Friday, August 21, 2020

ரன்னிங் டைரி - 95

 21-08-2020 08:50

உபியிலிருந்து வீடுவரை 

மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தேன். இன்று அவனின் பிறந்த நாள்.  ஓட ஆரம்பித்தவுடன் இரண்டு வருடங்களுக்கு முன்பு மருத்துவமனையில் நடந்ததுதான் ஞாபகத்தில் வந்தது.அன்று நான்கு மணிக்கு மனைவிக்கு வலி வந்தவுடன் மகளை எழுப்பி கார் பிடித்து KK மருத்துவமனைக்கு சென்றோம். காரைவிட்டு இறங்கும் போதுதான் கவனித்தோம் காரின் இருக்கை முழுவதும் இரத்தம். கார் ஓட்டுநர் வயதானவர். மிகவும் பணிவுடன் என்னிடம் "இதைப் பற்றி கவலைப் படாதே தம்பி மொதல்ல மனைவியை கவனி" என்றார். கண்ணீருடன் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மருத்துவமனைக்குள்ளே சென்றேன். உள்ளே சென்றவுடன் நர்ஸுகள் மனைவியை பரிசோதிக்க ஆரம்பித்தனர். என்னை பில்லிங் பகுதிக்கு அனுப்பி பணம் கட்டச் சொன்னார்கள். நான் அங்கு சென்று பல படிவங்களை பூர்த்தி செய்து பணம் காட்டினேன். மனைவியை டெலிவரி வார்டில் சேர்த்தார்கள். நாங்கள் எப்போதும் பார்க்கும் டாக்டர் பணியில் இல்லை.  பல சோதனைகள் செய்த பின்னர் உடனே ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி என்னிடம் ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கினார்கள். நான் பயப்பட ஆரம்பித்தேன். உடனே மனைவியை அறுவை சிகிச்சை அறைக்குள் எடுத்துச்  சென்றனர். அடுத்த 70 நிமிடங்கள் நானும் என் மகளும் ஒருவரை ஒருவர் இறுக்கமாக பற்றிக் கொண்டு உட்கார்ந்து இருந்தோம். ஆறே கால் மணிக்கு தமிழ் நர்ஸ் ஒருவர் வந்து  "Congratulations ,your wife has delivered a baby boy, wait for 10 minutes we will bring the baby and show you " என்றார். என் மகளும் " Congratulations pa "  என்றாள். அவளை  தூக்கிக் கொண்டேன். பத்து நிமிடங்கள் கழித்து அவனை கொண்டு வந்தார்கள் கண்களில் கண்ணீருடன் நானும் என் மகளும் அவனை பார்த்தோம்.  அந்த நிமிடங்களை நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தேன் .

No comments: