Tuesday, September 19, 2017

மஞ்சள் ரிப்பன் ஓட்டம் -2017


பல வருடங்களாக நான் ஓடும் பந்தயம் இது. அதற்கு பல கரணங்கள் உண்டு. முதலாவது நான் மஞ்சள் ரிப்பன் ப்ராஜெக்ட் தன்னார்வல தொண்டூழியர்.  இந்த தொண்டூழியமானது சிறை சென்று மீண்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் பணியை பல வருடங்களாக செய்து வருகிறது.  பல முறை என்னால் முடிந்தவற்றை அவர்களுக்கு செய்திருக்கிறேன். அதுவே இந்த வருடாந்திர ஓட்டத்திற்கும் பதிவு செய்ய என்னை தள்ளியது.

இந்த ஓட்டத்திற்கு ஓரளவு தயாராகவே இருந்தேன் ஆனால் எதிர்பாராமல் இரண்டு வாரங்களுக்கு முன்  ஏற்பட்ட இடது கால் வலியால் கிட்டத்தட்ட ஆறு நாட்கள் எந்த பயிற்சியும் செய்யாவில்லை.  போன வாரம் மீண்டும் பயிற்சியை தொடங்கினேன்.  இரண்டு நாட்கள் ஏழு கிலோமீட்டரும் ஒரு நாள் ஐந்து கிலோமீட்டரும் ஓடினேன்.இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பந்தயத்திற்கு எவ்வாறு தயார் செய்ய வேண்டுமென்று என் நண்பர்  (அவர் பல மராத்தான், அல்ட்ரா மராத்தான் மற்றும் ஐயன் மேன் (Iron  Man) போட்டியில் பங்கேற்றவர்  )ஒருவர் பல வருடங்களுக்கு முன் என்னிடம் சொன்னார் .அது என்னவென்றால் நீங்கள் மராத்தான் 42.1 கிமீ ஓட முடிவு செய்தீர்களென்றால் பந்தயத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன் நீங்கள் குறைந்தபட்சம் 84 கிமீ ஓட வேண்டும். அதுபோல ஒரு வாரத்திற்குமுன்  ஒரு நாள்  ஒரு  நீண்ட ஓட்டம் குறைந்தபட்சம் பந்தயத்தின் பாதி தூரம் ஓட வேண்டும்.  இவ்விரண்டையும் நான் முடிந்தவரையில் கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன்.

 மஞ்சள் ரிப்பன் ஓட்டப்பந்தயத்தின் தூரம் 10 கிமீ.  ஓட்டம் சாங்கி வில்லேஜ்ல்   (Changi Village) இருந்து தொடங்கியது. ஓட்டத்திற்கு முன் warm up மிகவும் முக்கியம். பல வருடங்களாக நான் warm up  பண்ணியதே கிடையாது. கடந்த இரண்டு வருடங்களாக எனக்கென்று ஒரு warm up routine- ஐ  அமைத்துக் கொண்டேன். அதன் பயன் மிகவும் பெரிது.  ஓட்டத்தை சிங்கப்பூரின்  துணை பிரதம மந்திரி டீயோ சீ ஹென்  தொடங்கிவைத்தார்.  அவரும் ஐந்து கிலோமீட்டர் பந்தயத்தில் பங்கேற்றார் .எனக்கு இந்த பந்தயத்தின் ஓட்ட பாதை மிகவும் பிடித்த ஒன்று அதுவும் போட்டி முடியும் இடமான சாங்கி சிறை.

நான் ஓட்டத்தை மிகவும் நிதானமாக என்னுடைய பயிற்சி வேகத்திலேயே ஆரம்பித்தேன். தூரம் கூடக்கூட என்னுடைய வேகமும் கூடியது அதுபோல என்னுடைய உடம்பும் விரைவில் சோர்வடைந்தது. சில நேரங்களில் இப்படித்தான் முன்னாள் ஓடுபவரை முந்திச்செல்ல வேண்டுமென்று எனது வேகத்திலிருந்து மீறி சென்றிவிடுவேன் (இது நீண்ட ஓட்டத்திற்கு நல்லதல்ல) அதுதான் இந்த பந்தயத்திலும் நடந்தது .ஆனால் இங்குதான் அனுபவம் கைகொடுத்தது. ஓட வேண்டியதுரத்தை கணக்கில் கொண்டு எனது வேகத்தை சரி செய்தேன். அந்த வேகம் எப்போதும் என்னுடைய பயிற்சி வேகத்தை விட குறைவாகத்தான் இருக்கும். இந்த ஓட்டத்திலும் அதுதான் நடந்தது. இறுதியில் பந்தயத்தை எந்த ஒரு காயங்களும் உடல் உபாதைகளும் இல்லாமல் நிறைவுசெய்தேன்.

இரண்டு குறிப்பிட வேண்டிய விசயம் ஒன்று volunteers -அவர்களின் பங்களிப்பு மிகவும் பெரிது . ஓடும் தூரம் முழுதும் அவர்களின் சிரித்த முகமும் கைத்தட்டல்களும் கண்டிப்பாக ஓடுபவருக்கு ஒரு வகையான புத்துணர்வூட்டுமென்றால் மிகையாகாது.  மற்றொன்று சாங்கி சிறை.  இந்த சிறையை சாதாரண நாட்களில் பொதுமக்கள் பார்வையிட முடியாது. ஒரு வித்தியாசமான வடிவமைப்பு எனக்கு அது ஒரு பிரம்மாண்டமாகவே தெரிந்தது.
இந்த பந்தயத்திற்கென்றே  உருவாக்கிய  "playlist" .

