Monday, March 29, 2021

ரன்னிங் டைரி - 192

 29-03-2021 08:37

கிழக்கு கடற்கரை பூங்கா 

மொசார்டின் 41வது சிம்பனியை play செய்துவிட்டு ஓட ஆரம்பித்தேன். கவனம் முழுவதும் இசையில்தான் இருந்தது. பத்து கிலோமீட்டர் ஓடியதே தெரியவில்லை. இந்த சிம்பனியைப் பற்றி என்னத்த சொல்ல .. just amazing .. முக்கிய சாலையை அடைந்தபோது வயதான இந்திய தம்பதியர் என்னை நோக்கி கைகாட்டினார். நான் earpiece-ஐ காதுகளிலிருந்து எடுத்துவிட்டு அவர்களை நோக்கிச் ஓடினேன். அந்த தாத்தா ஆங்கிலத்தில் "கிழக்கு கடற்கரை பூங்காவிற்கு எந்த வழியில் செல்ல வேண்டும் " என்று கேட்டார். நான் வழியைக் காட்டினேன். "நன்றி " என்றார். " கடற்கரை நல்ல இருக்குமா?" என்று கேட்டார். உடனே நான் ஒரு சிறிய உரையை நிகழ்த்தினேன். அவர்கள் பொறுமையாய் கேட்டுவிட்டு."நான் நீங்கள் இந்தியர்  என்று நினைத்தேன். இவ்வளவு விசயங்களை கடற்கரைப் பற்றி சொல்கிறீர்கள்" என்றார். நான் "நான் "இந்தியர் தான் . இந்த கடற்கரைக்கு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வருகிறேன்." என்றேன். "சரி வருகிறோம்" என்று சொல்லிவிட்டு கடற்கரையை நோக்கி நடந்தார்கள். நான் நடந்து வீட்டை அடைத்தேன்.

ரன்னிங் டைரி - 191

 27-03-2021 17:00

கேலாங் பூங்கா 

இரண்டு சுற்றுக்கள் ஓடலாம் என்று முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன். மலேசியா வாசுதேவன்  "ஆசை நூறு வகை.." ஆரம்பித்திருந்தார். நான் இருபது நிமிடத்திற்குள் ஓடி முடிக்க நினைத்திருந்தேன். அதனால் ஆரம்பித்ததே சற்று வேகமாக ஆரம்பித்தேன். முதல் சுற்று பத்து நிமிடத்திற்குள் ஓடி முடித்தேன். இரண்டாவது சுற்று தொடங்கியபோது "டிங் டாங் ..இரண்டும் ஒன்றோடு .." ஆரம்பித்தது. பாடலைப் பாடிக் கொண்டே ஓடினேன். டிராபிக் சிக்னலில் நின்றேன். அதன் பிறகு ஓட  மனம்  வரவில்லை. நடக்க ஆரம்பித்தேன். பழைய புத்தகக் கடையைப் பார்த்ததும் நின்று புத்தகங்களை புரட்டினேன்."Godel ,Escher ,Bach : An Eternal Golden Braid" புத்தகம் கையில் கிடைத்தது. பல வருடங்களுக்கு முன் சில பக்கங்கள் வாசித்திருக்கிறேன். அந்த புத்தகத்தை பேருந்தில் வைத்துவிட்டு இறங்கி விட்டேன். அதற்குப் பிறகு இன்றுதான் இந்த புத்தகத்தை தொடுகிறேன். வாசிக்க ஆரம்பித்தேன். கடைக்காரர் இரண்டு டாலர்கள் போதும் என்றார். நான் கொடுத்துவிட்டு புத்தகத்தைத் எடுத்து வந்தேன்.

