Monday, September 16, 2019

ரன்னிங் டைரி -4

14-09-2019 05:50
கிழக்கு கடற்கரை பூங்கா

சனிக் கிழமைகளில் பொதுவாக காலை 4:30 மணிக்கே ஓட ஆரம்பித்து விடுவேன். ஆனால் இன்று தாமதமாகியது. குளிர் காற்று.கிழக்கு கடற்கரை பூங்கா எனக்கு மற்றொரு வீடு மாதிரி. வீடு மற்றும் அலுவலகத்திற்கு பிறகு நான் அதிகமாக நேரம் செலவழிக்கும் இடம் . வீட்டிலிருந்து பூங்கா செல்லும்வரை மழை பெய்யுமா பெய்யாதா என்று கேட்டுக்கொண்டிருந்தேன். பூங்காவை அடைந்தவுடன் கடல் காற்று என்றும் கொடுக்கும் ஒருவிதமான புத்துணர்வை கொடுத்தது.கடல் தாயை கையெடுத்து வணங்கிவிட்டு ஓட்டத்தைத் தொடர்ந்தேன்.


ஏனோ தெரியவில்லை அம்மாச்சி ஞாபகம் திடீரென்று வந்தது. தூங்கும் முன் கதை சொல்லும்  அம்மாச்சி அப்பத்தா எங்கள் யாருக்கும் அமையவில்லை. அப்பத்தா நான் சிறுவனாக இருக்கும் போதே இறந்துவிட்டார். பாட்டி என்றால் அம்மாச்சி மட்டும்தான். அம்மாச்சி பல டாக்டர்களுக்கு சமம். அம்மாச்சி எனக்கு எப்போ உடம்பு சரியில்லையென்றாலும் உடனே வருபவர். இன்னுமே  எனக்கு உடம்பு சரியில்லாமல் போகும்போதெல்லாம் வரும் முகங்கள்  அம்மாச்சி மற்றும் அம்மாவுடையது.

அம்மாச்சியின் ஞாபகத்திலிருந்து பாம்பன் கடற்கரை ஞாபகம் வந்தது. இதுவரை ஊர் கடற்கரையில் ஓடியதில்லை. இந்த முறை பாம்பன் பாலத்தில் ஓடியது மறக்க முடியாதது. நான் சென்ற அனைத்து  நாடுகளிலும் ஓடி இருக்கின்றேன் ஆனால் சொந்த ஊரில் ஓடியது இந்த வருடம்தான்.பாம்பன் பாலத்தின் பராமரிப்பையும் கிழக்கு கடற்கரை பூங்காவின் பராமரிப்பையும் நினைத்து ஒரு நிமிடம் நின்றே விட்டேன். ஒரு விதமான சோகம் என்னைப் பற்றிக்கொண்டது. நல்லவேளை எனக்கு மிகவும் பிடித்த பாடலான "மாங்குயிலே பூங்குயிலே" பாடல் ஒலிக்க ஆரம்பித்தது அந்த சோர்விலிருந்து மீண்டேன். இந்த பாடல் ஒலிக்கும்போதெல்லாம் நானே இளையராஜா நானே எஸ்பிபி நானே ஜானகி நானே ராமராஜன் நானே கனகா! என்னை அறியாமலேயே என் கைகள் இசைக்கேற்ப அசைய ஆரம்பித்துவிட்டன .இது எப்போதும் நடப்பவைதான். பலபேர் என்னை நிறுத்தி என்ன பாட்டு கேட்டுகிட்டு இருக்கீங்க? என்று கேட்டதுண்டு. நானும் சிரித்துக்கொண்டே பதில் கூறுவேன். இன்று யாரும் அப்படி கேட்கவில்லை. என்ன இசை! ராஜா ராஜாதான்!

லேசாக வெளிச்சம் வர ஆரம்பித்தது.  வயதானவர்கள் தாய் சீ (Tai chi) மற்றும் qigong பயிற்ச்சி செய்ய தொடங்கினர். அவர்களது உடல் அசைவு ஓர் ஓவியம் போன்றது. மெதுவான கை கால்கள் அசைவு. பல தடவை என் ஓட்ட வேகத்தை குறைத்து அதை ரசித்ததுண்டு. இன்று அவ்வாறு செய்யவில்லை. பெடோக் jetty-யைத் கடக்கும்போது மெஸ்ஸியின் ஞாபகம் வந்தது . மெஸ்ஸியில்லாமல் வார இறுதி football-லே interest இல்லை."நிகரா  தன் நிகரா " என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. வினீத் ஸ்ரீனிவாசனின் குரலோ குரல் . திடீரென்று ஒரு பெண்கள் குரூப் பிங்க் கலர் டீ-ஷர்ட் மற்றும் பிங்க் கலர் ஷூவிலும் side வழியிலிருந்து என் முன்னே ஓடினர். நான் அவர்களின் shoes-ஐ பார்த்து சிரித்துக்கொண்டே அவர்களுக்கு ஈடாக எனது வேகத்தை அதிகரித்தேன். சற்று தூரம் கடந்தவுடன் மற்றொரு பெண்கள் குரூப் அதே பிங்க் கலர் டீ-ஷர்ட்ல். ஏதோ போட்டி என்று எண்ணிக்கொண்டேன். அப்படியே எண்ணங்கள் அடங்கி மூச்சில் வந்து நின்றது வீடு வரும்வரை எதையும் எண்ணியதாக ஞாபகமில்லை.

No comments: