தை எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன். 

Monday, August 24, 2020

ரன்னிங் டைரி - 96

  24-08-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது இன்று அனுப்பவேண்டிய ஒரு ஈமெயில் தான். வெள்ளிக்கிழமையே நான் அனைத்தையும் தயாராக வைத்துவிட்டேன். ஆனால் மற்றொரு என்ஜினீயரின் ஒப்புதல் இல்லாமல் நான் அந்த ஈமெயிலை அனுப்ப முடியாது. இந்த ப்ராஜெக்ட் ஒரு இந்திய கம்பெனிக்கு செய்ய டெமோ காட்ட வேண்டும். அதற்குரிய flowchart-ஐ நான் வரைந்து வைத்திருக்கிறேன். ஈமெயிலுடன் அதையும் சேர்த்து அனுப்ப வேண்டும். அப்படியே எண்ணம் முழுவதும் நான் இதுவரை வரைந்த flow diagrams மேல் சென்றது. Microsoft Visio-தான் எனக்கு எல்லாமாகி போனது. ஒரு மணிநேரம் பேச வேண்டியதை ஒரு flow diagram ஐந்து நிமிடத்தில் புரிய வைத்து விடும்.  இந்த 12 வருடங்களில் நான் பல மீட்டிங்களுக்கு சென்றுள்ளேன் என்னைப் பொறுத்தவரை diagrams இல்லாமல் ப்ரொஜெக்ட்டை  கஸ்டமருக்கு விளக்குவது பெரும்  கஷ்டம்.  அப்படி யோசித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று  "Hi Sasi" என்று ஒருவர் என் முன்னாள் ஓடி வந்துகொண்டிருந்தார். எனக்கு உடனே அது யாரென்று புலப்படவில்லை. மிக அருகில் வந்தவுடன் தான் அது யாரென்று எனக்கு தெரிந்தது -அவர் என் பாஸ்(Boss). அவரும் ஓடிக்கொண்டிருந்தார். அவருக்கு "Hi" சொல்லிவிட்டு இருவரும் நிற்காமல் எதிரெதிர் திசையில் ஓடினோம். அப்போதுதான் கவனித்தேன் எனக்கு முன்னால் ஒருவர் சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தார். அவரை பின்தொடர முடிவு செய்து வேகத்தை கூட்டி அவருக்கு மிக அருகில் ஓடினேன். வீடு வரும் வரை அவரை பின் தொடர்ந்தேன்,  மனதெல்லாம் அவரின் கால்கள் தான் ... அவர் என் வீட்டைத் தாண்டி ஓடினார். வீட்டிற்குள் வந்ததும் மொபைலைப் பார்த்தேன் "Hope u had a good run 👍" என  என் பாஸ்  மெசேஜ் அனுப்பியிருந்தார்.