Saturday, March 20, 2021

ரன்னிங் டைரி - 190

20-03-2021 06:25

கிழக்கு கடற்கரை பூங்கா

வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் எமிலி டிக்கின்ஸன் எழுதிய  "Because I could not stop for death.." கவிதை ஞாபகத்தில் வந்தது. நேற்று இரவு "Poetry for beginners -Margaret Chapman & Kathleen Welton" புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.அதில் இந்த கவிதை இருந்தது. வெகுநாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்த கவிதையை வாசித்தேன்.அற்புதமான கவிதை -இறப்புடன் ஒரு பயணம். சற்று தூரம் நடந்து விட்டு போனில் மொசார்டின் -Symphony 41 in C Minor" play செய்துவிட்டு ஓட ஆரம்பித்தேன். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது மாநில உரிமைகள் பற்றிய "one nation .." இந்த கட்டுரைதான். இந்த தேர்தல் தமிழ் நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்று. கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்த சிறிது நேரத்திலேயே இருவர் என்னை முந்திச் சென்றனர். நான் அவர்களை பின்தொடர ஆரம்பித்தேன்.பதினெட்டு நிமிடங்களில் அவர்களுடன் நான் நான்கு கிலோமீட்டர்களுக்கு மேல் ஓடிருந்தேன். அதற்குமேல் என்னால் அந்த வேகத்தில் ஓட முடியவில்லை. வேகத்தை மிகவும் குறைத்தேன். கவனம் சிம்பனியில் சென்றபோது மொசார்ட் தனி உலகை படைத்துக் கொண்டிருந்தார். எனக்குப் பிடித்த சிம்பனிகளில் இதுவும் ஒன்று. சில நாட்களுக்குப் பிறகு இன்றுதான் கேட்டேன்."Amadeus" திரைப்படம் ஞாபகத்தில் வந்தது. இது மொசார்டின் இறுதி சிம்பனி.அவருடைய இறுதி மூன்று சிம்பனிகள் அடுத்தடுத்து வெகு குறைந்த நாட்களில் எழுதப்பட்டது. மூன்றும் அற்புதமானவை. மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாகா கேட்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன் .இந்த சிம்பனிகள் ..  One of the greatest artistic achievement.. என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Wednesday, March 17, 2021

ரன்னிங் டைரி - 189

17-03-2021 08:26

கிழக்கு கடற்கரை பூங்கா

ஓட ஆரம்பித்தவுடன் மனதில் வந்தது புக்கவோஸ்கி எழுதிய "The Laughing Heart" கவிதைதான் . வெகுநாட்களுக்குப் பிறகு நேற்று இந்த கவிதையை மீண்டும் வாசித்தேன். கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தவுடன் போனில் பாடல்களை ஓட விட்டேன். எழுத்தாளர் சரவணன் கார்த்திகேயன் அவர் இளையராஜாவின் பாடிய பாடல்களை "Voice of God" என்ற folder-ல் வைத்திருந்ததாக ஒரு பதிவில் எழுதி இருந்தார். நான் "என்னோட ராஜா" என்ற ஒரு playlist வைத்திருக்கிறேன். அதைத்தான் இன்று ஓடவிட்டேன்.  "அடி ஆத்தாடி .." என்று ஆரம்பித்தது. ராஜாவின் குரல் ஒரு தனி வகை. ஏனோ கவனம் முழுவதும் இசையில் தான் இருந்தது. மனதில் ஏதும் தோன்றவில்லை. வீட்டை அடையும்போது  "எம் பாட்டு எம் பட்டு .."  என்று ராஜா பாடிக்கொண்டிருந்தார்.

Tuesday, March 16, 2021

ரன்னிங் டைரி - 188

 16-03-2021 09:00

கிழக்கு கடற்கரை பூங்கா

கடுமையான வெய்யில். ஓட ஆரம்பித்தவுடன் வில்லியம் ஷேக்ஸ்பியரின் "Carpe Diem" கவிதைதான். நேற்று அலுவகத்தில் ஷேக்ஸ்பியரின் முழுப் படைப்பு புத்தகத்தைப் எடுத்துப் பார்த்தேன். அப்போது இந்த கவிதை உள்ள பக்கம் திறந்தது. இந்த புத்தகம் நான் ஜப்பான் சென்றபோது தங்கியிருந்த ஹோட்டலில் நான் இரண்டு புத்தங்களை வைத்துவிட்டு books exchange பகுதியில் இருந்து எடுத்து வந்தேன்.   கிட்டத்தட்ட இரண்டு கிலோக்கள் இருக்கும். அதை சிங்கப்பூருக்கு கொண்டுவதற்கு படாத பாடுபட்டேன்.அதை எண்ணிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன்.இன்றைய ஓட்டம் முழுவதும் ஜப்பான் பயண நினைவிலேயே இருந்தது. அதிவிரைவு ரயில் , Sushi ,Sake ,Manga, Ghibli studio படங்கள் ,சுமோ ,ஐஸ் ஸ்கேட்டிங் ,Bento box ,Samurai இப்படி ஒவ்வொன்றும் ஞாபகத்தில் வந்து சென்றது. ஒரு மணி நேரம் ஓடி வீடு திரும்பினேன் 

Saturday, March 13, 2021

ரன்னிங் டைரி - 187

13-03-2021 06:05

கிழக்கு கடற்கரை பூங்கா

ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது ராபெர்ட் ஜி இங்கர்ஸல் எழுதிய "The Creed Science" தான். எவ்வளவு உண்மை. இன்று இது எவ்வளவு அவசியம். மீண்டும் வரிகளை சொல்லிப் பார்த்தேன். கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தபோது போனில் playlist-ஐ shuffle-ல் போட்டுவிட்டு ஓடினேன். காந்தி  எழுதிய "The Ideal Bhangi" என்ற கட்டுரைதான் முதலில் எண்ணத்தில் வந்தது . நேற்று இரவு மனித கழுவுகளை அகற்றுவதைப்  பற்றிய தொடர் ஒன்றை பfirstpost இணையதளத்தில் படித்தேன். அதன் விளைவு இன்று ஓடும்போது இந்த கட்டுரை ஞாபகத்தில் வந்தது. என்னை முந்திக் கொண்டு இருவர் ஓடினர். நான் அவர்களைப் பின்தொடர முடிவு செய்தேன். அப்படியே அவர்களின் பின் ஏழு கிலோமீட்டர் ஓடினேன். அவர்கள் தொடர்ந்து ஓடினார்கள். நான் திரும்பி ஓடினேன். பாடலுக்கு கவனம் சென்றபோது "காதல் மகாராணி .." ஓடிக் கொண்டிருந்தது. என்ன beat ! .  ஒருவர் தனியாக நீந்திக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்துக் கொண்டே ஓடினேன். அவர் கடலில் மிதந்தார். ஒரு நாய் கரையில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது. நான் playlist-ஐ நிறுத்திவிட்டு கடலைப் பார்த்துக் கொண்டே ஓடினேன். குளிர்ந்த காற்று. நான் பல போட்டிகளில் பார்த்த ஒருவர் என்னைக் முந்திச் சென்றார். நான் அவருடன் ஓட ஆரம்பித்தேன். அவர் ஒரு தமிழர். நான் பெயரைக் கேட்கவில்லை. ஆனால் அவர் தமிழில் கைபேசியில் பேசிக் கொண்டே ஓடினார். ஐந்து கிலோமீட்டர் அவருடன் ஓடினேன். அதன்பிறகு நான் திரும்பி முக்கிய சாலைக்கு ஓடினேன். அங்கிருந்து மளிகை கடைக்கு சென்று நின்றேன். கடைக்காரர் "இளையராஜா இல்லையென்றால் நமக்கு கஷ்டம்தான்" என்றார். நான்  "ஓடுவதற்கும் அவர் தேவை கடை திறப்பதற்கும் அவர் தேவை"  என்றேன். மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டை அடைந்தேன்.

Wednesday, March 10, 2021

ரன்னிங் டைரி - 186

 10-03-2021 18:05

கிழக்கு கடற்கரை பூங்கா

நல்ல வெய்யில்.  ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது கீழே உள்ள இரா. மீனாட்சி அவர்களின் கவிதைதான் :

===

மதுரை நாயகியே

  -இரா. மீனாட்சி

===

மதுரை நாயகியே!

மீனாட்சித்தாயே!

படியேறி

நடை தாண்டி

குளம் சுற்றி

கிளி பார்த்து

உன்னருகே ஓடிவரும்

உன்மகளை

உன்மகனே 

வழிவம்பு செய்கின்றான்

கோயிலிலும் காப்பில்லை

உன் காலத்தில்-

அழகி நீ

எப்படி உலாப்போனாய்?

