Thursday, November 28, 2019

The Costliest Pearl - Bertil Lintner


சீனா எப்படி இந்தியப்  பெருங்கடலைச் சுற்றி பாதுகாப்பு மையங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய புத்தகம்.அதிபர் சீயின் கனவான "Belt and Road Initiative" திட்டத்தின்படி சீனா மிக விரைவாக அனைத்து துறையிலும் குறிப்பாக வெளிவுறவில் முன்னேரி வருகிறது. கிட்டத்தட்ட தெற்கு சீன கடல் முழுவதையும் சீனா தன்னுடையதாகிக் கொண்டது. அடுத்து இந்திய பெருங்கடல்.

காலங்காலமாக இந்தியாவிற்கு இந்திய பெருங்கடல் தனக்குத்தான் என்பதில்  எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் சமீப காலமாக சீனா இந்தியப் பெருங்கடலில் உள்ள  சிறு தீவு நாடுகளை தனது பண மற்றும் கட்டுமான உதவிகள் மூலம்தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.சீனா எந்தொரு நாட்டிற்கும் எதையும் இலவசமாக செய்யாது. ஏர்போர்ட் ,பள்ளிகள் , மருத்துவமனைகள் சாலைகள் இப்படி பல பணிகள் செய்வதற்கு கடன் மட்டும் கொடுக்காமல் அவைகளை செய்வதற்கு சீனர்களை மட்டும்தான் பயன்படுத்துகிறது.மற்றொரு முக்கியமான விசயம் சீனா தான் காட்ட உதவும்  ஏர்போர்ட் மற்றும் துறைமுகங்களின் நிருவாகத்தை 80% சதவீதத்தை தன் கையில் வைத்துக் கொள்கிறது.

இந்திய பெருங்கடலில் உள்ள பெரும்பான்மையான சிறிய நாடுகள் வறுமையில் உள்ளன அதிலும் நிலையான அரசில்லாமலும் இருக்கிறது. இந்த சூழ்நிலையை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. சீனா "Debt-trap diplomacy" மூலம் பல நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதற்கு நல்ல உதாரணம் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா (Hambantota) துறைமுகம். இலங்கை கடனைத் திருப்பிக் கொடுக்காதலால் தற்போது சீனா அந்த துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்துக்கொண்டது. இது போல பல ஆப்ரிக்க நாடுகள் சீனாவின் பிடியில் சிக்கியுள்ளது.

பெர்டில் இந்திய பெருங்கடலில் உள்ள ஒவ்வொரு நாடுகளையும்  அதன்  இந்திய சீன உறவுவின் அடிப்படையில் விளக்குகிறார்.வெகுகாலமாக இந்தியாவின் பக்கம் இருந்த மியான்மார் மெதுவாக சீனாவின் பக்கம் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதை வாசிக்கும்போது ராஜதந்திரம் என்றால் இப்படித்தான் இருக்கும்போல என்று யோசிக்க வைக்கிறது. இந்தியா மியன்மாரின் ஒரு இனக் குழுவிற்கு ஆயுதம் வழங்கியது என்பது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. மாலத்தீவிலும் சீனா இந்தியாவின் ஆதிக்கத்தை உரசி  பார்க்க ஆரம்பித்துவிட்டது.

இந்தியா சீனாவின் "Belt and Road Initiative" திட்டத்தை எதிர்க்கிறது ஆனால் குஜராத்தில் சீனா தொழிற் பூங்காவை தொடங்கவிருக்கிறது!  இதற்கு எப்படி அரசு அனுமதி அளித்தது என்பது புரியாத புதிர். மொரீசியஸ் மற்றும் ஸ்கைசெல்ஸ் இன்னும் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடுகள்தான் ஆனால் அது எவ்வளவு காலத்திற்கு என்று இப்போது கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.  இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு பெரிய  ராணுவ முகாம் இல்லை. இந்த இரண்டு நாடுகளில் ஒன்றில் இந்தியா ராணுவ முகாம் தொடங்க பெரும் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சீனாவோ டிஜிபோட்டியில் (Djibouti) அமெரிக்க இராணுவ முகாமிற்கு அருகிலேயே தனது நவீன இராணுவ முகமை 2017-ல் தொடங்கியுள்ளது.

சீனாவின் இந்திய பெருங்கடல் நடவடிக்கைகளை எதிர் கொள்வதற்கு இந்திய "சாகர் மாலா " என்ற திட்டத்தைத் தீட்டி இந்திய கடல் எல்லைகளை பலப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்த திட்டத்தில் என்ன பிரச்சன்னை என்றால் இந்த திட்டத்தால் வரும் இழப்புகளை மக்களிடம் சொல்லாமலிருப்பதுதான். பல லட்ச மக்கள் வாழ்வாதாரம் கடலை நம்பியுள்ளது ஆனால் இந்திய அரசோ அவர்களிடம் எதையும் கேட்டதாக தெரியவில்லை. பாதிக்கப்படும் மக்களிடம் கேட்காமல் முடிவு செய்தல் என்ன மாதிரி விளைவு வரும் என்பதற்கு பல நாடுகளில் நடக்கும் சீன எதிர்ப்பே நல்ல உதாரணம்.