Friday, August 21, 2020

ரன்னிங் டைரி - 95

 21-08-2020 08:50

உபியிலிருந்து வீடுவரை 

மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தேன். இன்று அவனின் பிறந்த நாள்.  ஓட ஆரம்பித்தவுடன் இரண்டு வருடங்களுக்கு முன்பு மருத்துவமனையில் நடந்ததுதான் ஞாபகத்தில் வந்தது.அன்று நான்கு மணிக்கு மனைவிக்கு வலி வந்தவுடன் மகளை எழுப்பி கார் பிடித்து KK மருத்துவமனைக்கு சென்றோம். காரைவிட்டு இறங்கும் போதுதான் கவனித்தோம் காரின் இருக்கை முழுவதும் இரத்தம். கார் ஓட்டுநர் வயதானவர். மிகவும் பணிவுடன் என்னிடம் "இதைப் பற்றி கவலைப் படாதே தம்பி மொதல்ல மனைவியை கவனி" என்றார். கண்ணீருடன் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மருத்துவமனைக்குள்ளே சென்றேன். உள்ளே சென்றவுடன் நர்ஸுகள் மனைவியை பரிசோதிக்க ஆரம்பித்தனர். என்னை பில்லிங் பகுதிக்கு அனுப்பி பணம் கட்டச் சொன்னார்கள். நான் அங்கு சென்று பல படிவங்களை பூர்த்தி செய்து பணம் காட்டினேன். மனைவியை டெலிவரி வார்டில் சேர்த்தார்கள். நாங்கள் எப்போதும் பார்க்கும் டாக்டர் பணியில் இல்லை.  பல சோதனைகள் செய்த பின்னர் உடனே ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி என்னிடம் ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கினார்கள். நான் பயப்பட ஆரம்பித்தேன். உடனே மனைவியை அறுவை சிகிச்சை அறைக்குள் எடுத்துச்  சென்றனர். அடுத்த 70 நிமிடங்கள் நானும் என் மகளும் ஒருவரை ஒருவர் இறுக்கமாக பற்றிக் கொண்டு உட்கார்ந்து இருந்தோம். ஆறே கால் மணிக்கு தமிழ் நர்ஸ் ஒருவர் வந்து  "Congratulations ,your wife has delivered a baby boy, wait for 10 minutes we will bring the baby and show you " என்றார். என் மகளும் " Congratulations pa "  என்றாள். அவளை  தூக்கிக் கொண்டேன். பத்து நிமிடங்கள் கழித்து அவனை கொண்டு வந்தார்கள் கண்களில் கண்ணீருடன் நானும் என் மகளும் அவனை பார்த்தோம்.  அந்த நிமிடங்களை நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தேன் .

ரன்னிங் டைரி - 94

20-08-2020 08:26

தஞ்சோங் கத்தோங் ரோடு 

முதலில் ஓட வேண்டாமென்று எண்ணி நடக்க ஆரம்பித்தேன். என்னை அறியாமலே சிறிது நேரத்தில் ஓடினேன்.ஓட ஆரம்பித்தவுடன் முதலில் நான் கவனித்தது எதிர்க்கே வரும் பெற்றோர்கள் அனைவரின் கழுத்திலும் அடையாள அட்டை தொங்கி கொண்டிருந்ததைத்  தான் . என்ன கொடுமை என்று எண்ணிக் கொண்டேன். அவர்கள் அனைவரின் பிள்ளைகளும் கனடியன் இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கிறார்கள். பள்ளியைத் கடந்தபோது தான் வாக்மேனில் ஓடிக் கொண்டிருந்த பாடலைக் கவனித்தேன். அடேல் (Adele) தனது வசீகர குரலால் "Someone like you" பாடிக் கொண்டிருந்தார். எனக்கு அவரின் குரல் மிகவும் பிடிக்கும். நான் அவரின் முதல் ஆல்பமான 19-ஐ பல நாட்கள் தொடர்ச்சியாக கேட்டிருக்கிறேன்.  பாடல் முடியும் வரை கவனம் முழுவதும் பாடலில்தான் இருந்தது. என்ன அருமையான பாடல்!  பாடல் முடிந்தவுடன் தான் நான் ஓடிக் கொண்டிருக்கும் இடத்தை கவனித்தேன்.  கடற்கரை அருகே வந்து விட்டிருந்தேன். திரும்பி மீண்டும் வீட்டிற்கே ஓட ஆரம்பித்தேன்.  காபி (Coffee) குடிப்பதா வேண்டாமா என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.



