Monday, August 31, 2020

ரன்னிங் டைரி - 101

 31-08-2020 08:42

தஞ்சோங் காத்தோங் ரோடு

நல்ல வெய்யில். நல்ல வேலையாக இன்று நான் கண்ணாடி எடுத்துச் சென்றிருந்தேன். கண்கள் கூசும் அளவிற்கு வெய்யில்.மிதமான வேகத்தில் ஓட ஆரம்பித்தேன். "Act of God "  - இந்த வார்த்தைகள்தான் மனதில் வந்தன. என்னத்த சொல்ல சென்று எண்ணிக் கொண்டேன். வாக்மேனில் "ராக்கம்மா கைய தட்டு" ஓடிக் கொண்டிருந்தது. எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும். புத்துணர்வு தரக் கூடிய பாடல்.பாடல் முடித்ததும் கவனம் முழுவதும் பாதையில் சென்றது ஏனென்றால் அது ஏற்ற இரக்கமாக இருந்தது. மீண்டும் எண்ணம் மெஸ்ஸியின் பக்கம் சென்றது. இன்று என்ன நடக்குமோ என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 100

 29-08-2020 05:45

தஞ்சோங் காத்தோங் ரோடு

இன்று நீண்ட தூரம் ஓடவேண்டும் ஒன்று முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன்.  ஆனால் எந்த பக்கம் செல்வது என்று முடிவு செய்யாமல் ஓட ஆரம்பித்தேன்.  கால்கள் தானாகவே கிழக்கு கடற்கரை சாலையின் பக்கம் சென்றது. மெஸ்ஸியைப்  பற்றிய செய்திகள்  மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவரின் கோல்கள் மனதில் படம் போல ஓடிக் கொண்டிருந்தது. எனக்கு அவரின் முக்கியமான கோல்களின் ஆங்கில வர்ணனை மனப்பாடமாகத் தெரியும் அதிலும் ரே ஹட்ஸன் ,ராப் பாமர் மற்றும் மார்டின் டைலரின் வார்த்தைகள் மறக்கவே முடியாது. அவர் எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் மீண்டும் விளையாட வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Thursday, August 27, 2020

ரன்னிங் டைரி - 99

 27-08-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு -சாங்கி ரோடு -கிழக்கு கடற்கரை சாலை 

நல்ல வெய்யில். இன்று வேறு வழியில் ஓடலாம் என்று எண்ணி சாங்கி ரோட்டை நோக்கி ஓடினேன்.மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கவனம் எல்லாம் யார் மீதும் மோதாமல் ஓடுவதில்தான் இருந்தது. யுனோஸ் வளைவில் இருந்து மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை நான் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தேன். வீடுகள் மிக அழகாக இருந்தன. அனைத்து வீடுகளின் வெளிப்புறத்தில் கார்களும் நாய்களும் இருந்தன.நான் பராக்கு பார்த்துக் கொண்டே ஓடினேன்.திடீரென்று மெஸ்ஸியின் ஞாபகம் வந்தது.மீண்டும் பார்சிலோனாவிற்கு மெஸ்ஸி விளையாடுவாரா என்று  எண்ணிக் கொண்டே அவரின் பல கோல்கள் கண்முன்னே படமாக வந்தன. வரம் வரம் எனக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துக் கொண்டிருக்கும் வீரனுக்கு இப்படி ஒரு நிலை என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.


Wednesday, August 26, 2020

ரன்னிங் டைரி - 98

    26-08-2020 08:30

தஞ்சோங் காத்தோங் ரோடு

இன்று குறைவான தூரமே ஓட வேண்டுமென்று முடிவெடுத்திருந்தேன். அதன்படி இன்று குறைவான தூரமே ஓடினேன். மிக வேகமாக ஓடினேன்.  எண்ணம் முழுவதும் சுவாசத்தில்தான் இருந்தது. வீட்டை அடைந்ததே தெரியவில்லை.

ரன்னிங் டைரி - 97

   25-08-2020 08:35

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓட ஆரம்பித்ததே வேகமாகத் தான். எப்போதும் மெதுவாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்டுவதுதான் சரி. சில கிலோமீட்டர்களுக்கு பிறகு வேகத்தைக் குறைத்தேன். சரியான வேகம் வரும் வரை வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் ஓடினேன். சீரான வேகம் எது என்பது ஒரு வீரனுக்கு தெரியும். எனக்கு என் வேகம் எது என்பது தெரியும். அப்படித் தெரியும் என்பதால் நான் உடனே அந்த வேகத்தை அடைய முடியாது. பல நேரங்களில்அந்த வேகத்தைக் கண்டடையாமல் ஓடுவதை நிறுத்தி நடந்திருக்கிறேன். இன்று என்னால் எனது சீரான வேகத்தை அடைய முடிந்தது. ஏனோ மனதில் "Civilization State " என்று வார்த்தைகள் வந்து கொண்டே இருந்தது.சென்ற வாரம் இதைப் பற்றி இரண்டு கட்டுரைகளை படித்தேன். அந்த கட்டுரைகளின் சாராம்சத்தை எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன். 

Monday, August 24, 2020

ரன்னிங் டைரி - 96

  24-08-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது இன்று அனுப்பவேண்டிய ஒரு ஈமெயில் தான். வெள்ளிக்கிழமையே நான் அனைத்தையும் தயாராக வைத்துவிட்டேன். ஆனால் மற்றொரு என்ஜினீயரின் ஒப்புதல் இல்லாமல் நான் அந்த ஈமெயிலை அனுப்ப முடியாது. இந்த ப்ராஜெக்ட் ஒரு இந்திய கம்பெனிக்கு செய்ய டெமோ காட்ட வேண்டும். அதற்குரிய flowchart-ஐ நான் வரைந்து வைத்திருக்கிறேன். ஈமெயிலுடன் அதையும் சேர்த்து அனுப்ப வேண்டும். அப்படியே எண்ணம் முழுவதும் நான் இதுவரை வரைந்த flow diagrams மேல் சென்றது. Microsoft Visio-தான் எனக்கு எல்லாமாகி போனது. ஒரு மணிநேரம் பேச வேண்டியதை ஒரு flow diagram ஐந்து நிமிடத்தில் புரிய வைத்து விடும்.  இந்த 12 வருடங்களில் நான் பல மீட்டிங்களுக்கு சென்றுள்ளேன் என்னைப் பொறுத்தவரை diagrams இல்லாமல் ப்ரொஜெக்ட்டை  கஸ்டமருக்கு விளக்குவது பெரும்  கஷ்டம்.  அப்படி யோசித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று  "Hi Sasi" என்று ஒருவர் என் முன்னாள் ஓடி வந்துகொண்டிருந்தார். எனக்கு உடனே அது யாரென்று புலப்படவில்லை. மிக அருகில் வந்தவுடன் தான் அது யாரென்று எனக்கு தெரிந்தது -அவர் என் பாஸ்(Boss). அவரும் ஓடிக்கொண்டிருந்தார். அவருக்கு "Hi" சொல்லிவிட்டு இருவரும் நிற்காமல் எதிரெதிர் திசையில் ஓடினோம். அப்போதுதான் கவனித்தேன் எனக்கு முன்னால் ஒருவர் சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தார். அவரை பின்தொடர முடிவு செய்து வேகத்தை கூட்டி அவருக்கு மிக அருகில் ஓடினேன். வீடு வரும் வரை அவரை பின் தொடர்ந்தேன்,  மனதெல்லாம் அவரின் கால்கள் தான் ... அவர் என் வீட்டைத் தாண்டி ஓடினார். வீட்டிற்குள் வந்ததும் மொபைலைப் பார்த்தேன் "Hope u had a good run 👍" என  என் பாஸ்  மெசேஜ் அனுப்பியிருந்தார்.

