Tuesday, September 29, 2020

ரன்னிங் டைரி - 118

 28-09-2020 06:35

தஞ்சோங் காத்தோங் ரோடு

மழை தூரிக் கொண்டிருந்தது. நான் காபி போட்டு குடித்துவிட்டு மழை நிற்கும் வரை காத்திருந்தேன். மழை நின்றவுடன் ஓட ஆரம்பித்தேன்.காதில் மொசார்டின் நாற்பத்தி ஒன்றாவது சிம்பொனி ஒலிக்க ஆரம்பித்தது. இந்த சிம்பொனி சீடியை (CD) வாங்கிய சம்பவம் ஞாபகத்தில் வந்தது. அப்போதெல்லாம் பூகிஸ் MRT அருகில் இசை CD-க்கள் விற்பார்கள் . அங்குதான் நான் Mozart Hits என்ற பெயரிட்ட CD-யை வாங்கினேன். கடைக்காரர் இந்த இசை உங்களின் மூளைக்கு நல்லது என்றார். நான் சிரித்துக் கொண்டே பணம் கொடுத்து வாங்கினேன். அப்போது நான் ஒரு வீட்டில் ஒரு அறையில் தனியாக தங்கி இருந்தேன். என்னிடம் அப்போது Panasonic music system இருந்தது. மதிய உணவிற்கு பிறகு அந்த CD-யை player போட்டு play செய்தேன். அதுவரை நான் கேட்டிராத ஒருவிதமான இசை. மனதில் பல எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தது. எனக்கு அதற்கு முன் அப்படி நடந்ததில்லை .அதன் பிறகு தேடித் தேடி சிம்பொனி இசையை கேட்க ஆரம்பித்தேன். இந்த தேடல் இன்றும் தொடர்கிறது. வீட்டிற்கு திரும்பும் போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி ஏய்ப்பு பற்றிய நியூயார்க் டைம்ஸின் கட்டுரை எண்ணத்தில் வந்தது. அப்படி ஒரு விரிவான கட்டுரையை இந்தியாவில் எழுதி விட முடியுமா என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 117

28-09-2020 06:05

தஞ்சோங் காத்தோங் ரோடு

நல்ல குளிர். பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பொனி ஒலிக்க ஆரம்பித்தது. எனக்கு பிடித்த சிம்பொனிகளில் இதுவும் ஒன்று. அதுவும் Bernstein conduct செய்த இந்த தொகுப்பு மிகவும் பிடிக்கும். முதல் ஐந்து நிமிடத்திலேயே நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்று விடுவார் பீத்தோவன். அதன் பிறகு நடப்பதெல்லாம் மேஜிக். எனது முழுக்கவனமும் அதில்தான் இருந்தது. இசையின் வேகம் கூடும் போதெல்லாம் நான் வேகமாக ஓடினேன் அதன் வேகம் குறையும் போதெல்லாம் என் வேகமும் குறைந்தது. எனக்கு இப்படி நடப்பது புதிதல்ல. பல துள்ளல் பாடல்களுக்கும் இப்படித்தான் நடக்கும். அது என்னவோ சிம்பொனிகளை கேட்கும் போதெல்லாம் இளையராஜாதான் எண்ணத்தில் வருவார். "The more you know about symphony the more you appreciate music of Ilaiyaraja"- எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.சிங்கப்பூர் வந்த பிறகுதான் மேற்கத்திய இசை கேட்க ஆரம்பித்தேன் அதன் பிறகுதான் இளையராஜாவின் இசையை என்னால் முழுவதும் உணர முடிந்ததது. Fourth Movement ஆரம்பித்த பொழுது நான் வீட்டை அடைந்திருந்தேன்.

