Saturday, February 29, 2020

ரன்னிங் டைரி -75

29-02-2020 05:38
வீட்டிலிருந்து ஸ்டேடியம் வரை 

ஐந்து மணிக்கே முழித்துவிட்டேன் ஓடவா வேணாமா என்று யோசித்துக் கொண்டே எழுந்து உடை மாற்றி சுக்கு காபி குடித்து விட்டு ஓட ஆரம்பித்தேன். வெளியே நல்ல குளிர். மிக மெதுவாக ஓடினேன். வாக்மேனில் "Kiss from rose" ஆரம்பித்தது. எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் . வசீகரக் குரல். நானும் பாட ஆரம்பித்தேன்.காலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் பாடிக் கொண்டே ஓடுவது ஒரு தனி சுகம். சர்ச் திறந்திருந்தது ஆனால் ஒருவரும் இல்லை. நின்று "அருள் நிறைந்த மரியே" சொல்லிவிட்டு மீண்டும் ஓட ஆரம்பித்தேன். திடீரென்று குஜராத் நீதி மன்றத்தின் தீர்ப்பு மனதில் வந்தது.பல விதமான கேள்விகள் என்னுள் எழுந்தது. என்னிடம் அனைத்து டாக்குமெண்ட்ஸ் இருக்கிறதா என்று எண்ணிக் கொண்டே ஸ்டேடியத்தை அடைந்தேன்.

Friday, February 28, 2020

ரன்னிங் டைரி -74

28-02-2020 08:22
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்ததிலிருந்தே பேங்க் லோன் பற்றிய எண்ணங்களே வந்து கொண்டிருந்தன. எவ்வளவு டாக்குமெண்ட்ஸ். நான் இதுவரை லோன் எடுத்ததில்லை. எனக்கு அதைப் பற்றி சரியாக தெரியவும் செய்யாது.  பிறகு பார்க்கலாம் என்று கட்டாயப் படுத்தி மனதை ஓடிக் கொண்டிருந்த பாடலில் செலுத்தினேன். அங்கே வழக்கம்போல இளையராஜா என்னும் மருத்துவர் எனது மனதை அறிந்ததுபோல "தென்றல் வந்து தீண்டும் போது" என்று பாடிக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் மறந்து ஒரு புத்துணர்வு.  வெய்யில் இல்லை. மழை வரும் என்று நினைத்து சற்று வேகமாக ஓடி அலுவலகத்தை அடைந்தேன்.

Thursday, February 27, 2020

ரன்னிங் டைரி -73

27-02-2020 08:15
வீட்டிலிருந்து யூனுஸ் வரை 

கொஞ்ச தூரம்தான் ஓட வேண்டும் என்று முடிவெடுத்து ஓட ஆரம்பித்தேன்.இன்றும் நல்ல வெய்யில். கோவிலைத் தாண்டி செல்லும்போது தான் ஞாபகம் வந்தது. நேற்று விபூதி புதன் என்று.முதல் முறையாக விபூதி புதன் அன்று சர்ச்க்கு செல்லவில்லை. இங்கு சர்ச்கள்  அனைத்திலும் திருப்பலிகள் மற்றும் அனைத்து வழிபாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியமான காலம் இந்த தபசு காலம். வருடாவருடம் ஏதாவது ஒரு புத்தகம் படிப்பேன்.இந்த முறை எந்த புத்தகம் படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே யூனுஸை அடைந்தேன்.

அலை வரிசை -ம.காமுத்துரை


இந்த புத்தகமும் "முள்" போல ஒரு பெண்ணின் போராட்டத்தை சித்தரிக்கிறது. நாயகி பிறப்பதோடு தொடங்குகிறது கதை. குடும்பத்தின் அன்பில் வளர்ந்த அவள். ஆசிரியர் கோபித்துக் கொண்டார் என்பதற்காக அவளை பள்ளிக்கு செல்ல வேண்டாமென்று படிப்பை நிறுத்துகிறாள் அம்மாயி. அவள் எவ்வளவோ சொல்லியும் அவளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவில்லை. அவள் வாழ்வின் முதல் முடிவு அவளைக் கேட்டு எடுக்கப் படவில்லை.

அவள் வயதுக்கு வந்ததை மிகச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.  பதினான்கு பதினைந்து வயதிலேயே திருமணம் நிச்சியக்கப் பட்டு சில மாதங்களிலேயே திருமணமும் நடக்கிறது.  தாய் மாமன் தான் கணவன். அவன் தான் அவளை தூக்கிக் கொண்டு பள்ளியில் சேர்த்தவன். இன்றோ அவனே கணவன். அவளால் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அம்மாயின் பேச்சில் நம்பி திருமண உறவுக்குள் நுழைகிறாள். ஒரு சில மாதங்கள் தான் சேர்ந்து வாழ்ந்தார்கள். மாமனின் விடுமுறை கழிந்து மீண்டும் இராணுவத்திற்கே சென்றுவிட்டான் . சென்றவன் திரும்ப வரவில்லை. போரில் கொல்லப்படுகிறான். அவளோ கர்பமாக இருக்கிறாள் .அவள் அழவே இல்லை.

குழந்தை பிறந்த சில வருடங்களில் அவளுக்கு அவளின் பெற்றோர்கள் மீண்டும் திருமணம் செய்கிறார்கள். அவனை அவளுக்குத் தெரியும் .இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள். முதலில் அன்பாக இருந்தவன் அவர்களுக்கு குழந்தை பிறக்காததால் அவளைக் கொடுமைப் படுத்துகிறான். பல பிரச்னைகளுக்குப் பிறகு அவனைவிட்டு பிரிகிறாள்.அதற்கு பிறகு அவளுக்கு பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

கதைக்கு ஆசிரியர் சரியான பெயர் வைத்துள்ளார். அலை மாதிரி வரிசையாக அவளுக்கு துன்பங்களும் துயரங்களும் வந்து கொண்டே இருந்தாலும் அவள் எல்லாவற்றையும் எதிர் கொண்டு கடந்து செல்கிறாள். கிராம குடும்ப சித்தரிப்பு எதார்த்தமாக உள்ளது. அதிலும் அம்மாயி மாதிரி உறவுகள் கிட்டத்தட்ட அனைத்து குடும்பங்களிலும் இருக்கும். நாயகி பிறக்கும் போது அம்மாயி எல்லா அம்மன்களின் பெயரைச் சொல்லி நல்ல முறையில் குழந்தைப் பிறக்க வழி  செய்யவேண்டும் என்று குழந்தை இயேசு முன்னாள் நின்று மன்றாடுவாள். அந்த காட்சி என்னை ஏதோ செய்தது. இன்று இந்தியாவில் அப்படி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பெரியவர்களுக்கு தெரியும் அனைத்து சாமியும் ஒன்றுதான் என்று. கதை தட்டையாக இருக்கிறது.ஏனோ என் மனதில் கதை நிற்கவில்லை. வாசிக்கலாம்.

Wednesday, February 26, 2020

ரன்னிங் டைரி -72

26-02-2020 08:16
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஒரு சில அடிகள் தான் ஓடியிருப்பேன் தோளில் இருந்த பை கையை இறுக்கியது.நின்று அதை சரி செய்துவிட்டு ஓட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் மனதில் எதுவுமே தோன்றவில்லை. சீராக ஒரே வேகத்தில் ஓடினேன். அலுவலகம் இருக்கும் சாலை வந்தவுடன் ஏனோ திடீரென்று மலையாள நடிகர் ப்ரித்விராஜ் மனதில் நீண்ட தாடியோடு தோன்றினார்.சிரித்துக் கொண்டே அலுவலகம் அடைந்தேன்.

Tuesday, February 25, 2020

ரன்னிங் டைரி -71

25-02-2020 08:13
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

கவனம் எல்லாம் கோவிலுக்கு சென்று நேற்று பார்த்த புத்தகங்களை எடுப்பதில் தான் இருந்தது . ஓட ஆரம்பித்த போது "Ariel by Sylvia Plath" ஞாபகம் வந்தது . இந்த புத்தகம் இருக்க வேண்டுமென்று கடவுளிடம் கேட்டுக் கொண்டேன். கோவிலை அடைந்ததும் என்னை அறியாமல் ஒரு பயம். கடவுள் கைவிடவில்லை. அந்த புத்தகம் இருந்தது. அதை எடுத்து பையில் வைத்துக் கொண்டு மீண்டும் ஓட ஆரம்பித்த போது இளையராஜா "ராஜா ராஜா சோழன்" என்ற மந்திரத்தை இயற்ற ஆரம்பித்தார். நானும் என்னுடைய வேகத்தைக் கூட்டினேன்.நல்ல வெய்யில் . திடீரென்று கொரோன வைரஸ் பற்றிய எண்ணம் வந்தது. சிங்கப்பூர் அரசைக் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். நேற்று புதிதாக யாருக்கும் இந்த நோய் பரவவில்லை. இன்னும் கவனமாக இருக்க வேண்டும். நோய் பரவவில்லை என்று முன்னெச்சரிக்கையை கைவிடக் கூடாது என்று எண்ணிக் கொண்டே அலுவலகம் அடைந்தேன். அங்கு temperature எடுப்பதற்கு receptionist ரெடியாக எழுந்து நின்றார். 

ஏந்திழை - ஆத்மார்த்தி


கதையின் நாயகன் ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் விரும்புகிறான். அவள் பெயர் ஏந்திழை. அவளுக்காக அனைத்தும் செய்கிறான். அவளோ இவனைப் பெரிதாக எண்ணவே இல்லை. அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள். இருந்தும் இவன் அவளை விடவில்லை.  ஏந்திழையின் காதலன் விபத்தில் இறந்தவுடன் அவள் துறவறம் செல்கிறாள். இவனோ அவளை மறக்க முடியாமல் பழகும் பெண்கள் அனைவரிடமும் ஏந்திழையை காண்கிறான்.
முத்தத்தின் ஆகாச் சிறந்த தருணம் அதை யார் முதலில் கைவிடத் தொடங்குவது எனத் தீர்மானிப்பதுதான்.
ஏந்திழையும் அவனும் ஒரு விடுதியில் தங்கி இருந்தபோது அங்கிருந்த புத்தகத்தைப் படிக்கிறாள் அவள். அது சுதந்திரத்திற்கு முந்திய காலத்தில் நடக்கும் கதை அந்த கதையின் நாயகியின் பெயரும்  ஏந்திழை தான்.அக்கதையில் வரும்  ஏந்திழை மீது பெரும் காதல் கொள்கிறான் ஆங்கிலேய அதிகாரி/துரை  ஒருவன். இவளோ பாரம்பரிய பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவள். எப்படியோ இருவருக்கும் திருமணம் நிச்சியக்கப் படுகிறது. அவளுக்கு பரிசாகக் கொடுக்க ஒரு மாளிகை காட்டுகிறான். கட்டுமான பணி துயரத்தில் முடிகிறது.

தனக்கு வழங்கப்படுவதைக் கடனென்று உணர்கிற தருணங்களில் ஆடவன் நெகிழ்கிறான் என்ன செய்தாவது அந்தக் கடனைத் தீர்க்க முனைகிறான். அப்படியான  சந்தர்ப்பங்களில் அளவற்ற பேரன்பு ஒன்றைத் தருவதற்குத் சம்மதிக்கிறான். காமம் நேரடியாக அன்பை விளைவிக்காது.
 ஒரு விபத்தில் ஒரு பெண்ணைக்  காப்பாற்றுகிறான் நாயகன் . அவள் இவனை விரும்ப ஆரம்பிகிறாள். இவனும் அவளை நேசிக்க ஆரம்பிக்கிறான். அவள் அவன் பணிபுரியும் பெரும் நிறுவனத்தின் முதன்மை பொறுப்பில் உள்ளவள்.இவன் ஒரே நாளில் அந்நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் அமர்கிறான். அவள்தான் இதைச் செய்தது.
தோல்வியை விடக் குரூரமானது ஆட்டத்தை மறுபடி ஆட நிர்ப்பந்தித்து.
அந்த புத்தகத்தின் கதையில் வரும் துரைக்கும் இந்த நாவலின் நாயகனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. அதை போலத்தான் அந்த  ஏந்திழைக்கும் இந்த  ஏந்திழைக்கும்.பல கதைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது.ஒரு பெரும் நிறுவனத்தின் உள் அரசியலை கண்முன் கொண்டுவந்துள்ளார் ஆத்மார்த்தி. அதைவிட ஒரு மனிதனின் காதல் வலியையும் அதன் விளைவையும் மிக எதார்த்தமாக சொல்லியுள்ளார்.  ஆத்மார்த்தி ஒரு கவிஞர் என்பதை இதிலும் பார்க்க முடிகிறது. ஒரு வித்யாசமான வாசிப்பு அனுபவம்.

Monday, February 24, 2020

ரன்னிங் டைரி -70

22-02-2020 15:49
கிழக்கு கடற்கரை பூங்கா

ஓட ஆரம்பித்த போது லேசாக மழை தூறியது. இருந்தாலும் பரவில்லையென்று ஓட ஆரம்பித்தேன். வாக்மேன் கிடைத்து விட்டது. என்ன பாடல் ஓடியது என்று தெரியவில்லை எண்ணம் முழுவதும் "Studio Ghibli" தான்.  நான் மியசாகியின் (Miyazaki) தீவிரமான ரசிகன். கிட்டத்தட்ட அவரின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். இன்று காலை என் மகளுடன்  "Spirited Away" மீண்டும் பார்த்தேன். அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.  எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவளோடு மியசாகியின் அனைத்து படங்களையும் பார்க்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீடு திரும்பினேன்.


Friday, February 21, 2020

ரன்னிங் டைரி -69

21-02-2020 08:20
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது எழுத்தாளர்களின்  சண்டை தான். ஒரு பக்கம் மனுஷ்யபுத்திரனின் கவிதை விமர்சனத்தின் சண்டையென்றால் மற்றொரு புறம் சாருநிவேதிதாவிற்கும் வாண்ணாதாசனிற்கும். என்னை கேட்டல் விமர்சனத்தை விமிர்சனமாக எடுத்துக் கொண்டு நகன்று செல்ல வேண்டும். புடிக்கவில்லையா அந்த விமர்சனத்தை எடுத்துக் கொள்ள தேவையில்லை. தனி நபர் தாக்குதல்கள் நல்லதல்ல.  நல்ல புத்தகம் எந்த genre-ல் இருந்தாலும் transagressive  ஆனாலும் கூட  மக்கள் வாங்கி படிக்கத்தான் செய்வார்கள் என்பது என் கருத்து. என்னை ஏன் எல்லோரும் படிக்கவில்லை என்ற கேள்வியே அபத்தமானது. நான் தேடிச் சென்றுதான் சாருநிவேதிதாவின் புத்தகங்களை படித்தேன். சில பிடித்திருந்தன சில பிடிக்கவில்லை. பலர் என்னிடம் அவரின் எழுத்தைப் பற்றிக் கேட்டபோது நான் சொன்னது "நீங்களே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்" என்பதுதான்.  ஒரு வாசகனை ஒரு புத்தகம் ஏதாவது செய்ய வேண்டும் அப்படி செய்யும் எழுத்திற்கு வாசகன் மீண்டும் மீண்டும் செல்வான். இன்று சண்டையில் என்ன நடக்குமோ என்று எண்ணிக் கொண்டே அலுவலகம் அடைந்தேன்.

Wednesday, February 19, 2020

ரன்னிங் டைரி -68

19-02-2020 08:17
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது நேற்று இரவுநடந்த  ஒரு நிகழ்வுதான் .என் மகள் என்னிடம் "எனக்கு ஒரு தமிழ் பாட்டு சொல்லிதங்கப்பா?" என்று கேட்டாள் . உடனே நான் "ராஜா ராஜா சோழன் நான்" பாட ஆரம்பித்தேன். பல முறை பாடிய பிறகு அவள் முதல் இரு வரிகளை பாடினாள். ஏன் நான் இந்த படலைத் தேர்வு செய்து பாடினேன் என்பதையே எண்ணிக் கொண்டு ஓடினேன். என் வாக்மேனில் இந்த பாடல் இருக்கிறது .தினமும் ஒரு முறையாவது இந்த பாடலைக் கேட்பேன். ஆனால் மற்ற சில பாடல்களையும்  நான் தினமும் கேட்கிறேன். திரும்ப திரும்ப ஏன் இந்த பாடலை தேர்வு செய்து பாடினேன் என்று கேட்டுக் கொண்டே அலுவலகத்தை அடைந்தேன்.

