ஒரு பள்ளியின் ஆசிரியர்களின் வாழ்க்கை பற்றிய சிறிய நாவல். பூமணியின் கதையில் எப்போதும் சாதி ஒரு சருகாக ஓடிக் கொண்டே இருக்கும் இதிலும் அப்படித்தான். இந்த நாவலின் சிறப்பேஆசிரியர்களுக்குள் இருக்கும் உறவை எதார்த்தனமாக பிரதிபலிப்பதில் தான்.
கதை பெரும்பாலும் பாண்டியன் , ரங்கராஜன் மற்றும் தமிழய்யா மூலம் நகர்கிறது. இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். பாண்டியன் விளையாட்டு வாத்தியார். விளையாட்டைத் தவிர பல விசயங்களை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பவர். ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதிர்ப்பவர். எல்லோரிடமும் அன்பாக பழகுபவர்.ரங்கராஜன் வரலாற்று ஆசிரியர். பிராமணர். அவர் குடும்பம் அவரது சம்பளத்தை நம்பித்தான் இருக்கிறது. வயதாகியும் பெண் அமையாமல் திருமணம் செய்யாமல் இருப்பவர். தமிழய்யா திருமணமானவர் இரண்டு வயது வந்த பிள்ளைகள் இருக்கிறது. எதையும் நிதானமாகவும் யோசித்து செய்யக் கூடியவர். இந்த மூவருக்கும் தனி கதை உண்டு.
ஆண்கள் மட்டும் ஆசிரியர்களாக இருந்த பள்ளியில் திடீரென்று பெண் ஒருவர் ஹிந்தி சொல்லிக் கொடுக்க வருகிறார். ருக்குமணி டீச்சர். ரங்கராஜனுக்கு ருக்குமணி டீச்சரை பார்த்த சில நாட்களிலேயே பிடித்துவிட்டது.ஆனால் அவர் அதை அவரிடம் சொல்லவே இல்லை.சில நாட்கள் கழித்து ராஜேஸ்வரி டீச்சர் பணியில் சேர்ந்தார். பாண்டியனுக்கு ராஜேஸ்வரி டீச்சரை பிடித்துவிட்டது. அவருக்கும் பாண்டியனை பிடித்து விட்டது.
"டீச்சரம்மா அக்ராரத்துப் பொண்ணுன்னுதான சாமி இப்பூட்டுக் கணக்குபோட்ருக்காரு. இதே வேதக்கார எட் மாஸ்டர் அய்யராருந்து இல்ல அந்தம்மா வேற ஒரு அய்யரத் தேடிக்கிட்ருந்த பள்ளிக்கூடத்துக்குள்ள பத்துப் பேருக்கு முன்னால சண்ட நடந்திருக்குமா. என்னக் கேட்ட நடந்துருக்காதுன்னுதான் சொல்லுவேன்" - இதைவிட சாதியின் இறுக்கத்தை சொல்ல முடியாது . ரங்கராஜனின் கோபம் எதனால்? இந்த விவரம் தெரிந்திருந்தால் அப்படி பேசியிருப்பானா ?
"பாரம் ஏறீட்டா வேல ஓடாது."பள்ளியில் வேலை செய்யும் மாணிக்கம் மற்றும் வையாபுரியின் கதாபாத்திரங்கள் கதைக்கு மேலும் வலுவூட்டுகின்றன.அதிலும் அவர்களின் சாதியைப் பற்றிய பேச்சுக்கள் சாதிய படிநிலையை மிக தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. கதையில் மெரும்பாலான பகுதி உரையாடலில் தான் இருக்கிறது.பலவிதமான ஆசிரியர்கள் நம் கண்முன் வந்து செல்கிறார்கள். ஆசிரியர்களின் அரசியலும் அங்கும் இங்கும் வருகிறது.இக்கதையில் வரும் கிருஷ்ணசாமி வாத்தியார் விவசாயம் செய்து கொண்டே ஆசிரியர் பணி செய்கிறார்.அவரைப் போல ஒவ்வொருவரும் மற்றொரு வேலையும் செய்கிறார்கள்.
வாட்ச்மேன் வீரணன் எம்ஜியார் படம் பார்த்துவிட்டு செய்யும் செயல்கள் பெரும் நகைச்சுவை.வாசிக்கலாம்.
No comments:
Post a Comment