Saturday, September 26, 2020

ரன்னிங் டைரி - 116

26-09-2020 05:25

தஞ்சோங் காத்தோங் ரோடு

கிழக்கு கடற்கரை பூங்கா செல்லலாம் என்று எண்ணி அந்த பக்கம் ஓட ஆரம்பித்தேன். எண்ணம் முழுவதும் SPB-யின் பாடல்களில் தான் இருந்தது. நேற்று இரவு அவரின் புகைப் படத்தைக் காட்டி "He is one of the greatest Singers of all time" என்றேன். அவர் இறந்த செய்தி கேட்டவுடன் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. அதுவே அவரின் வெற்றி. நம்மில் ஒருவர் . நம்மோடு ஒருவர். நமக்குள் ஒருவர். அவரின் இறந்த உடலை என்னால் பார்க்க முடியவில்லை. நல்ல வேளை எங்கள் வீட்டில் எந்த இந்திய டிவி சேனல்கள் இல்லை. திரும்ப திரும்ப அவரை அப்படி பார்ப்பது கொடுமை. நான் கிழக்கு கடற்கரை பூங்காவிற்குள் செல்லவில்லை கடலை சற்று தூரத்திலிருந்தே பார்த்து விட்டு வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தேன். என் காதில் Dvork-ன் "New World Symphony" ஒலித்துக் கொண்டிருந்தது. எனக்கு என்னவோ இந்த சூழ்நிலைக்கு இந்த சிம்பொனி தான் சரி என்று பட்டது. அதைக் கேட்டுக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Rest In  Peace Sir ! 


ரன்னிங் டைரி - 115

 25-09-2020 08:25

தஞ்சோங் காத்தோங் ரோடு - ஓல்ட் ஏர்போர்ட் ரோடு 

இன்று போனிலிருந்து பாடல்கள் கேட்கலாம் என்று ப்ளூடூத் இயர் போன்களை எடுத்து வந்திருந்தேன். எனது போனில் இரண்டே playlists தான். ஒன்று "Symphonies" மற்றொருன்று "Classical short". காதுகளில் வைத்துவிட்டு "Classical short"-ல் shuffle கிளிக் செய்து விட்டு ஓட ஆரம்பித்தேன். என்ன இசைக் கோர்வை வரும் என்று பெரிய ஆவலுடன் கவனம் முழுவதையும் அதில் செலுத்தினேன். முதலில் வந்தது "Godfather suite " என்ன ஒரு அற்புதமான இசை. என் மனது ஓடுவதில் இருந்து இசைக்கு மாறியது.Godfather பட வரிசைகள் என் கண்முன்னே வந்து சென்றன. "Finance is a gun. Politics is knowing when to pull the trigger." இந்த டயலாக் மறக்க முடியாதது.இந்த திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர் Nino Rota. மனுஷன் அணு அணுவா ரசிச்சு இசை அமைத்திருக்கிறார். இந்த இசையில் லயித்து கொண்டிருக்கையில் இந்த கோர்வை முடிந்து அடுத்தது ஆரம்பித்தது. என்னத்த சொல்ல . ஆரம்பித்த இசை கோர்வை  "The good the bad and the ugly theme" . மனம் ஓட்டத்தை முழுவதும் மறக்க ஆரம்பித்தது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு இசை அமைத்தவர் Ennio Morricone. இவர் ஒரு genuis. இது முடிந்தவுடன் வந்தது எனக்கு மிகவும் பிடித்த "Sabre Dance" .இதை இசை அமைத்தவர் Aram Khachaturian. என்ன ஒரு துள்ளலான இசை . எனக்கு Aram Khachaturian பற்றி ஒன்றும் தெரியாது இந்த இசைக் கோர்வையைத் தவிர. வீட்டிற்கு அருகில் வந்தவுடன் Richard Wagner-ன் "Ride of the Valkyries" ஆரம்பித்தது. ஓடுவதை நிறுத்தி விட்டு இசையை ரசித்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்

ரன்னிங் டைரி - 114

 24-09-2020 08:25

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓட ஆரம்பித்தவுடன் "sauvignon blanc" என்கின்ற இந்த வார்த்தைகள்தான்.இது ஒரு ஒயின் வகை. ஏன் இந்த பெயர் தற்போது எண்ணத்தில் தோன்றுகின்றது  என்று தெரியவில்லை. ஆனால் ஓடி முடிக்கும் வரை மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள்தான் வந்தது.