பெர்டில் இந்த பட்டு பாதை (silk route) என்ற சொல்லே சமீபத்தில் தான் உபோயகத்தில் வந்தது என்கிறார். "Belt and Road Initiative" திட்டத்தை பிரபலப் படுத்துவதற்கும் அந்த திட்டம் சரிதான் என்பதற்கும் சீனா இந்த தவறான பிரச்சாரத்தை மேற்கொள்கிறது என்கிறார்.Silk Route என்ற வார்த்தை ஐரோப்பியர்களால் தான் பிரபலப் படுத்தப்பட்டது என்கிறார்.அது "seidenstrassen" என்ற  ஜெர்மன் வார்த்தையின் மொழிபெரியர்ப்பு என்கிறார். இது எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது சீனா சொல்லும் "Maritime Silk Route " என்பதற்கு வரலாற்று பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை. சீனாவின் ஒரே பழங்காலப் கடல் பயணம் ஷெங் ஹி (Zheng He) என்பவரால் மேற்கொள்ளப்பட்டது தான் என்கிறார். அவரும் இப்போது சீனா கூறும் அனைத்து பகுதிகளுக்கும் சென்றவர் அல்ல.சீயின் கனவு நிறைவேறுமா? இந்தியா இந்திய பெருங்கடலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்குமா?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

ரன்னிங் டைரி -42

28-11-2019 08:14
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

இன்று ஓட ஆரம்பித்ததே வேகமாகத்தான். எதையுமே நினைக்காமல் ஓடிய  நாள். கவனம் முழுவதும் சுவாசத்தில் இருந்தது.

ரன்னிங் டைரி -41

27-11-2019 18:22
அலுவகத்திலிருந்து வீடுவரை

நேற்றுபோல் இன்றும் எந்த வழியில் ஓடுவது என்ற கேள்வியுடன் ஓட  ஆரம்பித்தேன்.ஊர் ஞாபகம் வந்தது. நல்ல மழையாம். அக்காமார்கள் இருக்கும் தெரு மிதந்து கொண்டிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். எந்த நோயும் பரவக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன். நேராக நூலகத்தில் நுழைந்தேன் இரண்டு நிமிடங்கள் அங்கு செலவழித்தேன். பிறகு மீண்டும் ஓட ஆரம்பித்தேன் .திடீரென்று ஒரு எண்ணம் வந்தது ஏன் புத்தகக்கடைக்கு சென்று "Mekong Review " வாங்கக்கூடாது .ஒடனே திரும்பி  112 கத்தோங்  ஷாப்பிங் மாலிற்கு ஓடினேன். அங்கு ஐந்து நிமிடம் அந்த புத்தகத்தைத் தேடினேன் ஆனால் அது கிடைக்கவில்லை.மீண்டும் ஓட ஆரம்பித்தேன். வெறெங்கு அந்த புத்தகம் கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Wednesday, November 27, 2019

ரன்னிங் டைரி -40

26-11-2019 18:22
அலுவகத்திலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்தவுடன் எந்த வழியில் ஓட வேண்டுமென்று யோசித்துக் கொண்டே எந்த முடிவும் எடுக்காமல் ஓடினேன்.வேகமாக ஓடினேன். யுனோஸ் சிக்னல் வந்தவுடன் என்னை அறியாமலேயே வலது பக்கம் திரும்பினேன்.இந்த வழி என் வீட்டிற்கு சற்று தூரம் குறைவானது. அடுத்த வருடம் மாரத்தான் அல்லது 21 கி மீ  ஓடக்கூடாது என்று எண்ணிக் கொண்டேன். பத்து கி மீ மட்டும் தான் ஓட வேண்டும் அதுவும் நேரத்தைக் குறைத்து ஓட வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டேன். தற்போது நான் பத்து கி மீ  ஓட கிட்டத்தட்ட 40 முதல் 46 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறேன் . பலதடவை 50 நிமிடங்களுக்கு மேல் எடுத்துள்ளேன். இதை குறைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

Tuesday, November 26, 2019

ரன்னிங் டைரி -39

26-11-2019 08:12
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

சரியான வெய்யில் . "Constitution Day"ஞாபகத்தில் வந்தது. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் "WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens;  JUSTICE, social, economic and political;  LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity; and to promote among them all
 FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;
 IN OUR CONSTITUENT ASSEMBLY this  26th day of November 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION."  (இது முழுவதும் ஞாபகத்தில் வரவில்லை) . நமக்கு பள்ளியில் இந்திய அரசியலமைபைப் பற்றி  ஏன் சொல்லிக் கொடுக்கவில்லை என்று யோசித்துக்கொண்டே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்திய அரசியலமைப்பு முழுவதும் தெரியுமா என்ற கேள்வியுடன் அலுவலகம் அடைந்தேன்.

Monday, November 25, 2019

ரன்னிங் டைரி -38

23-11-2019 05:04
வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை பூங்கா

ஓட ஆரம்பித்தவுடன் கவனித்து இருளைத்தான்.கும்மிருட்டு. "காட்டுக்குயிலு.." பாடல் ஆரம்பித்தது. மிகவும் மெதுவாக ஓடினேன். கடற்கரையை நெருங்கியவுடன் உறவினர் ஒருவரின் இறப்புதான். நான் அவருடன் நெருங்கி பழகியதில்லை. அவரின் சொத்து பிரச்சனைகளைப்  பற்றி நண்பர்கள் கூறியதுதான். பணம் தான் எல்லாம். நான் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணுபவன் ஆனால் கடந்த பத்து வருடங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளைக் கேட்கும் போது மக்கள் ஏன் இப்படி மாறுகிறார்கள் என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.

