Monday, September 30, 2019

ரன்னிங் டைரி -9

29-09-2019 (05:30)
The Straits Times Run


காலை 3:50 மணிக்கே கண் முழித்துவிட்டேன்.ஒரு black காபி போட்டு குடித்துவிட்டு ஓட்டத்திற்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்தேன். ஓட்டம் நடக்கும் இடத்திற்கு நடந்தே சென்றேன்.குளிர்ந்த காற்று காற்றில் புகை இல்லை. ஓடுவதற்கு ஏற்ற climate.

ஓட்டம்  சற்று தாமதமாக துவங்கியது. வாக்மேனை on செய்தபோது "கல்யாண மாலை" பாட ஆரம்பித்தது. முன்னாள் ஓடியவரின் கால்களைத் தவிர எதையும் பார்க்காமலும் யோசிக்காமலும் ஒரு சீரான வேகத்தில் ஓட ஆரம்பித்தேன்.கிட்டத்தட்ட 10 கி மீ  அப்படியே ஓடினேன் .  அப்புறம் சற்று வேகத்தை கூட்டினேன் ஆனால் வெகுதூரம் அந்த வேகத்தில் ஓட முடியவில்லை. பயிற்சி போதாது. திடீரென்று என்னை தாண்டி ஒரு பெண் ஓடினார்.அவருக்கு ஒரு கால் நீளம் சற்றுக் குறைவு. நான் அவரை அடுத்த 4 கி மீ பின் தொடர்ந்தேன். நானும் அவரும் ஒரே வேகத்தில் ஓடினோம். வேறு எதையும் எண்ணவில்லை. ஒரு கிலோமீட்டர் மீதம் இருக்கையில் நான் அவரை கடந்த சென்றேன். வழக்கத்தைவிட மெதுவாகத்தான் இந்த போட்டியை முடித்தேன். போட்டியை முடித்துவிட்டு வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அதே பெண் என்னை கடந்து நடந்து சென்றார். அப்போதுதான் முகத்தைப் பார்த்தேன். எப்படியும் ஐம்பதிற்கும் மேல் இருக்கும். ஓட்டத்திற்கு வயது ஒரு தடை இல்லை.

நான் எதிர்பார்த்த மாதிரி இந்த ஓட்டம் அமையவில்லை. இருந்தாலும் இவ்வளவு பேருடன் ஓடியது ஒரு பெரும் அனுபவம். எடுத்து சென்ற energy gel-ஐ தொடவே இல்லை. எந்தெந்த பாடல்கள் ஒலித்தன என்றும் தெரியவில்லை ஆனால் ஓட்டம்  முடிந்து வாக்மேனை off செய்யும்போது கவனித்தேன் "கண்ணே கலைமானே " ஓடிக்கொண்டிருந்தது.

The Weather Machine - Andrew Blum


வானிலை பற்றிய சிறிய புத்தகம். இப்புத்தகம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தந்தி கண்டுபிடிப்பு வானிலை கணக்கிடுவதை எவ்வாறு மாற்றியதை படிக்கும்போது "Convergence" புத்தகம்தான் மனதில் வந்தது. வெய்யில் காற்றின் வேகம் மற்றும் திசை  மற்றும் மழையின் அளவு இந்த நான்கும் அளவுகள் தான் வானிலை கணக்கிடுவதற்கு முதலில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்றோ எனக்கு தெரிந்தே  முப்பதிற்கும் மேற்பட்ட அளவுகள் உள்ளன.

அதுவரை மேல பார்த்து வானிலையை கணக்கிட்ட மனிதன் செயற்கைகோள் வந்தவுடன் கீழே பார்த்து வானிலையைக் கணக்கிட ஆரம்பித்தான். வானிலை செயற்கைகோள் என்று சொல்லி இராணுவத்திற்குதான் அதை பயன்படுத்தினார்கள். முதல் செய்யக்கைகோளிற்கும் நாஜிகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு. அது V-2 ராக்கெட் என்ஜின் தான். இந்த என்ஜின் நாஜி என்ஜினீயர் ஒருவரால் உருவாக்கப்பட்டது.இந்த என்ஜினை பார்த்துதான் அனைத்து செயற்கைகோள்களின் என்ஜினும் வடிவமைக்கப்பட்டது.  இன்று அனைத்து நாடுகளும் தங்களுக்கென்று தனி வானிலை செயற்கைகோள்கள் வைத்துள்ளனர். இந்தியாவும்  பல  வானிலை செயற்கைகோள்களை செலுத்தியுள்ளது. 

எவ்வாறு வானிலை  predictive models வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை ECMWF சென்று அங்கு நடப்பவை மூலம் விவரித்துள்ளார் ஆண்ட்ரு. வானிலை ஆராய்ச்சி என்பது உலகலாவியது மற்றும் கூட்டு முயறிச்சி. இதுவரை பெரிய நாடுகள் சிறிய நாடுகளுக்கு இலவசமாக வானிலை செய்திகளை பகிர்ந்தனர் ஆனால் அது படிப்படியாக ஒரு ஆயுதமாக பெரிய நாடுகள் பயன் படுத்துவார்கள் என்ற எண்ணம் எனக்கு வருகிறது. இன்றைய உலகில் "Data is weapon " அதுவும் வானிலை கண்காணிப்பு மிகவும் முக்கியமானது.இயற்கை பேரழிவில் இருந்து ஓரளவு நம்மை பாதுகாத்துக் கொள்ள வானிலை கண்காணிப்பும் ஆராய்ச்சியும் மிகவும் முக்கியம். சுவாரசியமான புத்தகம்.


Tuesday, September 24, 2019

ரன்னிங் டைரி -8

23-09-2019 18:20
அலுவதிலிருந்து வீடுவரை

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிங்கப்பூர் புகையால் சூழ்ந்துள்ளது. இந்தோனேசியாவில் எரியும் காட்டிலிருந்து வரும் புகை தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவியுள்ளது. வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமென்று சிங்கப்பூர் அரசு அறிவித்திருக்கிறது.இன்று ஓடலாமா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டே ஓட ஆரம்பித்தேன். புகை அப்படியொன்றும் மோசமில்லை ஆனால் நினைத்த தூரம் ஓடவில்லை.

ஓட ஆரம்பித்தவுடன் "Hawdy Modi!" தான். எங்க போய் முடியும்னு தெரியல. ஆனால் ஒரு விசயம் இந்திய அரசு எந்த காரணத்தைக் கொண்டும் டிரம்ப நம்பக்கூடாது. அவர்கள் அவர் சொல்வதையெல்லாம் சந்தோசமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.என்னத்த சொல்ல.  அப்படியே கிரேட்டா தன்பர்க் பக்கம் எண்ணம் சென்றது. இந்த பெண்ணை பாராட்டிதான் ஆக வேண்டும். அமெரிக்க குடியரசு கட்சி செனட்டர்கள் பலஇந்த சிறுமியைக் கண்டு அஞ்சுவதாக படித்த ஞாபகம். குழந்தைகள்தான் இயற்கையை அப்படியே ரசிப்பவர்கள். நூலகம் வந்தவுடன் ஓடுவதை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன்.
                                                                                                                                    
எந்தெந்த பாடல்கள் ஒலித்தன என்று ஞாபகமே இல்லை.                                                                                                                                                                                                                                                                                                               


Monday, September 23, 2019

கடல் அடி - சி. பெர்லின்


போன வாரம் நூலகத்திற்கு சென்றபோது ஒரு இன்ப அதிர்ச்சி ஏராளமான புதிய தமிழ் புத்தகங்கள். எட்டு புத்தகங்கள் எடுத்தேன்.அதில் ஒன்று இந்த புத்தகம். இந்த புத்தகத்தை எடுத்ததற்கு முதல் காரணம் இது மீனவர்கள் வாழ்க்கை பற்றியது.

தன் மனைவியை அடித்த சேவியரை அடித்தே ஆகவேண்டும் என்று அடிகம்போடு கடற்கரையில் வெறியோடு நிற்கும் இன்னாசி சேவியரை என்ன செய்தான் என்பதுதான் கதை. இதுதான் கதை என்றாலும் இடையே வரும் பல சம்பவங்கள் முக்கியமானது. அதிலும் மணல் கொள்ளை பற்றிய விவரிப்பும் அதன் தாக்கமும் மிக மிக அவசியமானது.

"காலங்காலமா மலைகளில் இருந்து தாதுக்களையும் , கனிமங்களையும் ஆத்துத் தண்ணி இழுத்திண்டு வந்து கடல்ல சேக்குது. கடலு அந்த தாதுக்களையும் , கனிமங்களையும்கடற்கரையில் அடிச்சு ஒதுக்குது.இப்படி பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்குத மணலுல கதிரியக்கப் பாதிப்புகள் அதிகம் இருக்குமாம்.அதுல ஆல்பா கதிர் ,பீட்டா கதிர் , காமா கதிர் இப்பிடி கதிரியக்கம் இருக்குமாம். அந்தக் கதிரியக்கம் மணலுக்குள்ள இருக்குறதுவர எந்தப் பாதிப்பும் இல்லையாம். அது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பா இருக்குமாம்.ஒரு சென்டிமீட்டர் மணல் சேர நூறு வருசமாகும். அந்த கனிமங்களும், தாதுக்களும் கலந்த மணலைத் தோண்டி எடுக்கும்ப கதிரியக்கம் வெளிப்படும்...... அப்படி வெளியாகக்கூடிய கதிரியிக்கத்துனால மனுச ஒடம்புல கேன்சர் பரவுதாம்."
இன்னாசி பயங்கர கோபக்காரன். ஊர் வேலையில் முன்னில் நிற்பவன்.இன்னாசிக்கு கடல்தான் எல்லாமே. சம்பாரித்த அனைத்தையும் கடல் தொழிலேயே செலவழிகிறான். நிர்மலா அவனை காதலித்து வீட்டை எதிர்த்து  திருமணம் செய்கிறாள். அவள் அவனின் தைரியத்தை மட்டுமே நம்பி அவனுடன் செல்கிறாள்.ஒரு பஞ்சாயத்தை மூன்றாக பிரித்ததால் பல பிரச்சன்னைகள் அப்படிதான் அன்று தண்ணீர் பிடிப்பதில் பெண்களுக்கிடையே கடும் வாக்குவாதம் கைகலப்பில் வந்து நின்றது.

இன்னாசி கட்டுமரத்தை செய்ததையும்  பராமரிப்பதையும் மிக அழகாக எழுதியுள்ளார். IT மொழியில் சொல்லனும்னா technical details and jargons. எனக்கு பல வார்த்தைகள் புரியவில்லை நல்லவேளையாக "கடலோர கலைச் சொற்கள்" என்ற பட்டியல் புத்தகத்தின் பின் உள்ளது.இந்த புத்தகத்தில் நான் வாய்விட்டு சத்தமாக சிரித்த ஓரிடம் உள்ளது - அது சூசை சிலுவையின் பாவ சங்கீர்தன நிகழ்வு . சிலுவை " பாவீ நான் சாமியாரா இருக்கிறேன். என்னை ஆசீர்வதியும்" - இதைப் படித்ததும் வெடித்துச் சிரித்தேன். அருகில் உட்கார்ந்து இருந்தவர் என்னை ஒரு விதமாக பார்த்தார்.அவர் ஆங்கிலத்தில் "oh from the book ?" என்றார். நான் ஆமாம் என்றேன்.

கதையின் இறுதி திரைப்படங்களில் வருவது போல வாசகனை ஒருவித தத்தளிப்பிற்கு கொண்டு சொல்கிறது. எவ்வளவு கோபமாக இருந்தாலும் கடலில் ஒருவனுக்கு ஆபத்து என்றால் எல்லாத்தையும் மறந்து உதவக்கூடியவன் மீனவன்தான். இக்கதையில் இன்னாசியும் அப்படித்தான்.மொத்த பக்கங்கள் தொண்ணூற்றி ஒன்பதுதான் ஒரே அமர்வில் படித்து முடித்துவிட்டேன். பெர்லின் வாசகனை கடற்கரைக்கே கூட்டிச் செல்கிறார். வாசிக்க வேண்டியே புத்தகம்.  