Thursday, September 24, 2020

ரன்னிங் டைரி - 113

23-09-2020 08:45

உபியில் இருந்து வீடு வரை 

கடுமையான வெய்யில்.ஓடுவதற்கு முன்பே அது என்னை அச்சுறுத்தியது. மெதுவாக ஓடவேண்டுமென்று முடிவெடுத்து ஓட ஆரம்பித்தேன்.வாக்மேன் இன்றும் வேலை செய்யவில்லை. ஓட ஆரம்பித்தவுடன் மனதில் தோன்றியது "inter-disciplinary'  என்ற வார்த்தைகள்தான். இன்றைய சூழலில் எந்த ஒரு வேலைக்கும் இது அவசியம். ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றிருப்பது நல்லது ஆனால் அதை சுற்றியுள்ள துறையில் அறிமுகம் இல்லை என்றால் வேலையில் நிலைத்து இருப்பது மிகவும் கடினம். நான் செய்த வேலைகளை யோசித்துக் கொண்டே ஓடினேன். நான் programmar-ஆக வேலையைத் தொடங்கினேன். ஆனால் என் boss நீ one dimention-அ சிந்திக்கக் கூடாது .நீ செய்வது ஒரு பகுதி என்றாலும் ஒரு ப்ராஜெக்ட் செய்தால் அதில் உள்ள அனைத்தையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு  தொடக்கத்திலேயே சுதந்திரம் கொடுத்தார். அதுவே எனக்கு பல துறைகளின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள உதவியது. எனக்கும் அந்த அணுகுமுறை புடித்து. எனக்கு சம்பந்தமே இல்லாத பல துறைகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.


Tuesday, September 15, 2020

ரன்னிங் டைரி - 112

  15-09-2020 08:18

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓட ஆரம்பித்தவுடனே எண்ணத்தில் வந்தது ராபர்ட் பிரஸ்ட்டின்  (Robert Frost) "Road Not Taken" கவிதை தான். அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் அடங்கிய புத்தகம் சென்ற வாரம் எனக்கு கிடைத்தது. ஒரு சில கவிதைகளை நேற்று இரவு வாசித்தேன் . எனக்கு பிடித்திருந்தது. அதிலும் மேல கூறிய கவிதை சிறு வயதில் மனப்பாடமாக தெரியும் . இப்போது கொஞ்சம் தெரியும். ஏன் அவரைப் பற்றி பெரிய அளவில் தமிழில் பேசப் படவில்லை என்று யோசித்துக் கொண்டே ஓடினேன்.எனக்கு பிடித்த தமிழ் கவிதைகளை பிரிண்ட் அவுட்  எடுத்து ஒரு புத்தகம் போல வைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Monday, September 14, 2020

ரன்னிங் டைரி - 111

 14-09-2020 08:20

தஞ்சோங் காத்தோங் ரோடு

இதமான வெய்யில்.ஓட ஆரம்பித்தவுடன் இளையராஜாதான் எண்ணத்தில் வந்தார்.அவரின் மலேசிய கச்சேரியை நேற்று இரவு பார்த்தேன். அதன் பாதிப்பு. திரும்ப திரும்ப அவரின் இசைக்கே நான் செல்கிறேன்.நான் அவரின் தெலுங்கு பாடல்களை கேட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறேன்.மௌண்ட்பேட்டன் ரோட்டில் ஒருவர் கையில் லேப்டாப் பையுடன் வேகமாக நடந்து கொண்டிருந்தார் அவரைப் பார்த்தவுடன் எனக்கு நேற்று படித்த ஒரு கட்டுரை தான் ஞாபகத்தில் வந்தது.   அதில் கூறப்பட்டுள்ளது போல எதற்காக வேலை செய்கிறோம் என்பதை சரியாக தெரிந்திருந்தால் அந்த வேலை மகிழ்ச்சியாக இருக்கும்  எனபது என்னை பொறுத்தவரை உண்மை. நான் பலபேரிடம் அதை சொல்லியுள்ளேன்.இன்று என்னென்ன செய்ய வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Sunday, September 13, 2020

ரன்னிங் டைரி - 110

13-09-2020 05:25

தஞ்சோங் காத்தோங் ரோடு

குளிர்ந்த காற்று.மழை வருமோ என்று எண்ணிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன்.சில நிமிடங்களிலேயே ஒரு சீரான வேகத்தை அடைந்தேன். மிக உற்சாகத்துடன் ஓடினேன். ஞாயிறு காலை எப்போதுமே என்னையறியாமல் ஒரு உற்சாகம் ஒட்டிக் கொள்ளும்.இன்றும் அப்படியே. எதிரே  ஒரு வெளிநாட்டவர்நடந்து வந்தார். என்னைப் பார்த்து சிரித்தார். நானும் "hi" என்று சொன்னேன். இரண்டாம் உலகப் போர் ஞாபகத்தில் வந்தது. நேற்று ஒரு டாக்குமெண்ட்ரி பார்த்தேன். நான்கு மணி நேரம் ஓடியது. பல இடங்களில் கண்ணில் கண்ணீர் வந்தது.ஒரு மனிதன் எவ்வளவு மோசமாக இருக்கக் கூடும் என்பதற்கு ஹிட்லர் மற்றும் அவரின் சகாக்களே உதாரணம். மேலும் இப்போரைப் பற்றி படிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன். எதிரே ஒரு முதிய ஜோடிகள் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் "hi" என்றார்கள் நானும் "hi" என்றேன். முக்கில் திரும்பும் போது பாரதியார் எண்ணத்தில் தோன்றினார்.  அவரைப் பற்றி இன்னும் நிறைய வாசிக்க வேண்டும். அதற்கென்றே ஒரு புத்தகப் பட்டியலை தயார் செய்திருந்தேன்.அடுத்த தடவை இந்தியா செல்லும் போது வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.மெயின் ரோட்டிற்கு வந்தபோது இன்று மார்க்கெட்டில் என்ன வாங்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே மார்க்கெட்டை அடைந்தேன்.

பாரதியார் பற்றிய புத்தக பட்டியல் :

1.பாரதி விஜயம்: மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் (தொகுதி 1) -- பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம். (சந்தியா பதிப்பகம்)

2.பாரதி விஜயம்: மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் (தொகுதி 2) -- பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்.(சந்தியா பதிப்பகம்)

3.பாரதியியல்: கவனம் பெறாத உண்மைகள் -- முனைவர் ய. மணிகண்டன்.(பாரதி புத்தகாலயம்)

4.மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும் -- முனைவர் ய. மணிகண்டன். (பாரதி புத்தகாலயம்)

5.பாரதியின் இறுதிக் காலம்: 'கோவில் யானை' சொல்லும் கதை -- ஆய்வும் பதிப்பும் முனைவர் ய. மணிகண்டன்.  (காலச்சுவடு)

6.பாரதியைப் பற்றி நண்பர்கள் -- தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன். (காலச்சுவடு)

7.பாரதியின் கடிதங்கள் -- தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன். (காலச்சுவடு)

8.பாரதியார் கவிநயம் -- தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன்.

9. பாரதி -கவிஞனும் காப்புரிமையும்: பாரதி படைப்புகள் நாட்டுமையான வரலாறு -- அ.இரா.வேங்கடாசலபதி

10. பாரதி கருவூலம்: 'ஹிந்து' நாளிதழில் பாரதியின் எழுத்துகள் (முதல் முறையாக நூல் வடிவில்) -- அ.இரா.வேங்கடாசலபதி

11.பாரதி: 'விஜயா' கட்டுரைகள் (முதன்முறையாக நூல்வடிவில்) -- தொகுப்பு அ.இரா.வேங்கடாசலபதி

12.எழுக, நீ புலவன்! : பாரதி பற்றிய கட்டுரைகள் --தொகுப்பு அ.இரா.வேங்கடாசலபதி 

13. என் குருநாதர் பாரதியார் - ரா. கனகலிங்கம்

14.மகாகவி பாரதியார் - வ.ரா

15.பாரதி நினைவுகள்: ம.கோ.யதுகிரி அம்மாள் -- மீள் பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் (சந்தியா பதிப்பகம்)

16.பாரதியார் சரித்திரம் -- செல்லம்மாள் பாரதி (பாரதி புத்தகாலயம்)

17. மகாகவி பாரதியார் கட்டுரைகள் -- தொகுப்பாசிரியர்கள் ஜெயகாந்தன் & சிற்பி பாலசுப்பிரமணியம் (சாகித்ய அகாதெமி )