Wednesday, August 19, 2020

ரன்னிங் டைரி - 93

19-08-2020 08:45

உபியிலிருந்து (Ubi) வீடுவரை 

மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தேன். அவனை விட்டுவிட்டு வரும்போதெல்லாம் எனக்கு கண்ணீர் வரும். இன்றும் அப்படியே கண்ணீரைத்  துடைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். நேற்று பல பாடல்களை வாக்மேனில் ஏற்றினேன். ஓட ஆரம்பித்தவுடன் "சங்கீத மேகம்" எஸ் பி பியின் குரலில் ஆரம்பித்தது.சிலரை நாம் நம் வீட்டில் ஒருவர்போல் நினைத்துக் கொள்வோம் அதில் ஒருவர்தான் எஸ் பி பி. அவருக்கு உடல்நலம் சரியில்லை என்றதும் எனக்கு ஒருவிதமான பயம் ஏற்பட்டது. அவர் நலமாக வேண்டுமென்று எண்ணிக் கொண்டே ஓடினேன்.யூனுஸ் பஸ் ஸ்டாப் அருகில் வந்தவுடன் நான் மிகவும் விரும்பி சாப்பிடும் சூப் நூடுல்ஸ் ஞாபகம் வந்தது. அதைச் சாப்பிட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.வாயில் எச்சி ஊறியது. என்ன செய்ய என்று  என்னை நானே கேட்டுக் கொண்டேன். வீட்டை அடையும் வரை  எண்ணம் முழுவதும் சாப்பிட்டிலேயே இருந்தது. 

ரன்னிங் டைரி - 92

  18-08-2020 08:28

தஞ்சோங் கத்தோங் ரோடு 

மழை மேகம்  குளிர்ந்த காற்று  இவை இரண்டும் என்னை ஓட உற்சாகப் படுத்தியது. ஓட ஆரம்பித்த சிறிது நேரத்தில் தோனியின் ஞாபகம் வந்தது. நான் தோனி விளையாடி அதிகமாக பார்த்ததில்லை. எனக்கு தெரிந்த தோனி எழுத்தின் மூலமும் நண்பர்கள் சொல்லித்தான். ஏனோ தோனியை எனக்குப் பிடிக்கும். அவரது ஓய்வு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் இழப்புத்தான். நான் 20-20 பார்ப்பதில்லை. அதனால் இனிமேல் யூடூப்பில் தான் தோனியின் பேட்டிங்கை பார்க்க வேண்டும். என்னை மிகவும் பாதித்த விளையாட்டு வீரர் ஓய்வு என்றால் அது பிரைன் லாராவின் ஓய்வுதான்.அன்று என்னை அறியாமல் அழுதேன்.  மெஸ்ஸி ஓய்வு பெற்றால் என்ன செய்வது என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Monday, August 17, 2020

ரன்னிங் டைரி - 91

 17-08-2020 08:32 

தஞ்சோங் கத்தோங் ரோடு 

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் ஓடினேன். மெதுவாக ஓடவேண்டுமென்று முன்னரே முடிவு செய்துவிட்டுத் தான் ஓட ஆரம்பித்தேன். நல்ல வெய்யில். வாக்மேனில் இளையராஜா வழக்கம் போல தனது மேஜிக்கை நிகழ்த்த ஆரம்பித்தார். அப்படியே  இளையராஜாவை பற்றி நான் வாசித்த ஒரு கட்டுரை மனதில் ஓடியது . "இளையராஜாவின் இசையில் சாதி எதிர்ப்பு அரசியல் – ராஜேஷ் ராஜாமணி"   நமது நாட்டில்தான் அவரது இசையை ஆராயாமல் அவரது சாதியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த கட்டுரை ஒரு முக்கியமான ஒன்று.. இளையராஜாவை மற்றொரு கோணத்தில் நமக்கு காட்டுகிறது. இதை எண்ணிக் கொண்டே மவுண்ட் பேட்டன் ரோடை அடைந்தேன்.  எதிரே ஒரு அம்மாவும் மகனும் வந்து கொண்டிருந்தனர். மகனின் கையில் கிரிக்கெட் பேட் இருந்தது. பார்ப்பதற்கு ஆஸ்திரேலியர் போல் தெரிந்தார் . அவன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தான்.  நான் அவனைப் பார்த்து கையை அசைத்தேன் அவனும் சிரித்துக்கொண்டே கை காட்டினான்.  வாக்மேனில் "என்னை தாலாட்ட வருவாளா" ஆரம்பித்தது ..பாடிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.


Thursday, June 4, 2020

கொரோனா நாட்கள் - Series

இதுவும் வாட்சப்பில் தான் ஆரம்பித்தது. நண்பர்கள் பலர் இந்த தொடர் பார்த்தேன் அந்த தொடர் பார்த்தேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நான் இந்த கொரோனா நாட்களில் இரண்டே தொடர்தான் முழுதாக பார்த்தேன் ஒன்று நான் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கும் "Homeland" தொடரின் புதிய சீசன். இரண்டாவது "Paatal Lok".பலர் என்னை "Money Heist" பார்க்கச் சொன்னார்கள். ஏனோ எனக்கு அதில் விருப்பமில்லை.

நான் பார்த்த முதல் ஆங்கில series "Breaking Bad" என்றுதான் நினைக்கின்றேன். முதல் இரண்டு எபிசோடுகளுக்கு பிறகு சர்ச் நண்பர் ஒருவர் "looks good ..you can watch" என்றார். பார்க்க ஆரம்பித்தேன்.அதன் பிறகு தேடி தேடி தொடர்களை பார்க்க ஆரம்பித்தேன். நான் மிகவும் ரசித்துப் பார்த்த தொடர்கள் :

1)Breadking Bad
2)True Detective Season 1
3)The Wire
4)Unbelievable
5)Mindhunter
6)The Man in the high Castle
7)Narcos
8)Berlin Station
9)Da Vinci's Demon
10)West World -Season 1 & 2
11)The Borgias
12)Chernobyl
13)Roots
14)Killing Eve
15)Silicon Valley
16)Sherlock
17)The Walking Dead - season 1 to 3
18)Fleabag
19)The Crown - Season 1
20)Game of Thrones
21)Zoo
22)The Newsroom
23)The Name of the Rose
24)Braindead 
25)Descendants of the Sun

மேலே உள்ள லிஸ்டில் பல த்ரில்லர் வகையைச் சார்ந்தது.  Narcos மற்றும் Game of Thrones விடிய விடிய பார்த்தேன். Silicon Valley மற்றும் Braindead காமெடி நான் பல தடவை வெடித்துச் சிரித்திருக்கிறேன். Blackish தொடரிலும் சிரித்துக் கொண்டே இருக்கலாம்.இந்த lockdown நாட்களுக்கு முன் "Friends" தொடரை முழுவதும் பார்த்தேன். அட்டகாசமான நகைச்சுவை .அவசியம் பார்க்க வேண்டிய தொடர்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய விளையாட்டு தொடர்பான தொடர்கள் :
1) The Last Dance
2) The Losers
3) All or Nothing: Manchester City 
4) The Test :A New Era For Australian Team

முதல் இரண்டும் அனைத்து விளையாட்டு பிரியர்களும் பார்த்தே ஆக வேண்டுமென்று தான் சொல்வேன். அந்த இரண்டிலும் பல விமர்சனங்கள் இருந்தாலும் பல பாடங்களை விளையாட்டு வீரருக்கும் பார்வையாளர்களுக்கும் கற்றுக் கொடுக்கும்.

