Tuesday, July 31, 2018

வேள்வித் தீ - எம்.வி . வெங்கட்ராம்


"ஒரு மின்னலோ இடியோ இல்லை; இருக்கத் தேவை இல்லாதவற்றை இடித்துத் தள்ளுவதற்காகப் பூமியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதைப் போல் மழை அடர்த்தியாகவும் கனமாகவும் மிக நிதானமாகவும் பெய்து கொண்டிருந்தது."  - இப்படித்தான் இந்த கதை தொடங்குகிறது.

இந்தக் கதை சௌராஷ்டிரா சமூகத்தில் நடக்கிறது. கண்ணன் ஒரு பட்டு நெசவாளி. குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு நெசவுக்கு வருகிறான். தந்தை இறந்தப் பின் தாயுடன் தனிக்குடித்தனம் செல்கிறான். படிப்படியாக முன்னேறி சொந்த தறி வைக்கும் அளவுக்கு முன்னேறுகிறான்.கௌசல்யா என்ற பெண்ணை திருமணம் முடிகிறான். அவனது வாழ்வு நான்றாகதான் சென்று கொண்டிருந்தது ஹேமா என்ற பணக்கார விதவைப் பெண் வரும் வரை.

கண்ணன் மற்றும் அவனின் சகோதரர்களின் உறவு பொருளியல் சார்ந்தது. கண்ணனின் வளர்ச்சியில் அவர்கள் மகிழ்ச்சி அடையவில்லை. அவர்களின் அம்மா இறந்த பிறகு நடக்கும் சொத்துச் சண்டையே அதற்கு உதாரணம். மிக நுட்பமாக  உறவுகளால்  ஏற்படும் உளவியல் பிரச்சன்னைகளை ஆசிரியர் எடுத்துக்கூறுகிறார்.கண்ணனுக்கும் அவனது தாயாருக்கும் இடையேயான நட்பு ஒரு காலகட்டத்தில் சிதையுறுகிறது. அதற்கு காரணம் தனது ஒரே மகளை தன் மகன் சரியாக கவனிக்கவில்லையென்று அவள் எண்ணுகிறாள். ஆனால் கண்ணன் தன்னால் முடிந்ததை செய்துகொண்டுதான் இருந்தான்.

கண்ணன் மற்றும் கௌசல்யாவின் உறவு ஒரு நல்ல கணவன்-மனைவி உறவு. கௌசல்யா கணவனின் வருமானத்தில் குடும்பத்தை சிறப்பாவாகவே நடத்தி வந்தாள். தறி வேலைகளிலும் தன்னால் முடிந்ததை செய்து வந்தாள். ஹேமா கௌசல்யாவுடன் மிகவும் நெருக்கமாக பழகுகிறாள். இந்த இரு பெண்களுக்கிடையே உள்ள நட்பை ஆசிரியர் மிகவும் எதார்த்தமாக கூறியுள்ளார்.  நம்மால் அடுத்து கதையில் என்ன நடக்கும் என்பதை எளிதாக யூகிக்க  முடிகிறது - இறுதி முடிவைத் தவிர.

கண்ணன் கௌசல்யா மற்றும் ஹேமாவிற்கு இடையே உள்ள உறவுதான் கதையின் மைய்யப் புள்ளி. கௌசல்யாவிடம் அனைத்தும் இருந்தும் கண்ணன் ஹேமாவிடம் உறவு கொள்கிறான். அவனே அதை எதிர்பார்க்கவில்லை. அனைத்தையும் இழக்கிறான். அவன் ஏன் ஹேமாவிடம் காமம் கொண்டான் ? மனித மனதின் புரியாத புதிர் இது. ஹேமாவை நாம் புரிந்து கொள்ளமுடியும் ஏனென்றால் அவள் வயது மற்றும் சூழ்நிலை அப்படி.  அவள் உடலின் தேவையும் கூட.

கண்ணன் மற்றும் சாரநாதன் உறவு எதார்த்தமானது. கண்ணன் சாரநாதனை நன்றாகத்தான் நடத்துகிறான். இருந்தும் இருவருக்கும் இடையே ஒருவிதமான இடைவெளி இருந்துகொண்டேயிருக்கிறது.இந்த கதை உறவுகளை பற்றியது. எவ்வாறு உறவுகள் தனி மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாது என்பதை இதைவிட சிறப்பாக சொல்வது கடினம்தான். ஒருவனால் அனைத்து சொந்தங்களையும் எப்போதும் ஒரேபோல கையாள்வது கடினம் அதை கண்ணன் படிப்படியாக அறிந்து கொள்கிறான்.

சௌராஷ்டிரா சமூகத்தின் வாழ்க்கையை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். நெசவு தொழில் உள்ள சிக்கல்களையும்  பிரச்சனைகளையும் அவர்களை பெரும் முதலாளிகள் அடிமைகள் போல நடத்துவதையும் படிக்க வேதனையாக உள்ளது. இந்த கதை தலைமுறைகளுக்கு முன்னாள் நடந்தாலும் இன்னும் இம்மக்கள் அப்படிதான் கஷ்டப்படுகிறார்கள்.

அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

Monday, July 23, 2018

குறைந்த ஒளியில் - பிரபு காளிதாஸ்


பிரபு காளிதாஸை சாருநிவேதிதா இணையதள வழியாக எனக்குத்  தெரியும் . அவர் ஒரு புகைப்படக் கலைஞர். அவர் facebook-ல் எழுதிய பதிவுகளில் இருந்து சிறந்ததை எடுத்து புத்தகமாக்கி வெளியிட்டிருக்கிறது உயிர்மை பதிப்பகம்.

"அட ஆமலே "  என்று சொல்லவைக்கிற பதிவுகள்தான் அதிகம். பிரபு காளிதாஸிற்கு கமல் மேல் ஏன் அவ்வளவு கோபம் என்று தெரியவில்லை . கமலை விமர்சிப்பதற்கு அவருக்கு முழு உரிமையுண்டு. அதுதான் இந்த புத்தகத்தின் வெற்றி . தனக்கு சரியென்றுபட்டத்தை எந்த சமரசமும் இல்லாமல் எழுதியிருக்கிறார். அனுபவங்களை சுவாரசியமாக கூறுவது கடினம் ஆனால் பிரபு காளிதாஸ் அதை சிறப்பாக செய்துள்ளார் என்றுதான் எனக்குப் படுகிறது.

"நீங்க என்ன கேமரா வெச்சிருக்கீங்க ?" என்னும் பத்தியில் நம்மில் பலர் செய்யும் முட்டாள்தனமான விசயத்தை எடுத்துக்கட்டிருக்கிறார். "என்ன நடக்கிறது குழந்தைகளுக்கு ..?" என்னும் பத்தியில் குழந்தைகளை மொபைல் போன் எப்படி  கெடுக்கிறது என்பதை சொல்லியுள்ளார்.நாம் தெரிந்ததுதான் ஆனால் நாம் மாறமாட்டோம். "பாட்டு மட்டும் எங்கேர்ந்து வருது ?" என்னும் பத்தி ஒரு சிறுகதைப் போல உள்ளது."வெளித்தோற்றம்" என்னும் கட்டுரை சமகால நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.

ஒரு கட்டுரைக்கும்  அடுத்ததுக்கும் சுத்தமாக தொடர்ச்சியே இல்லை. ஆனாலும் சுவாரசியம் குறையவில்லை. சில பத்திகளை தவிர்த்திருக்கலாம். தினசரி வாழ்கை முதல் உலக சினிமா என பலவிதமான தளங்களில் கட்டுரைகள் இந்த புத்தகத்தில் உள்ளன. இன்னும் கொஞ்சம் விவரமாக எழுதியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

வாசிக்கலாம் !

