Thursday, February 27, 2020

அலை வரிசை -ம.காமுத்துரை


இந்த புத்தகமும் "முள்" போல ஒரு பெண்ணின் போராட்டத்தை சித்தரிக்கிறது. நாயகி பிறப்பதோடு தொடங்குகிறது கதை. குடும்பத்தின் அன்பில் வளர்ந்த அவள். ஆசிரியர் கோபித்துக் கொண்டார் என்பதற்காக அவளை பள்ளிக்கு செல்ல வேண்டாமென்று படிப்பை நிறுத்துகிறாள் அம்மாயி. அவள் எவ்வளவோ சொல்லியும் அவளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவில்லை. அவள் வாழ்வின் முதல் முடிவு அவளைக் கேட்டு எடுக்கப் படவில்லை.

அவள் வயதுக்கு வந்ததை மிகச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.  பதினான்கு பதினைந்து வயதிலேயே திருமணம் நிச்சியக்கப் பட்டு சில மாதங்களிலேயே திருமணமும் நடக்கிறது.  தாய் மாமன் தான் கணவன். அவன் தான் அவளை தூக்கிக் கொண்டு பள்ளியில் சேர்த்தவன். இன்றோ அவனே கணவன். அவளால் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அம்மாயின் பேச்சில் நம்பி திருமண உறவுக்குள் நுழைகிறாள். ஒரு சில மாதங்கள் தான் சேர்ந்து வாழ்ந்தார்கள். மாமனின் விடுமுறை கழிந்து மீண்டும் இராணுவத்திற்கே சென்றுவிட்டான் . சென்றவன் திரும்ப வரவில்லை. போரில் கொல்லப்படுகிறான். அவளோ கர்பமாக இருக்கிறாள் .அவள் அழவே இல்லை.

குழந்தை பிறந்த சில வருடங்களில் அவளுக்கு அவளின் பெற்றோர்கள் மீண்டும் திருமணம் செய்கிறார்கள். அவனை அவளுக்குத் தெரியும் .இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள். முதலில் அன்பாக இருந்தவன் அவர்களுக்கு குழந்தை பிறக்காததால் அவளைக் கொடுமைப் படுத்துகிறான். பல பிரச்னைகளுக்குப் பிறகு அவனைவிட்டு பிரிகிறாள்.அதற்கு பிறகு அவளுக்கு பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

கதைக்கு ஆசிரியர் சரியான பெயர் வைத்துள்ளார். அலை மாதிரி வரிசையாக அவளுக்கு துன்பங்களும் துயரங்களும் வந்து கொண்டே இருந்தாலும் அவள் எல்லாவற்றையும் எதிர் கொண்டு கடந்து செல்கிறாள். கிராம குடும்ப சித்தரிப்பு எதார்த்தமாக உள்ளது. அதிலும் அம்மாயி மாதிரி உறவுகள் கிட்டத்தட்ட அனைத்து குடும்பங்களிலும் இருக்கும். நாயகி பிறக்கும் போது அம்மாயி எல்லா அம்மன்களின் பெயரைச் சொல்லி நல்ல முறையில் குழந்தைப் பிறக்க வழி  செய்யவேண்டும் என்று குழந்தை இயேசு முன்னாள் நின்று மன்றாடுவாள். அந்த காட்சி என்னை ஏதோ செய்தது. இன்று இந்தியாவில் அப்படி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பெரியவர்களுக்கு தெரியும் அனைத்து சாமியும் ஒன்றுதான் என்று. கதை தட்டையாக இருக்கிறது.ஏனோ என் மனதில் கதை நிற்கவில்லை. வாசிக்கலாம்.

No comments: