Friday, November 27, 2020

ரன்னிங் டைரி - 148

27-11-2020 09:06

உபியிலிருந்து வீடுவரை 

மழை மேகம். மழை வரும் என்று நினைத்துதான் ஓட ஆரம்பித்தேன். ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது  ஈட்ஸ் எழுதிய  "The Second Coming" என்ற கவிதைதான். எனக்கு பிடித்த கவிதை.மனதுக்குள் சொல்லி பார்த்தேன். என்னால் முழுவதையும் நினைவில் இருந்து சொல்ல முடியவில்லை.இந்த கவிதை எழுதி நூறு வருடங்கள் ஆகிவிட்டன. இரண்டு தினங்களுக்கு முன் அதைப் பற்றி ஒரு கட்டுரை வாசித்தேன் அதன் பாதிப்பு. யூனுஸ் வளைவில் சிறுவன் ஒருவன் அர்ஜென்டினா கால்பந்து அணியின் சட்டை அணிந்து எதிரில் வந்து கொண்டிருந்தான். அதில் "Messi " என்று எழுதியிருந்தது. பல தடவை இப்படி சட்டை அணிந்து ஓடுபவர்களை பார்த்திருக்கிறேன் ஆனால் இன்று அந்த சிறுவனை பார்த்தவுடன் மாரோடனா தான் எண்ணத்தில் தோன்றினார்.நான் அவர் விளையாடியதை யூடூபில் தான் பார்த்திருகிறேன். அவரைப் பற்றி பல புத்தகங்களில் படித்திருக்கிறேன் .அவருக்கு இரண்டு பக்கங்கள் உள்ளது .ஒன்று அற்புதமான கால்பந்தாட்டக்காரர். பந்திற்கும் அவருக்கும் ஒரு அற்புதமான உறவு உண்டு. அவர் சொல்வதையெல்லாம் அது கேட்டது. அது  சொல்வதையெல்லாம் அவர் கேட்டார். தனது அணிக்காக அனைத்தையும் கொடுத்தவர். களத்தில் அவரே எல்லாம். மற்றொன்று களத்திற்கு வெளிய ஆடிய மாரோடனா. அரசியல் போதை மருந்து மற்றும் பல விசயசங்களில் தன்னை ஈடுபத்தியவர். அவரைப் பற்றி சிந்தித்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Thursday, November 26, 2020

ரன்னிங் டைரி - 147

  26-11-2020 08:30

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் வந்தது தம்பியின் கல்யாணம் தான்.இன்று அவனுக்கு ஊரில் கல்யாணம். கடந்த பதினைந்து வருடங்களில் ஊரில் நடந்த எந்த கல்யாணத்திற்கும் செல்லவில்லை.இந்த கல்யாணத்திற்கு கண்டிப்பாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன் ஆனால் இந்த கொரோனாவால் முடியவில்லை. என் வயதுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் திருமணங்களுக்கு நான் சென்றதில்லை. கடந்த இரண்டு வருடமாக எனக்கு அடுத்த தலைமுறையினரின் திருமணங்களுக்கும் செல்ல முடியவில்லை. இவன் எங்களோடு வளர்ந்தவன். எங்கள் வீட்டிற்கும் அவர்களின் வீட்டிற்கும் அப்போது வேலி இல்லை. இரவில் வெளியே பாயைப் போட்டு நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டே பல நாட்கள் தூங்கி இருக்கிறோம். ஏனோ அவற்றை நினைத்து கண்ணீர் வந்தது. துடைத்துக் கொண்டே ஓடினேன்.  வாழ்வில் அனைத்தும் பெற்று நிறைவாக வாழ வேண்டுமென்று மனதினுள் வாழ்த்தினேன். அவனின் அம்மா என் அத்தாச்சி எனக்கு மிகவும் பிடித்தவர். என் பள்ளி நாட்களில் நாங்கள் அவர்கள் வீட்டில்தான் பெரும்போலும் நேரம் கழிப்போம். அத்தாச்சி எதிர்கொண்ட துன்பங்கள் மற்றும் அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதம் .... அத்தாச்சி is great ... என்று நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Wednesday, November 25, 2020

ரன்னிங் டைரி - 146

 25-11-2020 08:39

உபியிலிருந்து வீடுவரை 

குளிர்ந்த காற்று என்னை ஓட அழைத்தது.  சற்று நேரத்திலேயே எதிரே ஒரு குழி தோண்டும் வண்டி வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் எனக்கு ஊர் ஞாபகம் வந்தது. எனக்கு சிறு வயதிலிருந்தே இயந்திரங்கள் மீது ஈடுபாடு இருந்ததில்லை. நாண்பர்கள் கார் மற்றும் பைக் பற்றி பேசும் போது நான் அமைதியாக இருந்து விடுவேன். என் மகனுக்கு குப்பை எடுக்கும் வேண்டியென்றால்  உயிர்.  அவனுக்கு எப்படித்தான் அது வருவது தெரியுமோ வீட்டினுள் எங்கிருந்தாலும் பால்கனிக்கு வந்துவிடுவான்.  அவனுக்கு அந்த வண்டியைப் பார்ப்பதில் பேரானந்தம்.எனக்கு ஏன் வண்டிகளிலும் இயந்திரங்களில் ஆர்வமே வரவில்லை என்று யோசித்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.


ரன்னிங் டைரி - 145

 24-11-2020 08:30

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஓட ஆரம்பித்தவுடனேயே அம்மாச்சியின் ஞாபகம் வந்தது. அம்மாச்சி இல்லாத அம்மாச்சி வீட்டை நினைத்தே பார்க்க முடிவவில்லை. போனில் ஊரில் உள்ளவர்களிடம் பேசும் போதெல்லாம் அம்மாச்சி வீட்டுக்கு சென்றீர்களா ,அம்மாச்சி வீட்டில் மீன் பாடு எப்படி என்று கேட்காமல் இருந்ததே இல்லை. இனிமேல் அப்படி கேட்க முடியாதென்றே நினைக்கிறேன்.அம்மாச்சியை நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Saturday, November 21, 2020

ரன்னிங் டைரி - 144

 20-11-2020 08:45

உபியிலிருந்து வீடுவரை 

மழை மேகம். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது தருமராஜ் அவர்கள் எழுதிய "அயோத்திதாசர்" புத்தகம் தான். அவரின் ப்ளோக்கில் வந்த கட்டுரைகளை படித்துள்ளேன். கண்டிப்பாக  இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.யூனுஸ்  அருகில் வந்ததும் laksa நினைவில் வந்தது. அது சாப்பிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. முழு சைவ சாப்பாடு சாப்பிட்டும் பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்த வாரம் இவை இரண்டையும் சாப்பிட வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Thursday, November 19, 2020

இரண்டாயிரம் ஆண்டிற்குப் பிறகு வந்தச் சிறந்த தமிழ் நாவல்கள் - என் தேர்வு

நூல்கள் பட்டியல் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். புத்தகம் வாங்குவதற்கு அடிக்கடி நான் பட்டியல் போடுவேன். போன மாதம் ஒருவர் food court-ல் நான் புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து தமிழில் நீங்க படிச்ச நாவல்களை சொல்லுங்கள் என்றார். அப்போது கீழே உள்ள சில புத்தகங்களில் சிலவற்றை சொன்னேன். வீட்டுக்கு  வந்தவுடன் பட்டியலை தயாரிக்க ஆரம்பித்தேன். கதை மாந்தர்கள் கண்முன்னே வந்து சென்றனர். அந்தந்த புத்தகங்களை வாசித்த இடங்களின் ஞாபகமும் வந்தது. கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் படித்த புத்தங்களின்  ஞாபகங்களுடன் நேரம் செலவழித்தேன்.  கீழே கூறியுள்ள அனைத்து புத்தங்களையும் நான் படித்திருக்கிறேன். இரண்டாயிரம் ஆண்டிற்கு பிறகு வெளிவந்த நாவல்களில் எனக்கு பிடித்தவை கீழே : 

1)காவல் கோட்டம்  - சு.வெங்கடேசன் 

2) தாண்டவராயன் கதை -பா.வெங்கடேசன் 

3)உப்பு நாய்கள்  - லஷ்மி சரவணக்குமார் 

4)நீலகண்டம்  -சுனீல் கிருஷ்ணன் 

5)சுபிட்ச முருகன்  - சரவணன் சந்திரன் 

6)அஞ்ஞாடி  - பூமணி 

7)தீம்புனல் - ஜி. கார்ல் மார்க்ஸ் 

8) ஆழி சூழல் - ஜோ .டி  குருஸ் 

9)வேனல் - காலப்பிரியா 

10)பருக்கை  - வீரபாண்டியன் 

11)வலம்  -  விநாயக முருகன் 

12)துறைவன்  - கிறிஸ்டோபர் ஆன்றணி 

13)ரோல்ஸ் வாட்ச்  - சரவணன் சந்திரன் 

14) யாமம் - எஸ் . ராமகிருஷ்னன் 

15)புலிநகக் கொன்றை - பி ஏ கிருஷ்ணன் 

16) கடல்புரத்தில்  - வண்ண நிலவன் 

17)கூகை  - சோ.தர்மன் 

18)சிலுவைராஜ் சரித்திரம்  - ராஜ் கௌதமன் 

19)செடல் -இமையம் 

20)ஆப்பிளுக்கு முன் - சரவன்கார்த்திகேயன் 

21)கானகன்  - லஷ்மி சரவணக்குமார் 

22)கொரில்லா - ஷோபாசக்தி 

23)நடுகல் - தீபச்செல்வன் 

24) வெட்டுப் புலி  - தமிழ்மகன் 

25) வேள்பாரி - சு.வெங்கடேசன் 

26)மிளிர் கல் - இரா. முருகவேள் 

27)காடு - ஜெயமோகன் 

28)சுளுந்தீ - முத்துநாகு 

29)கங்காபுரம் -வெண்ணிலா 

30)பேய்ச்சி -நவீன் 

31)ஆறாவடு - சயந்தன்

32)அஞ்சுவண்ணம் தெரு  - தோப்பில் முஹம்மது மீரான் 

33) விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் - சி.மோகன் 

34)அழியாச்சொல் - குட்டி ரேவதி 

35) மீன்காரத் தெரு -கீரனுர் ஜாகீர் ராஜா 

36)கோட்டை வீடு  - ம.கா முத்துரை 

37)கழுதைப்பாதை -எஸ். செந்தில்குமார் 

38)மரயானை -சிந்து பொன்ராஜ் 

39)வாரணாசி  - பா.வெங்கடேசன் 

40)பட்டக்காடு  - அமலராஜ் பிரான்சிஸ் 

41)உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன் 

42)சலூன்  -வீரபாண்டியன் 

43)ஜெப்னா பேக்கரி - வாசு முருகவேள் 

44)காடோடி - நக்கீரன் 

45)இச்சா - ஷோபா சக்தி 

46)யாமம் - எஸ். ராமகிருஷ்ணன் 

47)கெடை காடு - ஏக்நாத் 

48)குற்றப்பரம்பரை - வேல ராமமூர்த்தி 

49)ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன் 

50)ஆதிரை - சயந்தன் 

51)சக்கை  - கலைச்செல்வி 

52) பார்த்தீனியம் - தமிழ்நதி 

53)ஏதிலி - அ.சி. விஜிதரன் 

54)ஏந்திழை  - ஆத்மார்த்தி 

55) உம்மத் -ஸர்மிளா செய்யத் 

56)இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா 

57)மலைக்காடு - சீ.முத்துசாமி 

58)பேட்டை - தமிழ்ப் பிரபா 

59)லாக்கப்  - சந்திரகுமார் 

60)இரவு  - ஜெயமோகன் 

61)கொற்கை - ஜோ .டி  குருஸ்

62)வெண்முரசு வரிசை நாவல்கள் - ஜெயமோகன் 

63) வாழ்க வாழ்க - இமையம் 

64)தூர்வை  -சோ.தர்மன்

65)பிறகு - பூமணி 

66)ராஜீவ்காந்தி சாலை  - விநாயக முருகன்

67)ஐந்து முதலைகளின் கதை -சரவணன் சந்திரன் 

68)கீதாரி - கலைச்செல்வி 

எனக்கு பிடித்த இன்னும் சில நூல்களின் வெளிவந்த வருடங்கள் தெரியவில்லை அதனால் அவற்றை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை .

*numbering is just for convenience 

ரன்னிங் டைரி - 143

 19-11-2020 08:20

தஞ்சோங் காத்தோங் ரோடு 

மழை மேகம். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது நேற்று வாட்சப்பில் நடந்த ஒரு உரையாடல்தான். ஒரு விசயத்தை பிடிக்கவில்லை என்று சொன்னால் உடனே "உனக்கு அது தெரியுமா இது தெரியுமா " என்று கேட்கிறார்கள்.  திரைப்படங்களைப் பற்றி பேசும்போது நம்மவர்கள் அதிகம் உணர்ச்சிவசப் படுகிறார்கள். அவர்களுக்கு பிடித்தது நமக்கும் பிடிக்க வேண்டுமென்று நினைக்கிறாரகள். நான் என்றுமே அப்படி நினைத்ததில்லை. மற்ற விசயங்களில் நாம் "facts, figures & statistics"-ஐ எடுத்துச் சொன்னால் அதை முழுமையாக படிப்பதும் இல்லை. முடிவு எடுத்த பின்னரே பேச ஆரம்பிக்கின்றனர். என்னத்த சொல்ல என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 142

 17-11-2020 08:25

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் வந்தது அந்திரேயா போச்சேலி (Andrea Boceli)-ன் பாடல்கள்தான். அவரின் புதிய பாடல் தொகுப்பு கடந்த வாரம் வெளி வந்ததிருக்கிறது.  எனக்கு அவரின் குரல் மிகவும் பிடிக்கும். அவர் பாடியதை முதலில் சேனல் 5-ல் பல வருடங்களுக்கு முன்பு கேட்டேன். அன்றிலிருந்து இன்றுவரை அவர் பாடல்  எங்கு ஓடினாலும் நின்று கேட்பேன். என்னிடம் அவரின் இரண்டு சிடி தொகுப்புகள் இருந்தன .ஏனோ காதில் ஓடிக் கொண்டிருந்த  பாடல்கள் எதுவும் மனதில் வரவில்லை. அந்திரேயா போச்சேலியின் பாடல்களை மனதில் எண்ணிக் கொண்டே ஓடி முடித்தேன்.

Monday, November 16, 2020

ரன்னிங் டைரி - 141

  16-11-2020 09:05

தஞ்சோங் காத்தோங் ரோடு 

இன்று ஓடுவதற்கு சற்று தாமதமானது. கடுமையான வெய்யில். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது நூலக புத்தங்களை திருப்பிக் கொடுப்பது பற்றித்தான். கிட்டத்தட்ட 21 புத்தங்கள் இந்த வார இறுதிக்குள் return செய்ய வேண்டும்.  21 புத்தங்களில் பதினாரை நான் படித்துவிட்டேன். "Caste: The Lies That Divide Us - Isabel Wilkerson" இந்த புத்தகத்தை நேற்றுத்  தான் வாசிக்க ஆரம்பித்தேன்.இந்த வாரத்திற்குள் அதை படித்து முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.   திடீரென்று "சூரரைப் போற்று" படம் எண்ணத்தில் தோன்றியது.  அந்த படம்  என்னைப் பெரிதும் கவரவில்லை. ஒரு முறை பார்க்கலாம். இந்த படத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Saturday, November 14, 2020

ரன்னிங் டைரி - 140

 14-11-2020 07:05

வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை வரை - மீண்டும் வீடுவரை 

இன்று தீபாவளி சற்று தூரம் ஓடுவோம் என்று முடிவு செய்து ஓடினேன்.ஓடி சற்று நேரத்திலேயே  தமிழர் ஒருவர் குடித்துவிட்டு நடைபாதையில் படுத்திருந்தார். என்னத்த சொல்ல. அவரை பார்த்தவுடன் ஊரில் எப்படி தீபாவளி நாள் இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன்.பண்டாரி அய்யா மற்றும் பக்கத்து வீட்டிலிருந்து வரும் பலகாரங்களுடன் நாள் தொடங்கும். தீபாவளி அன்று ஊரில் இருந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது. பட்டிமன்றம் புதுப்பாடல்கள் புதுப்படங்கள் அறிமுகம் மற்றும் ஸ்பெஷல் படங்கள் இப்படி பல நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கு போட்ட போட்டி நடக்கும். ஆனால் இன்றோ வீட்டில் முறுக்கு கூட இல்லை .நேற்று கடைக்கு சென்றபோது தீர்ந்து விட்டது என்றார். பலகாரம் இல்லாத தீபாவளி தீபாவளியா என்று எண்ணிக் கொண்டேன். வீட்டிற்கு திரும்பி ஓடிவரும்போதும் அவர் அங்கேயே கிடந்தார். அவரை எழுப்ப வேண்டும் என்று எண்ணம் வந்தது . நான் நின்று அவரை எழுப்பி அறைக்கு சென்று தூங்குங்கள் சென்று சொன்னேன். அவர் எழுந்து நின்றார். கை காட்டிவிட்டு வீட்டை அடைந்தேன்.


Friday, November 13, 2020

ரன்னிங் டைரி - 139

13-11-2020 09:10

உபியிலிருந்து தஞ்சோங் காத்தோங் ரோடு வரை 

மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தேன்.கடுமையான வெய்யில். ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது  இந்திய அரசு  அனைவரும் ஆராய்ச்சி கட்டுரைகளை இலவசமாக படித்துக் கொள்ள ஏதுவாக இந்தியா முழுவதும் ஒரே சந்தா என்ற முறையை செயல் படுத்த போதக முடிவு செய்திருப்பதை பற்றித்தான். எனக்கு இந்த மாதிரி கட்டுரைகளை படிப்பது மிகவும் பபிடிக்கும்.  அனைத்து துறைகள் பற்றியும் வாசிப்பேன். இந்த முடிவில் நல்லது கேட்டதென்று இரண்டுமே இருக்கிறது. எனக்கு இதில் நன்மையே அதிகம்.யூனுஸ் mrt வந்தபோது Toshio Saeki-ன் ஓவியங்கள் எண்ணத்தில் தோன்றின. என்ன ஒரு தனித்துவம். யோசிக்க முடியாத விசயங்களை மிக அழகாகவும் provocative - ஆகவும் வரைந்திருக்கிறார். எனக்கு ஜப்பான் ஓவியர்கள் மீது ஒருவிதமான ஈர்ப்பு உண்டு. அவரின் ஓவியங்களை எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Thursday, November 12, 2020

ரன்னிங் டைரி - 138

  12-11-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு 

கடுமையான காலை வெய்யில்.  ஓட ஆரம்பித்த உடனே எண்ணத்தில் தோன்றியது பீகார் தேர்தல் முடிவுகள்தான். காங்கிரஸின் வீழிச்சி தொடர்கிறது. யாராவது தலைமையோடு உட்கார்ந்து கள நிலவரத்தைப் புரியவைக்க வேண்டும். இல்லையென்றால் இந்த வீழிச்சி  மீண்டு எழ முடியாத ஒன்றாகிவிடும். எண்ணம் மீண்டு ஓடிக் கொண்டிருந்த "அடி ஆத்தாடி .." பாடலுக்கு சென்றது. ஜானகி அம்மாளுக்கு ஒரு தனி வகையான குரல். இந்த பாடலில் அது மிகவும் அழகா வெளிப்பட்டிருக்கிறது.அங்கிருந்து இன்று செய்ய வேண்டிய அலுவலக வேலைகள் எண்ணத்தில் வந்தன. இரண்டு demo-கள் இருக்கிறது. எல்லாம் தயாராக இருக்கிறது. பார்ப்போம் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.