Wednesday, June 3, 2020

ரன்னிங் டைரி - 90

03-06-2020 05:32
தஞ்சோங் கத்தோங் ரோடு 

நல்ல குளிர். சிறிது தூரம் நடந்து விட்டு ஓட ஆரம்பித்தேன். மனதில் இளையராஜா வந்துகொண்டே இருந்தார். இன்று அவரின் பிறந்தநாள். எத்தனை எத்தனை பாடல்கள் .எல்லாவிதமான situationக்கும் அவரின் பாடல்கள் உண்டு.என் வாக்மேனில் "காதோரம் லோலாக்கு" ஓடிக் கொண்டிருந்தது.  என் மகளுக்கும் அவரின் பாடல்கள் பிடித்திருக்கிறது.விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல இளையராஜா. எனக்கும் அவர்மேல் பல விமர்சனங்கள் உண்டு ஆனால் அவரின் இசை எல்லாவற்றையும் சரிசெய்து விடுகிறது. பல தமிழர்கள் போல எனக்கும் வாழ்வின் மிக முக்கிய நேரத்தில் என்னை கைபிடித்து நடத்திச் சென்றது இளையராஜாவின் பாடல்கள் தான். மனதில் பல பாடல்கள் ஓடிக் கொண்டே இருந்தன. பலவிதமான உணர்வுகளோடு ஓடிக்கொண்டிருந்தேன்.  அண்ணன் இறந்த செய்தி கேட்டு பர்வின் டிராவல்ஸில் சென்றுகொண்டிருந்த போது இரண்டு பாடல்கள் என்னை கதறி அழவைத்தன. ஒன்று "சின்ன தாயவள் (தளபதி )" மற்றும்  "பூங்காற்றிலே(பாம்பே)". இன்றும் இந்த பாடல்கள் கேட்கும் போது கண்ணில் நீர் வரும். "கல்யாண மலை" படலைக் கேட்கும் போதெல்லாம் மறைந்த சித்தப்பா மனதில் தோன்றி அந்த பாடலை பாடுவார். "இளமை இதோ" கேட்கும் போதெல்லாம் அண்ணனின் முகம் என் முன் தோன்றும்.மகள் பிறந்தபோது "ராஜா ராஜா சோழன்". மகன் பிறந்தபோது "தாரை தப்பட்டை தீம் மியூசிக்". "பழமுதிர் சோலை " கேட்கும் போதெல்லாம் அக்காமார்களுடன் விளையாடியதுதான் மனதில் ஓடும். இப்படி எத்தனை பாடல்கள். இதை டைப் செய்து கொண்டிருக்கும் போது "இளையநிலா பொழிகிறது" கேட்டுக் கொண்டிருக்கிறேன்.ராஜா ராஜாதான் ! வாழ்க பல்லாண்டு என்று சொல்லிக் கொண்டே வீட்டை அடைந்தேன் கண்ணில் கண்ணீருடன்!


Tuesday, June 2, 2020

ரன்னிங் டைரி - 89

01-06-2020 06:10
தன்மன் ரோடு 

இன்றும் தன்மன் ரோட்டில் தான் ஓடினேன். ஓட ஆரம்பித்தபோதே பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பொனி ஞாபகத்தில் வந்தது. கடந்த இரண்டு மாதத்தில் கிட்டத்தட்ட ஒவ்வெரு நாளும் குறைந்தது ஒரு முறையாவது கேட்டிருப்பேன். ஏனோ கேட்கும் போதெல்லாம் என்னுள் பலவிதமான எண்ணங்கள் ஓடும். என் வாக்மேனில் அந்த சிம்பொனி இல்லை.  வேறொரு பாடல் ஓடிக்கொண்டிருந்தது ஆனால் மனதோ அந்த சிம்பொனியை சிந்தித்துக் கொண்டே இருந்தது. கடந்த வாரம் இந்த சிம்பொனியைப் பற்றி ஒரு புத்தகம் படித்தேன். கலையின் உச்சம் இந்த சிம்பொனி என்கிறார் அதன் ஆசிரியர். குழந்தைகளுக்கு இசை கற்றுக் கொடுக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Monday, June 1, 2020

ரன்னிங் டைரி - 88

31-05-2020 05:20
தன்மன் ரோடு 

மார்கெட்டுக்கு செல்ல வேண்டுமென்று எண்ணி அந்த பக்கம் ஓட ஆரம்பித்தேன். ஆனால் சிக்னல் வந்தவுடன் திரும்பி தன்மன் ரோடு பக்கம் ஓடினேன். இந்த மாதம் எவ்வளவு சீக்கிரம் சென்றுவிட்டது என்று எண்ணிக் கொண்டே ஓடினேன். வழக்கத்திற்கு மாறாக இந்த மாதம் முகநூலில் அதிக நேரம் ஏன் செலவழித்தேன் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். திடீரென்று " i cant breathe" என்ற வாக்கியம் எண்ணத்தில் வந்தது. அமெரிக்காவில் நடப்பது கொடுமை. எவ்வளவு மாடர்னாகி என்ன பயன்? ஒரு மனிதனை மனிதனாக மதிக்க தெரியாவிட்டால்?!. திரும்பி மார்க்கெட் பக்கம் ஓடினேன். கடைகள் திறக்க ஆரம்பித்திருந்தது. ஓடுவதை நிறுத்தி விட்டு மார்கெட்டுக்குள் சென்றேன்.