Friday, August 21, 2020

ரன்னிங் டைரி - 95

 21-08-2020 08:50

உபியிலிருந்து வீடுவரை 

மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தேன். இன்று அவனின் பிறந்த நாள்.  ஓட ஆரம்பித்தவுடன் இரண்டு வருடங்களுக்கு முன்பு மருத்துவமனையில் நடந்ததுதான் ஞாபகத்தில் வந்தது.அன்று நான்கு மணிக்கு மனைவிக்கு வலி வந்தவுடன் மகளை எழுப்பி கார் பிடித்து KK மருத்துவமனைக்கு சென்றோம். காரைவிட்டு இறங்கும் போதுதான் கவனித்தோம் காரின் இருக்கை முழுவதும் இரத்தம். கார் ஓட்டுநர் வயதானவர். மிகவும் பணிவுடன் என்னிடம் "இதைப் பற்றி கவலைப் படாதே தம்பி மொதல்ல மனைவியை கவனி" என்றார். கண்ணீருடன் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மருத்துவமனைக்குள்ளே சென்றேன். உள்ளே சென்றவுடன் நர்ஸுகள் மனைவியை பரிசோதிக்க ஆரம்பித்தனர். என்னை பில்லிங் பகுதிக்கு அனுப்பி பணம் கட்டச் சொன்னார்கள். நான் அங்கு சென்று பல படிவங்களை பூர்த்தி செய்து பணம் காட்டினேன். மனைவியை டெலிவரி வார்டில் சேர்த்தார்கள். நாங்கள் எப்போதும் பார்க்கும் டாக்டர் பணியில் இல்லை.  பல சோதனைகள் செய்த பின்னர் உடனே ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி என்னிடம் ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கினார்கள். நான் பயப்பட ஆரம்பித்தேன். உடனே மனைவியை அறுவை சிகிச்சை அறைக்குள் எடுத்துச்  சென்றனர். அடுத்த 70 நிமிடங்கள் நானும் என் மகளும் ஒருவரை ஒருவர் இறுக்கமாக பற்றிக் கொண்டு உட்கார்ந்து இருந்தோம். ஆறே கால் மணிக்கு தமிழ் நர்ஸ் ஒருவர் வந்து  "Congratulations ,your wife has delivered a baby boy, wait for 10 minutes we will bring the baby and show you " என்றார். என் மகளும் " Congratulations pa "  என்றாள். அவளை  தூக்கிக் கொண்டேன். பத்து நிமிடங்கள் கழித்து அவனை கொண்டு வந்தார்கள் கண்களில் கண்ணீருடன் நானும் என் மகளும் அவனை பார்த்தோம்.  அந்த நிமிடங்களை நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தேன் .

ரன்னிங் டைரி - 94

20-08-2020 08:26

தஞ்சோங் கத்தோங் ரோடு 

முதலில் ஓட வேண்டாமென்று எண்ணி நடக்க ஆரம்பித்தேன். என்னை அறியாமலே சிறிது நேரத்தில் ஓடினேன்.ஓட ஆரம்பித்தவுடன் முதலில் நான் கவனித்தது எதிர்க்கே வரும் பெற்றோர்கள் அனைவரின் கழுத்திலும் அடையாள அட்டை தொங்கி கொண்டிருந்ததைத்  தான் . என்ன கொடுமை என்று எண்ணிக் கொண்டேன். அவர்கள் அனைவரின் பிள்ளைகளும் கனடியன் இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கிறார்கள். பள்ளியைத் கடந்தபோது தான் வாக்மேனில் ஓடிக் கொண்டிருந்த பாடலைக் கவனித்தேன். அடேல் (Adele) தனது வசீகர குரலால் "Someone like you" பாடிக் கொண்டிருந்தார். எனக்கு அவரின் குரல் மிகவும் பிடிக்கும். நான் அவரின் முதல் ஆல்பமான 19-ஐ பல நாட்கள் தொடர்ச்சியாக கேட்டிருக்கிறேன்.  பாடல் முடியும் வரை கவனம் முழுவதும் பாடலில்தான் இருந்தது. என்ன அருமையான பாடல்!  பாடல் முடிந்தவுடன் தான் நான் ஓடிக் கொண்டிருக்கும் இடத்தை கவனித்தேன்.  கடற்கரை அருகே வந்து விட்டிருந்தேன். திரும்பி மீண்டும் வீட்டிற்கே ஓட ஆரம்பித்தேன்.  காபி (Coffee) குடிப்பதா வேண்டாமா என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.