ரன்னிங் டைரி -7

19-09-2019 17:30
கிழக்கு கடற்கரை பூங்கா

இன்று அலுவலகம் செல்லவில்லை. மகளுக்கு சிங்கப்பூர் பள்ளியில் சேர நடக்கும் நுழைவு தேர்வு இன்று.  தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் walkman-ஐ எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். லேசாக வெய்யில் அடித்தது. ஓட ஆரம்பித்ததிலிருந்து அந்த நுழைவுத்தேர்வுப் பற்றியே எண்ணம்.  பிள்ளைகள் எக்ஸாம் ஹாலை விட்டு  வெளிய வந்தவுடன் பெற்றோர்கள் அவர்களை கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.   எனக்கு ஏனோ கோபம்.இந்தியாவின் அனைத்து மொழிகளையும் அங்கு கேட்டேன். நான் என் மகளிடம்  "had fun?" என்று கேட்டேன். அவளும் சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினாள். அதன் பிறகு அவளிடம் அந்த தேர்வைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.

திடீரென்று எதிரே வருபவர் தெரிந்தவர் மாதிரி தெரிந்தது. ஆம் தெரிந்தவர்தான். எங்களோடு கைப்பந்து விளையாட வருபவர். ஹலோ சொல்லிவிட்டு ஓடிச்சென்றேன்.  எண்ணங்கள் அப்படியே கைப்பந்து மேல் சென்றது. பாம்பனில் கைப்பந்து விளையாடுவது ஒரு பெரும் அனுபவம். விளையாடுபவர்கள் அனைவரும் என் உறவினர்கள்தான் ஆனால் அதட்டலும் கெட்ட வார்த்தைகளும் அனல் பறக்கும். அந்த மைதானமே ஒரு திகில் தரக்கூடியது .volleyball court தவிர மற்ற இடங்கள் எல்லாம் மலம் தான். மலத்தில் படாமல் பந்தைப் துரத்துவத்துவதிலேயே tired-ஆகி விடுவோம்.அங்கிருந்து மாறி ஆலமர திடலுக்கு மாறினோம். அங்கு காற்றோடு விளையாடியதுதான் அதிகம். அது ஒரு அழகிய நிலாக் காலம். அப்படியே நினைவு பாட்டில் திரும்பியபோது "The Litany of the Saints" ஓடிக் கொண்டிருந்தது. அந்த அமைதியிலேயே வீடு திரும்பினேன்.

Friday, September 20, 2019

ரன்னிங் டைரி -6

17-09-2018 18:27
அலுவதிலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் எதையும் எண்ணவில்லை. சிக்னலில் நிற்கும் போது ஊரைப் பற்றிய எண்ணம்  வந்தது. எம்மக்கள் எதையும் ஒற்றுமையாக செய்ததாக எனக்கு ஞாபகமில்லை. எதற்கெடுத்தாலும் அடுத்தவரைக் குறை சொல்வது. அப்படியே பெரியப்பா நினைவில் வந்தார். என் அப்பாவின் பெரியம்மா மகன்.  ஊரைப் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம் வரும் முகம் பெரியப்பாவுடையது. பெரியாப்பாவை ஊர் மக்கள் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. உண்மைகளை சட்டென்று சொல்லிவிடுவார் அதனால்தான். ஆனால் பெரியப்பாவால் வாழ்க்கை அடைந்தவர் பல நூறு.  பலமுறை பெரியப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு அழுதுகொண்டே  நன்றி சொல்லிய அம்மாக்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஏனோ எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் நினைவில் வந்தார்.  அவரது facebook போஸ்ட் தான் காரணம் என்று நினைக்கிறேன்.  அப்படியே தனுஸ்க்கோடி நினைவில் ஓடி முடித்தேன்.

Tuesday, September 17, 2019

ரன்னிங் டைரி -5

16-09-2019 18:53
அலுவகத்திலிருந்து வீடுவரை

வாக்மேனை on செய்தவுடன்  ஒலித்த பாட்டு "ஊரு சனம் தூங்கிருச்சு" பாட்டு முடியும்வரை ஜானகி அம்மாளின் முகமும் MSV-ன் முகமும் மாறி மாறி மனதில் தோன்றியது. சிக்னலில்இருவர் ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தனர். சிக்னல் மாறியவுடன் இருவரும் இருவேறு திசைகளில் சென்றனர்.  என் எண்ணம் கிரண் பேடி அவர்கள் மேல் சென்றது. அவருக்கு புதுச்சேரி மக்களுடன் பேசுவதற்கு மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகிறதாம். கடினம்தான்! புரிந்து கொள்ளமுடிகிறது.  ஆனால் அதற்காக மக்கள் அனைவரும் ஹிந்தி கற்க வேண்டுமென்று சொல்வதை  - என்னத்த சொல்ல!!