ரன்னிங் டைரி -67

18-02-2020 08:15
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தவர் ஒபாமா தான். அவரின் ஆட்சியைப் பற்றிய ஒரு டாக்குமெண்டரி பார்த்தேன். கறுப்பர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை முழுவதுமாக எதிர்த்த குடியரசு கட்சி அதிலும் குறிப்பாக பெரிய தொழில் அதிபர்கள். அமெரிக்காவின் அரசியல் இந்திய அரசியலைவிட மோசமாக இருந்திருக்கிறது போல் தெரிகிறது.இன்னும் இதை பற்றி நிறைய படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.  தீடிரென்று "Was Gandhi a Christian in faith and Hindu in name" என்ற தலைப்பில் வாசித்த கட்டுரை நினைவில் வந்தது. காந்தியைப் போல தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்ட தலைவர் இல்லை என்று எண்ணிக் கொண்டே அலுவலகத்தை அடைந்தேன்.

ரன்னிங் டைரி -66

17-02-2020 18:20
அலுவலகத்திலிருந்து அல்ஜியூனிட் (Aljunied )

மாமா ஊரிலிருந்து வந்திருந்தார்கள். மாமாவை சந்தித்து சில சாமான்கள் வாங்க வேண்டும். ஓட ஆரம்பித்ததிலிருந்து முடியும்வரை அம்மாச்சி வீடும் மாமாமார்களும் நினைவில் வந்து கொண்டே இருந்தார்கள்.

Monday, February 17, 2020

ரன்னிங் டைரி -65

16-02-2020 15:45
கிழக்கு கடற்கரை பூங்காவில்

மழை மேகம். ஓட ஆரம்பித்தபோது விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடல் நினைவில் வந்தது. 2005 பிறகு நான் விஜய்யின் எந்த திரைப்படத்தையும் எதிர்பார்த்து காத்திருந்ததில்லை ஏனோ அவரின் திரைப்பாடல்களை அதற்கு பிறகு எனக்குப்  பெரிதாக பிடித்ததில்லை. ஆனால் இந்த பாடல் எனக்கு கேட்டவுடன் பிடித்து போய்விட்டது. ஓடி பத்து நிமிடம் இருக்கும் கடும்  வெய்யில் அடிக்க ஆரம்பித்தது. பலர் ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது எனக்கு பெரும் மகிழ்ச்சி. மக்களை பார்த்துக் கொண்டே ஓடினேன். மூவர் சிறு சில்வர் குண்டுகளை வைத்துக் கொண்டு எதோ விளையாடிக் கொண்டிருந்தனர். நான்  நின்று விட்டேன். இந்த விளையாட்டை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு அருகில் இது தான் முதல் முறை. கிட்டத்தட்ட பத்து நிமிடம் அங்கேயே நின்றேன். பிறகு மீண்டும் ஓட ஆரம்பித்தபோது நேற்று இரவு வாசித்து முடித்த "வேனல்" புத்தகம் நினைவில் வந்தது. அந்த நாவலின் கதையை எண்ணிக் கொண்டே ஓடி வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி -64

14-02-2020 08:18
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

சற்று தூரம் நடந்து விட்டு ஓட ஆரம்பித்தேன். கொரோனா வைரஸ் பற்றிய எண்ணங்கள் வந்தன. சென்ற வாரம் ஆர்டர் செய்த பலசரக்கு சாமான்கள் நேற்று மதியம்தான் வந்தன. கேட்டதற்கு ஆர்டரின் எண்ணிக்கை அதிகமானதாலும் சப்ளை தாமதமானதாலும் லேட் ஆனது என்றார்கள்.  வீட்டிற்கு  ஏதாவது வாங்க வேண்டுமா என்று யோசித்துக் கொண்டே அலுவலகம் அடைந்தேன்.

ரன்னிங் டைரி -63

13-02-2020 08:14
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்ததே வேகமாகத்தான். மிதமான வெய்யில் ஓட்டத்தை மேலும் இனிமையாக்கியது. ஏனோ தெரியவில்லை பிரையன் லாரா நினைவு வந்தது. நான் லாராவின் ரசிகன். ரசிகன் என்று சொல்வதைவிட வெறியன் என்றே சொல்லலாம். லாரா ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் பார்ப்பது குறைந்தது. இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே பார்ப்பேன். லாரா 401 அடித்த அன்று நான் தூத்துக்குடியில் அக்கா வீட்டில் இரவெல்லாம் விழித்திருந்து பார்த்தேன். லாராவின் பேட்டிங் ஒரு மேஜிக் ஷோ பார்ப்பது போன்றது. எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் மாயாஜாலங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். டெண்டுல்கர் ரசிகர் பாட்டளித்திற்கு இடையே நான் என் சித்தப்பா மற்றும் ஒரு சிலரே லாரா ரசிகர்கள் . அந்த ரசிகரில் ஒருவர் தனது போட்டிற்கு (Boat) லாரா என்று பெயர் வைத்தாக கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றும் ஏதாவது கவலையென்றால் யூடுப்பில் லாராவின் பேட்டிங்கை பார்க்கும்போது ஒரு புத்துணர்வு ஏற்படும். லாராவின் 153-ஐ நினைத்துக் கொண்டே அலுவலகம் அடைந்தேன்.

Wednesday, February 12, 2020

ரன்னிங் டைரி -62

12-02-2020 08:20
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்தவுடன் மனதில் தோன்றியது இந்த "பாய் பெஸ்டி" கவிதைதான். நான் தினமும் ஒரு கவிதை மட்டுமாவது படிக்கவேண்டும் என்று ஒவ்வொரு மாதமும் நினைப்பேன். ஆனால் அதை பின்பற்றவே முடியவில்லை. நேற்று வாசித்தால் இன்று இந்த கவிதை ஞாபகத்தில் வந்ததென்று நினைக்கிறன். சமீபத்தில் வாசித்த கவிதைகளில் எனக்கு பிடித்தது
=====
இளைய பாரதம்
  -குமரி அமுதன்
===
வானொலிப் பெட்டி
வழங்கியது செய்தி :
'மறைந்த மகாத்மா
காந்தி அடிகளின்
முப்பதாவது நினைவு தினத்தில்
ஐ.நா.சபை
அஞ்சலி செலுத்தியது.'
செய்தி கேட்ட என்
தம்பி கேட்டான்:
"ஐ.நா. தெரியும்
யாரந்த காந்தி?|"
==
நிறைய கவிதைகள் வாசிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே அலுவலகத்தை அடைந்தேன் .

Tuesday, February 11, 2020

ரன்னிங் டைரி -61

11-02-2020 08:18
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

கொரோனா வைரஸ் பரவும் இந்த சூழலில் பயம் இல்லாமல் இருப்பதுதான் ஒரே வழி என்று எண்ணிக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். ஓடுபவர்கள் ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நல்லது என்று எண்ணிக் கொண்டேன்.  அதன் பிறகு வேறு எந்த சிந்தனையும் வரவில்லை. எப்போது அலுவலத்தை அடைந்தேன் என்றே தெரியவில்லை. அலுவலக வாசலில் நண்பர் தெர்மாமீட்டர் உடன் நின்று கொண்டிருந்தார்.

Friday, February 7, 2020

முள் - முத்துமீனாள்


இது ஒரு சுயசரிதை என்றுதான் சொல்லவேண்டும் . முத்துமீனாள் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைந்தான் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.  சிறு வயதில் அவருக்கு தொழுநோய் இருக்கிறது கண்டுபிடிக்கப்படுகிறது.அதிலிருந்து அவரது வாழ்க்கையே பெரும் போராட்டமாகிறது.

முதலில் அவரின் பள்ளி வாழ்க்கை தடைபடுகிறது. தோழிகளை விட்டு பிரிகிறாள். அப்பாவோடு அருகில் இருக்கும் ஊருக்குச் சென்று மருந்து சாப்பிடுகிறாள். அதுவும் அந்த பாம்பு கறி கலந்த உணவு படிக்கும் நமக்கே ஒரு மாதிரி வருகிறது. நோய் முற்றவும் ஒரு கிறிஸ்துவ தொழுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். விடுதியில் கடுமையான விதிகள் மற்றும் புழு நெளியும் களி சாப்பாடு. பல்வேறு மனிதர்களை சந்திக்கிறாள். இப்படியாக  ஐந்து வருடங்கள் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வெளியே வருகிறாள்.

அவளை யாரும் திருமணம் செய்ய வரவில்லை அனைவரும் நோயைச் சொல்லி மறுக்கிறார்கள். இவளும் சிலரை நிராகரிக்கிறாள் .ஆனால் அவள் அதற்கெல்லாம் கவலைப்படாமல் தனது வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்கிறாள். அவள் தோழிகளில் பலரின் திருமணவாழ்வு துன்பமாகவே ,முடிந்தது. நெருங்கிய தோழி மல்லிகா தற்கொலை செய்து கொள்கிறாள். யாருமே இவளைப்போல வாழ்க்கையை எதிர்கொள்ளவில்லை. அவர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையை அடுத்தவரிடம் ஒப்படைத்தவர்கள்.

மருத்துவ விடுதியின் வாழ்க்கையை நம் கண்முன் கொண்டுவந்திருக்கிறார் முத்துமீனாள். அங்கு ரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் தென்னிந்திய திருச்சபை என இருசாராரும் வருகிறார்கள். ஆண்கள் பெண்கள் மற்றும் குடும்பம் என தனித் தனியாக வாழுகிறார்கள். பல காதல் கதைகள் வருகின்றன தோழி மல்லிகாவின் காதல் ,ராதா காதலித்தவனால் கொடுமைப் படுத்தப்படுகிறாள். பல கொடுமைகளுக்குப் பிறகு கணவனை பிரிந்து அம்மாவிடமே செல்கிறாள். மற்றொருன்று பீட்டர் மற்றும் செரின் அக்காவின் காதல் கதை. இரு ஓரின சேர்க்கை கதைகளும் வருகிறது.சுமதி மற்றும் கீதாவின் கதையோ காமத்தின் வேட்கையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கதையில் வரும் பெரும்பாலான பெண்கள் தங்களை தாங்களே அழித்துக்கொள்கிறார்கள்.