  • ஒழுகி ஒழுகி  - ஒரு சினிமாக்காரன் (மலையாளம் )
  • காட்டுக்குயிலு  - தளபதி 
  • யாத்தே யாத்தே  -ஆடுகளம் 
  • தி பைனல் கவுண்டவன்  - ஐரோப் 
  • என்ட அம்மேட -வெளிப்படிண்டே புஸ்தகம்  (மலையாளம் )
  •  கடலம்மா -அயால் ஜீவிச்சிருப்புண்டு (மலையாளம் )
  • தீயமே  - அங்கமாலி டைரிஸ் (மலையாளம் )
  • தண்டர்  - இமாஜின் டிராகன் 
  • ஷேப் ஆப் யு - எட் ஷீரன் 
  • பொத்தி வச்ச மல்லிக மொட்டு -மண் வாசனை 
இந்த ஓட்டம் ஒரு நல்ல அனுபவம். அடுத்தது "Run By The Bay 21 KM .."

Monday, September 11, 2017

கடைசி நண்பன் (The Last Friend - Tahar Ben Jelloun)


இது ஒரு புதிய கதையல்ல. இரண்டு நண்பர்களுக்கிடையே நடக்கும் கதை. இது மொராக்கோவில் உள்ள Tangiers நகரில் நடக்கிறது.  மம்மது மற்றும் அலி இருவரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் .பதின் வயதிற்குரிய அனைத்தையும் செய்து பார்க்கிறார்கள். பெண்கள்தான் அவர்களின் பெரும் கவனம். இருவருக்கும் அதில் ஒரு போட்டி.

மம்மது ஒரு கோபக்காரன்.போலித்தனமான சமுதாயத்தை சாடுகிறான். மேல்படிப்பிறகு பிரான்ஸ் செல்கிறான் அங்கு பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பணியாற்றுகிறான். மருத்துவம் படிக்கிறான்.  அலி  அமைதியானவன் சற்று வசதியான குடும்பத்திலிருந்து வந்தவன். சினிமாவில் ஈடுபாடுள்ளவன். ஆசிரியர் பணியில் சேருகிறான். இருவரும் மொராக்கோ அரசால் கைது செய்யப்பட்டு ஒரே சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பதினெட்டு மாதங்கள் அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் காப்பாற்றிக்கொள்கிறார்கள்.
இருவருக்கும் திருமணம் நடக்கிறது இருவரின் மனைவிமார்கள் அவர்களின் நட்பை எதிர்கிறார்கள். திடிரென்று ஒரு நாள்  மம்மது அலி மீது பெரும் கோபம்கொண்டு அவனை திட்டுகிறான் அவர்களின் நட்பை கொச்சைப் படுத்துகிறான். ஏன் இந்த கோபம் -அது மற்றொரு  கதை.

மற்றொரு முக்கியமான கதாபாத்திரம் கதை நடக்கும் இடமான  Tangiers . கதை முழுவதும் அது தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது.  மம்மது ஸ்வீடன் சென்ற பிறகு Tangiers-ஐ  நினைத்து ஏங்குகிறான்.  ஸ்வீடன் ஒரு அமைதியான நாடென்றும் அவன் அமைதியில்லாத  Tangiers-ஐ  விரும்புவதாக கூறுகிறான்.  அது அலி மீது பொறாமையாக மாறுகிறது. ஏனென்றால் அலி அங்கேயே இருக்கிறான்.

கதை மூன்று நபர்களால் சொல்லப்படுகிறது. முதலில் அலி அவர்களின் நட்பை மற்றும் அவர்களின் பிரிவை தனது நோக்கில் சொல்கிறான். அலி முடித்தவுடன்  மம்மது அவனது பார்வையில் அவர்களின் நட்பையும் அவனது கோபத்திற்கான காரணத்தையும் சொல்கிறான்.அவன் அலியின் கதையை மறுக்கவில்லை மாறாக அதற்கு மேலும் வலு  சேர்கிறான்.  இறுதியாக இவர்கள் இருவரின் நண்பன் அவனது நோக்கில் அவர்களின் நட்பை சொல்கிறான். இந்த கதைக்கு இந்த கதைசொல்லும் முறை மிக சரியாக பொருந்துகிறது.

இஸ்லாமிய நாட்டில் நடக்கும் கதையாதலால் பாரம்பரிய வகையில் எந்த விசயத்தையும் குறிப்பாக பாலியல் சம்பந்தமுடையவற்றை மறைத்து ஆசிரியர் கூறிருப்பார் என்று நினைப்பவர்களுக்கு பெரும் ஏமாற்றமே.  அனைத்தையும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இளம்பெண்களின் பாலியல் குறித்த செயல்பாடுகளும் எண்ணங்களும் ஆசிரியரால் மிகவும் வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது . மொராக்கோவின் கலாச்சாரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் ஆசிரியர்.  எளிய எழுத்து நடை. தஹர்  பென் ஜெல்லோன் உலக புகழ் பெற்ற  மொராக்கோ எழுத்தாளர் பல விருதுகளை பெற்றவர்.  இவருடைய "The Blinding Absence of Light" என்ற புத்தகத்தை படிக்க வேண்டும். அந்த புத்தகத்தை வாங்க சென்று அதில்லாமல் இப்புத்தகத்தை வாங்கினேன். 

வாசிக்கலாம்.