Wednesday, August 19, 2020

ரன்னிங் டைரி - 93

19-08-2020 08:45

உபியிலிருந்து (Ubi) வீடுவரை 

மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தேன். அவனை விட்டுவிட்டு வரும்போதெல்லாம் எனக்கு கண்ணீர் வரும். இன்றும் அப்படியே கண்ணீரைத்  துடைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். நேற்று பல பாடல்களை வாக்மேனில் ஏற்றினேன். ஓட ஆரம்பித்தவுடன் "சங்கீத மேகம்" எஸ் பி பியின் குரலில் ஆரம்பித்தது.சிலரை நாம் நம் வீட்டில் ஒருவர்போல் நினைத்துக் கொள்வோம் அதில் ஒருவர்தான் எஸ் பி பி. அவருக்கு உடல்நலம் சரியில்லை என்றதும் எனக்கு ஒருவிதமான பயம் ஏற்பட்டது. அவர் நலமாக வேண்டுமென்று எண்ணிக் கொண்டே ஓடினேன்.யூனுஸ் பஸ் ஸ்டாப் அருகில் வந்தவுடன் நான் மிகவும் விரும்பி சாப்பிடும் சூப் நூடுல்ஸ் ஞாபகம் வந்தது. அதைச் சாப்பிட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.வாயில் எச்சி ஊறியது. என்ன செய்ய என்று  என்னை நானே கேட்டுக் கொண்டேன். வீட்டை அடையும் வரை  எண்ணம் முழுவதும் சாப்பிட்டிலேயே இருந்தது. 

ரன்னிங் டைரி - 92

  18-08-2020 08:28

தஞ்சோங் கத்தோங் ரோடு 

மழை மேகம்  குளிர்ந்த காற்று  இவை இரண்டும் என்னை ஓட உற்சாகப் படுத்தியது. ஓட ஆரம்பித்த சிறிது நேரத்தில் தோனியின் ஞாபகம் வந்தது. நான் தோனி விளையாடி அதிகமாக பார்த்ததில்லை. எனக்கு தெரிந்த தோனி எழுத்தின் மூலமும் நண்பர்கள் சொல்லித்தான். ஏனோ தோனியை எனக்குப் பிடிக்கும். அவரது ஓய்வு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் இழப்புத்தான். நான் 20-20 பார்ப்பதில்லை. அதனால் இனிமேல் யூடூப்பில் தான் தோனியின் பேட்டிங்கை பார்க்க வேண்டும். என்னை மிகவும் பாதித்த விளையாட்டு வீரர் ஓய்வு என்றால் அது பிரைன் லாராவின் ஓய்வுதான்.அன்று என்னை அறியாமல் அழுதேன்.  மெஸ்ஸி ஓய்வு பெற்றால் என்ன செய்வது என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Monday, August 17, 2020

ரன்னிங் டைரி - 91

 17-08-2020 08:32 

தஞ்சோங் கத்தோங் ரோடு 

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் ஓடினேன். மெதுவாக ஓடவேண்டுமென்று முன்னரே முடிவு செய்துவிட்டுத் தான் ஓட ஆரம்பித்தேன். நல்ல வெய்யில். வாக்மேனில் இளையராஜா வழக்கம் போல தனது மேஜிக்கை நிகழ்த்த ஆரம்பித்தார். அப்படியே  இளையராஜாவை பற்றி நான் வாசித்த ஒரு கட்டுரை மனதில் ஓடியது . "இளையராஜாவின் இசையில் சாதி எதிர்ப்பு அரசியல் – ராஜேஷ் ராஜாமணி"   நமது நாட்டில்தான் அவரது இசையை ஆராயாமல் அவரது சாதியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த கட்டுரை ஒரு முக்கியமான ஒன்று.. இளையராஜாவை மற்றொரு கோணத்தில் நமக்கு காட்டுகிறது. இதை எண்ணிக் கொண்டே மவுண்ட் பேட்டன் ரோடை அடைந்தேன்.  எதிரே ஒரு அம்மாவும் மகனும் வந்து கொண்டிருந்தனர். மகனின் கையில் கிரிக்கெட் பேட் இருந்தது. பார்ப்பதற்கு ஆஸ்திரேலியர் போல் தெரிந்தார் . அவன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தான்.  நான் அவனைப் பார்த்து கையை அசைத்தேன் அவனும் சிரித்துக்கொண்டே கை காட்டினான்.  வாக்மேனில் "என்னை தாலாட்ட வருவாளா" ஆரம்பித்தது ..பாடிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.