சமந்தமேயில்லாமல் காந்திஜி நினைவில் வந்தார். அவர் இப்ப இருந்திருந்தா என்ன செய்து கொண்டு இருப்பார் ஒரு எண்ணம். நம்மவர்கள் இவரைவிட வேறு யாரையும் தவறுதலாக கொண்டதாக எனக்கு தெரியவில்லை. காந்திஜியின் ட்விட்டர் பெயர் என்னவாக இருக்கும் @gandhi அல்லது @ahimsa  இந்த இரண்டில் ஒன்றைத்தான் அவர் வைத்திருப்பர் என்பது என் உறுதியான நம்பிக்கை.சிரித்துக் கொன்டே அவரை எப்படியெல்லாம் troll செய்வார்கள் என்று எண்ணினேன். மீண்டும் மீண்டும் சிரிப்பு வந்தந்து.

மெரின் பரேட் நூலகத்தின் அருகில் வந்தவுடன் உள்ளே செல்லலாமா சென்ற யோசனை வந்தது.உள்ளே போனால் உடனே வருவது சிரமம் அதனால் ஓட்டத்தைத் தொடர்ந்தேன். சிங்கப்பூர் போல் இந்தியாவில் நூலகங்கள்  எப்போது வரும் என்ற ஏக்கத்துடன் வீடு வந்தடைந்தேன்.

Monday, September 16, 2019

ரன்னிங் டைரி -4

14-09-2019 05:50
கிழக்கு கடற்கரை பூங்கா

சனிக் கிழமைகளில் பொதுவாக காலை 4:30 மணிக்கே ஓட ஆரம்பித்து விடுவேன். ஆனால் இன்று தாமதமாகியது. குளிர் காற்று.கிழக்கு கடற்கரை பூங்கா எனக்கு மற்றொரு வீடு மாதிரி. வீடு மற்றும் அலுவலகத்திற்கு பிறகு நான் அதிகமாக நேரம் செலவழிக்கும் இடம் . வீட்டிலிருந்து பூங்கா செல்லும்வரை மழை பெய்யுமா பெய்யாதா என்று கேட்டுக்கொண்டிருந்தேன். பூங்காவை அடைந்தவுடன் கடல் காற்று என்றும் கொடுக்கும் ஒருவிதமான புத்துணர்வை கொடுத்தது.கடல் தாயை கையெடுத்து வணங்கிவிட்டு ஓட்டத்தைத் தொடர்ந்தேன்.


ஏனோ தெரியவில்லை அம்மாச்சி ஞாபகம் திடீரென்று வந்தது. தூங்கும் முன் கதை சொல்லும்  அம்மாச்சி அப்பத்தா எங்கள் யாருக்கும் அமையவில்லை. அப்பத்தா நான் சிறுவனாக இருக்கும் போதே இறந்துவிட்டார். பாட்டி என்றால் அம்மாச்சி மட்டும்தான். அம்மாச்சி பல டாக்டர்களுக்கு சமம். அம்மாச்சி எனக்கு எப்போ உடம்பு சரியில்லையென்றாலும் உடனே வருபவர். இன்னுமே  எனக்கு உடம்பு சரியில்லாமல் போகும்போதெல்லாம் வரும் முகங்கள்  அம்மாச்சி மற்றும் அம்மாவுடையது.