மற்றொரு பக்கம் இத்தாலியில் இருந்து வந்த சேவைக்காகவே தன்னைப் அர்பணித்துக் கொண்ட கன்னியாஸ்திரீ இவளைப் படிக்க வைகிறாள். இவள் அவரை அம்மா என்றுதான் அழைக்கிறாள்.அவரும் இவளை தனது மகள் போல பார்த்துக் கொள்கிறார். அந்த அன்பையும் சிலர் பொறாமையாக பார்க்கிறார்கள்.மத மாற சொல்லி இவள் மதம் மாறவில்லை அம்மாவும் அவளை கட்டாயப்படுத்தவில்லை. பெண்பார்க்க வந்த போது எழுந்து நின்று வணக்கம் செய்தவரை திருமணம் செய்கிறாள். முதலிரவில் எந்த ஒரு பயமும் இன்றி எதிர்பார்த்து காத்திருப்பதோடு நாவல் முடிகிறது.

"பெண் குழந்தை பிறக்கவில்லையே என்று அம்மா கவலையாயிருந்தாள்." என்று இந்த கதை தொடங்குகிறது. நோய் குணமாகியும் நம் சமூகம் எப்படி ஒருத்தரை நடத்துகிறது என்பதை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாது. முத்துமீனாள்  போலியாக எதையும் சித்தரிக்கவில்லை என்றே தோன்றுகிறது ஏனென்றால்  அவர் நமது அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை மிகவும் வெளிப்படையாக சுட்டிக் காட்டிக் கொண்டே செல்கிறார். இந்த அணுகுமுறைதான் இந்த நாவலின் வெற்றி.

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

Thursday, February 6, 2020

வரப்புகள் - பூமணி


ஒரு பள்ளியின் ஆசிரியர்களின் வாழ்க்கை பற்றிய சிறிய நாவல். பூமணியின் கதையில் எப்போதும் சாதி ஒரு சருகாக ஓடிக் கொண்டே இருக்கும் இதிலும் அப்படித்தான். இந்த நாவலின் சிறப்பேஆசிரியர்களுக்குள் இருக்கும் உறவை எதார்த்தனமாக பிரதிபலிப்பதில் தான்.

கதை பெரும்பாலும் பாண்டியன் , ரங்கராஜன் மற்றும் தமிழய்யா மூலம் நகர்கிறது. இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். பாண்டியன் விளையாட்டு வாத்தியார். விளையாட்டைத் தவிர பல விசயங்களை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பவர். ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதிர்ப்பவர். எல்லோரிடமும் அன்பாக பழகுபவர்.ரங்கராஜன் வரலாற்று ஆசிரியர். பிராமணர். அவர் குடும்பம் அவரது சம்பளத்தை நம்பித்தான் இருக்கிறது. வயதாகியும் பெண் அமையாமல் திருமணம் செய்யாமல் இருப்பவர். தமிழய்யா திருமணமானவர்  இரண்டு வயது வந்த பிள்ளைகள் இருக்கிறது. எதையும் நிதானமாகவும் யோசித்து செய்யக் கூடியவர். இந்த மூவருக்கும் தனி கதை உண்டு.

ஆண்கள் மட்டும் ஆசிரியர்களாக இருந்த பள்ளியில் திடீரென்று பெண் ஒருவர் ஹிந்தி சொல்லிக் கொடுக்க வருகிறார். ருக்குமணி டீச்சர். ரங்கராஜனுக்கு ருக்குமணி டீச்சரை பார்த்த சில நாட்களிலேயே பிடித்துவிட்டது.ஆனால் அவர் அதை அவரிடம் சொல்லவே இல்லை.சில நாட்கள் கழித்து ராஜேஸ்வரி டீச்சர் பணியில் சேர்ந்தார். பாண்டியனுக்கு ராஜேஸ்வரி டீச்சரை பிடித்துவிட்டது. அவருக்கும் பாண்டியனை பிடித்து விட்டது.

"டீச்சரம்மா அக்ராரத்துப் பொண்ணுன்னுதான சாமி இப்பூட்டுக் கணக்குபோட்ருக்காரு. இதே வேதக்கார எட் மாஸ்டர் அய்யராருந்து இல்ல அந்தம்மா வேற ஒரு அய்யரத் தேடிக்கிட்ருந்த பள்ளிக்கூடத்துக்குள்ள பத்துப் பேருக்கு முன்னால சண்ட நடந்திருக்குமா. என்னக் கேட்ட நடந்துருக்காதுன்னுதான் சொல்லுவேன்" - இதைவிட சாதியின் இறுக்கத்தை சொல்ல முடியாது . ரங்கராஜனின் கோபம் எதனால்? இந்த விவரம் தெரிந்திருந்தால் அப்படி பேசியிருப்பானா ?
"பாரம் ஏறீட்டா வேல ஓடாது."
பள்ளியில் வேலை செய்யும் மாணிக்கம் மற்றும் வையாபுரியின் கதாபாத்திரங்கள் கதைக்கு மேலும் வலுவூட்டுகின்றன.அதிலும் அவர்களின் சாதியைப் பற்றிய பேச்சுக்கள் சாதிய படிநிலையை மிக தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. கதையில் மெரும்பாலான பகுதி உரையாடலில் தான் இருக்கிறது.பலவிதமான ஆசிரியர்கள் நம் கண்முன் வந்து செல்கிறார்கள். ஆசிரியர்களின் அரசியலும் அங்கும் இங்கும் வருகிறது.இக்கதையில் வரும் கிருஷ்ணசாமி வாத்தியார் விவசாயம் செய்து கொண்டே ஆசிரியர் பணி செய்கிறார்.அவரைப் போல ஒவ்வொருவரும் மற்றொரு வேலையும் செய்கிறார்கள்.

