Monday, July 24, 2017

The Tuner of Silences - Mia Couto


மியா கோட்டோ ஆப்பிரிக்க இலக்கியத்தில் தவிர்க்க முடியாத எழுத்தாளர் . போர்ச்சுகீசிய பெற்றோருக்கு மொசாம்பிக்கில் பிறந்தவர் .காலனிய அரசியலை எதிர்ப்பவர் .காமோஸ் (Camoes) மற்றும் நியூஸ்டேட்ட் (Neustadt) இலக்கிய விருதுகளைப் பெற்றவர் .இவரின் நூலொன்று  சமீபத்தில்  ஆங்கில மொழியாக்கத்தில் வெளிவந்தது .அதன் பெயர்   "தி டியூனர் அப் சைலென்ஸ் ".
He who seeks eternity should look at the sky, he who seeks the moment, should look at the cloud
இந்த கதை இரண்டு கதாபாத்திரங்களால் சொல்லப்படுகிறது .முதலாவது சிறுவன் (Mwanito) மவானிட்டோ தனது வாழ்க்கையை சொல்லுகிறான். அவனும் அவனது அண்ணன் மற்றும் தந்தை சில்வெஸ்டர் விட்டலிசியோ  ஒரு பாதுகாக்கப்பட்ட காட்டுக்குள் வாழ்கிறார்கள் . அவனது தந்தை அந்த இடத்தை ஜெசூசலேம் (Jezoosalem) என்று அழைக்கிறார். அந்த நிலத்தில் அவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள். அவர்களின் வெளியுலக தொடர்பு அவர்களின் மாமா மட்டுமே. மவானிட்டோவிற்கு அதுவே உலகம். அங்கு சில்வெஸ்டர் விட்டலிசியோ அவர்களை கொடுமைப்படுத்தி ஒரு ராணுவ ஆட்சி போல் ஆட்சி செய்கிறார். அவர் அவர்களை எழுதவோ படிக்கவோ அனுமதிக்கவில்லை. வெளியுலகில் யாரும் இல்லை  என்று அவர்களை நம்பவைக்கிறார். விட்டலிசியோ இங்கு வந்தவுடன் அனைவரின் பெயரையும் மாற்றினார் ஆனால் மவானிட்டோவிற்கு மட்டும் மாற்றவில்லை.

மவானிட்டோ  தான் தந்தை சொல்வதைக் கேட்பதற்கே பிறந்தவன் என்று நம்புகிறான். அவன் தந்தையும் மூத்த மகனைவிட மவானிட்டோமே அனைத்தையும் பகிர்கிறார். அவனின் அமைதி தனக்கு ஆறுதல் தருகிறது என்று அவர் நம்புகிறார்.மணிக்கணக்கில் அவனிடம் பேசுகிறார் .  மவானிட்டோவிற்கு தன் தாயைப் பற்றி பல கேள்விகள் -அவள் எப்படி இருப்பாள் ,அவளது குரல் எப்படி இருக்கும். அவன் இந்த கேள்விகளை சில்வெஸ்டர் விட்டலிசியோவிடம் கேட்டதே இல்லை.
Love is a territory where orders can't be issued
 அவர்களின் இந்த அமைதியான வாழ்க்கை மார்தா  (Marta) என்ற பெண்ணின் வருகையால் பாதிக்கப்படுகிறது. மவானிட்டோ அவன் அம்மாவிற்கு பிறகு பார்த்த முதல் பெண்  மார்தா. அவன் அவளை அம்மாவாக பார்கிறான். அதற்க்கு எதிர்மாறாக அவனது அண்ணன் மார்தாவை கனவு பெண்ணாக காதலியாகப்  பார்கிறான். அவளின் வருகை சில்வெஸ்டர் விட்டலிசியோவிற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.அவளை எச்சரிகிறான். மார்தா தனது கணவனைத் தேடி ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்கா வந்தவள். மார்தா தன் கதைச் சொல்கிறாள்.அவளது கதையும் துயரமானதுதான். அவள்  ஜெசூசலேம்  தனது அடையாளத்திருந்து  விடுதலை அளிக்கிறது என்று நினைக்கிறாள்.

இரண்டு வெவ்வேறு உலகங்கள் சந்திக்கையில் , நான் எதிர் பார்த்தது போல, ஜெசூசலேமைவிட்டு அவர்கள் வெளியே வருகிறார்கள் .அங்கு வந்த பிறகுதான் மார்தா தன் கணவன் இறந்துவிட்டான் என்று தெரிகிறது. மவானிட்டோவிற்கோ அது ஒரு மறுபிறப்பு ,பிற மனிதர்களை பார்கிறான். தன் தாயைப் பற்றி அறிகிறான். அவன் ஒருபோதும் அவனது தந்தையை விட்டு பிரியவில்லை.

ஏன் ஒரு தந்தை தனது இளம் மகன்களை இப்படி மக்களே இல்லாத ஒரு இடத்திற்கு கொண்டு செல்கிறார்? மனைவின் இறப்பிற்கு பிறகு இந்த உலகத்தின் மீது இருந்த கோவம் ? அவருக்கு  இந்த உலகம் ஒரு கழிவு. அக்கழிவில் இருந்து மீள அவருக்கு வேறு வழி தெரியவில்லை . இந்த கதையின் முக்கியமான ஒன்று ஆசிரியரின் அந்த நிலத்தின் வர்ணனை. ஒவ்வொரு அத்தியாயங்களும் ஒரு கவிதையுடன் தொடங்குகிறார். இக்கவிதைகள் இக்கதைக்கு பெரும் வலிமை சேர்க்கிறது. கோட்டோவின் எழுத்துநடை வாசகரை கதையில் ஒரு அங்கமாகவே மாற்றுகிறது என்றால் மிகையாகாது.

இந்த புத்தகம் மனிதன் தனக்கொரு எல்லையைத்  திணித்துக்கொள்வதும் அதை மீறுவதற்கு ஏற்படும் ஆசையைப் பற்றி பேசுகிறது. தந்தை எல்லையைத் திணிப்பதும்  மகன்கள் அதை மீற நினைப்பதுவும்தான்  கதை. இந்த மொத்தக்கதையையும் ஒரு "allegory" என்றும் எடுத்துக்கொள்ளலாம். மொசாம்பிக்கின் சமீபத்திய வரலாறு அதற்கு சான்று.

வாசிக்க வேண்டிய புத்தகம். 

Monday, July 17, 2017

அமைதி (Silence - Shusaku Endo)


Silence என்று பெயரிட்ட புத்தகம் ஒன்றை இரண்டு வருடங்களுக்கு முன் பழைய புத்தகக் கடையில் வாங்கினேன் .அதுவரை ஸுசக்கு என்டோ (Shusaku  Endo) என்ற பெயரைக் நான் கேள்விப்பட்டதேயில்லை. கூகுளில் தேடியபோது இந்த புத்தகம் எவ்வளவு பிரபலமானதென்று தெரிந்தது .எந்த புத்தகம் வாங்கினாலும் உடனே 10-20 பக்கங்கள் வாசிப்பது என் வழக்கம் .இந்த புத்தகத்தையும் அதுபோல உடனே வாசித்தேன் . நாற்பது பக்கங்கள் வாசித்த பிறகு இனி ஒரேமூச்சில் வாசிக்க முடிவு செய்து புத்தகத்தை எங்கோ வைத்தேன் . உண்மையில் இந்த புத்தகம் எங்கு இருக்கிறதென்று மறந்தேவிட்டது .

கடந்த வருடம் ஒரு magazine-ல் மார்ட்டின் ஸ்கோர்செஸி (Martin Scorsese) இந்த புத்தகத்தின் கதையை திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று படித்தேன் .உடனே புத்தகத்தைத் தேடி கண்டுபிடித்து படிக்க ஆரம்பித்தேன். ஒரு சேசு சபை  (Jesuits) பாதிரியார்  தனது குரு கிறிஸ்துவத்தை துறந்தார் என்று கேள்விப்பட்டு அவரை தேடி ஜப்பான் செல்கிறார் அங்கு அவர் சந்திக்கும் பிரச்சனைகளே இந்த நாவலின் கதை .இந்த கதை ஒரு உண்மை சம்பவத்தைத் தழுவியது . புனித பிரான்சிஸ் சேவியர் 1549-ஆம் ஆண்டு ஜப்பான் சென்று இரண்டு வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றுகிறார் .அவரைத் தொடர்ந்து அடுத்த 50 ஆண்டுகளில் பல்வேறு கிறிஸ்தவ குழுக்கள் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை மதம் மாற்றினர் . இந்த குழுக்களுக்குள் நடந்த உள் மோதலால் .அவர்களை 1587-ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது  . உச்சக்கட்டமாக 1597-ல் இருபத்தியாறு  கிறிஸ்தவர்கள் ஆறு பாதிரியார்கள் உட்பட நாகசாகியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டனர் .

பதினேழாம் நூற்றாண்டு ஜப்பானில் கிறிஸ்தவர்கள் பெரும் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இந்த சூழ்நிலையில்தான் இரண்டு பாதிரியார்கள் ரொட்ரிகோஸ் மற்றும் கர்ப்பே தங்களின் குருவை தேடி வருகிறார்கள்.அங்கு அவர்களை மறைந்து வாழும் கிறிஸ்தவர்கள் ஆதரித்து அடைக்கலம் கொடுக்கிறார்கள் .அந்த மக்களின் இறை நம்பிக்கையும் அதற்காக அவர்கள் படும் துன்பமும் பாதிரியார்கள் இருவரையும் ஆச்சரியப்படுத்துகிறது .அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றுகிறார்கள் .அவர்களுக்கு வழிகாட்டியாக கிச்சிஜிரோ ,ஒரு கோழை மொழிப்பெயர்ப்பாளர். .அப்படி வெளியே சென்ற ஒரு தடவை விசாரணைக் குழு ஒன்று கிராமத்தின் மூன்று முக்கிய பெரியோரை மிகக் கொடுமையாக கொலை செய்கிறது.அவர்கள் செய்த குற்றம் இயேசு கிறிஸ்துவின் படத்தை(fumi-e) மிதிக்காதது  . இந்த சம்பவம் இரு பாதிரியார்களையும் மிகவும் பாதிக்கிறது . அவர்கள் நினைத்தது தாங்கள்தான் இம்மக்களை மீட்க வேண்டுமென்று ஆனால் நடந்து கொண்டிருப்பதோ நேரெதிர் .ரொட்ரிகோஸ் இவ்வளவு கொடுமைக்கு பிறகும் எப்படி கடவுள் அமைதியாக இருக்கிறார் என்று தனக்குள் கேள்வி கேட்கிறார் .

அவர்கள் கைது செய்யப்படுமுன்புவரை மக்களை இயேசு கிறிஸ்துவின் படத்தை மிதித்து உயிரைக் காப்பாற்றுமாறு வேண்டுகிறார்கள் ஆனால் அவர்கள் அதைச் செய்ய மறுக்கிறார்கள். ஜப்பான் அதிகாரிகள் பாதிரியாரை துன்புறுத்தாமல் அவர் முன் மக்களை துன்புறுத்துகிறார்கள். அதிகாரிகள் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான் பாதிரியார் ரொட்ரிகோஸ் கிறிஸ்துவை நிராகரித்து அவரின் படத்தை மிதிக்க வேண்டும். முகுந்த மன போராட்டத்திற்குப்பிறகு ரொட்ரிகோஸ் இயேசு கிறிஸ்துவின் படத்தை மிதிக்கிறான் .அப்போது சேவல் கூவுகிறது. ஒரு குரல் கேட்கிறது "மிதி ,மிதி , யாரையும் விட உனது காலின் வலி எனக்கு தெரியும்.மிதி, மனிதனால் மிதிக்கப்படுவதர்காகவே  இந்த பூமியில் பிறந்தேன்.அவர்களின் வலியில் பங்கெடுப்பதர்காகவே சிலுவை சுமந்தேன் ." இது யாருடைய குரல் இயேசுவின் குரலா அல்லது சாத்தானின் குரலா? சேவல் கூவுவது எதைக் குறிக்கிறது - பீட்டரின் மறுப்பை போன்றதா?

ரொட்ரிகோஸ் தனது குரு பெரேராவை  சந்திக்கிறான் .அவன் அவரைப் பற்றி கேள்விப்பட்ட அனைத்தும் உண்மையென்று உணர்கிறான் . பெரேரா ஜப்பான் ஒரு சதுப்பு நிலம் அதில் கிறிஸ்தவம் வளராது என்கிறார்  .ரொட்ரிகோஸும் பெரேராவைப் போல மாறுகிறார்  .சில காலங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் ஜப்பான் அரசிற்கு வேலை செய்கிறார்கள் -அவர்களின் வேலை ஜப்பானுக்குள் வரும் பொருட்களில் கிறிஸ்தவம் சார்ந்த ஏதாவது இருக்கிறதா என்று சோதிப்பது. அடுத்த முப்பது வருடங்கள் மீண்டும் மீண்டும் இயேசு கிறிஸ்துவின் படத்தை ஜப்பானிய அரசுக்கினங்க மிதிக்கிறான்.அவ்வாறே வாழ்ந்து மடிகிறான் .

சேவல் கூவுவது என்னைப் பொறுத்தவரை பீட்டரின் மறுப்பைப் போன்றதல்ல ஏனெனில் பீட்டர் திருந்தி இறுதிவரை கிறிஸ்துவிற்காக வாழ்ந்தார் .ஆனால் ரொட்ரிகோஸ் இறுதிவரை மறுதலித்துக் கொண்டே இருக்கிறான். இன்னொரு முக்கியமான கதாபாத்திரம்  கிச்சிஜிரோ. அவன் பாதிரியார்களைக் காட்டிக் கொடுத்தாலும் மனம் திரும்பி மன்னிப்பு வேண்டுகிறான்.பலமுறை தவறு செய்தாலும் மனம் மாறுகிறான்.கிச்சிஜிரோ கிறிஸ்துவைத் துறந்தாலும் கிறித்தவர்களுக்கு உதவுகிறான் .

பல விதமான கேள்விகளுடன் இந்த நாவல் நிறைவடைகிறது.மக்களைக் காப்பாற்ற பாதிரியார் கிறிஸ்துவைத் துறப்பது சரியா ? கிறிஸ்துவிற்காக உயிர் துறக்கும் மக்களின் நம்பிக்கை பெரிதா? எப்படி கடவுளின் அமைதியைப் புரிந்துக்கொள்வது?

இந்த நாவல் வாசித்த பிறகு அதே பெயரில் வந்த படத்தையும் பார்த்தேன் . மார்ட்டின் ஸ்கோர்செஸி நாவலுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும் .இந்த திரைப்படத்திற்கும் நாவலுக்கும் உள்ள பெரிய வேறுபாடு இறுதி காட்சிதான். திரைப்படத்தில் பாதிரியார் ரொட்ரிகோஸ் இறந்த பிறகு அவரது சவப்பெட்டிக்குள் அவரது ஜப்பானிய மனைவி ஒரு சிலுவைவையை யாருக்கும் தெரியாமல் வைக்கிறார் அதோடு படம் நிறைவடைகிறது.இந்த குறியீடு எதைக்குறிக்கிறது ?

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

Monday, July 10, 2017

நானும் ஹரி போட்டரும்


ஹரி போட்டர் புத்தக வரிசையில் முதல் புத்தகம் வந்து இந்த ஜுனுடன் இருபது வருடங்கள் ஆகிவிட்டது . ஆனால் நான் படிக்க ஆரம்பித்தது பத்து வருடங்களுக்கு முன்னால்தான். நான் இந்த புத்தகங்களை வாசிக்க முதல் காரணம் சிங்கப்பூரில் எங்கு பார்த்தாலும் பதின் வயது இளைஞர்களிடம் இருந்த இந்த வரிசையின் இறுதி புத்தகமான "Harry Potter and the Deathly Hallows" தான் .வெகுநாட்களாக படிக்க வேண்டுமென்று நினைத்ததை இந்த இளைஞர்களின் ஆர்வம் மேலும் தூண்டியது.

முதல் புத்தகமான "Harry Potter and the Philosopher's Stone" ஒரு பிரம்மாண்ட மேஜிக் உலகத்திற்கான விதையை விதைத்ததென்றால் மிகையாகாது . என்னுள் அது ஒரு காத்திருப்பையும் எதிர்பார்ப்பையையும் உருவாக்கியது. கதாபாத்திரங்களின் அறிமுகம் மிகவும் நுட்பமானது . துர்சலேவின் வீட்டின் அமைப்பும் அவரின் மனைவி மகனின் சித்தரிப்பு மற்றும் ஹரியின் தங்கும் இடமும் அவரின் எதிர்கால போராட்டத்தின் குறியே .  உண்மையில் முதல் மூன்று புத்தகங்களில்  கதாபாத்திரங்களை மெல்ல மெல்ல ஒரு பெரிய போருக்கு தயார் செய்வதுபோல் உள்ளது. நான்காவது புத்தகமான "Harry Potter and the Goblet of Fire"-ல் வோல்டேர்மட் மனித உருவம் எடுக்கிறான் .அடுத்த மூன்று புத்தகங்கள் ஹரியின் வோல்டேர்மாட்டுடன் போராட்டமே .

கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை .சில நாட்கள் ஆந்தை கடிதம் கொண்டுவராதா  என்று ஏங்கியது உண்டு. வாசகர்களை ஒரு விதமான மனநிலைக்கு ஆசிரியர் கொண்டு செல்கிறார் -அதுவே ஆசிரியரின் வெற்றியும் கூட. ஆசிரியர் பல மொழிகளிலிருந்து பல வார்த்தைகளை எடுத்து ஆங்கிலத்தோடு இணைத்து உபயோகித்துள்ளார் .சில புதிய வார்த்தைகளையும்(Muggle, Quidditch) உருவாக்கியுள்ளார் . எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள் ஹக்ரீட்(Hagrid) ,டம்பெல்டோர் (Dumbledore) மற்றும் ஹெர்மியோன் (Hermione Granger). அதிலும் ஹக்ரிடின் அறிமுகம் மறக்கமுடியாதது.

இந்த வரிசை புத்தங்களை இரண்டாவது முறையாக படிக்கும்போதுதான் அதிலுள்ள சில patterns அறிய முடிந்தது. முதலாவது அன்பின் வெற்றி - தன் மகனுக்காக தாயின் அன்பு .திரும்ப திரும்ப இது வெளிப்படுத்திக்கொன்டே இருக்கிறது. உண்மையில்  ஹரியின் நண்பர்களும் அவனுக்காக பலவற்றை இழக்கின்றனர் ஆனால் அவர்களின் அன்பு மாறவே இல்லை .ஹரியும் அனைவரையும் நேசிக்கிறான் .இரண்டாவது ஹரி மற்றும் டம்பெல்டோரின் உறவு. இந்த உறவை தந்தை மகன் அல்லது குரு சிஷ்யன் என்று எப்படிப் பார்த்தாலும் ஒரு தூய்மையான உறவு வெளிப்படுகிறது .,டம்பெல்டோர் தான் ஹரியின் தூண் , எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் அவர்தான் ஹரியை மீட்கிறார்.அவர் ஒரு கடவுள் மாதிரி காட்சியளிக்கிறார் .

மூன்றாவது மனிதன் இறப்போடு போடும் போராட்டம் .ஹரி தொடர்ச்சியாக சாவின் உச்சத்திற்கே சென்று மீள்கிறான் .தொடர் முழுவதும் அவனை சுற்றி சாவு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது அவனும் பயந்து கொண்டே அனைத்தையும் எதிர் கொள்கிறான் .என்னதான் முடிவை யூகிக்க முடிந்தாலும் இறுதிவரை thrilling-காகவே  கதையை நகர்த்திச்சென்றது ஆசிரியரின் பெரிய வெற்றியே .நான்காவது ஹரி மற்றும் வோல்டேர்மாட்டின் உறவு .எதெல்லாம் நல்லவையோ அது ஹரி எதெல்லாம் தீயவையோ அது வோல்டேர்மாட்.  இருவரின் உயிரும் ஒன்றோடொன்று இணைத்துள்ளது . வோல்டேர்மாட்டை அழிக்க ஹரி சாக வேண்டும் . வோல்டேர்மாட்டை விட ஹரியே அதிக action-ல் ஈடுபடுகிறான் .அதுவும் சரியே .ஒரு பயங்கர தீய சக்தியை அழிக்க ஹரி தனது அணைத்து திறனையும் பயன்படுத்தியே வேண்டும், அதைத்தான் அவன் செய்கிறான் .

இந்த வரிசை புத்தகங்கள்  வாசகர்களுக்கு ஒரு விதமான சுதந்திரத்தை கொடுத்தது .பல விதமான கிளைக் கதைகள் வாசகர்களால் எழுதப்பட்டது .ஹரி போட்டர் 'தீம் பார்ட்டிகளும் புத்தக விமர்சனங்களும் ஆய்வுகளும் நடந்து கொண்டேயிருக்கிறது .Young adult fiction-வகையை  ஹரி போட்டர் புத்தகங்கள் உயிர்ப்பித்தது என்றால் மிகையாகாது . ஒரு நாள் சர்ச்சில் ஹரி போட்டர்  படித்துக்கொண்டிருந்தேன் அப்போது வயசான ஒருவர் இந்த வரிசை புத்தகங்கள் கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்றார் .எனக்கு அப்படி படவில்லை. ஆம் கிறிஸ்தவம் மேஜிக் மற்றும் மாந்த்ரீகம் போன்றவற்றை எதிர்க்கிறது .ஆனால் இந்த வரிசை புத்தங்களில்  அந்த மாதிரி இல்லை . சாத்தான்  வழிபாடும் இல்லை .என்னை பொறுத்தவரை இது ஒரு fairy tale வகையை சார்ந்தது.

கடந்த மூன்று மாதங்களாக நான் என் மகளுக்கு முதல் புத்தகமான "Harry Potter and the Philosopher's Stone-ஐ வாசித்துக்கொண்டிருக்கிறேன்.அவளுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது .இரண்டு வார இடைவெளிக்கு பிறகு இன்று அவளிடம் ஹரி போட்டர் ஞாபகம் இருக்கிறதா ? என்று கேட்டேன் .அவள் உடனே "I want Gringotts - that money is funny" என்றாள் .  கதை புரிகிறதோ இல்லையோ அதில் வரும் பெயர்களும் பொருட்களும் அவளுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. மீள்வாசிப்பு எனக்கு இன்னொரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தக வரிசை.