Saturday, May 30, 2020

ரன்னிங் டைரி - 87

30-05-2020 06:23
தஞ்சோங் காத்தோங் ரோடு

குளிர்ந்த காற்று மழை வரும் என்று எண்ணிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன். கடற்கரைக்கு செல்லும் பாதையிலிருந்து விலகி எங்கு செல்ல என்று தெரியாமல் ஓடினேன். ட்ராபிக் சிக்னல் வந்தவுடன் மீண்டும் தெரிந்த பாதைக்கே வந்தேன். பின் புறம் இருக்கும் மைதானத்தைச் சுற்றி ஓடலாம் என்று எண்ணி அந்த பக்கம் ஓட ஆரம்பித்தேன். மனதில் இந்திய சீன எல்லையில் என்ன நடக்கிறது என்று எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. நான் நின்று பாடலை மாற்றினேன். இளையராஜா வழக்கம்போல் தனது மேஜிக்கை நிகழ்த்த ஆரம்பித்தார். மனம் பாம்பன் பாலத்திற்கு சென்றது. அங்கு இந்நேரம் எப்படி இருக்கும் என்று எண்ணிக் கொண்டே ஓடி முடித்தேன்.

Wednesday, May 27, 2020

கொரோனா நாட்கள் - ஆசிய திரைப்பட இயக்குநர்கள்

நான் திரைப்படங்களை யார் நடித்திருக்கிறாரகள் என்று தெரிந்த பின்புதான் அந்த படத்தைப் பார்ப்பேன். சிங்கப்பூர் வருவது வரை அப்படித்தான் ஆனால் இங்கு வந்த பிறகு பிற மொழிப் படங்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. மற்றும் திரைப்படங்களை கூர்ந்து கவனிக்கும் பழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் வந்தது. மற்றொரு முக்கிய மாற்றம் திரைப்படங்களைப் பற்றி புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தது.சிங்கப்பூர் நூலகத்தில் சினிமா பற்றிய நிறைய புத்தங்கள் இருக்கின்றன. "Sight & Sound" மாத இதழ் தான் என்னை உலக சினிமாவிற்கு அறிமுகப் படுத்தியது.  "The New Yorker" வாரந்திரியில் வரும் சினிமா விமர்சனங்கள் என் நடிகர்கள் சார்ந்த ரசனையை கேள்விக்குள்ளாக்கியது. இப்படி சினிமா பற்றி வாசிக்க வாசிக்க நான் சினிமா விமர்சனம் எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். ஒரு சினிமாவை நல்ல இருக்கு நல்ல இல்ல என்ற இரண்டு வகைக்குள் நிறுத்துவது என்னை பொறுத்தவரை சரியானதில்லை.  இந்த கொரோனா நாட்களில் எனக்கு பிடித்த ஆசிய இயக்குநர்களின் திரைப்படங்களை மீண்டும் பார்த்தேன். எனக்கு பிடித்த ஆசிய இயக்குநர்கள் கீழே:

என்னை மிகவும் கவர்ந்த இயக்குனர்களில் முதன்மையானவர் ஹயாவ் மியசாகி (Hayao Miyazaki). இவர் ஒரு animator . மாங்கா (manga) வகை ஜப்பானிய திரைப்படங்களை உருவாக்கியவர். 2005 வரை அவர் உருவாக்கிய அனைத்து படங்களும் என்னிடம் டீவிடியில் இருந்தது. இவரின் படங்கள் என் கனவில் பல நாட்கள் தொடர்ச்சியாக வந்துள்ளது. நான் மீண்டும் மீண்டும் செல்லும் ஒரு இயக்குநர். சமீபகாலமாக என் மகளுக்கு இவரின் படங்கள் பிடித்துவிட்டது. கொரோனா நாட்களில் இவரின் படங்கள் பெரும் விடுதலை.ஒரு தடவை பார்த்தோம் என்றால் மீண்டும் நம்மை அந்த மாயாஜால உலகுக்குள் கொண்டு செல்லும் தன்மை கொண்டவை இவரின் படைப்புகள்.

எனக்கு பிடித்த மற்றொரு ஜப்பானிய இயக்குநர் யசுஜிரோ ஓஸு (Yasujiro Ozu). இவருடைய "Noriko Trilogy" படங்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்கள். ஒரு குடும்பத்தின் கதையை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார். அதிலும் "Tokyo Story" ஒரு மைல் கல். இவரின் படங்களில் ஒளிப்பதிவு மற்றொரு சிறப்பம்சம். ஒவ்வொரு நடிகரின் உணர்ச்சிகளை எவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார். உண்மையில் இவர் படங்களில் ஒவ்வொரு பொருளும் இடமும் கதையை நகர்த்திச் செல்லும். ஒரு காட்சியில் இருக்கும் அனைத்தும் நமக்கு கதை சொல்லும்.

தைவான் இயக்குநர் ஹௌ சியாவ் சியின் (Hou Hsiao Hsien)படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.இவரின் ஒரு சில படங்களைத் தவிர மற்ற அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன். சாதாரண தினசரி நிகழ்வுகளை மிக அழகாக தன் படங்களில் வெளிப்படுத்தியவர்.மற்றொரு அம்சம் நிறைய uncut நீள காட்சிகள் இருக்கும். இவரின் படங்களை தொடர்ச்சியாக பார்த்தால்தான் நமக்கு புரியும். "The Puppet Master" மற்றும் "The Assassin" அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள்.

 நூரி பில்ஜ் சிலான் (Nuri Blige Ceylan) ஒரு துருக்கிய இயக்குநர். சென்ற வருடம் தான் இவரின் படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களின் தான் இவரின் பெருபான்மையான படைப்புகள் நிகழ்கின்றன. இவரின் கதைகள் மனிதனின் தினசரி வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கும். தலைமுறைகளுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் அதன் பிரச்சனைகள் இப்படி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள்தான் இவரின் கதைகளின் பிரதானம். இவரின் படங்களில்  இசையும் அமைதியும் இரு தூண்கள். இவர் இந்த லிஸ்டில் வருவது சரிதான் சென்று எனக்கு படுகிறது. துருக்கி ஒரு ஐரோப்பிய நாடு.

ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசாவாவின்  (Akira Kurosawa) திரைப்படங்களை பற்றி நான் என்ன சொல்ல. "ரஸமோன்" தெரியாமல்  சினிமா ரசிகர் என்று ஒருவர் சொல்லிவிட முடியாத அளவுக்கு திரைப்பட வரலாற்றில் அது ஒரு முக்கியமான படம்.நான் இன்னும் இவரது அனைத்து படங்களையும் பார்க்க வில்லை.  இவரின் விடுபட்ட படங்களையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

கொரியன் இயக்குநர் கிம் கி டுக்கின்  (Kim Ki-duk ) படங்கள் வேறொரு வகையான அனுபவத்தைக் கொடுக்கும்.  இவரின் படங்களில்  பெரும்பாலும் கதாபாத்திரங்கள் "sadomasochistic". இந்த வார்த்தையை நான் கூகிளில் தேடி கண்டுபிடித்தேன்.இவரின் படங்களில் புத்த மத குறியீடுகள் காட்சிகளில் வந்து கொண்டே இருக்கும் ஆனால் அதன் விளைவுகள் சரியாக கையாளப்பட்டுள்ளதா? என்பது கேள்விக் குறிதான். இருந்தாலும் இவரின் படங்களையும் அவசியம் பார்க்க வேண்டும்.

ஈரானிய இயக்குநர்கள் சிலரையும் எனக்கு பிடிக்கும் ஆனால் இந்த கொரோனா நாட்களில் அவர்களின் படங்களைப் பார்க்கவில்லை. ஸ்ரீலங்காவின் பிரசன்ன விதானகேவின் படங்களையும் பார்க்க வேண்டும். ஹாலிவுட் மோகத்திலிருந்து வெளியே வந்தால் ஒரு பெரிய திரைப்பட உலகம் நமக்காக காத்திருக்கிறது.

Tuesday, May 26, 2020

கொரோனா நாட்கள் - Stylish batsmen

ஒருநாள் வாட்சப் குழுவில் யார் ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் என்ற விவாதம் நடந்தது. நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தது 1991 என்று நினைக்கிறேன். அப்போதுதான் லாரா விளையாட ஆரம்பித்தார். ஏனோ பார்த்தவுடனே அவரின் பேட்டிங் பிடித்துவிட்டது. அவரின் backlift  -poetry in motion. என்னைப் பொறுத்தவரை நான் பார்த்த ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் இங்கிலாந்தின் கிரஹம்  தோர்ப்தான். அவர் ஒரு pocket size compact பேட்ஸ்மேன். தோர்பின் அனைத்து ஷாட்களும் எனக்கு பிடிக்கும். அடுத்து லாரா. லாரா மாதிரி பீல்ட்ங்கை கையாளும் பேட்ஸ்மேன்கள் ஒரு சிலரே.லாராவின் long stride defense, high backlift , pulls, sweeps மற்றும் கிரீஸ்க்கு வெளிய வந்த ஸ்பின்னர்களை கையாள்வது அலாதியானது.

ஆஸ்திரேலியாவின் மார்க் ஒவின்  (Mark Waugh) பேட்டிங்கிற்கு எங்கள் தெருவில் பல ரசிகர்கள் இருந்தனர். எனக்கும் அவரின் பேட்டிங் ஸ்டைல் பிடிக்கும். அவரின் பேட்டிங் ஸ்டேன்ஸே அழகாக இருக்கும். இவரைப் போல டேமியன் மார்ட்டினின் பேட்டிங்கும் எனக்கு பிடிக்கும்.லட்சுமணனின் wrist work அலாதியானது. ரிக்கி பாண்டிங்கின் pullshot , அரவிந்த டி சில்வாவின் நடந்து வந்து பந்தை எதிர் கொள்ளும் காட்சி, சச்சினின் straight டிரைவ் , முஹம்மது யூசுபின் off டிரைவ் மற்றும் பலரின் குறிப்பிட்ட  ஷாட் எனக்கு பிடிக்கும்.

எனக்கு பிடித்த ஸ்டைலிஸ் பேட்ஸ்மேன்கள்
1) கிரஹம் தோர்ப்
2)பிரையன் லாரா
3)மார்க் ஓ
4)டேமியன் மார்ட்டின்
5)லட்சுமண்

தற்கால பட்மேன்களில் கோலி ,KL ராகுல் ,பாவுமா மற்றும் தனஞ்ஜய டி சில்வா பிடிக்கும். சமீபத்தில் பாபர் அசமின் பேட்டிங் ஸ்டைல் ரொம்ப பிடித்தது.என்னவோ குட்டையாக இருக்கும் பேட்மேன்களின் ஸ்டைல் பார்க்க அழகாக இருக்கிறது.

Monday, May 25, 2020

கொரோனா நாட்கள் - ரேடியோ நாட்கள்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் என் முதலாளிக்கு வாட்சப் செய்தி அனுப்பினேன். அவர் வேலை ஏதும் செய்ய வேண்டாம் நான்றாக ஓய்வு எடுமென்று செய்தி அனுப்பினார்.நான் எதிர்பார்த்த பதில் தான். மனைவி மடியிலேயே இருங்கள். நான் சாப்பாடெல்லாம் அங்கு கொண்டுவந்துறேன் என்றாள். அடுத்த பத்து நாட்களில் கீழே வந்தது ஓரிரு முறைதான்.

அந்த பத்து நாட்களும் எனது  துணையாக இருந்தது ரேடியோவும் புத்தகமும் தான். கல்லூரி நாட்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக மணிக்கணக்காக ரேடியோ கேட்டது அந்த நாட்களில் தான். "கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க" கல்லூரி நாட்களில்தான் இந்த மந்திர வாக்கியம் முதன் முதலாக ஒலிக்க ஆரம்பித்தது. சூரியன் FM அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. கிட்டத்தட்ட எல்லாக் கடைகளிலும் சூரியன் FM ஒலித்தது. தொகுப்பாளர்களைப்  பற்றி தங்களுக்கு நெருங்கியவர்கள் போல பேசுவார்கள். கையில் பணம் இல்லாத நேரத்தில் எங்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு சூரியன் FM கேட்பதுதான். இந்த நோயின் நாட்களும் ரேடியோவில் தான் கழிந்தது.

காலையில் எழுந்தவுடன் சேனல் நியூஸ் ஆசியாவின் FM-ன் செய்திகள் அதை தொடர்ந்து கிளாஸ் 95-ல் ஆங்கில பாடல்கள் குறிப்பாக தொகுப்பாளர்களின் அரட்டை எனக்கு பிடித்தது. அதனை தொடர்ந்து ஒலி FM-ல் தமிழ் பாடல்களை மதிய உணவுவரை கேட்பேன். மதியம் தூங்குவதற்கு முன் சிம்பொனி FM-ல்  ஏதாவது சிம்பொனி இசைக் தொகுப்பு. அதைக் கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவேன். மூன்று மணிபோல் மீண்டும் ஒலி FM-ல் பாடல்களுக்கு திரும்புவேன். அதில் மலையாளம் ,ஹிந்தி மற்றும் தெலுங்கு பாடல்கள் ஒலிபரப்பாகும். பல நாட்கள் இந்த பகுதியில் ஒலிபரப்பான வேற்று மொழி பாடல்கள் எதுவும் எனக்கு தெரிந்ததில்லை. இருந்தாலும் கேட்பேன். பாடல்களின் தொகுப்பு இன்னும் மேம்பட வேண்டும். டீ குடிக்கும் நேரத்தில் கிஸ்92 FM-ல் ஆங்கில பாடல்களுக்கு செல்வேன்.நல்ல பாடல்கள் ஒலிபரப்பாகும்.

சாயங்காலம் மீண்டும் சேனல் நியூஸ் ஆசியாவின் FM-ன் செய்திகளுக்குச் செல்வேன். அதையே  இரவு உணவுவரை கேட்பேன்.தூங்குவதற்கு முன் மீண்டும்  ஒலி FM-ல் தமிழ் பாடல்களைக்  கேட்பேன். நேயர் போனில் அழைத்து அவர்களுக்கு விருப்பமான பாடல்களைக் கேட்கும் நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடித்தது. அதற்கு காரணம் அழைப்பவர் மற்றும் தொகுப்பாளருக்கு இடையே நடக்கும் உரையாடல்கள்தான். எனக்கு பிடித்த சில உரையாடல்கள் :

தொகுப்பாளர் : உங்களுக்கு என்ன பாட்டு வேணும் ?
அழைத்தவர் :TMS -ன் ஏதாவது ஒரு பாட்டு .
தொகுப்பாளர் :புதுப்பாட்டு எதுவும் புடிக்காத?
அழைத்தவர் : நான் கடைசியா 1971-ல் தான் படம் பார்த்தேன்.
தொகுப்பாளர் :என்னது ??!! உண்மையாவா?
அழைத்தவர் : உண்மையிலேயே  நான் படம் பார்த்த பல வருஷம் ஆயிட்டு .
தொகுப்பாளர் : பாட்ஷா பாக்கல ? எந்திரன் ? 
அழைத்தவர் : வடிவேலு காமெடி மட்டும் அப்ப அப்ப டீவில பாப்பேன்.
தொகுப்பாளர் : நம்பவே முடியல ?!

எனக்கும் ஆச்சிரியமாக இருந்தது.  2020-ல் இப்படி ஒருவர். அவரது குரலில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை. மிக சாதாரணமாக பேசினார். ஒரு புதுப் படத்தை பார்க்க வில்லை என்றால் நமக்கு ஒரு குற்றயுணர்ச்சி வருகிறது ஆனால் அவரோ திரைப்படங்களை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை அது எப்படி சாத்தியமாகும் என்று இரவு முழுக்க யோசித்தேன். மற்றொரு உரையாடல் :

தொகுப்பாளர் : உங்களுக்கு என்ன பாட்டு வேணும் ?
அழைத்தவர் : ஏதாவது பழைய பட்டு போடுங்க .
தொகுப்பாளர் : வீட்ல என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ?
அழைத்தவர் : அம்மாவோடு நெறைய நேரம் பேசிக்கிட்டு இருக்குறேன் .
தொகுப்பாளர் :இந்த ciruit breaker முன்னாடி தனியா இருந்திங்களா?
அழைத்தவர் : இல்ல . அம்மாவோடுதான் இருந்தேன் ஆனா வேலையில  
                              ரெம்ப பிசி  அதனால அம்மாவோட சரியா பேசவே இல்ல .   
                              இப்ப  பேசிக்கிட்டே இருக்கோம். (சிரிக்கிறார்).
தொகுப்பாளர் : அம்மா என்ன சொல்றாங்க ?
அழைத்தவர் :  அம்மாவுக்கு ரெம்ப சந்தோசம்.

இந்த சின்ன உரையாடல் என்னுள் பல  எண்ணங்களை எழுப்பியது. அம்மாக்கள் எப்போதும் அப்படித்தான் அவர்களுக்கு பிள்ளைகளைப் பற்றித் தெரியும்.

தொகுப்பாளர் :இந்த ciruit breaker முடித்தவுடன் யாரை முதலில் 
                                கட்டிப்பிடிக்கமாட்டீர்கள் ?
அழைத்தவர் : என் முதலாளியை .
தொகுப்பாளர் : ஏன் அவர் ?
அழைத்தவர் : அவருக்கு நாங்கள் வேலை செய்யும் ஒரு நபர் .thats all .
தொகுப்பாளர் : இப்போது அவர் இதைக் கேட்டு கொண்டிருந்தாரென்றால் 
                                என்னவாகும்?
அழைத்தவர் :  ஒன்றும் ஆகாது . என் பெயரில் நூற்றுக்கணக்கான பேர் 
                              இருக்கிறீரார்கள்.

என்னமோ இந்த உரையாடல் என்னை வெகுவாக சிந்திக்க வைத்தது. என் பாஸ் எங்களை முதலில் ஒரு மனிதனாக மதிப்பவர். எங்களுக்கும் உணர்வுகள் குடும்பம் இருக்கிறது என்பதை நன்கு அறிந்து அதற்கேற்றாற்போல் எங்களை வழிநடத்துவார். professional மற்றும் personal என்பதை மிக தெளிவாக புரிந்து கொண்டவர். இரண்டையும் குழப்பமே இல்லமால் எங்களுக்கு எடுத்துச் சொல்வார். நான் IT-ல் இருக்கும் பலரிடம் பேசியிருக்கிறேன் பெரும்போலானோர் அவர்களின் முதலாளி  மற்றும் மேனேஜர்களை "அவன் ஒரு மனுஷனே இல்ல" என்று சொல்வதைக் கேட்டுருக்கிறேன். ஏன் பதவியில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்களை நன்றாக நடத்த முடியவில்லை என்பது ஒரு பெரிய கேள்விக் குறிதான். 

இந்த பத்து நாட்களில் நான் நிறைய பழைய தமிழ் மற்றும் ஆங்கில பாடல்கள் கேட்டேன். TM சௌந்தராஜன் அவர்களின் பாடல்களை பல தடவை கேட்டதுண்டு ஆனால் இந்த பத்து நாட்களில் தான் அவரின் சிறப்பு புரிந்தது. பாடல் வரியில் இருக்கும் உணர்ச்சிகளை அவரைப் போல் எந்த பாடகரும் கொண்டு வந்ததாக எனக்கு தெரியவில்லை. AM ராஜா மற்றும் PB ஸ்ரீனிவாஸ் இருவரின் பாடல்களை முன்பு கேட்டிருக்கிறேன் ஆனால் இப்போதுதான் அவர்களின் தனிச் சிறப்பு கொச்சமாவது எனக்கு தெரிகிறது. எனது ரன்னிங் வாக்மேனில் இவர்களின் பாடல்களை ஏற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.பல வருடங்களுக்குப் பிறகு எல்விஸ் பிரெஸ்லியின் பாடல்களைக் ரேடியோவில் கேட்டேன்.

இனிமேல் ரேடியோ தினமும் கேட்க வேண்டுமென்று முடிவு செய்து listenme மொபைல் ஆப்பை இன்ஸ்டால் செய்து விட்டேன். ரேடியோ கேட்பது ஒரு அலாதியான அனுபவம் என்பதை இந்த நாட்கள் நிரூபித்து விட்டன.

Thursday, May 21, 2020

ரன்னிங் டைரி - 86

21-05-2020 06:40
தஞ்சோங் காத்தோங் ரோடு

இன்று வாக்மேன் இல்லாமல் ஓடினேன். குளிர்ந்த காற்று என்னை உற்சாகப்படுத்தியது. இன்றும் மிக மெதுவாகவே ஓடினேன். ஓட ஆரம்பித்தபோது ஞாபகத்தில் வந்தது அம்பேத்கரின் "Annihilation of Caste". முக்கியமான இந்த நூல் (உரை ) வந்து மே பதினைந்தோடு 84 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் சாதி தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டுதான் இருக்கிறது. நான் "Annihilation of Caste" உரையை சென்ற வருடம்தான் முதன் முதலில் படித்தேன். படித்து முடித்தபோது தோன்றியது இவ்வளவு தெளிவாக சாதியைப் பற்றி ஒருவரால் எழுத முடியுமா என்றுதான். "மனுஷன் பின்னிடாரு"-னு தான் தோணுச்சு. அம்பேத்கர் எழுதிய அனைத்தும் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அம்பேத்கரின் புத்தகங்களை மேலும் படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

அம்பேத்கர் எழுதியது தமிழில் 

Tuesday, May 19, 2020

ரன்னிங் டைரி -85

19-05-2020 05:35
தஞ்சோங் காத்தோங் ரோடு

நாற்பது நாட்களுக்குப் பிறகு இன்று ஓடினேன். ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. மிகக் குறைந்த தூரமே ஓடினேன். மிக மெதுவாக ஓடினேன். வாக்மேனில் இளையராஜா தனது மேஜிக்கை நிகழ்த்த ஆரம்பித்தார். என் எண்ணம் முழுவதும் எதையும் தொடக் கூடாது என்று சொல்லிக் கொண்டே இருந்தது. ஐந்து நிமிடத்தில் நேற்று என் அலுவலக நண்பர்களிடம் பேசிய விசயம்தான் ஞாபகத்தில் வந்தது.  எனக்கு தெரிந்த சில சிறு IT கம்பெனிகள் இந்த பொருளாதார தாக்கத்தை சமாளிக்க அரசின் சலுகைகளுக்காக எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசின் தற்போதைய அறிக்கையில் அவர்களுக்கு ஏதும் இல்லை என்று நேற்று இரவு என்னிடம் புலம்பினார்கள். எனக்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை. நாங்கள் யாரையும் வேலையை விட்டு தூக்கவில்லை மாறாக எங்கள் பாஸ் அனைவருக்கும்  சம்பளத்தோடு ஒரு fixed தொகையையும் நெருக்கடியை சமாளிக்க இந்த மாத தொடக்கத்தில் கொடுத்தார். வரும் மாதங்கள் எப்படி இருக்கும் எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன் .

Sunday, May 17, 2020

கொரோனா நாட்கள் - மருத்துவமனை

என்ன ஆச்சு ? என்று ரிசப்னிஸ்ட் கேட்டார். நான் "feeling feverish" என்று சொன்னேன். உடனே தெர்மாமீட்டர் எடுத்து நெற்றியின் அருகில் கொண்டு சென்று "உங்களுக்கு காய்ச்சல் இல்லையே!" என்றார். நான் "எனக்கு காய்ச்சல் இருக்குற மாதிரியே இருக்கு " என்றேன். அவர் "சரி அடுத்து நீங்கள் டாக்டரை பாருங்கள்" என்றார். பத்து நிமிடத்திற்கு பிறகு டாக்டர் என்னை அழைத்தார்.  நான் "feeling feverish" என்றேன். வேறென்ன செய்கிறது என்றார். நான் "feeling tired" என்றேன்.தொண்டையயும் காதையும் பரிசோதித்து விட்டு எல்லாம் நான்றாகத்தான் தெரிகிறது என்றார். கம்ப்யூட்டரை பார்த்து விட்டு "எதுக்கும் இரத்த பரிசோதனை செய்து பார்ப்போம் "என்றார். நான் "சரி டாக்டர் ,மலேரியாவிற்கும் பரிசோதனை செய்யுங்கள்" என்றேன். அவர் சரி என்று சொல்லிவிட்டு என் கரங்களில் இருந்து இரத்தம் எடுக்க ஆரம்பித்தார். "மதியம் முடிவு வந்து விடும், போனில் அழைக்கிறேன்" என்றார். நான் வெளியே வந்து பணத்தைக் கட்டிவிட்டு வீட்டிற்கு வந்தேன்.

மதியம் மூன்று மணிக்கு அழைப்பு வந்தது. "உங்களுக்கு எல்லாம் நான்றாகத்தான் இருக்கிறது, நான் ஒரு specialist டாக்டருக்கு கடிதம் தருகிறேன் அவரைச் சென்று பாருங்கள் " என்றார். நான் "சரி" என்றேன். சாயங்காலம் அந்த specialist டாக்டரை பார்க்க சென்றேன். அது ஒரு பெரிய மருத்துவமனை வீட்டிற்கு அருகில் தான் இருக்கிறது ஆனால் அங்கு மருத்துவம் பார்த்ததில்லை. வெளியிலேயே கொரோனா பாதுகாப்பு காரணமாக  temperature பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னை பரிசோதித்தப்போது  எனக்கு 37.6 இருந்தந்து .உடனே என்னை தனிமைப் படுத்தினர். கார் பார்க் அருகில் இருக்கும் பகுதிக்கு அழைத்து சென்றனர். மீண்டும் temperature பார்த்தனர். இரண்டு form-ளை நிரப்பச் சொன்னார்கள் .நான் அதைச் செய்தேன். டாக்டர் வரும்வரை நீங்கள் இந்த பகுதியில் தான் இருக்க வேண்டுமென்று ஒரு temporary அறையைக் காட்டினார்கள். நான் அங்கு சென்று அமர்ந்தேன்.இங்கு ஒன்று சொல்ல வேண்டும் .அங்கிருந்த இரண்டு நரசுகளும் தேவைதையின் மறு உருவம்  என்று எனக்கு தோன்றியது. கண்களில் கருணை பேச்சில் தெளிவு அதுவே எனக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது. "கவலைப் பட வேண்டாம் , உங்களுடைய நோய் அறிகுறிகள் ஏதும் கொரோனா மாதிரி தெரியவில்லை" என்றார்கள். நான் கையில் "Love Songs - Sonnets " புத்தகம் இருந்ததைப் பார்த்து இருவரும் சிரித்தனர்.