வாட்ச்மேன் வீரணன் எம்ஜியார் படம் பார்த்துவிட்டு செய்யும் செயல்கள் பெரும் நகைச்சுவை.வாசிக்கலாம்.

Tuesday, February 4, 2020

ரன்னிங் டைரி -60

04-02-2020 08:17
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்தவுடனே ரோஜர் பெடெரெர் (Roger Federer) தான் ஞாபகத்தில் வந்தார்.  தற்போதைய டென்னிஸ் உலகின் மும்மூர்த்திகளின் காலம் முடியும் தருவாயில் இருக்கிறது என்றே எனக்கு தோன்றுகிறது. ரோஜர் பெடெரெர் ஒரு கலைஞன். அவரின் ஓய்வை நினைக்கும் போதே வருத்தமாக இருக்கிறது.சிறு வயதில் எங்கள் தெருவில் ஜிம் கூரியர் (Jim Courier) மற்றும்அகசிக்கும்(Agassi)  தான் அதிக ரசிகர்கள் .பெண்களில் ஸ்டெபி கிராஃ (Steffi Graff) மற்றும் சபாடினி. ஏனென்று தெரியவில்லை அலுவலகம் வரும் வரை டென்னிஸ் பற்றிய எண்ணங்கள் வந்து கொண்டிருந்தன.

ரன்னிங் டைரி -59

03-03-2020 18:16
அலுவலகத்திலிருந்து வீடுவரை

ஓடலாம் என்று எண்ணி ஆடை மாற்றி தயாரானதும் வாக்மேனை தேடினால் வாக்மேன் எப்போதும் இருக்கும் இடத்தில இல்லை.தேடியும் கிடைக்கவில்லை. வேறுவழியில்லாமல் போனின் earphone-ஐ மாட்டிக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். "உன்ன நெனச்சேன்" ஆரம்பித்தது.  பாடலில் மூழ்கியபடிய ஓடினேன். சிக்னலில் பட்ஜெட் பற்றிய எண்ணம் வந்தது. இன்னும் முழுமையாக படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். எண்ணம் முழுவதும் வருமானவரியிலேயே இருந்தது அதையே நினைத்துக் கொண்டு வீட்டை அடைந்தேன்.

புக்கேத் பயணம் -1

நாள் 1:
நாங்கள் தாய்லாந்து செல்வது இது மூன்றாவது முறை. இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. ஆனால் ஏர்போர்ட்டில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து எவ்வளவு தாய்லாந்து பணம் கொண்டுவந்துள்ளோம் என்பதை அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.  நாங்கள் படிவத்தை ஆன்லைனில் டவுன்லோட் செய்து ப்ரிண்ட் அவுட் எடுத்து அதை சிங்கப்பூரிலேயே பூர்த்தி செய்து எடுத்துச் சென்றோம் ஏனென்றால் கடந்தமுறை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் படிவத்தை பூர்த்தி செய்ய செலவானது. அதிகாரி ப்ரிண்ட் அவுட்டை பார்த்தவுடன் சிரித்துக்கொண்டு "very good" என்றார். அடுத்த பத்து நிமிடத்தில் நாங்கள் ஏர்போர்ட்டிற்கு வெளியே வந்துவிட்டோம்.

ஒரு ஜப்பானிய தொலைகாட்சி தொடரில் ஒருவர் கூறுவார் "ஒரு நாட்டின் கலாச்சாரத்தை அதன் உணவு பட்டியலில்(மெனு கார்டு) இருந்து தெரிந்து கொள்ளலாம் " என்று . எனக்கு அது பொருந்தும்.நான் எங்கு சென்றாலும் அங்குள்ள உணவின் சுவையை அறிவதில் தான் அதிகம் நேரம் செலவழிப்பேன். உணவின் மூலமே அந்த நாட்டைப் பற்றி அறிய முற்படுவேன்.இந்தமுறையும் அதே நோக்கம்தான். ஏர்போர்ட்டிற்கு வெளியே வந்தவுடன் அருகில் இருந்த 7eleven-ல் "oishi chicken sandwich" வாங்கினேன். மகள் சாக்லேட் பிஸ்கட் வாங்கினாள். "oishi chicken sandwich" மிகவும் சுவையாக இருந்தது. இது தாய்லாந்து உணவு கிடையாது.இது ஜப்பானிய முறையில் செய்தது. நான் இந்த sandwich-ஐ பலமுறை உண்டிருக்கிறேன். ஆரம்பமே சுவையாக ஆரம்பித்ததில் பெரும் மகிழ்ச்சி.

ஹோட்டலில் இருந்து எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வேன் வந்தவுடன் அதில் ஏறி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஹோட்டலை அடைந்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்  புக்கேத்தின் தெற்கு எல்லையில் இருக்கும்  ரவாய் கடற்கரை அருகில் இருக்கிறது. ஹோட்டலின் பெயர் "#roost glamping". அறை காலியாக இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கிறது என்று சொன்னவுடன் வரவேற்பு அறையிலேயே இருந்தோம். நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல்  ஒரு அழகான குன்றிமேல் இருந்துது. அறை ரெடியாவதற்குள் சாப்பிடலாம் என்று எண்ணி மெனு கார்டை பார்த்தல் ஒரு சில தாய்லாந்து உணவுகளைத் தவிர அனைத்தும் மேற்கத்திய உணவு வகைகள். சிறு ஏமாற்றம் இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணி சில உணவு வகைகளை ஆர்டர் செய்தோம். சாப்பிட்டதில் மிகவும் பிடித்தது "பாட் தாய் (pad thai)" தான்.
பாட் தாய் (pad thai)

பார்க்கத்தான் காரமாக தெரிந்தது ஆனால் அவ்வளவு காரம் இல்லை. நூடுல்ஸ் சற்று சவுக் சவுக் என்றிருந்தது. ஆனால் அனைத்தையும் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருந்தது. இந்த பாட் தாய் (pad thai) தாய்லாந்தின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும். தெரு ஓரங்களில் வண்டிகளில் விற்றுக் கொண்டிருப்பார்கள். இது தாய்லாந்தின் தேசிய உணவு வகைளில் ஒன்று. இதற்கு பல வரலாறு உள்ளது. நான் கேள்விப்பட்டது வரை இதன் base ஆகிய நூடுல்ஸ் சீனாவில் இருந்து வந்ததென்றும் உலகப்போரின் போது உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது  கிடைத்தவற்றை ஒன்று சேர்த்து செய்ததுதான் இந்த பாட் தாய் (pad thai).  சிங்கப்பூரில் கிட்டத்தட்ட அனைத்து food court-லும் கிடைக்கும்.



அறை தயாரானதும் அங்கு சென்றோம் எங்கள் அறை குன்றின் கீழ் இருந்தது. உண்மையில் அது அறை இல்லை அது ஒரு கூடாரம். மிகவும் அழகாக இருந்தது . என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.ஏசி இல்லை ஒரேயொரு பேன் மட்டும்தான் இருந்தது.  ஏசி கூடாரத்திற்கு  மூன்று மடங்கு கட்டணம் அதிகம். எங்களுக்கு அது தேவையில்லை என்று தோன்றியது.

மாலை வரை ஓய்வு நாங்கள் தூங்கினோம். என்ன செய்யலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது ஹோட்டலின் வரவேற்ப்பாளர் நடக்கும் தூரத்தில்தான் ரவாய் கடற்கரை என்றார்.  நாங்கள் கடற்கரையை அடையும்போது தண்ணீர் உள்ளே சென்றிருந்தது (low  tide).  அழகான கடற்கரை அரை மணி நேரம் கடற்கரையில் நடந்தோம். இதமான காற்று மற்றும் வெள்ளை மணல் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. இருட்ட ஆரம்பித்தது சாப்பிட்டுவிட்டு கூடாரத்திற்கு செல்வதாக முடிவு செய்து உணவகத்தைத் தேடினோம். கடல் உணவு விடுதியை தேர்வு செய்து அங்கு சென்றோம். எனக்கு அங்கு சாப்பிட்டதில் பிடித்தது oyster தான். oyster-னா தமிழ என்னன்னு தெரியல.
ஆலிவ் எண்ணெயில் பூண்டும் சோயா சாசும் கலந்து சுடப்பட்டது. அற்புதமான சுவை . மிகவும் மெதுவாக ரசித்து சாப்பிட்டேன். பணியாளரிடம் இது எங்கிருந்து வந்தது என்று கேட்டேன் அவர் அருகில் இருக்கும் தீவிலிருந்து என்றார். நான் சிங்கப்பூரில் இந்த அளவிற்கு சுவையாக oyster சாப்பிட்டதில்லை. ஹிரோஷிமாவில் சாப்பிட oyster தான் நான் இதுவரை சாப்பிட்டதிலேயே சிறந்தது.


சாப்பிட்டு முடித்துவிட்டு கார் பிடித்து கூடாரத்திற்கு வந்து சேர்ந்தோம். இரவில் ஹோட்டல் இன்னம் அழகாக இருந்தது .


இரவு நல்ல குளிர். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கினோம்.

Monday, February 3, 2020

ரன்னிங் டைரி -58

25-01-2020 05:12
வீட்டிலிருந்து முஸ்தபா வரை

வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் எங்கு ஓடுவதென்று ஒரு கேள்வி. எப்போதும் கிழக்கு கடற்கரைதான் முதல் சாய்ஸ் ஆனால் இன்று அங்கு ஓட தோன்றவில்லை. சரி ஸ்டேடியம் பக்கம் ஓடலாம் என்று எண்ணி அந்த பக்கம் ஓட ஆரம்பித்தேன். வாக்மேனில் இளையராஜா தனது மாயாஜாலத்தை நிகழ்த்த ஆரம்பித்திருந்தார். அந்த மனுஷனுக்கு எப்படித்தான் நமது சூழ்நிலை தெரிகிறதோ! சீரான வேகத்தில் ஓடினேன். இருள் குளிர்ந்த காற்று ஓட்டத்தை மேலும் இனிதாக்கியது. ஸ்டேடியத்தை தாண்டி ஓடிக்கொண்டிருந்தேன். திடீர்ரென்று ஏன் முஸ்தபா வரை ஓடக்கூடாது என்று எண்ணி அந்த பக்கம் வளைந்து ஓடினேன். மனதில் எதுவுமே எண்ணவில்லை . ஏன் முஸ்தபாவிற்கு  ஓடினேன் என்று எனக்கு தெரியாது. யோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.