கிழக்கு கடற்கரை பூங்காவில்  புது சைக்கிள் பார்க் திறக்கப்பட்டுள்ளது. எதார்த்தமாக திரும்பியபோது கவனித்தேன். புதிது புதிதாக எதையாவது செய்து கொண்டே இருக்கிறது சிங்கப்பூர் அரசு. கிழக்கு கடற்கரை பூங்காவில் எவ்வளவு மாற்றம். காலையில் இந்த பூங்காவின் அழகே தனி. ஏனோ தனியாக ஓடிக் கொண்டிருப்பதாக ஒரு உணர்வு. அடுத்த வாரம் 21 கிலோமீட்டர் பந்தயம் உள்ளது அதனால் இந்த வாரம் கண்டிப்பாக பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். அதைப் பற்றி யோசித்துக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி -37

21-11-2019 18:20
அலுவலகத்திலிருந்து வீடுவரை

எதுவுமே எண்ணாமல் ஓடிய நாள். எந்தெந்த பாட்டு ஓடியது என்று கூட  நினைவில் இல்லை.

Thursday, November 21, 2019

ரன்னிங் டைரி -36

20-11-2019 18:22
அலுவலகத்திலிருந்து வீடுவரை

மழை மேகம். குளிர் காற்று. ஓட ஆரம்பித்தவுடன் ஈரக் காற்று முகத்தில் அறைந்தது. ஓடிய கொஞ்ச நேரத்திலேயே இன்று இரவு செய்ய வேண்டிய அப்டேட் பற்றிய எண்ணம் வந்தது. இந்த கஸ்டமர் எப்பவுமே ஐந்து மணிக்கு மேல்தான் இதை செய் அதை செய்யென்று சொல்வார்கள். மற்றொரு இம்சை அவர்கள் ஆறு மணிக்குமேல் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமாட்டார்கள். அதனாலேயே வேகமாக ஓடினேன்.

எந்த எந்த புத்தகங்களை நூலகத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று எண்ணம் வந்தது. பல புத்தகங்களைப் படித்தாயிற்று இன்னும் இரண்டு புத்தகங்களைப்  படிக்க வேண்டும். ரஸ்யா பற்றிய இரண்டு புத்தங்கள் அப்படியே உள்ளன. கண்டிப்பாக படிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேவீட்டை அடைந்தேன்.

Tuesday, November 19, 2019

ரன்னிங் டைரி -35

19-11-2019 08:14
வீட்டிலிருந்து அலுவலகம்வரை 

நேற்று ஓடவில்லை .ஞாயிறு இரவு முழுவதும் அலுவலக வேலை. ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது இரண்டு விசயங்கள். முதலாவது "Why the slowdown is in the Mind " என்று தலைப்பில் விவேக் கவுல் எழுதிய கட்டுரைதான். கிட்டத்தட்ட அனைத்து தொழில்களிலும் தொய்வு.  விவேக் கவுல் ஒவ்வொரு துறையாக அலசுகிறார். எக்கனாமிக்ஸ் தெரியாத எனக்கே ஓரளவு இந்த கட்டுரை புரிந்தது. என்னதான் அரசு செய்து கொண்டிருக்கிறது?! அவர் கூறுவது போல slowdown சென்று சொல்லியே slowdown ஆகியது என்று ஒருசில துறைகளைத் தான் சொல்லமுடியும்.

இரண்டாவது "The Telecom Tain Wreck" என்ற தலைப்பில் நவதா பாண்டே எழுதிய கட்டுரை. ஒரு துறையை எப்படியெல்லாம் வழிநடத்தக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தியா டெலிகாம் இண்டஸ்ட்ரி தான். எப்படி அடுத்தடுத்து அரசுகள் தவறு மேல் தவறு செய்திருக்கிறார்கள் .இன்னும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இத்துறை ஒரு எடுத்துக்காட்டு. இந்த இரண்டு கட்டுரைகளும் mint asia பத்திரிக்கையில் வந்துள்ளது. இந்த பத்திரிக்கையை முழுவதும் வாசிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே அலுவலகம் அடைந்தேன்.

Friday, November 15, 2019

ரன்னிங் டைரி -34

14-11-2019 08:14
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது மலையாள இயக்குநர் ஜெயராஜ் தான். அவருடைய பல திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஏனோ அவரின் மற்ற படங்களையும் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. தமிழ் படங்களை விட மலையாளப் படங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. "The Great Smog Of India" புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்று யோசித்துக் கொண்டே அலுவலகம் அடைந்தேன்.

Wednesday, November 13, 2019

ரன்னிங் டைரி -33

13-11-2019 08:21
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

சர்ச் அருகில் வந்தவுடன் "The Synod of Bishops for the Pan-Amazon region" ஞாபகத்தில் வந்தது. ஏன் இந்த அமெரிக்க conservative catholics இவ்வளவு பிரச்னை பண்ணுகிறார்கள் என்றே புரியவில்லை. சில விசயங்கள் ஓகே. ஒரு சாரார் இந்த போப்யை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறார்கள். திருச்சபைக்குள் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது. அதை எல்லாம் விட்டுவிட்டு ... என்னத்த சொல்ல. அப்படியே அமர்த்தியா சென் ஞாபகம் வந்தது. அவரின் புத்தகங்களை படிக்க வேண்டுமென்று ஓடிக்கொண்டே முடிவு செய்தேன். அப்படியே அலுவலகத்தை அடைந்தேன்.