அம்மாச்சியின் ஞாபகத்திலிருந்து பாம்பன் கடற்கரை ஞாபகம் வந்தது. இதுவரை ஊர் கடற்கரையில் ஓடியதில்லை. இந்த முறை பாம்பன் பாலத்தில் ஓடியது மறக்க முடியாதது. நான் சென்ற அனைத்து  நாடுகளிலும் ஓடி இருக்கின்றேன் ஆனால் சொந்த ஊரில் ஓடியது இந்த வருடம்தான்.பாம்பன் பாலத்தின் பராமரிப்பையும் கிழக்கு கடற்கரை பூங்காவின் பராமரிப்பையும் நினைத்து ஒரு நிமிடம் நின்றே விட்டேன். ஒரு விதமான சோகம் என்னைப் பற்றிக்கொண்டது. நல்லவேளை எனக்கு மிகவும் பிடித்த பாடலான "மாங்குயிலே பூங்குயிலே" பாடல் ஒலிக்க ஆரம்பித்தது அந்த சோர்விலிருந்து மீண்டேன். இந்த பாடல் ஒலிக்கும்போதெல்லாம் நானே இளையராஜா நானே எஸ்பிபி நானே ஜானகி நானே ராமராஜன் நானே கனகா! என்னை அறியாமலேயே என் கைகள் இசைக்கேற்ப அசைய ஆரம்பித்துவிட்டன .இது எப்போதும் நடப்பவைதான். பலபேர் என்னை நிறுத்தி என்ன பாட்டு கேட்டுகிட்டு இருக்கீங்க? என்று கேட்டதுண்டு. நானும் சிரித்துக்கொண்டே பதில் கூறுவேன். இன்று யாரும் அப்படி கேட்கவில்லை. என்ன இசை! ராஜா ராஜாதான்!

லேசாக வெளிச்சம் வர ஆரம்பித்தது.  வயதானவர்கள் தாய் சீ (Tai chi) மற்றும் qigong பயிற்ச்சி செய்ய தொடங்கினர். அவர்களது உடல் அசைவு ஓர் ஓவியம் போன்றது. மெதுவான கை கால்கள் அசைவு. பல தடவை என் ஓட்ட வேகத்தை குறைத்து அதை ரசித்ததுண்டு. இன்று அவ்வாறு செய்யவில்லை. பெடோக் jetty-யைத் கடக்கும்போது மெஸ்ஸியின் ஞாபகம் வந்தது . மெஸ்ஸியில்லாமல் வார இறுதி football-லே interest இல்லை."நிகரா  தன் நிகரா " என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. வினீத் ஸ்ரீனிவாசனின் குரலோ குரல் . திடீரென்று ஒரு பெண்கள் குரூப் பிங்க் கலர் டீ-ஷர்ட் மற்றும் பிங்க் கலர் ஷூவிலும் side வழியிலிருந்து என் முன்னே ஓடினர். நான் அவர்களின் shoes-ஐ பார்த்து சிரித்துக்கொண்டே அவர்களுக்கு ஈடாக எனது வேகத்தை அதிகரித்தேன். சற்று தூரம் கடந்தவுடன் மற்றொரு பெண்கள் குரூப் அதே பிங்க் கலர் டீ-ஷர்ட்ல். ஏதோ போட்டி என்று எண்ணிக்கொண்டேன். அப்படியே எண்ணங்கள் அடங்கி மூச்சில் வந்து நின்றது வீடு வரும்வரை எதையும் எண்ணியதாக ஞாபகமில்லை.

Thursday, September 12, 2019

ரன்னிங் டைரி -3

12/09/2019 08:10
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

வாக் மேனை எடுக்க மறந்து விட்டேன். அருமையான காலை. வெய்யில் லேசாக அடித்துக்கொண்டிருந்தது. வாரநாட்களில் காலையில் ஓடினாள் சில காட்சிகளை ஒவ்வொரு நாளும் காணலாம். இரண்டு இந்திய பள்ளிக் குழந்தைகள் அவசர அவசரமாக பேருந்து எண் 30-ஐ பிடிக்க ஓடுவார்கள். இன்றும் அதே நடந்தது. எப்பவும் யோசிப்பது போல் இன்றும் அதே யோசனை அவர்களின் பெற்றோர்கள் ஏன் அவர்களை சற்று நேரம் முன்பாக பேருந்து நிலையத்திற்கு போக சொல்லக் கூடாது?? இந்த மொபைல் அப்ளிகேசனால் வருகின்ற வினை.

சர்ச்க்குள் ஒரு ஐயா இரண்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டு புரட்டி பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு "அருள் நிறைந்த மரியே" சொல்லிக்கொண்டே கடந்து ஓடினேன்.யூனுஸ் மேம்பாலம் வரை என்ன எண்ணினேன் என்று ஞாபகமில்லை. திடீரென்று அமெரிக்கா ஏன்  குர்டிஸ்தானை கைவிட்டது என்ற கேள்வி எழுந்தது. அதற்கு காரணம் நேற்று தான்  "The Empire And Five Kings" புத்தகத்தைப் வாசிக்க ஆரம்பித்தேன். சிவப்பு  சிக்னல் வந்தது அதில் ஒரு இந்தியர் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார் என்னை உற்றுப் பார்த்தார் நான் ஹலோ என்றேன். "என்னண்ணே DMK கலர்ல டிரஸ் பண்ணிருக்க " என்று கேட்டார். நான் சிரித்துக்கொண்டு கடந்து சென்றேன். நான் சிவப்பு கலர் டீ-ஷர்ட்டும் கருப்பு ஷார்ட்ஸும் சிவப்பு ஷூவும் அணிந்திருந்தேன் !

அலுவலகத்தை நெருங்கும்போது திடீரென்று "The Final Countdown" பாடல் நினைவில் வந்தது.அலுவலகத்தை அடைந்ததும் அதைப்  பற்றிய நினைப்பே. 1996 உலக கோப்பை கிரிக்கெட் கவுண்டன் நிகழ்ச்சி ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியின் டைட்டில் பாடல் இது. எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த beat song! 

Wednesday, September 11, 2019

ரன்னிங் டைரி -2

10-09-2019 18:20

அலுவகத்திலிருந்து வீடுவரை:

ஓட ஆரம்பித்தவுடன் ஒலித்த முதல் பாடல் " மொச்சக்கொட்ட பல்லழகி" இந்த பாட்டை எப்ப கேட்டாலும் பள்ளி நாட்கள்தான் ஞாபகத்தில் வரும் ஏனென்றால் நான் இந்த பாட்டிற்கு டான்ஸ்  ஆடி இருக்கேன். எங்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்தவர் இலங்கை தமிழர். முகம் மட்டும்தான் ஞாபகத்தில் இருக்கிறது. எனக்கு முகம் முழுவதும் பெயிண்ட் அடிச்ச மாதிரி மேக்கப்! அப்படியே எண்ணம் மாறி இந்திய பிரதமர் மோடியின் "Chief of Defence" பற்றிய அறிவிப்பு வந்தது. ஒருவரின் கண்காணிப்பில் மொத்த பாதுகாப்பு துறை!அந்த பதவியை யாருக்கு கொடுப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே .சீமானிற்கு கொடுத்தால் ?? நானே சிரித்துக்கொண்டேன்!

நேற்றைவிட இன்று சற்று வேகமாக ஓடினேன். கவனம் மூச்சில் சென்று நின்றது. வழக்கம்போல எவ்வளவு நேரமென்று தெரியவில்லை. கவனம் திரும்பியபோது பாரதீய ஜனதா கட்சியின் தமிழிசை அவர்களின் முகம் வந்தது.இன்று மதியம் நண்பர் ஒருவர் தமிழிசை அவர்களின் புதிய புகைப்படத்தைக் காண்பித்தார். அவர்களின் தோற்றத்தை எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்தாலும் அவற்றை புன்னகையோடு எதிர்கொண்ட விதம் அருமை!  தமிழிசை அவர்களை பற்றி நினைக்கும்போது எப்போதும் கூட வரும் முகம் நிர்மலா சீத்தாராமன்! ஏன் என்று தெரியவில்லை.

திரும்பவும் கவனம் இசைக்கு திரும்பியபோது மலேசியா வாசுதேவனின் குரலில் "ஆசை நூறு வகை"  பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது. இவரது குரலில் ஒரு விதமான ஈர்ப்பு!  இவரின் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் சுகாவின் இந்த கட்டுரையும் கூட வரும்.வீட்டை நெருங்கும்போது தயிர் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் திரும்பி சென்று வாங்கலாமா என்ற யோசனையுடன் வீட்டை அடைந்தேன்.

Tuesday, September 10, 2019

ரன்னிங் டைரி -1

நான் சிங்கப்பூர் வந்த பிறகுதான் நீண்ட தூர ஓட்டத்தை ஆரம்பித்தேன் . அதுவரை  கிரிக்கெட் வாலிபால் மட்டுமே விளையாண்டு கொண்டிருந்தேன். இது இரண்டுமே குழு விளையாட்டு அதனால் தொடரமுடியவில்லை. உட்கர்ந்து கொண்டே வேலைப் பார்ப்பதால் எதாவது விளையாட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கையில் என் பாஸ் "நீ ஏன் மரத்தானிற்கு பயிற்சி செய்யக்கூடாது என்று கேட்டார் ?" அதுவே என்னை முதல் முறை நீண்ட தூரம் ஓடவைத்தது. இது நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.  உடற்பயிற்சிக்கென்று ஆரம்பித்த ஓட்டம் படிப்படியாக ஒருவகையான தியானமாகியது.

