Monday, September 23, 2019

கடல் அடி - சி. பெர்லின்


போன வாரம் நூலகத்திற்கு சென்றபோது ஒரு இன்ப அதிர்ச்சி ஏராளமான புதிய தமிழ் புத்தகங்கள். எட்டு புத்தகங்கள் எடுத்தேன்.அதில் ஒன்று இந்த புத்தகம். இந்த புத்தகத்தை எடுத்ததற்கு முதல் காரணம் இது மீனவர்கள் வாழ்க்கை பற்றியது.

தன் மனைவியை அடித்த சேவியரை அடித்தே ஆகவேண்டும் என்று அடிகம்போடு கடற்கரையில் வெறியோடு நிற்கும் இன்னாசி சேவியரை என்ன செய்தான் என்பதுதான் கதை. இதுதான் கதை என்றாலும் இடையே வரும் பல சம்பவங்கள் முக்கியமானது. அதிலும் மணல் கொள்ளை பற்றிய விவரிப்பும் அதன் தாக்கமும் மிக மிக அவசியமானது.

"காலங்காலமா மலைகளில் இருந்து தாதுக்களையும் , கனிமங்களையும் ஆத்துத் தண்ணி இழுத்திண்டு வந்து கடல்ல சேக்குது. கடலு அந்த தாதுக்களையும் , கனிமங்களையும்கடற்கரையில் அடிச்சு ஒதுக்குது.இப்படி பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்குத மணலுல கதிரியக்கப் பாதிப்புகள் அதிகம் இருக்குமாம்.அதுல ஆல்பா கதிர் ,பீட்டா கதிர் , காமா கதிர் இப்பிடி கதிரியக்கம் இருக்குமாம். அந்தக் கதிரியக்கம் மணலுக்குள்ள இருக்குறதுவர எந்தப் பாதிப்பும் இல்லையாம். அது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பா இருக்குமாம்.ஒரு சென்டிமீட்டர் மணல் சேர நூறு வருசமாகும். அந்த கனிமங்களும், தாதுக்களும் கலந்த மணலைத் தோண்டி எடுக்கும்ப கதிரியக்கம் வெளிப்படும்...... அப்படி வெளியாகக்கூடிய கதிரியிக்கத்துனால மனுச ஒடம்புல கேன்சர் பரவுதாம்."
இன்னாசி பயங்கர கோபக்காரன். ஊர் வேலையில் முன்னில் நிற்பவன்.இன்னாசிக்கு கடல்தான் எல்லாமே. சம்பாரித்த அனைத்தையும் கடல் தொழிலேயே செலவழிகிறான். நிர்மலா அவனை காதலித்து வீட்டை எதிர்த்து  திருமணம் செய்கிறாள். அவள் அவனின் தைரியத்தை மட்டுமே நம்பி அவனுடன் செல்கிறாள்.ஒரு பஞ்சாயத்தை மூன்றாக பிரித்ததால் பல பிரச்சன்னைகள் அப்படிதான் அன்று தண்ணீர் பிடிப்பதில் பெண்களுக்கிடையே கடும் வாக்குவாதம் கைகலப்பில் வந்து நின்றது.

இன்னாசி கட்டுமரத்தை செய்ததையும்  பராமரிப்பதையும் மிக அழகாக எழுதியுள்ளார். IT மொழியில் சொல்லனும்னா technical details and jargons. எனக்கு பல வார்த்தைகள் புரியவில்லை நல்லவேளையாக "கடலோர கலைச் சொற்கள்" என்ற பட்டியல் புத்தகத்தின் பின் உள்ளது.இந்த புத்தகத்தில் நான் வாய்விட்டு சத்தமாக சிரித்த ஓரிடம் உள்ளது - அது சூசை சிலுவையின் பாவ சங்கீர்தன நிகழ்வு . சிலுவை " பாவீ நான் சாமியாரா இருக்கிறேன். என்னை ஆசீர்வதியும்" - இதைப் படித்ததும் வெடித்துச் சிரித்தேன். அருகில் உட்கார்ந்து இருந்தவர் என்னை ஒரு விதமாக பார்த்தார்.அவர் ஆங்கிலத்தில் "oh from the book ?" என்றார். நான் ஆமாம் என்றேன்.

கதையின் இறுதி திரைப்படங்களில் வருவது போல வாசகனை ஒருவித தத்தளிப்பிற்கு கொண்டு சொல்கிறது. எவ்வளவு கோபமாக இருந்தாலும் கடலில் ஒருவனுக்கு ஆபத்து என்றால் எல்லாத்தையும் மறந்து உதவக்கூடியவன் மீனவன்தான். இக்கதையில் இன்னாசியும் அப்படித்தான்.மொத்த பக்கங்கள் தொண்ணூற்றி ஒன்பதுதான் ஒரே அமர்வில் படித்து முடித்துவிட்டேன். பெர்லின் வாசகனை கடற்கரைக்கே கூட்டிச் செல்கிறார். வாசிக்க வேண்டியே புத்தகம்.  

No comments: