Friday, October 9, 2020

ரன்னிங் டைரி - 123 (அம்மாச்சியின் நினைவு )

 09-10-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு

இன்று நீண்ட தூரம் ஓட வேண்டுமென்று நேற்றே முடிவு செய்துவிட்டேன் . நேற்று எனக்கு மிகவும் பிடித்த என் மீது எல்லையில்லா பாசம் கொண்டிருந்த எனது அம்மாச்சி இறந்து விட்டார். அவரின் இறப்பு செய்தி எதிர்பார்த்ததென்றாலும் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அம்மாச்சியை எண்ணிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன். என்னை அறியாமல் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. எங்கே ஓடுவது என்று முடிவு செய்யமல் ஓடிக் கொண்டே இருந்தேன். அம்மாச்சியின் முகம் வந்து கொண்டே இருந்தது. சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது டிரக் டிரைவர் என்னை பார்த்து என்ன கண்ல கண்ணீர் வருது என்று கேட்டார். நான் ஒன்றும் சொல்லாமல் கண்ணைத் துடைத்துக் கொண்டே மீண்டும் ஓடினேன். அம்மாச்சி ஒரு சகாப்தம். எப்போதும் எனக்கு அது அம்மாச்சி வீடுதான்.தாத்தாவை விட அம்மாச்சியிடம் தான் எனக்கு பாசம்.நான் பல நேரங்களில் அவருடன் தனியாக  ஒரு சில நிமிடங்கள் இருந்திருக்கீறேன் . அதெல்லாம் அற்புதமான நேரங்கள். மறக்க முடியாதது. பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு உடம்பு சரியில்லாமல் போன நேரங்களில் எல்லாம் எனக்காக எங்கள் வீட்டில் வந்து நான் குணமாகும் வரை தங்கி இருப்பார். அவரைப் பார்த்தாலே எனக்கு  ஒரு தைரியம்.அவரே ஒரு பெரும் மருத்துவருக்கு சமம். சிங்கப்பூரில் இருந்து நான் செல்லும்போதெல்லாம் அம்மைச்சியைப் பார்க்க செல்வதென்பது ஒரு பெரும் நிகழ்வு எனக்கு . நான் வாங்கிச் சென்ற ஜெபமாலையை நான் அவரைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் என்னிடம் காண்பிப்பார் . நான் அதை அவரிடம் கொடுத்தபோது அவரின் கண்ணில் இருந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பலமுறை யாருக்கும் தெரியாமல் எனக்கு பணம் தந்தவர். மூன்று வருடங்களுக்கு முன்பு பார்க்க சென்றபோது ஒரு சிறிய பிளாஸ்டிக் பையை என்னிடம் கொடுத்தார். அதில்  கொஞ்சம் மிச்சர் மற்றும் இனிப்புகள் இருந்தன.அம்மாச்சி அம்மச்சிதான் ! எனக்கு திருமணமாகி பிறகு அவரை பார்க்கச் சென்றபோது என்னையும் என் மனைவியையும்  கட்டி அணைத்து மனதார வாழ்த்தினார். "ஒன்னும் கவலைப் படாதே எல்லாம் சரியாயிரும் " என்று என்னைத் திடப்படுத்தியவர் .அவர் படுத்த படுக்கையாய் இருந்தபோது கூட என் மகளுக்கு உடை யாரிடமோ சொல்லி வாங்கி வைத்திருந்தார்.  எனக்கு அவரின் கையைத் தொடுவது மிகவும் பிடிக்கும் . இறுதியாக அவரைப் பார்க்க சென்றபோது கூட அவரின் கையை நான் பற்றினேன். சென்ற வாரம் வாட்சப் வீடியோ அழைப்பில் அவரைப் பார்த்தேன் நான் மிகவும் வருத்தப்பட்டேன்.இன்று அவரின் நினைவில் இலக்கு இல்லாமல் ஓடினேன். நினைவுகள் முழுவதும் அம்மாச்சியின் மேல் தான் இருந்தது. போய் வாருங்கள் அம்மாச்சி ...

ரன்னிங் டைரி - 122

  07-10-2020 16:15

தஞ்சோங் காத்தோங் ரோடு - உபி 

மகனைப் பள்ளியில் இருந்து அழைத்து வர வேண்டும். காலையில் ஓடவில்லை அதனால் சாயங்காலம் ஓடலாம் என்று முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன். கடுமையான வெய்யில். நல்ல வேளையாக தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்திருந்தேன். ஓட ஆரம்பித்தவுடன் காலையில் எனக்கும் வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடல்தான் ஞாபகத்தில் வந்தது. கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு அவரைப் பார்த்தேன். இருவருக்கும் ப்ராஜெக்ட் நிருவாகத்தில் பல விசயங்களில் உடன்பாடில்லை என்றாலும் அவர் என் நலன் விரும்பி.ஒரு மணி நேரம் பேசினோம். அவர் எங்கு diaper மலிவாக வாங்கலாம் என்று என்னிடம் ஒரு சின்ன பட்டியலைக் கொடுத்தார். அந்த பட்டியலைக் நினைத்துக் கொண்டே மகனின் பள்ளியை அடைந்தேன்.


ரன்னிங் டைரி - 121

 06-10-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு

அருமையான வானிலை. ஓடுவதற்கு மிகவும் உவந்தது. ஓட ஆரம்பித்தவுடனேயே மனதில் தோன்றியது லண்டன் மாரத்தான் முடிவுகள் தான். எப்படியும் கிபிசோகே (Kipchoge) வெற்றி பெறுவார் என்று எண்ணிருந்தேன், ஆண்கள் பிரிவு முடிவுகள் எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தரவில்லை . ஆனால் பெண்கள் பிரிவின் முடிவுகள் எனக்கு பெரும் ஆச்சிரியத்தைத் தந்தது. Brigid Kosgei தனது முதல் நிலையை சென்ற ஆண்டு போல இந்த ஆண்டும் தக்கவைத்துக் கொண்டார். அவருக்கும் இரண்டாவது வந்த Sara Hall-ற்கும் பத்து வயது வித்தியாசம்.Brigid Kosgei  ஒரு லெஜெண்ட். அதிகம் அறியப்படாத ஒரு வீரர். அடுத்து நான் எப்போது மாரத்தான் ஓடுவேன் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Monday, October 5, 2020

ரன்னிங் டைரி - 120

 05-10-2020 8:35

தஞ்சோங் காத்தோங் ரோடு - டன்மன் ரோடு -ஸ்டில் ரோடு -மெரின் பரேட் 

நீண்ட தூரம் ஓட வேண்டுமென்று முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன். காதில் தெலுங்கு துள்ளல் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. எனது தெலுங்கு பாடல் லிஸ்ட்:

-புட்டமா புட்டமா 

-சுமம் பிரதி சுமம் 

-நக்கிலீசு கொலுசு 

-நூ நாதோ எமன்னாவோ 

என்னை அறியாமலேயே வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன். அதற்கு மேல உள்ள பாடல்கள்தான் காரணம் . நல்ல வேளையாக சிக்னல் வந்தது. சற்று நின்று பாடல் வரிசையை மாற்றிவிட்டு மீண்டும் ஓட ஆடம்பித்தேன்.எதிரே ஒரு இந்திய தம்பதியினர் நடந்து  வந்து கொண்டிருந்தனர் அவர்களைப் பார்த்தவுடன் நான் புன்னகைத்தேன் அவர்களும் ஹலோ என்றார்கள். அவர்களைக் கடந்தபோது வலது பக்கம் நர்சரி பள்ளி இருந்ததைக் கவனித்தேன் அங்கிருந்து எண்ணம் முழுவதும் நான் படித்த பள்ளிகளுக்கு சென்றது. தொடக்கப் பள்ளியில் படித்தவர்களில் மூவர் மட்டுமே வாட்சப் குரூப்பில் இருக்கிறார்கள்.  என்னை மிகவும் நேசிப்பவர்கள். அப்படியே எண்ணம் நேற்றைய ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டிகளுக்கு சென்றது. wow ! மூன்று அற்புதமான எதிர்பார்க்காத முடிவுகள். எனக்கு ஏனோ இந்த வருட லிவர்பூல் அணியை பிடிக்க வில்லை. எதிரே நூலகம் மூடிருந்தது. பல மாதங்களாக அங்கு செல்லவில்லை. விரைவில் நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் எடுக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன்.மூன்று வாரமாக வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் எண்ணத்தில் தோன்றியது . இந்த வருடம் நான்  வாசிக்க அதிக நாட்கள் எடுத்துக் கொண்ட புத்தகம் இதுதான். இந்த வாரம் கண்டிப்பாக வாசித்து முடித்து விட வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Friday, October 2, 2020

ரன்னிங் டைரி - 119

01-10-2020 18:05

தஞ்சோங் காத்தோங் ரோடு

இன்று காலையில் வேலை இருந்ததால் ஓட முடியவில்லை. அதனால் சாயங்காலம் நேரம் கிடைத்தததும் ஓட ஆரம்பித்தேன். கடுமையான வெய்யில். ஓட ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே திரும்பி சென்று விடலாமா என்று  தோன்றியது. அப்போதுதான் எனக்கு முன்னாள் ஓடிக் கொண்டிருந்தவரை கவனித்தேன். அவரைப் பின்தொடர்ந்து ஓடலாம் என்று முடிவு செய்து அவரைத் தொடர்ந்தேன். அவர் மிக அழகாக சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தார். அப்படி ஓடுபவர்களைப் பார்ப்பதே பெரும் அழகு. என் கவனம் முழுவதும் அவரின் கால்களில்தான் இருந்தது .கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் அவரின் பின்தொடர்ந்து ஓடினேன். அதற்கு பிறகு அவர் வேறு திசையில் சென்றுவிட்டார். அப்போதுதான் காதில் ஒலித்த பாடலைக் கவனித்தேன் .SPB  " உன்னை நெனச்சேன் " பாடிக் கொண்டிருந்தார். அவர் என்றும் வாழ்வார். அவரின் மறைவுக்கு மக்கள் பெரும் திரளாய் அஞ்சலி செலுத்தியதை நம் எழுத்தாளர் சாரு நிவேதிதா எப்படி அப்படி புரிந்து கொண்டார் என்று எனக்கு புரியவில்லை.  கலைஞர்களை ஒப்பிடுவது சரியல்ல அதுவும் வேறு வேறு துறையில் இருப்பவர்களை. அதற்கு விளக்கங்கள் கொடுப்பது பெரும் சிரிப்பிற்குரியது. அது என்னவோ நம் எழுத்தாளர்களில் பலருக்கு நம் திரைத்துறையை பிடிப்பதில்லை.  நல்லதோ கேட்டதோ கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக திரைத்துறை நம்மில் கலந்து விட்டது அதை ஏற்றுக் கொண்டுதான் ஆகா வேண்டும். இதையே எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன் .