Saturday, July 21, 2018

பதினாறாம் காம்பவுண்ட் - அண்டோ கால்பர்ட்


எதார்தமாகத்தான் இந்தப் புத்தகத்தை நூலகத்தில் பார்த்தேன். எழுத்தாளர் பெயர் எங்க ஊர் பெயர் .உடனே எடுத்து படிக்க ஆரம்பித்தேன். மொத்தமே 136 பக்கங்கள்தான் , ஒரே முனைப்பில் படித்து முடித்தேன்.

பிரவீன் ஒரு கப்பல் மாலுமி .பல வருடங்களுக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பி வருகிறான் . அவன் குடும்பம் வசிக்கும் இடம்தான் பதினாறாம் காம்பவுண்ட். இந்த காம்பவுன்ட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு கதை. பிரவீனுக்கு எல்லாமே அவனின் ஆச்சி தான். பிரவீனுக்கும் அவனது மாமன் மகள் ஸ்வீட்டிக்கும் காதல் ஏற்படுகிறது. குடும்பமும் அதற்கு ஒத்துக்கொள்கிறது. கதையின் முடிவை நான் ஓரளவு கணித்துவிட்டேன். ஏனென்றால் கதையில் வரும் சம்பவங்கள் நான் எங்கள் ஊரில் கேள்விப்பட்டதுதான்.

கதையில் இரண்டு கதாப்பாத்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. முதலாவது பிரவீனின் ஆச்சி ஜொஸி. எங்கள் ஊரின் அநேகமாக அனைத்து அம்மச்சிகளும் அப்பத்தாக்களும் அப்படித்தான் இருப்பார்கள் .

"தேவமரியாளுக்கு அருளை வழங்குவதும் ,அவளிடமே கருணைக்கு இறைஞ்சுவதுமாய் .. இடையிடையே பரலோகப் பிதாவையும் ஒருவழி செய்வதுமாய் ஜெபமாலை சொல்லி முடிப்பாள் .."  

பேரன் வருகிறான் என்றதும் அவள் செய்யும் செயல்களை பலமுறை  நான் எங்கள் வீடுகளில் பார்த்திருக்கிறேன்.மிகவும் எதார்த்தமான பாத்திரப் படைப்பு . இரண்டாவது கதாபாத்திரம் தூத்துக்குடி. ஆம் இந்த கதையில் தூத்துகுடியும் ஒரு கதாப்பாத்திரம்தான். தூத்துக்குடியை இவ்வளவு உயிரோடு யாரும் ஒரு நாவலில் எழுதி இதுவரை நான் படித்ததில்லை. அனைத்து முக்கியமான இடங்களும் கதையில் வருகிறது. அனைத்தும் நான் நடந்து திரிந்த இடங்கள்.  கதையில் வரும் ஆல்டர் பாய்ஸ்(Alter Boys ) பற்றிய சம்பவங்கள் பல சர்ச்களில் நடப்பதுதான். அந்த உடையை போடறதுக்கு நடக்கும் சண்டைகள் மறக்க முடியாதது . எனக்கு அனுபவம் உள்ளது.

காத்திருப்பு  வருகை மற்றும் இறப்பு - இவை மூன்றும்தான் இந்த கதையின் மைய்யப் பொருள் .ஒவ்வொன்றும் ஒரு செய்தியைச் சொல்லி செல்கிறது. கதையினூடே பல விசயங்களை சொல்லிச்செல்கிறார்  ஆசிரியர்.  கிறிஸ்தவர்களுக்கிடையே உள்ள பாகுபாடுகள் மற்றும்  பரதவர்களின் வரலாற்றை  மிக சுருக்கமாக சொல்லிருக்கிறார்.ஒவ்வொரு அத்தியாயமும் தேதியோடு தொடங்குவதால் ஒருவிதமான பதற்றத்தை  உண்டாக்குகிறது எளிய நடை அதை மேலும் ஸ்வாரஸ்யமாக்குகிறது.

வாசிப்போம் !