09-10-2020 08:40
தஞ்சோங் காத்தோங் ரோடு
இன்று நீண்ட தூரம் ஓட வேண்டுமென்று நேற்றே முடிவு செய்துவிட்டேன் . நேற்று எனக்கு மிகவும் பிடித்த என் மீது எல்லையில்லா பாசம் கொண்டிருந்த எனது அம்மாச்சி இறந்து விட்டார். அவரின் இறப்பு செய்தி எதிர்பார்த்ததென்றாலும் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அம்மாச்சியை எண்ணிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன். என்னை அறியாமல் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. எங்கே ஓடுவது என்று முடிவு செய்யமல் ஓடிக் கொண்டே இருந்தேன். அம்மாச்சியின் முகம் வந்து கொண்டே இருந்தது. சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது டிரக் டிரைவர் என்னை பார்த்து என்ன கண்ல கண்ணீர் வருது என்று கேட்டார். நான் ஒன்றும் சொல்லாமல் கண்ணைத் துடைத்துக் கொண்டே மீண்டும் ஓடினேன். அம்மாச்சி ஒரு சகாப்தம். எப்போதும் எனக்கு அது அம்மாச்சி வீடுதான்.தாத்தாவை விட அம்மாச்சியிடம் தான் எனக்கு பாசம்.நான் பல நேரங்களில் அவருடன் தனியாக ஒரு சில நிமிடங்கள் இருந்திருக்கீறேன் . அதெல்லாம் அற்புதமான நேரங்கள். மறக்க முடியாதது. பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு உடம்பு சரியில்லாமல் போன நேரங்களில் எல்லாம் எனக்காக எங்கள் வீட்டில் வந்து நான் குணமாகும் வரை தங்கி இருப்பார். அவரைப் பார்த்தாலே எனக்கு ஒரு தைரியம்.அவரே ஒரு பெரும் மருத்துவருக்கு சமம். சிங்கப்பூரில் இருந்து நான் செல்லும்போதெல்லாம் அம்மைச்சியைப் பார்க்க செல்வதென்பது ஒரு பெரும் நிகழ்வு எனக்கு . நான் வாங்கிச் சென்ற ஜெபமாலையை நான் அவரைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் என்னிடம் காண்பிப்பார் . நான் அதை அவரிடம் கொடுத்தபோது அவரின் கண்ணில் இருந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பலமுறை யாருக்கும் தெரியாமல் எனக்கு பணம் தந்தவர். மூன்று வருடங்களுக்கு முன்பு பார்க்க சென்றபோது ஒரு சிறிய பிளாஸ்டிக் பையை என்னிடம் கொடுத்தார். அதில் கொஞ்சம் மிச்சர் மற்றும் இனிப்புகள் இருந்தன.அம்மாச்சி அம்மச்சிதான் ! எனக்கு திருமணமாகி பிறகு அவரை பார்க்கச் சென்றபோது என்னையும் என் மனைவியையும் கட்டி அணைத்து மனதார வாழ்த்தினார். "ஒன்னும் கவலைப் படாதே எல்லாம் சரியாயிரும் " என்று என்னைத் திடப்படுத்தியவர் .அவர் படுத்த படுக்கையாய் இருந்தபோது கூட என் மகளுக்கு உடை யாரிடமோ சொல்லி வாங்கி வைத்திருந்தார். எனக்கு அவரின் கையைத் தொடுவது மிகவும் பிடிக்கும் . இறுதியாக அவரைப் பார்க்க சென்றபோது கூட அவரின் கையை நான் பற்றினேன். சென்ற வாரம் வாட்சப் வீடியோ அழைப்பில் அவரைப் பார்த்தேன் நான் மிகவும் வருத்தப்பட்டேன்.இன்று அவரின் நினைவில் இலக்கு இல்லாமல் ஓடினேன். நினைவுகள் முழுவதும் அம்மாச்சியின் மேல் தான் இருந்தது. போய் வாருங்கள் அம்மாச்சி ...