18.பாரதியார் கட்டுரைகள் -- பூம்புகார் வெளியீடு

மேலும் பல நூல்களுக்கு இங்கே சொல்லவும் 

Friday, September 11, 2020

ரன்னிங் டைரி - 109

   11-09-2020 08:20

தஞ்சோங் காத்தோங் ரோடு

இதமான வெய்யில். வாக்மேனில் மொத்தம் பத்தே பாடல்களை வைத்து விட்டு மற்ற அனைத்தையும் டெலீட் செய்துவிட்டேன். வேகமாக ஓட ஆரம்பித்தேன். திடீரென்று நாம் தமிழர் கட்சிக்குள் நடக்கும் பிரச்சனை தான் ஞாபகத்தில் வந்தது. என்னத்த சொல்ல!  "conditioning" என்ற வார்த்தை ஞாபகத்தில் வந்தது.சுரேஷ் சம்பந்தம் அவர்களின் பேட்டியை நேற்று பார்த்தேன். அதில் அவர் இந்த வார்த்தையை பல முறை பயன் படுத்துகிறார். ஆனால் அவர் கூறுவது முற்றிலும் உண்மை சிலபஸ் தவிர வேற எதையும் சிந்திக்க நம்மை நம் கல்வியாளர்கள் அனுமதிப்பதில்லை. அந்த பேட்டியையே நினைத்துக் கொண்டு வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 108

  10-09-2020 12:05

தஞ்சோங் காத்தோங் ரோடு

இன்று காலையில் நல்ல மழை அதனால் ஓட முடியவில்லை. மதியம் வானம் மேக மூட்டத்துடன் இருந்தத. அதனால் ஓட ஆரம்பித்தேன். கிழக்கு கடற்கரை செல்லலாம் என்று எண்ணி அந்த பக்கம் ஓடினேன் ஆனால் டிராபிக் சிக்னல் வந்தவுடன் வலது பக்கம் திரும்பி நான் இந்த மாதங்களில் ஓடும் வழிக்கே சென்றேன்.வாக்மேனில் ஏதோ பிரச்சனை பாடல்கள் சரியாக கேட்கவில்லை. ஓடிக்கொண்டே அதைக் கழற்றி அணைத்து விட்டு மீண்டும் ஆன் செய்தேன் .சரியாக ஓடியது. ஓட ஓட வெய்யில் அதிகமாகியது. மனதில் எந்த எண்ணமும் வரவில்லை. உடலில் வெய்யில் சூட்டை என்னால் உணர முடிந்தது. நான் வீட்டை அடையும் போது என் உடலில் ஏதும் இல்லை. (hit the wall )!


ரன்னிங் டைரி - 107

 08-09-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓடுவதா வேண்டாமா என்று எண்ணிக் கொண்டே மெதுவாக ஓட ஆரம்பித்தேன். ஓடவே மனமில்லை அதனால் பத்து நிமிடங்கள் ஓடிய பிறகு வீட்டிற்கு திரும்பினேன்.

Monday, September 7, 2020

ரன்னிங் டைரி - 106

   07-09-2020 08:25

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓடும் முன் ஒரு பெரியவர் கேசட் வாக்மேனில் பாட்டு கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஓட ஆரம்பித்தவுடன் என் முதல் கேசட் வாக்மேன் ஞாபகத்தில் வந்தது. என் மாமா சிங்கப்பூரிலிருந்து கொண்டுவந்தது. அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். சில மாதங்கள் அந்த வாக்மேன்தான் எல்லாமும் ஆகி போனது.வால்க்மேனில் இருந்து கல்லூரி நாட்களுக்குச் சென்றது. இளையராஜாவும் ரஹ்மானும் எங்களை மகிழ்ச்சி படுத்திய காலம். ஹரிஹரன் ஹிட்ஸ் , மோகன் ஹிட்ஸ் மற்றும் பல ஹிட்ஸ்கள் கொண்ட கேசட்டுகள் ஹாஸ்டலில் வலம் வரும். மாறி மாறி ஏதோ ஒரு ஹிட்ஸை கேட்டுக் கொண்டிருப்போம். இடையில் சூரியன் FM வந்தது.எல்லோரும் அதற்கு மாறினோம்.பேக்கரியில் டீ குடித்துக் கொண்டே சூரியன் FM கேட்பதென்பது ஒரு அலாதியான சுகம்.அப்படியே ரேடியோ நாட்களை யோசித்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 105

  06-09-2020 05:25

தஞ்சோங் காத்தோங் ரோடு

நல்ல குளிர். காற்றில் ஈரத்தன்மை தெரிந்தது. வேகமாக ஓட ஆரம்பித்தேன். நிறைய வயதானவர்கள் நடந்தும் ஓடியும் கொண்டிருந்தனர்.நான் நிலா வெளிச்சத்தில் மரங்களைப் பார்த்துக் கொண்டே ஓடினேன். மரங்களைப் பற்றிய தமிழ் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். வளைவு வந்தவுடன் வேகத்தை குறைத்தேன். அங்கு இரண்டு காவலர்கள் டார்ச் லைட்டை என்னை நோக்கி அடித்தனர். நான் பயந்து மேலும் வேகத்தைக் குறைத்தேன். அவர்கள் "Sorry" என்று சொல்லிவிட்டு டார்ச் லைட்டை கீழே ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரில் அடித்தனர். நான் அவர்கள் என்ன தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டு தண்ணீரையே பார்த்துக் கொண்டு மார்க்கெட்டை நோக்கி ஓடினேன். சீரிய வேகத்தில் மார்க்கெட்டை அடைந்தேன்.

Friday, September 4, 2020

ரன்னிங் டைரி - 104

 04-09-2020 08:15

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓட ஆரம்பித்த சில நொடிகளிலேயே வாக்மேன் வேலை செய்யவில்லை. அதனால் அதை கழற்றி விட்டு ஓட ஆரம்பித்தேன். நல்ல வெய்யில். ஓடிக்கொண்டே வரிசையாக நின்றிருக்கும் மரங்களைப் பார்த்தேன். எனக்கு மரங்கள் மீது ஒருவித ஈர்ப்பு உண்டு. சிங்கப்பூர் வந்த புதிதில் நான் பல தடவை NParks-கு தன்னார்வு தொண்டு செய்துள்ளேன். அப்படித்தேன் ஒரு முறை "Heritage Trees" பற்றி பேச்சு நடந்தது. அதற்கு பிறகு நான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த மரங்களை பார்க்க ஆரம்பித்தேன். மரங்களின் பெயர்களை தெரிந்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன்.மரங்கள் பேரழகு என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Thursday, September 3, 2020

ரன்னிங் டைரி - 103

03-09-2020 08:28

தஞ்சோங் காத்தோங் ரோடு

லேசாக மழை தூர ஆரம்பித்திருந்தது அதனால் வேகமாக ஓட ஆரம்பித்தேன். கவனம் முழுவதும் மூச்சிலும் நிலத்திலும்தான் இருந்தது. பத்து நிமிடத்திற்கு பிறகு வெய்யில் அடிக்க ஆரம்பித்தது. நான் வேகத்தைக் குறைத்தேன். ஒரு சீரான வேகத்திற்கு விரைவிலேயே சென்றேன்.எனக்கு முன் ஒரு இந்திய ஜோடி தங்கள் குழந்தையுடன் நடந்து கொண்டிருந்தார்கள். அந்த குழந்தை என்னை பார்த்து கைக் காட்டியது. நானும் கைக் காட்டினேன். அந்த பெற்றோர்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள். நானும் சிரித்துக் கொண்டே அவர்களைக் கடந்து சென்றேன்.திடீரென்று மரியா ரெஸ்ஸா (Maria Ressa) ஞாபகத்தில் வந்தார். அவரின் கட்டுரைகள் பலவற்றை நான் படித்திருக்கிறேன். சம்பந்தமே இல்லாமல் அவர் ஏன் எண்ணத்தில் வந்தார் என்று யோசித்துக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

Tuesday, September 1, 2020

ரன்னிங் டைரி - 102

  31-08-2020 08:30

தஞ்சோங் காத்தோங் ரோடு

இன்று வேகமாக ஓட வேண்டுமென்று முடிவு செய்து வேகமாக சீராக ஓடினேன். தொடக்கம் முதல் கடைசி வரை ஒரே வேகத்தில் ஓடி முடித்தேன். இப்படி நிகழ்வது எப்போதாவதுதான். எண்ணம் முழுவதும் குடிக்க போகும் காபியில் தான் இருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு மோக்கா பாட் (Moka Pot) வாங்கினேன். அதில் காபி குடிப்பது எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. தினமும் ஒருமுறையாவது காபி போட்டு குடிக்கிறேன். நான் காபி மற்றும் டீ இரண்டையும் விரும்பி குடிப்பவன். இந்த கொரோன நாட்களில் காபி குடிப்பதென்பது ஒரு தவம் போல ஆகிவிட்டது. நிதானமாக ஒவ்வொரு மடக்காக ரசித்து குடிக்கும் போது ஏற்படும் இன்பம் அலாதியானது. அதையே நினைத்துக் கொண்டு வீட்டை அடைந்தேன்.