===

நேற்று இரவு இந்தக் கவிதையை மீண்டும்  வாசித்தேன்.  சில வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு இணைய தளத்திலிருந்து copy செய்து வைத்திருந்தேன். அற்புதமான கவிதை. மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தேன். கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தவுடன் போனில் playlist-ஐ shuffle-லில் ஓட விட்டேன். " ஒரு ஜீவன் அழைத்தது.." என்று இளையராஜாவும் சித்ராவும் பாடகிக் கொண்டிருந்தனர். பாடல் ஓடிக் கொண்டிருக்கும்போது கோகுல் பிரசாத் அவர்களின் இளையராஜாவை பற்றிய பதிவுதான்.எனக்கு இந்த பாடலின் இசை மிகவும் பிடிக்கும். மீண்டும் மீண்டும் இந்த பாடலை ஓடவிட்டேன்.வீட்டிற்குத் திரும்பி வரும்போதுதான் கவனித்தேன். வழக்கத்திற்கு மாறாக நிறையப் பேர் கடற்கரையில் விளையாடிக் கொண்டும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டும் இருந்தனர். இந்த கோவிட் காலத்தில் இன்றே முதல் முறையாக  இப்படியானக் காட்சிகளைப் பார்த்தேன். என்னை முந்திக் கொண்டு ஒருவர் ஓடினார். அவரின் வலது தோளில் சிகப்பு .பச்சை மற்றும் கறுப்பு நிறத்தில் பச்சைக் குத்திருந்தது. அது என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டுமென்று அவரைப் பின்தொடர்ந்து ஓடினேன். நான் அவர் அருகில் சொல்லும்போதெல்லாம் அவர் வேகத்தைக் அதிகரித்தார். என்ன ஆனாலும் பரவாயில்லை இன்று அவர் என்ன  பச்சைக் குத்திருக்கிறார் என்று பார்த்தே ஆகவேண்டுமென்று நானும் விடாமல் பின்தொடர்த்தேன் ஐந்து கிலோமீட்டருக்குப் பிறகு நான் அவருக்கு மிக அருகில் பின்தொடர்ந்தேன். அவர் பச்சைக் குத்தி இருந்தது ஒரு பெண்ணின் உருவம் பச்சை முகம் கருப்பு முடி மற்றும் சிகப்பு கழுத்து.அவரை முந்திச் சென்றேன்.  நான் முக்கிய சாலையை அடைந்த போது அவரும் என் பின்னல் வந்து கொண்டிருந்தார். போக்குவரத்து சிக்னலில் இருவரும் நின்றோம் . நான் அவரிடம் "nice tattoo" என்றேன். அவர் சிரித்துக் கொண்டே "you are running good " என்றார். நான் சிரித்தேன். இருவரும் இரு திசையில் சென்றோம். நான் நடந்து வீட்டை அடைந்தேன்.

Tuesday, March 9, 2021

ரன்னிங் டைரி - 185

 08-03-2021 18:25

கிழக்கு கடற்கரை பூங்கா 

மழை மேகம். playlist-ஐ ஆரம்பித்து விட்டு ஓடத் தொடங்கினேன்."என்ன சத்தம் இந்த நேரம் .."  ஆரம்பித்தது. பல நாட்களுக்குப் பிறகு இன்றுதான் சாயங்காலம் ஓடினேன். உடம்பு இந்த சூழலுக்கு சரிசெய்ய பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆனது. கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தபோது ஒரு சீரான வேகத்தை அடைந்தேன்.எக்கச்சக்கமான இந்தியர்கள் நடந்து கொண்டும் ஓடிக் கொண்டும் இருந்தனர். பெரும்பாலோர் பேசிக் கொண்டே நடந்தனர். ஆறு கிலோமீட்டருக்குப் பிறகு பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பனியை ஓடவவிட்டேன். ஏனோ இந்த சிம்பனியை கேட்கும்போதெல்லாம் வேறெந்த நினைப்பும் வருவதில்லை. கவனம் முழுவதும் இசையில் மட்டுமே இருந்தது. பீதோவனோடு வீட்டை அடைந்தேன்.

Sunday, March 7, 2021

ரன்னிங் டைரி - 184

  07-03-2021 05:45

வீட்டைச் சுற்றி கேலாங் மீன் சந்தை 

நல்ல குளிர். வில்லியம் வெர்ட்ஸ்வோர்த்தின் "My Heart Leaps Up" கவிதையைச் சொல்லிப் பார்த்தேன். முழுவதும் சொல்ல முடிந்தது. அற்புதமான கவிதை .இன்றும் earpiece எடுத்துச் செல்லவில்லை. வேகமாக ஓடினேன். குறைவான தூரம். சிக்னலில் சைக்கிளில் சென்றவர் என்னைப் பார்த்து கைகாட்டினார். நானும் கைகாட்டினேன். சிக்னலைக் கடந்தபோது பேப்பர் போடுபவர் சத்தமாக "கண்டா வரச் சொல்லுங்க .." என்று ரசித்துப் பாடிக் கொண்டுச் சென்றார். மாதா கோவில் கதவு பூட்டி இருந்தது. "ஞானம் நிறை .." பாடல் மனதில் வந்து சென்றது. மீன் சந்தை சாலை வந்ததும் என்னென்ன வாங்க வேண்டுமென்று மனதில் பட்டியல் போட ஆரம்பித்தேன். பட்டியல் போட்டு முடியும்முன் சந்தையை அடைந்திருந்தேன்.


Saturday, March 6, 2021

ரன்னிங் டைரி - 183

 06-03-2021 06:00

கிழக்கு கடற்கரை பூங்கா 

நல்ல குளிர்.  இன்று கலீல் ஜிப்ரானின் "On Children" கவிதையைச் சொல்லிப் பார்த்தேன். கிட்டத்தட்ட முழுக் கவிதையையும் சொன்னேன். அந்தக்  கவிதை எவ்வளவு உண்மை.

Your children are not your children.

They are the sons and daughters of Life’s longing for itself.

They come through you but not from you,

And though they are with you yet they belong not to you.

போனில் பாடல்களைப் ஓட செய்தேன். "இது ஒரு பொன்மாலை பொழுது .."  ஆரம்பித்தது. கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தபோது ஆம்புலன்சும் காவல் கார்களும் நின்றிருந்ததன. ஒரு பெண்ணை காவலர்கள் விசாரித்துக் கொண்டிருந்தனர். என்ன நடந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டே ஓடினேன் . சற்றுதூரம் ஓடினேன் .மீண்டும் மீண்டும் எண்ணத்தில் ஆம்புலன்சே வந்தது.  ஏனோ அதற்குமேல் ஓட மனம்வரவில்லை. திரும்பி வீட்டிற்கு ஓட ஆரம்பித்தேன்.முக்கிய சாலையை அடைந்தபோது இருவர் கையில் கிரிட்கெட் பேட்டோடு என்னை நோக்கி நடந்து வந்தனர்.எங்க விளையாட போறீங்க என்று கேட்டேன். ஹாஸ்டல தான் அண்ணா என்றார்கள். நான் கிரிக்கெட் மேட்ச் விளையாடி  பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. பேட்டைப் பிடித்தே இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பேட் ஒன்று வாங்க வேண்டுமென்று  எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Wednesday, March 3, 2021

ரன்னிங் டைரி - 182

 03-03-2021 09:00

உபியிலிருந்து வீடுவரை 

கடுமையான வெய்யில். ஓடுவாதா வேண்டாமா என்று எண்ணிக் கொண்டே பேருந்து நிலையம் நோக்கி நடந்தேன். சிக்னலில் பேருந்து வர எவ்வளவு நேரம் இருக்கிறது என்று கைபேசியில் பார்த்தபோது பதினான்கு நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்றது. காத்திருப்பத்திற்கு பதில் ஓடுவதே சிறந்தது என்று முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன்.earpiece இல்லை. வெகுநாட்களுக்குப் பிறகு இன்றுதான் காதில் எதுவும் இல்லமால் ஓடினேன். ஓட ஆரம்பித்தக் கனமே எண்ணத்தில் தோன்றியது இரண்டு வார்த்தைகள்  "lateral surveillance". ஒரு வாரமாக அதைப் பற்றி வாசித்து வருகிறேன். குடிமகனே குடிமகனைக் கண்காணித்தல். மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே இதை அமல்படுத்தி இருக்கிறார்கள் என்று வாசித்த ஞாபகம்.  அதன் பெயர்  C-Plan app. "To receive inputs from Certain identified individuals in villages across the state". யார் அந்த "certain identified individuals". எப்படி இவர்களை தேர்வு செய்கிறார்கள் என்பதெல்லாம் மார்மமாக இருக்கிறது. ஹைதராபாத்தில் "Hawk Eye" என்ற செயலி நடைமுறையில் இருக்கிறது. அது "to empower common man to become Citizen Police" என்று விளம்பரப்படுத்தப்படுகிறது . பல நாடுகளில் இப்படி இருக்கிறது  .  Right to Privacy மற்றும் Right to freedom of speech and expression என்னவாகும் . இது எங்கு போய் முடியுமோ என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Tuesday, March 2, 2021