ஓடும்போது ஒருவகையான மன அமைதி என்னுள் உண்டாகுகிறது என்றால் அது மிகையாகாது.பலவகையான எண்ணங்கள் சிலநேரம் ஒற்றை சிந்தனை சிலநேரம் ஒன்றொன்றுக்கு தொடர்பில்லாதது. பலபேர் நீங்கள் ஓடும்போது என்ன நினைத்துக் கொள்வீர்கள் என்று கேட்பதுண்டு . அதற்கான விடையைத் தேடி  இந்த ரன்னிங் டைரி. ஓடும் நாட்களில்  ஓடிமுடித்தவுடன் எழுதலாம் என்று நினைத்து இன்று(9-9-2019) முதல் பதிவை எழுத ஆரம்பித்தேன்.

09-09-2019 18:30

அலுவகத்திலிருந்து வீடுவரை:

ஓட ஆரம்பித்தவுடன் மனதில் வந்தது இன்று அலுவகத்தில் நடந்த விசயமொன்று. நேற்றிரவு ஒரு அப்ளிகேஷனின்  இறுதி வடிவத்தை கஸ்டமர் கணினியில் install செய்திருந்தோம். இன்ஸ்டால் செய்தவர் அனைத்தும் நன்றாக இருக்கிறது என்றார் நாங்களும் சரி என்று சொல்லி தூங்கிவிட்டோம் .ஆனால் இன்று காலை அப்ளிகேஷனில் ஒரு பிரச்சன்னை. நான் உடனே டெவலப்பரிடம் போன் செய்து இப்படி பிரச்சன்னை வருகிறது என்றேன். அவர் அது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றார். எனக்கு அது அதிர்ச்சியளித்தது.அதை ஏன் எங்களிடமோ கஸ்டமரிடமோ சொல்லவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர் மௌனத்தையே பதிலாக அளித்தார்.நேர்மையின்மை!.
நான் கேட்டுக் கொண்டிருந்த பாடல் முடிந்து அடுத்தது ஆரம்பித்தது அது என் சிந்தனையை மாற்றியது. அது ஒரு இசைக்கோர்வை தாரைதப்பட்டை திரைப்படத்தின் தீம் மியூசிக்.  நாதஸ்வரம் மற்றும் மேளம்  என்ன ஒரு இணை ! இசை ஆரம்பித்தவுடன் மனதிற்கு தோன்றியது  இளையராஜாவின் முகம்தான். மனுசன் பின்னிட்டாரு ! என்னத்த சொல்ல!  இசை மட்டுமே மனதில் ஓடியது. இந்த இசை முடிந்தவுடன்  திடீரென்று சந்திரயானைப் பற்றி எண்ணம் வந்தது. முகுல் கேசவன் எழுதிய கட்டுரை நினைவில் வந்தது. இஸ்ரோவை அவர்கள் வழியிலேயே விட்டால் இந்தியாவிற்கு நல்லது என்று தோன்றியது. ட்ராபிக் சிக்கனலில் ஒரு அம்மாவும் குழந்தையும்  என்னைக் காட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர், நான் சாலையைக் கடந்து சென்றபோது ஹலோ என்று சொன்னேன். குழந்தைக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை. கொள்ளை அழகு !
அடுத்த பல நிமிடங்கள்  மனது அமைதியாக மூச்சுக்காற்றை கவனித்துக் கொண்டிருந்தது எத்தனை பாடல்கள் கேட்டேன் என்று தெரியவில்லை. திடீரென்று எண்ணம் இசையில் திரும்பியபோது "சின்ன மணிக்குயிலே " எஸ் பி பியின் குரலில் ஒலித்துக்கொண்டிருந்தது. இளையராஜா மட்டும் இல்லையென்றால் என்ற கேள்விகேட்டுக்கொண்டே வீட்டை அடைந்தேன் .