ரன்னிங் டைரி -32

12-11-2019 18:17
அலுவகத்திலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது "Data is Money" என்ற வாக்கியம் தான். ஏனென்றால் நேற்று கஸ்டமர் ஒருவர் எல்லா transaction-யும் பேக்கப் எடுத்து  ஈமெயிலில் அனுப்ப முடியுமா என்று கேட்டதுதான். ஏற்கனவே இரண்டு பேக்கப் அந்த அப்பிளிகேஷனில் உள்ளது. நாங்கள் அப்பிளிகேஷன் டிசைன் செய்யும் போதே பேக்கப் மற்றும் ரெஸ்டோர் பற்றி யோசித்து எங்களின் solution-ஐ அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் சம்மதத்தையும் பெற்ற பின்னர்தான் அதை implement செய்தோம். என்னத்த சொல்ல ! எல்லாவற்றையும் அவர்கள் ஒப்புக்கொண்ட பின்னர் தான் நாங்கள் செய்தோம் ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் மாற்றங்கள் செய்ய சொல்கிறார்கள். அதையே யோசித்துக் கொண்டு வீட்டை அடைந்தேன்.

Tuesday, November 12, 2019

ரன்னிங் டைரி -31

12-11-2019 08:21
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஆரம்பித்ததே வேகமாக ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் கடந்து பிறகு சிக்னல் வந்தது. நின்று கண்ணாடியை மாட்டிக்கொண்டேன் . அலுவலகம் வரும் வரை எதையும் யோசிக்கவில்லை. என்றும்  எதையும் யோசிக்காமல் ஸ்வாசத்தை மாட்டும் எண்ணத்தில் நிறுத்திக் கொண்டு முழு ஓட்டத்தையும் நிறைவு செய்ய வேண்டும். ஒருசில நாட்கள் அப்படி நடந்ததுண்டு.பார்ப்போம் .

ரன்னிங் டைரி -30

12-11-2019 18:21
அலுவகளத்திலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்தவுடன் மனதில் தோன்றியது அயோத்தி தீர்ப்புதான் . தீர்ப்பை முழுவதுமாக இன்னும் படிக்கவில்லை.படிக்க வேண்டும்."A People's Constitution - Rohit De" என்ற புத்தகம்தான்  ஞாபகத்தில் வந்தது. இன்னும் முழுவதும் படிக்கவில்லை. சிக்னலில் நின்றிருக்கும் போது ஒரு பெண் சிவப்பு விளக்கு வந்த பிறகு வேகமாக ஓடிக் கடந்தார். நான் திருத்திரு என்று பார்த்துக் கொண்டிருந்தேன். சிக்னல் மாறிய பிறகு நான் அவரைக் கடந்து சென்றேன். அவர் என்னைப் பார்த்து கைகட்டிச் சிரித்தார். எதற்கு சிரித்தார் என்றே தெரியவில்லை. டிராபிக் விதியை மதித்ததற்கா என்று எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி -29

09-11-2019 05:18
கிழக்கு கடற்கரை பூங்கா

நேற்றே இன்று கண்டிப்பாக ஓட வேண்டுமென்று முடிவு செய்துவிட்டேன். ஓட தொடங்கியபோது "முத்து மணி மாலை" ஆரம்பித்தது. எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. அப்படியே "சின்ன கவுண்டர்" படம் மனதில் தோன்றியது. நான் எப்போது அந்த படம் முதலில் பார்த்தேன் என்று ஞாபகமில்லை. இப்போது இந்த படம் மனதில் வரக் காரணம் ஏதோ ஒரு சேனலில் "சின்ன கவுண்டர்" ,"தேவர் மகன் " போன்ற படங்களுக்கு பெரிதாக ஏதும் எதிர்ப்பு வரவில்லை ஆனால் "அசுரன்" பரியேறும் பெருமாள்" போன்ற படங்களுக்கு ஏன் பெரிய எதிர்ப்பு வருகிறது என்று ஒருவர்  கேட்டார். உண்மைதானே!  அசுரன் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மனதில் ஓடியது. என்ன ஒரு வெறித்தனம். அந்த மனிதனின் வாழ்நாள் கோபம்.தனுஷ் ஒரு மகா நடிகன்.

பெடோக் ஜெட்டியை (jetty) தாண்டும்போதுதான் கவனித்தேன் என்னை தொடர்ந்து ஒருவர் என் பின்னால்  ஓடி வந்து கொண்டிருந்தார். நான் வேகத்தைக் அதிகரித்தேன்.அவரும் அதிகரித்தார்.இப்படியே அடுத்த நான்கு கிலோமீட்டர் ஓடினோம். நான் அவர் என்னைத் தாண்டி ஓடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தேன்.முடிவில் அவர் நின்றுவிட்டார். நான் திரும்பி வரும்போது அவரைப் பார்த்து கை அசைத்தேன் அவரும் திரும்பி சிரித்தார். நன்றாக விடிந்துவிட்டது. பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். கிழக்கு கடற்கரை பூங்காவில்  வரவர கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வேறு எங்கு சென்று ஓடலாம் என்று எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

Friday, November 8, 2019

The Great Derangement - Amitav Ghosh


Contrary to what I might like to think,my life is not guided by reason;it is ruled rather by the inertia of habitual motion.
பூமி வெப்பமடைதல் பற்றிய புத்தகம். Stories ,History  மற்றும் Politics  என்று  மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.இதில் Stories மட்டும் புத்தகத்தின் பாதி. பூமி வெப்பமடைதல் பற்றி ஏன் தற்போதைய புனைவுகளில் அதிகம் வரவில்லை என்ற கேள்வி எழுப்புகிறார். பூமி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணம்  இயற்கையை புரிந்து கொள்ளாமல் மனிதன் நடந்து கொள்வதுதான் என்கிறார். நமக்கும் இயற்கைக்கும் இருக்கும் உறவை நாம் கண்டிப்பாக கேள்வி கேட்டுக் கொள்ளவேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம் என்கிறார்.
The great, irreplaceable potentiality of fiction is that it makes possible the imagining of possibilities.
ஒரு பக்கம் பூமியின் வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்தபோது எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தில் படிப்படியாக இயற்கைப் பற்றிய விவரங்களைக்  குறைக்க  ஆரம்பித்தார்கள்.தெரிந்தோ தெரியாமலோ இப்படி ஆனது. ஆனால் நம் கண்முன்னால் காணுவத்தைக் கூட எழுதாதது வருத்தமளிக்கிறது என்கிறார் கோஷ். அப்படி எழுதினாலும் அதை அறிவியல் புனைவு(sci-fi ) அல்லது cli-fi பிரிவில் சேர்த்துவிடுகிறார்கள் அதனால் அதிகபேர் படிக்க முடிவதில்லை.  முதல் பகுதியில் கோஷ் பயன்படுத்தும் வார்த்தைகள் என்னமோ நான் ஏதோ சயின்ஸ் கிளாசில் இருப்பதுபோல் இருந்தது. பாதி புரிந்தும் பாதி புரியாமலும். பிறகுதான் தெரிந்தது இந்த புத்தகம் ஒரு லெச்சரை விரிவாக எழுதியது என்று.
Capitalist trade and industry cannot thrive without access to military and political power. State interventions have always been critical to its advancement.
History பகுதியில் பூமியின் இன்றைய நிலைமைக்கு முக்கிய  காரணம் முதலாளித்துவம் அல்ல மாறாக பேரரசுகள் அதிலும் பிரித்தானிய காலனித்துவம் என்கிறார். பிரித்தானிய அரசின் கொள்ளைதான் காலனிய நாடுகளில் பெரும் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்தியது.அதன் மூலம் பிரித்தானிய தொழில்மயமாக்கலில் பெரும் வளர்ச்சியடைந்தது.அதற்கு சில எடுத்துக்காட்டுகளையும் சுட்டிக் காட்டுகிறார் கோஷ்.ஆனால் அதில் ஒரு பயனும் இருக்கிறது என்கிறார்.அதாவது பிரித்தானியாவில் இருந்து விடுபட்ட ஆசிய மற்றும் ஆப்பிரிக்க காலனிய  நாடுகள் தொழில்மயமாக்கலுக்குள் கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்குப் பிறகுதான் வந்தது. அதனால் சுற்றுப்புற சீரழிவு தாமதமாகத்தான் வந்தது என்கிறார்.சட்டென்று மனதுக்கு சரியென்று படுகிறது ஆனால் ஆனால் மக்கள்தொகை மற்றும் ஏற்றத்தாழ்வு நூறாண்டுகளுக்கு முன் இப்போது போல அல்ல. ஏனோ அதை பற்றி கோஷ் ஏதும் சொல்லவில்லை.ஆசியாவின் பங்களிப்புதான் பூமி வெப்பமடைதலில் மிக முக்கியம் ஏனென்றால் அங்குதான் அதிக மக்கள் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகம் என்கிறார். அது உண்மைதான் நான் வாசித்த பல்வேறு அறிக்கைகளில் அதுவே கூறப்பட்டுள்ளது .
If whole societies and polities are to adapt then the necessary decisions will need to be made collectively, within political institutions, as happens in wartime or national emergencies. After all, isn’t that what politics, in its most fundamental form, is about? Collective survival and the preservation of the body politic?
Politics பகுதியில் பெயரைப் போலவே பூமி வெப்பமடைதல் பற்றிய அரசியலைப் பேசுகிறார் கோஷ்.பூமி வெப்பமடைதல் பற்றி நம்மளிடையே ஒருமித்த கருத்து இல்லாதது  எந்த முடிவு  எடுப்பதற்கும் ஒரு பெரிய தடையாக இருக்கிறது என்கிறார். பாரிஸ் ஒப்பந்தத்திற்கும் போப் பிரான்சிஸின் "Laudato Si"  கடிதத்திற்கு உள்ள பெரும் வித்தியாசத்தை எடுத்துக்காட்டி இப்படி மத நிறுவனங்கள் தான் மக்களை பெரிதாகவும் விரைவாகவும் இணைக்க முடியும் என்கிறார்.போப் பிரான்சிஸின் "Laudato Si"  கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஆவணம். போப் அனைத்தையும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் எல்லோருக்கும் புரியும் மாதிரி எழுதியுள்ளார் ஆனால் பாரிஸ் ஒப்பந்தமோ ஏதோ corporate ஒப்பந்தம் மாதிரி எவருக்கும் புரியாத அளவுக்கு உள்ளது.பூமி வெப்பமடைதல் பற்றி ஒரு புதிய கோணத்தைக் வாசகருக்கு அளிக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

Thursday, November 7, 2019

ரன்னிங் டைரி -28

07-11-2019 08:14
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

நல்ல வெய்யில்.ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது டெல்லியின் காற்று மாசு பற்றி படித்ததுதான். எம்மாடியோவ் ! என்னதான் அரசு பண்ணுகிச்சுனு தெரியல. இவ்வளவு மோசமா ?! நான் நான்கு முறை டெல்லி  சென்றிருக்கிறேன் நான்கு முறையும் அதை கவனித்திருக்கிறேன். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் மூக்கில் கைக்குட்டையை கட்டிவிடுவேன். டெல்லி மக்களின் துயரைப் படிக்கவே வருத்தமாக இருந்தது. அப்படியே சிங்கப்பூரைப் பற்றி யோசனை வந்தது. வருடாவருடம் இங்கும் haze பிரச்சனை. இந்த வருடம் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேல் வெளிப்புற நடவடிக்கைகள் ஏதும் செய்ய முடியவில்லை. ஒரு வாரத்திற்கே இப்படியென்றால் பாவம் டெல்லி மக்கள்.

ஏன் நம் மக்கள் இயற்கையை விட்டு பிரிந்து கொண்டே இருக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே அலுவலகத்தை அடைந்தேன்.

Wednesday, November 6, 2019

ரன்னிங் டைரி -27

05-11-2019 18:14
அலுவகத்திலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்தவுடன் இன்று நடந்த ஒரு உரையாடல்தான் ஞாபகம் வந்தது. அவர் ஒரு வடஇந்தியர் பத்து வருடத்திற்கும் மேலாக IT  அலுவலக மேலாளர். அலுவலகத்தில் எவருடைய பேச்சையும் கேட்காதவர். திடீரென்று இன்று என்னை போனில் அழைத்தார். யாரும் தன்னிடம் ஏதும் சொல்லவில்லை என்றார். நான் அவரிடம் எத்தனை நாள் அவர் அலுவலகம் செல்கிறார் என்று கேட்டான். எப்போதாவது என்றார். நான் அது தான் அவர்கள் யாரும் அவரிடம் ஏதும் பேசாததற்கு கரணம் என்றேன். அவர்கள் தேவைப்படும் போது இவர் அங்கு இல்லை அதனால் அவர்களும் இவரை மெதுவாக ஒதுக்க ஆரம்பித்தனர். நான் இதை அவரிடம் சொன்னபோது அவர் என்னிடம் ஏதும் பேசவில்லை.

எண்ணம் அவரிடம் இருந்து  அப்படியே தென்னாபிரிக்கா ரக்பி அணியின் கேப்டன் சியா கோலிசியிடம் சென்றது.மனுசன் எவ்வளவு கஸ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்காரு நினைக்கும்போதே பிரம்மிக்க வைக்கிறது. இன்று அவர் உலகக் கோப்பையை ஏந்தும்  முதல் black கேப்டன். அவரின் சிரிப்போடு வீட்டை சென்றடைந்தேன்.

Tuesday, November 5, 2019

ரன்னிங் டைரி -26

05-11-2019 08:10
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓடுவதற்கு ரெடியாகுமுன்பே heart rate monitor-ஐ பைக்குள் வைத்து விட்டேன். இன்றும் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. மெதுவாகதான் ஓடவேண்டும் என்று முடிவெடுத்து மிக மெதுவாக ஓடினேன். "ஹவா ஹவா "  பாடல் ஆரம்பித்தவுடன் ஒரு புத்துணர்வு தொற்றிக்கொண்டது. வேகம் என்னை அறியாமலேயே கூடியது.பாட்டு முடியும் போது புளியம்தோப்பு பழனியின் பாடல்கள்தான் மனதில் வந்தது. இந்த இரு குரல்களுக்கும் ஒருவிதமான வசீகரம். சிறுவயதில் எங்கள் பெரியப்பா புளியம்தோப்பு பழனியின் பாடல்களை கேசட் பிளேயரில் அடிக்கடி போடுவார்.அப்படியே பெரியாப்பாவின் ஞாபகம் வந்தது. என் பெற்றோரை அடுத்து அதிகம் நேசிக்கும் முந்தின தலைமுறை நபர். அப்பாவின் பெரியம்மா பையன்.பெரும் ரசனைக்காரர். அனைத்தையும் ரசித்து செய்பவர்.பெரியப்பா பாடுவதை கேட்பது ஒரு சுகம். எனக்கு தெரிந்து ஊரில் புத்தகம் படிக்கும் சிலரில் பெரியப்பாவும் ஒருவர். பெரியப்பா மூலம் தான் இந்தியா டுடே ,தமிழன் எக்ஸ்பிரஸ் மற்றும் பல மாத/வார பத்திரிகைகள் அறிமுகமானது.மீனவர்கள் பற்றிய ஏராளமான புத்தகங்களை வைத்திருப்பார்.  ஊருக்கு எப்போது சென்றாலும் முதலில் போகும் வீடு பெரியப்பா வீடுதான். பெரியப்பாவை நினைத்துக் கொண்டே அலுவலகம் அடைந்தேன்.

கல் மேல் நடந்த காலம் - தியடோர் பாஸ்கரன்


தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டுமென்ற ஆசை.அதனால் இந்த புத்தகத்தையும் நூலகத்தில் இருந்து எடுத்தேன்.இது அவரது வரலாறு சார்ந்த கட்டுரைகளைக் கொண்ட புத்தகம். இதில் அவர் எழுதியுள்ள பல விசயங்கள் எனக்கு இதற்கு முன் தெரியாது. நம் கலாச்சாரத்தையும் வரலாறையும் தெரியாதது எவ்வளவு மோசமான விசயம். ஏனோ பாடப்புத்தகத்தில் படித்த வரலாற்று நிகழ்வுகள் சாதாரணமாக தெரிந்தது ஆனால் அவற்றையே கொஞ்சம் விரிவாகவும் சுவாரசியமாக எழுதினால் வசிப்பதற்கு விருப்பம் வருகிறது. இந்த புத்தகம் அப்படிப்பட்ட புத்தகம்.
"தஞ்சாவூர் பெரியகோவில் கல்வெட்டுகள்" என்ற தலைப்பில் உள்ள கட்டுரை பெரியகோவிலைப் பற்றி ஒரு ஆழமான  அறிமுகத்தைக் கொடுக்கிறது என்றால் மிகையாகாது. படித்தவுடன் தோன்றியது ஏன் இந்த கோவிலின் கட்டுமான பணிகளை வைத்து பெருமளவு நாவல்கள் வரவில்லை என்றுதான்.  இருந்தாலும் இருக்கும் ஆனால் எனக்கு இன்னும் அறிமுகமாகவில்லை."ஏழு கன்னிமார்கள்: கலையும் கதையும்" கட்டுரையில் சப்தமாதர்களின் வழிபாடு இந்தியா முழுவதும் இருந்தாலும் அவர்களுக்கு கோவில்கள் எழுப்பும் வழக்கம் தென்னிந்தியாவில் தான் உள்ளது என்கிறார். சப்தமாதர்களின் கதை  மிகவும் சுவாரசியமானது.

"வேட்டை நாயும் தக்கோலாப் போரும்" கட்டுரையில் வரும் ஆதகூர் நடுகல் பற்றிய குறிப்பு வியப்பை அளிக்கிறது. ஒரு பேரரசன் வேட்டை நாய் ஒன்றை போற்றி வளர்த்தும் பின்னர் அவனது தளபதி அந்த நாயை கோவில் வளாகத்திலலேயே அடக்கம் செய்தது மட்டுமால்லாமல் தினசரி பூசை செய்ய ஏற்பாடு செய்ததும் பெரும் வியப்பு. குதிரைகளும் யானைகளும் தான் பொதுவாக கல்வெட்டுகளில் இருக்கும் ஆனால் இங்கு ஒரு நாய் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது."திராவிடச் சான்று: தாமஸ் டிரவுட்மன் நேர்காணல் " இந்த புத்தகத்தில் இந்த நேர்காணல் மிக முக்கியமானது மற்றொன்று அஸ்கோ பார்ப்பொலாவின் நேர்காணல்.இரண்டும் கண்டிப்பாக வாசிக்க வேண்டியவை.

இப்படி பல வரலாற்று நிகழ்வுகளை வாசிப்பதற்கு எளிமையாக எழுதியுள்ளார்  தியடோர் பாஸ்கரன் அவர்கள். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

ரன்னிங் டைரி -25

04-11-2019 18:10
அலுவலகத்திலிருந்து வீடுவரை

வெகுநாட்களுக்குப் பிறகு இன்று "heart rate monitor" அணிந்து கொண்டு ஓடினேன். இந்த மாதிரி devices அணிந்து கொண்டு ஓடினால் நம்மை அறியாமல் நாம் அடிக்கடி அதை பார்ப்போம். நானும் அப்படிதான். ஓடிய சிறிது நேரத்தில் ஒரு வகையான uneasiness தொற்றிக்கொண்டது. மீண்டும் மீண்டும் heart rate monitor-ன் strap-ஐ சரிசெய்து கொண்டேன்.  இதயத் துடிப்பு சரியாக இருக்கிறதா என்ற யோசனையிலேயே ஐந்து கிலோமீட்டர் ஓடிவிட்டேன். இனிமேல் வாட்ச்சை பார்க்க கூடாது என்று முடிவு செய்து மீதி தூரத்தைப் வாட்ச்சை பார்க்காமலேயே ஓடி முடித்தேன். என்னுடைய வாட்ச் "Polar RC3 GPS". ஓட்டப் பந்தய வீரருக்கு மிகவும் தேவையான ஒன்று. அனைத்து விதமான statistics இதில் அறியலாம். ஆனால் இது எனக்கு தேவையா என்றால் தேவையில்லைதான். தெரிந்தவர் ஒருவர் நான் தினமும் ஓடுவதை பார்த்து எனக்கு இந்த வாட்ச்சைக் கொடுத்தார். இந்த ஓட்டம் முழுவதும் எண்ணம்  இந்த வாட்சில் தான் இருந்தது.

Monday, November 4, 2019

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - பெருமாள்முருகன்


“தன்மக்களை எந்தக்கணத்திலும் எதிரிகளாக்கி, துரோகிகளாக்கும் வல்லமை படைத்தது அரசாங்கம்”.
பெருமாள்முருகனின் பத்தாவது நாவல் பூனாச்சி. தலைப்பைப் போல இது ஆடுகளின் கதை. கிழவனுக்கு ஒரு ஆட்டுக்குட்டி "பனைமரம்" உயரமுள்ள ஒருவனால் கொடுப்போதோடு கதை தொடுங்குகிறது.கிழவனும் கிழவியும் அதற்கு "பூனாச்சி" என்று பெயர் சூட்டுகின்றனர்.  இந்த நாவல் பூனாச்சியின் பார்வையில் விரிகிறது.