Saturday, May 30, 2020

ரன்னிங் டைரி - 87

30-05-2020 06:23
தஞ்சோங் காத்தோங் ரோடு

குளிர்ந்த காற்று மழை வரும் என்று எண்ணிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன். கடற்கரைக்கு செல்லும் பாதையிலிருந்து விலகி எங்கு செல்ல என்று தெரியாமல் ஓடினேன். ட்ராபிக் சிக்னல் வந்தவுடன் மீண்டும் தெரிந்த பாதைக்கே வந்தேன். பின் புறம் இருக்கும் மைதானத்தைச் சுற்றி ஓடலாம் என்று எண்ணி அந்த பக்கம் ஓட ஆரம்பித்தேன். மனதில் இந்திய சீன எல்லையில் என்ன நடக்கிறது என்று எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. நான் நின்று பாடலை மாற்றினேன். இளையராஜா வழக்கம்போல் தனது மேஜிக்கை நிகழ்த்த ஆரம்பித்தார். மனம் பாம்பன் பாலத்திற்கு சென்றது. அங்கு இந்நேரம் எப்படி இருக்கும் என்று எண்ணிக் கொண்டே ஓடி முடித்தேன்.

Wednesday, May 27, 2020

கொரோனா நாட்கள் - ஆசிய திரைப்பட இயக்குநர்கள்

நான் திரைப்படங்களை யார் நடித்திருக்கிறாரகள் என்று தெரிந்த பின்புதான் அந்த படத்தைப் பார்ப்பேன். சிங்கப்பூர் வருவது வரை அப்படித்தான் ஆனால் இங்கு வந்த பிறகு பிற மொழிப் படங்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. மற்றும் திரைப்படங்களை கூர்ந்து கவனிக்கும் பழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் வந்தது. மற்றொரு முக்கிய மாற்றம் திரைப்படங்களைப் பற்றி புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தது.சிங்கப்பூர் நூலகத்தில் சினிமா பற்றிய நிறைய புத்தங்கள் இருக்கின்றன. "Sight & Sound" மாத இதழ் தான் என்னை உலக சினிமாவிற்கு அறிமுகப் படுத்தியது.  "The New Yorker" வாரந்திரியில் வரும் சினிமா விமர்சனங்கள் என் நடிகர்கள் சார்ந்த ரசனையை கேள்விக்குள்ளாக்கியது. இப்படி சினிமா பற்றி வாசிக்க வாசிக்க நான் சினிமா விமர்சனம் எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். ஒரு சினிமாவை நல்ல இருக்கு நல்ல இல்ல என்ற இரண்டு வகைக்குள் நிறுத்துவது என்னை பொறுத்தவரை சரியானதில்லை.  இந்த கொரோனா நாட்களில் எனக்கு பிடித்த ஆசிய இயக்குநர்களின் திரைப்படங்களை மீண்டும் பார்த்தேன். எனக்கு பிடித்த ஆசிய இயக்குநர்கள் கீழே:

என்னை மிகவும் கவர்ந்த இயக்குனர்களில் முதன்மையானவர் ஹயாவ் மியசாகி (Hayao Miyazaki). இவர் ஒரு animator . மாங்கா (manga) வகை ஜப்பானிய திரைப்படங்களை உருவாக்கியவர். 2005 வரை அவர் உருவாக்கிய அனைத்து படங்களும் என்னிடம் டீவிடியில் இருந்தது. இவரின் படங்கள் என் கனவில் பல நாட்கள் தொடர்ச்சியாக வந்துள்ளது. நான் மீண்டும் மீண்டும் செல்லும் ஒரு இயக்குநர். சமீபகாலமாக என் மகளுக்கு இவரின் படங்கள் பிடித்துவிட்டது. கொரோனா நாட்களில் இவரின் படங்கள் பெரும் விடுதலை.ஒரு தடவை பார்த்தோம் என்றால் மீண்டும் நம்மை அந்த மாயாஜால உலகுக்குள் கொண்டு செல்லும் தன்மை கொண்டவை இவரின் படைப்புகள்.

எனக்கு பிடித்த மற்றொரு ஜப்பானிய இயக்குநர் யசுஜிரோ ஓஸு (Yasujiro Ozu). இவருடைய "Noriko Trilogy" படங்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்கள். ஒரு குடும்பத்தின் கதையை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார். அதிலும் "Tokyo Story" ஒரு மைல் கல். இவரின் படங்களில் ஒளிப்பதிவு மற்றொரு சிறப்பம்சம். ஒவ்வொரு நடிகரின் உணர்ச்சிகளை எவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார். உண்மையில் இவர் படங்களில் ஒவ்வொரு பொருளும் இடமும் கதையை நகர்த்திச் செல்லும். ஒரு காட்சியில் இருக்கும் அனைத்தும் நமக்கு கதை சொல்லும்.

தைவான் இயக்குநர் ஹௌ சியாவ் சியின் (Hou Hsiao Hsien)படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.இவரின் ஒரு சில படங்களைத் தவிர மற்ற அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன். சாதாரண தினசரி நிகழ்வுகளை மிக அழகாக தன் படங்களில் வெளிப்படுத்தியவர்.மற்றொரு அம்சம் நிறைய uncut நீள காட்சிகள் இருக்கும். இவரின் படங்களை தொடர்ச்சியாக பார்த்தால்தான் நமக்கு புரியும். "The Puppet Master" மற்றும் "The Assassin" அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள்.

 நூரி பில்ஜ் சிலான் (Nuri Blige Ceylan) ஒரு துருக்கிய இயக்குநர். சென்ற வருடம் தான் இவரின் படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களின் தான் இவரின் பெருபான்மையான படைப்புகள் நிகழ்கின்றன. இவரின் கதைகள் மனிதனின் தினசரி வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கும். தலைமுறைகளுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் அதன் பிரச்சனைகள் இப்படி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள்தான் இவரின் கதைகளின் பிரதானம். இவரின் படங்களில்  இசையும் அமைதியும் இரு தூண்கள். இவர் இந்த லிஸ்டில் வருவது சரிதான் சென்று எனக்கு படுகிறது. துருக்கி ஒரு ஐரோப்பிய நாடு.

ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசாவாவின்  (Akira Kurosawa) திரைப்படங்களை பற்றி நான் என்ன சொல்ல. "ரஸமோன்" தெரியாமல்  சினிமா ரசிகர் என்று ஒருவர் சொல்லிவிட முடியாத அளவுக்கு திரைப்பட வரலாற்றில் அது ஒரு முக்கியமான படம்.நான் இன்னும் இவரது அனைத்து படங்களையும் பார்க்க வில்லை.  இவரின் விடுபட்ட படங்களையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

கொரியன் இயக்குநர் கிம் கி டுக்கின்  (Kim Ki-duk ) படங்கள் வேறொரு வகையான அனுபவத்தைக் கொடுக்கும்.  இவரின் படங்களில்  பெரும்பாலும் கதாபாத்திரங்கள் "sadomasochistic". இந்த வார்த்தையை நான் கூகிளில் தேடி கண்டுபிடித்தேன்.இவரின் படங்களில் புத்த மத குறியீடுகள் காட்சிகளில் வந்து கொண்டே இருக்கும் ஆனால் அதன் விளைவுகள் சரியாக கையாளப்பட்டுள்ளதா? என்பது கேள்விக் குறிதான். இருந்தாலும் இவரின் படங்களையும் அவசியம் பார்க்க வேண்டும்.

ஈரானிய இயக்குநர்கள் சிலரையும் எனக்கு பிடிக்கும் ஆனால் இந்த கொரோனா நாட்களில் அவர்களின் படங்களைப் பார்க்கவில்லை. ஸ்ரீலங்காவின் பிரசன்ன விதானகேவின் படங்களையும் பார்க்க வேண்டும். ஹாலிவுட் மோகத்திலிருந்து வெளியே வந்தால் ஒரு பெரிய திரைப்பட உலகம் நமக்காக காத்திருக்கிறது.