ரன்னிங் டைரி - 181

 02-03-2021 08:30

கிழக்கு கடற்கரை பூங்கா 

இன்று குறைந்த தூரம்தான் ஓட வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். அதனால் சற்று வேகத்துடன் ஓட ஆரம்பித்தேன், இன்று  T.S  Eliot  எழுதிய "Ash Wednesday" என்ற கவிதையைச் சொல்லிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன். நேற்றுப் போல இன்றும்  கவிதை முழுவதுமாக நினைவில் வரவில்லை. இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த கவிதையை முதன் முதலில்  கோயம்பத்தூரில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் ஒரு பாதிரியார் சொல்லத்தான் கேட்டேன். அவர் இந்த கவிதையை ரசித்து உருகிச் சொன்னார். அவர் சொன்ன இந்த கவிதை  சரியா தவறா என்று கூட எனக்குத் தெரியாது ஆனால் அவர் சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்தது. மூன்று கிலோமீட்டர்கள் ஓடிய பிறகு போனில்  'mixed songs' playlist-ஐ play செய்தேன். "ஆசிச்சவன் ஆகாயத்தில்' என்று சூர்யா (மலையாள நடிகர்) பாடிக் கொண்டிருந்தார். அந்தப் பாடல் முடிந்தவுடன் பாடல்களை முழுவதும் நிறுத்திவிட்டு ஓடினேன். ஏனோ பாடல்கள் கேட்க விருப்பம் இல்லாமல் போனது.வீட்டிற்கு செல்ல இன்னும் ஏழு  கிலோமீட்டர்கள் ஓட வேண்டும். மனதில் எதுவுமே தோன்றவில்லை ஒருவிதமான சோர்வு ஒட்டிக்கொண்டது. மெதுவாக ஓடி வீட்டை அடைந்தேன்.

Monday, March 1, 2021

ரன்னிங் டைரி - 180

01-03-2021 08:32

கிழக்கு கடற்கரை பூங்கா 

இன்றிலிருந்து ஓடும்போதெல்லாம் ஒரு கவிதை நினைவில் இருந்து சொல்லவேண்டுமென்று நேற்று இரவு முடிவு செய்தேன். அதென்ன படியே இன்று காலையில் எழுந்தவுடன் HW  Longfellow  எழுதிய  "A  Psalm of Life " என்ற கவிதையை வாசித்தேன். வாக்மேனில் பாடல் ஏதும் போடாமல் ஓட ஆரம்பித்தேன் . வாசித்த கவிதையைச் சொல்லிப் பார்த்தேன். என்னால் முழுவதையும் ஞாபகத்தில் இருந்து சொல்ல முடியவில்லை. முதல் இருவரிகள் மற்றும் இரண்டு stanzaகளும் மட்டும் தான் நினைவில் இருந்தது.

Life is real! Life is earnest

   And the grave is not its goal.

Dust thou art, to dust returnest,

   Was not spoken of the soul.


Lives of great men all remind us

   We can make our lives sublime,

And, departing, leave behind us

   Footprints on the sands of time;

ஓடிக் கொண்டே தொலைபேசியை எடுத்து Poetry Foundation வலைத்தளத்தில் இந்த கவிதையை மீண்டும் வாசித்தேன். முழுவதும் வாசித்து முடித்தவுடன் இளையராஜா பாடல்களை shuffle-லில் போட்டுவிட்டு ஓடினேன். கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தபோது வெய்யில் முகத்தில் அறைந்தது. இன்று வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் பாட்டில் எடுத்து சென்றது மிகவும் உதவியாய் இருந்தது. தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போது "Metanoia" என்ற வார்த்தை மனதில் தோன்றியது. எங்கு படித்தது ? யாரவது சொல்லிய வார்த்தையா? என்று யோசித்துக் கொண்டே ஓடினேன். ஆறு கிலோமீட்டர் ஓடிய பிறகு திடீரென்று ஞாபகத்தில் வந்தது Father Raniero Cantalamessa அவர்களின் உரையில் படித்தது. இந்த தவக்காலத்தில் தெரிந்துக் கொள்ளவேண்டிய வார்த்தைதான். திரும்பி ஓடிவரும் போதுதான் கவனம் ஓடிக் கொண்டிருந்த பாடலில் சென்றது மனோவும் சித்ராவும்  "குடகு மலை .." பாடிக் கொண்டிருந்தனர். ஏனோ நேற்றுப் பார்த்த மௌனராகம் திரைப்படம் ஞாபகத்தில் வந்தது. ஜானகி அம்மாவிற்கும் சுவர்ணலதாவிற்கும் இடைப்பட்ட வசீகரக் குரல் சித்ராவிற்கு. என் playlist-ல் சித்ராவின் பாடல்கள்தான் அதிகம். மலையாளம் தெலுங்கு உட்பட.எதிரே ஓடி வந்தவரால் கவனம் பாடலில் இருந்து அவரிடம் சென்றது. பல தடவை பார்த்த அந்த தாத்தா என்னைப் பார்த்து கைகாட்டி சிரித்தார். நானும் அவ்வாறே செய்தேன்.இன்று செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன் .