கிழவி பூனாச்சியை மகளாக வளர்கிறாள்.பூனாச்சியும் அவர்களில் ஒருவளாக கருதுகிறாள். இக்கதையில் ஆடுகள்தான் அதிகம் பேசுகின்றன. கதை நடக்கும் இடம் அசுரலோகம்.பூனாச்சியின் பாசம் ,பயம் காதல் ,ஏக்கம் ,பிரிவு தாய்மை என்று அனைத்து உணர்ச்சிகளும் இக்கதையில் இடம்பெற்றுள்ளது. அவள் வளர வளர கிழவனும் கிழவியும் பஞ்சத்தில் அடிப்பட்டு உணவுக்கே திண்டாட்டம் வர ஆரம்பிக்கிறது. பூனாச்சி ஏழு குட்டிகள் ஈன்றாள்.ஆனால் ஒன்றைக் கூட அவளால் தன்னுடன் வைத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு அதை விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை. ஏழு குட்டிகளின் பிறப்பு ஒரு பெரும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. 
வாயிருப்பது மூடிக்கொள்ள, கையிருப்பது கும்பிடுபோட, காலிருப்பது மண்டியிட, முதுகிருப்பது குனிய, உடலிருப்பது ஒடுங்க .
 ஏழை எளியவரைத்தான் அதிகாரிகள் அதிகம் துன்புறுத்துவார்கள் என்பதை மிக அழகாக குட்டிகள் பிறந்த பிறகு நடக்கும் நிகழிச்சிகளால் எடுத்துக்காட்டியுள்ளார். அதுவும் ஊடகங்களின் நடத்தையை இதைவிட யாரும் பகடி செய்ய முடியாது.ஆடுகள் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை வாழ விரும்புகிறது  ஆனால் வாழ முடியவில்லை அதேதான் மனிதர்களும் விரும்புகிறார்கள் ஆனால் அவர்களும் தாங்கள் விருப்பம்போல் வாழ முடியவில்லை. செல்வம் கொண்டுவந்த பூனாச்சி வறட்சியின் காரணத்தால் என்ன ஆனாள் என்பது தான் முடிவு.
மொத்த நாவலுமே பகடி எனலாம். பலவிதமான கதாபாத்திரங்கள் பலரை நினைவு படுத்துகிறது. ஆடுகளுக்கு இணை தேடுவது ,கிழவன் கிழவியின் உரையாடல்கள் அதிகாரிகளின் உரையாடல்கள் என அனைத்தும் ஒரு விதமான பகடி . பெருமாள்முருகனின் அதே சுவாரசியமான எழுத்து வாசிப்பை எளிதாக்குகிறது. வாசிக்கலாம்.

ரன்னிங் டைரி -24

01-11-2019 08:17
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

மாதத்தின் முதல்நாள்  கண்டிப்பாக ஓட வேண்டுமென்று முடிவெடுத்திருந்தேன். அதே போல் ஓடினேன். மழை மேகம் குளிர்ந்த காற்று ஓட்டத்தை ராம்மியமாக்கியது. மித வேகத்துடன் ஓடினேன். லோதல்/ரோதல் அல்வா ஞாபகத்தில் வந்தது. சாப்பிட்டு பல வருடங்கள் ஆயிற்று.நேற்று சாப்பிட்டேன். அமிர்தம்! ஒரு பிரத்யோக சுவை. ஊரில் இருந்து வந்திருக்கும் அம்மா அப்பா வாங்கி வந்திருந்தார்கள். நாவில் எச்சி ஊறியது! சிறு வயதில் பாட்டி ஒருவர் கூடையில் வீற்றுக் கொண்டு வருவார். கீழக்கரை லோதல்/ரோதல் மிகவும் பிரபலம். அபார சுவையாக இருக்கும்.என்னுடன் வேலைப் பார்பவர்களிடம் இது கீழக்கரையில் செய்தது என்று சொல்லிவிட்டேன் ஆனால் அம்மாவிடம் கேட்டப் போது அது பாம்பனில் தயாரித்தது என்றார். amazing!

 லோதல்/ரோதல் சுவையுடன் நினைப்பிலேயே ஓடி முடித்தேன்.

ரன்னிங் டைரி -23

31-10-2019 18:25
அலுவலகத்திலிருந்து வீடுவரை

எதுமே எண்ணாமல் ஓடிய ஒரு ஓட்டம். கவனம் முழுவதும் சுவாசத்தில்தான் இருந்தது. 

Friday, November 1, 2019

ரன்னிங் டைரி -22

31-10-2019 8:17
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

வரும் ஞாயிற்றுக் கிழமை 18 கிலோமீட்டர் பந்தயம் உள்ளது அதற்காக இன்று காலையும் சாயங்காலமும் ஓட வேண்டுமென்று முடிவெடுத்து இன்று காலையில் ஓடினேன். ஓட ஆரம்பித்தவுடன் "இஸ்ராயேலின் நாதனாய்" என்ற பாடல் ஒலித்தது. அற்புதமான பாடல். பாடலில் மெய்மறந்து ஓடினேன்.இதமான வெய்யில். திடீரென்று கூகிள் அனலிடிக்ஸ் ஞாபகத்தில் வந்தது. அது எண்ணத்தில் வருவதற்கு ஒரு காரணம் உண்டு. அந்த கஸ்டமருக்கு நான் கூகிள் அனலிடிக்ஸ் செட் செய்து கொடுத்தேன். எனக்கு கூகிள் அனலிடிக்ஸ் பற்றி ஒன்றும் தெரியாது இரண்டு இரவு உட்கார்ந்து இன்டர்நெட்டில் படித்தேன். அதற்கு அவர்கள் எங்களுக்கு தனியாக pay பண்ணவில்லை. இன்றும் அவர் கூகிள் அனலிடிக்ஸ் பற்றிக் கேட்பார் என்று என் மனதில் பட்டது. ஓடிக்கொண்டிருக்கும் போதே நான் அவரிடம் என்ன சொல்லவேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன். பெரிய நிறுவனங்கள்தான்  இப்படி maintenance என்ற பெயரில் அனைத்தையும் செய்ய சொல்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே அலுவலகத்தை அடைந்தேன்.