பதினைந்து நிமிடம் கழித்து டாக்டர் வந்தார். பார்த்தவுடன் தெரிந்தது இந்தியர் என்று. காலையில் டாக்டர் கேட்ட அதே கேள்விகளை இவரும் கேட்டார். பதில் சொன்னேன். அவர் "இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் ஆனால் இன்று முடியாது நாளைதான் அதுவம் நீங்கள் மருத்துவமனையில் அனுமதித்தப் பின்னால்" என்றார். நான் வருத்தப் படுவதை கவனித்த டாக்டர் "கவலைப் பட வேண்டாம்,கொரோனா தடுப்பின் ஒரு பகுதியே இது" என்றார். எவ்வளவு செலவாகும் என்ற கேட்டேன் .அவர் "உங்களுக்கு ஆயுள்காப்பு இருக்கிறதா?" என்று கேட்டார்.  நான் "தனியார் மருத்துவமனையென்றால் 60% தான் " என்றேன். அதற்கு அவர் "இங்கு செலவு கூடுதல் வரும் அரசு மருத்துவமனைக்கு செல்கிறீர்களா?" என்று கேட்டார். நான் "வீட்டில் கேட்டு சொல்கிறேன்" என்றேன். நாளை வருவதாக இருந்தால் "அனுமதித்து சிகிச்சை எடுப்பதற்கு தயாராக வரவும்" என்று சொல்லிக் கொண்டே அறையை விட்டு வெளியே சென்றார். நானும் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டு வீடு திரும்பினேன்.

வீட்டில் பேசி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற முடிவு செய்து அடுத்த நாள் காலையில் மருத்துவமனைக்கு சென்றேன். வெளியில்  நான் அந்த டாக்டரை பார்க்க வந்ததாக சொன்னேன். அவர் temperature பார்த்து விட்டு "ஒன்றும் இருக்காது சென்று டாக்டரை பாருங்கள்" என்றார். மூன்றாவது மாடிக்கு சென்றேன். நான்தான் வரிசையில் முதல் நபர். வெளியே இருந்த பெண் எனது விவரங்களை கேட்டுப் பெற்றுக் கொண்டார். அவரின் முகத்திலும் அமைதியின் சிரிப்பு. டாக்டர் அழைத்தார் உள்ளே சென்றேன். "கண்டிப்பாக இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் . மருத்துவமனையில் அனுமதிக்க தயாரா? என்று கேட்டார். நான் " தாயார் டாக்டர் " என்றேன். உடனே அனுமதி formல் கையெழுத்துப் போடச் சொன்னார் . நானும் கையெழுத்திட்டேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் நான் பணம் செலுத்தும் அறையில் இருந்தேன். அவர்கள் estimated amount என்று சொல்லி ஒரு தொகையை பெற்றுக் கொண்டனர். அங்கிருந்து அடுத்த பத்து நிமிடத்தில் ICU பிரிவில் ஒரு அறையில் நான் இருந்தேன். சாதாரண அறைகள் அனைத்தும் ஏற்கனவே நோயாளிகள் இருப்பதால் என்னை ICU-விற்கு மாற்றியதாக சொன்னார்கள். ICU-ல் இருப்பது இதுவே எனக்கு  முதல் முறை.

படுக்கையில் படுக்க சொல்லிவிட்டு ஒருவர் வெளியே சென்றார். ஐந்து நிமிடங்கள் கழித்து அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்தான் ICU-வின் அன்றைய தலைமை நர்ஸ். ஒரு tablet-ஐ  கொடுத்து மதிய உணவை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நானும் mixed-vegetable சூப்பும் ,tofu சாதம் மற்றும் மசாலா டீ தேர்வு செய்து கொடுத்தேன். அவர் "நல்லா சாப்பிட வேண்டும்" என்றார். வெளியே சென்றவர் மீண்டும் வந்து "சிறிது நேரம் கழித்து இரத்தம் எடுக்க நர்ஸ் வருவார்கள்" என்றார். அவர் சொன்னது போலவே அவரும் அவருடன் இரண்டுபேரும் வந்தனர். அந்த இருவருமே தமிழர். அவர்களில் ஒருவர் என் கையைப்பிடித்து தடவி நரம்பைத் தேடினார். "கையை இறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். நானும் அவ்வாரே செய்தேன். "மன்னிக்கவும் ,வலிக்கும்  எங்களுக்கு வேறு வழியில்லை" என்று சொல்லிக் கொண்டே கையில்  ஒரு பெல்ட்டால் இறுக்க கட்டினார். மீண்டும் "மன்னிக்கவும் " என்று சொல்லிக் கொண்டு ஊசியால் இரத்தத்தை எடுக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட பத்து நிமிடம் ஒரு பெரிய டியூபிலும் மூன்று சிறிய டியூபிலும் எடுத்துக் கொண்டனர். நான் அவரிடம் "எப்போது பரிசோதனை முடிவுகள் வரும் ?" என்று கேட்டேன். "இரவு ஆகிவிடும் " என்றார். இரண்டு நர்ஸ்களும் சென்ற பின் தலைமை நர்ஸ் என்னிடம் "மன்னிக்கவும் உங்களுக்கு கோவிட்-19 பரிசோதனையும் செய்ய வேண்டும்" என்றார். நான்  "சரி" என்றேன். அவர் வெளியே சென்றார்.

சற்று நேரம் கழித்து PPE அணிந்து கொண்டு அவரும் மற்றொருவரும் வந்தனர். "மன்னிக்கவும் இது மிகவும் வலிக்கும்பதினைந்து நிமிடங்கள் பிடிக்கும்" என்றார். நான் தலையை ஆட்டினேன். Swab test தான்.மூக்கின் ஒரு தூரத்தில் ஒரு நீள கம்பியை(அதன் நுனியில் துணி அல்லது பஞ்சு) செலுத்தி   அதிலிருந்து  சளியை எடுத்தார்கள். கிட்டத்தட்ட பத்து நிமிடம் திரும்ப திரும்ப மூக்கின் துவாரத்தில் அந்த கம்பியை செலுத்தி தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டார்கள் . மிகவும் வலித்தது. கண்களில் கண்ணீர் வடிந்தது.தலைமை நர்ஸ் மீண்டும் மீண்டும் "தங்களை சிரமபப் படுத்துவதற்கு மன்னிக்கவும் " என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.ஒரு வழியாக வாழ்வில்  மீண்டும் நினைக்ககூடாத அந்த பத்து நிமிடங்கள் முடிந்ததது . நான் கண்ணீரை துடைத்துக் கொண்டே "முடிவு எப்போது வரும் ?" என்று கேட்டேன். அவர் "இரவு ஆகிவிடும் கவலை வேண்டாம் " என்றார். அவர்கள் வெளியே சென்றார்கள். நான் என்ன செய்வதென்று தெரியாமல் டிவி ரிமோட்டைக் கையில் எடுத்தேன்.

டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது தலைமை நர்ஸ் மதிய உணவோடு வந்தார். "அனைதையும் சாப்பிடுங்கள்" என்று சொல்லிவிட்டு உணவு தட்டை மேசையில் வைத்து விட்டு சென்றார்.  ஏனோ உணவை நான்றாக சாப்பிட முடியவில்லை .சற்று நேரம் கழித்து தலைமை நர்ஸ் வந்தார். நான் அவரிடம் "நீங்கள் பிலிப்பினோவா?" என்று கேட்டேன் அதற்கு அவர் "நான் சிங்கப்பூரர் அப்பா போர்துக்கீஸ் அம்மா சீனர் " என்றார். அவரின் பெயரையும் சொன்னார்.அவர் "நான் உங்களை இதற்கு முன் பார்த்திருக்கிறேன்" என்றார் நான் "இதற்கு முன் இந்த மருத்துமனைக்கு நான் வந்ததே இல்லை " என்றேன். அவர் யோசித்துக் கொண்டே "நீங்க அந்த சர்ச்க்கு (பெயர் சொன்னார்) தான் வருவீர்கள்?" என்று கேட்டார். நான் "ஆமாம்" என்றேன். அவர் சிரித்தார். (வீட்டிற்கு வந்த பிறகு மகளிடம் இந்த நிகழ்வை சொன்னேன் அவள் "அப்பா சிங்கப்பூர்ல எந்த கூட்டத்திலும் உங்களை கண்டுபிடித்திறலாம்" என்றாள். நம்ம நிறம் அப்படி !!) . அவர் வெளியே சென்ற உடன் எனக்கு மனதில் ஒரே
பயம் கொரோனா என்று வந்தால் எப்படி சமாளிப்பது ? குழந்தைகள் இருவரையும் மனைவி ஒருவரே பார்த்துக் கொள்வது மிகவும் கடினம். மனைவிக்கும் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும். அப்படியே தூங்கி விட்டேன்.

கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தேன்.மீண்டும் தலைமை நர்ஸ் "டீ ஸ்னாக்ஸ் நேரம்"  என்று சொல்லிக் கொண்டே ஒரு தட்டை மேசையில் வைத்தார்.நான் "நன்றி " என்றேன். "இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்கு saline ஏற்றுவார்கள் கவலைப் பட வேண்டாம்  அது உங்களின் அழுத்தத்தை சரியாக வைத்துக் கொள்ளத்தான் இது நார்மல் நடைமுறை தான்" என்றார். அவர் சென்ற பின் சற்று நேரம் கழித்து இருவர் வந்தனர் அதில் ஒருவர் தமிழர். கையில் ஊசியை மாட்டி saline ஏற்ற ஆரம்பித்தார்கள். தமிழர் என்னிடம் தமிழில் பேச ஆரம்பித்தார்.
"என்ன வேலை பாக்குறீங்க ?"
"ஐ டி கம்பெனில ப்ராஜெக்ட் மேனேஜரக இருக்கேன் "
"கல்யாணம் ஆயிட்ட ?"
"ம்ம் ..ஆயிட்டு ..இரண்டு குழந்தைகள் இருக்குது "
"உங்களுக்கு கொரோனா இருக்க வாய்ப்பு இல்ல .. பாப்போம் "
"நீங்க இங்க பிறந்தவரா?"
"ஆமாங்க நானும் எங்க குடும்பமும் இங்கு தான் பிறந்தோம். basically பூர்விகம் மலேசியா ,நாங்க பிறக்கிறதுக்கு முன்னேமே அப்பா இங்க வந்துட்டாரு"
"ஓ அப்படியா ... "
"நல்ல சாப்பிடுங்க .. " என்று சொல்லிவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டார்.
நான் பையில் கொண்டு சென்ற புத்தகத்தை எடுத்து திறந்தேன் . எமிலி டிக்கின்ஸன் எழுதிய "Alter ?" என்ற கவிதை அந்த பக்கத்தில் இருந்தது .
அந்த கவிதை :

Alter? When the hills do.
Falter? When the sun
Question if his glory
Be the perfect one.

Surfeit? When the daffodil
Doth of the dew:
Even as herself,O friend!
I will of you!

ரொம்ப நேரம் கவிதையை யோசித்துக் கொண்டே தூங்கி விட்டேன். கதவு தட்டுவது கேட்டு விழித்தேன் டாக்டரும் இதுவரை பார்க்காத நர்ஸும் வந்திருந்தனர். டாக்டர் "இரத்த பரிசோதனையில் உங்களுக்கு டெங்கு காய்ச்சல் இருக்கிறது காலையில் மற்றொரு இரத்த பரிசோதனை செய்து விட்டு அடுத்து என்ன செய்வோம்" என்றார். நான் "சரி " என்றேன். மருந்து எதுவும் கொடுக்கவில்லை. இருவரும் வெளியே சென்றபின்  மற்றொருவர் வந்து tablet-ஐ கொடுத்து இரவு உணவை தேர்ந்தெடுக்க சொன்னார் . நான் சூப்பும் அவித்த மீனும் தேர்ந்தெடுத்தேன்.  அவர் "நல்ல சாப்பிடுங்க எல்லாம் சரி ஆயிரும்" என்றார். நான் தலையை ஆட்டினேன். அவர் வெளியே சென்ற உடன் டிவி பார்க்க ஆரம்பித்தேன்.இருபது நிமிடங்கள் கழித்து உணவு வந்தது. எதையும் மீதி வைக்காமல் அனைத்தையும் சாப்பிட்டேன். மீண்டும் டீவி பார்த்தேன் .அப்படியே தூங்கி விட்டேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை தலைமை நர்ஸ் வந்து என்னை எழுப்பி "உங்களுடைய கோவிட் -19 பரிசோதனை முடிவு  வந்து விட்டது. உங்களக்கு கோவிட் -19 இல்லை மற்ற விவரம் நாளை காலை டாக்டர் உங்களிடம் எடுத்துச் சொல்வார்" என்றார்.எனக்கு பெரும் நிம்மதி. உடனே வீட்டிற்கு போன் செய்தேன் அனைவருக்கும் பெரும் நிம்மதி. நிம்மதியாய் தூங்கினேன்.

காலையில் கண் முழிக்கும் போது  காலை உணவு மேசையில் இருந்தது. நர்ஸ் வந்து ஒரு சின்ன பை கொடுத்தார். அதில் brush ,paste மற்றும் ஒரு சின்ன துண்டும் இருந்தது. நான் அதை உபயோகிக்கவில்லை.வீட்டிலிருந்து நான் எடுத்த சென்றவற்றை உபயோகித்தேன். நான் சாப்பிட்டிக் கொண்டிருக்கும் போது டாக்டர் வந்தார். அவர் "கவலை பட வேண்டாம் இரத்தம் வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்" என்றார்.  நான் "கண்டிப்பாக மருத்துவமனையில் இருக்கத்தான் வேண்டுமா?" என்று கேட்டேன். அவர் "இருந்தால் நல்லது அப்படி இருக்க விருப்பம் இல்லையென்றால் நான் ஏதும் செய்ய முடியாது ஆனால் நான் உங்களுக்கு ஒரு கடிதம் தர வேண்டும் அதில் உங்களின் விருப்பப்படி தான் நீங்கள்  மருத்துமனையில் இருந்து செல்கிறீர்கள் என்று நான் குறிப்பிட வேண்டும்" என்றார். நான் "சரி " என்றேன். "அப்ப நீங்க நாளைக்கு காலையில் என் கிளினிக் வாங்க" என்றார். நான் "சரி" என்றேன்."இன்னொரு முறை இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். இரத்தம் கொடுத்துவிட்டு செல்லுங்கள்" என்றார்.  நான் "சரி" என்றேன்.

சற்று நேரம் கழித்து இரத்தம் எடுக்க நர்ஸ் வந்தார்.அவர் சென்ற பின் மதிய உணவு வந்தது.சாப்பிட்டுவிட்டு  கொண்டு வந்த பொருட்களை பையில் வைத்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தேன். வெளியில் அனைத்து டாக்குமெண்ட்சும் ரெடியாக இருந்தது. நான் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டேன்.அவர்கள் என்னை  பணம் காட்டும் இடத்திற்கு போகச் சொன்னார்கள். நான் அங்கு சென்றேன். அங்கிருந்தவர் என்னுடைய விவரங்களை பெற்றுக் கொண்டு "சற்று நேரம் பொறுங்கள் மீதி இருக்கும் பணத்தை உங்களின் வங்கி கணக்கிற்கே மாற்றி விடுகிறோம்" என்றார், ஐந்து நிமிடங்கள் கழித்து என்னை அழைத்தார். " நீங்க கொஞ்ச நேரம்  கழித்து உங்கள் வாங்கிக் கணக்கில் பணம் வந்துவிட்டதா என்று பாருங்கள்" என்றார். நான் "சரி " என்று சொல்லிவிட்டு அவர் கொடுத்த form-ல் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டேன்.

மொத்தம் முப்பது மணி நேரம் தான் மருத்துவமனையில் இருந்திருப்பேன் ஆனால் எனக்கு அது பெரிய யுகம் போல தோன்றியது. கோவிட்-19 மருத்துவமனையையே அவசர நிலையில் மாற்றி விட்டது. எல்லாமே ஒரு சீராக நடந்தது. மருத்துவர்களும் தாதியரும் கோபப் படமால் கேட்ட கேள்விகளுக்கும் எந்த ஒரு எமோஷன் இல்லமால் தெளிவாக பதில் அளித்தனர் . மருத்துவமனையை விட்டு வெளிய வந்தவுடன் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. ஐந்து நிமிடங்கள் வெய்யிலில் நின்றேன்.டாக்ஸி பிடித்து வீட்டிற்கு சென்றேன். டாக்ஸி டிரைவர் "என்ன ஆச்சு?" என்று கேட்டார். நான் "டெங்கு" என்றேன். "நல்ல சாப்பிடுங்க ,எல்லாம் சரியாயிடும்" என்றார். "நன்றி " என்றேன். ஐந்து நிமிடத்தில் வீட்டை அடைந்தேன்.சொர்கமே என்றாலும் அது நம்ம வீடு மாதிரி வருமா!!!