ரன்னிங் டைரி - 137

  10-11-2020 16:40

வீட்டிற்குள்ளே 

மிக கடுமையான வெய்யில் அதனால் உள்ளேயே ஓடலாம் என்று முடிவு செய்து பதினைந்து நிமிடங்கள் ஓடினேன். மிக வேகமாக ஓடினேன்.எதை பற்றியும் சிந்திக்கவில்லை. பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு நின்றேன்.

Monday, November 9, 2020

ரன்னிங் டைரி - 136

 09-11-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு 

மழை மேகம். ஓட ஆரம்பித்தவுடன் காதில் எஸ்.பி.பி இளையநிலா பொழிகிறது என்று ஆரம்பித்தார். யாராவது இளையராஜா எஸ்.பி.பி கங்கை அமரன் அவர்களின் நட்பை திரைப்படமாக எடுக்க மாட்டார்களா என்று மனதில் தோன்றியது. மற்றொரு பாக்கம் எடுக்காமல் இருப்பதே நல்லது என்றும் தோன்றியது.திடீரென்று கடைக்கு சென்று வாங்க வேண்டிய பொருட்கள் பற்றிய எண்ணம் மனதில் தோன்றியது. இந்த கொரோனா நாட்களில் வீட்டுச் செலவு மிகவும் கூடி விட்டது. வீணாக எதுவும் வாங்குவதாக தெரியவில்லை ஆனாலும் கூடிக் கொண்டே போகிறது. அப்படியே கொரோனா தடிப்பு மருந்தைப் பற்றி வாசித்த கட்டுரை எண்ணத்தில் வந்தது. எப்போதும் போல இந்த தடவையும் ஏழை எளிய மக்களுக்குத்தான் இறுதியில் கிடைக்கும். என்னத்த சொல்ல என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 135

  08-11-2020 05:45

காலாங்கிலிருந்து லிட்டில் இந்தியா வரை 

நல்ல குளிர். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது அமெரிக்க தேர்தல் முடிவுகள் தான்.  நல்ல வேளையாக பைடன் வெற்றி பெற்றார். மற்றொரு ஐந்து ஆண்டுகள்  டிரம்ப்பின் தலைமையை நினைத்தாலே பயமாக இருக்கிறது. பைடன்  பெரும் மாற்றங்கள் கொண்டு வருவார் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் பேச்சில்  ஒரு  decency  இருக்கும் என்பதை என்னால் கூற முடியும். பாரீஸ் climate agreement  , NATO மற்றும் TPP  போன்றவற்றை இவர் மாற்றினார் என்றால் மிகவும் நல்லது. கமலா ஹரிஸ் பற்றி நம்மவர்கள் பேஸ்புக்கில் எழுதுவதை பார்த்தல் சிரிப்பதா அழுகுவாத என்று தெரியவில்லை. எதையுமே  முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கமே இல்லாமே நுனிப்புல் மேய்ந்து விட்டு வல்லுநர்களுடன் வாதாடுவதென்பது நம்மவர்களுக்கு அல்வா சாப்பிடுவதுபோல் என்று எண்ணிக் கொண்டே மாமாவின் வீட்டை அடைந்தேன்.

Friday, November 6, 2020

ரன்னிங் டைரி - 134

   06-11-2020 08:45

உபி முதல் வீடுவரை 

மகனைப் பள்ளியில் விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தேன் . நல்ல வெய்யில். நேற்று வாசித்த சில கட்டுரைகள் எண்ணத்தில் தோன்றின. "How to write anti-caste solidarity texts"  என்னை வெகுவாக கவர்ந்தது இந்த கட்டுரை. ரூபா விஸ்வநாத் எழுதிய "The Pariah Problem" ஒரு முக்கியமான நூல் அனைவரும் படிக்க வேண்டும். அந்த புத்தகத்தை நினைத்துக் கொண்டே ஓடி வீட்டை அடைந்தேன்.

Thursday, November 5, 2020

ரன்னிங் டைரி - 133

  05-11-2020 08:25

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் வந்தது அமெரிக்க தேர்தல் முடிவுகள்தான். நான் சிங்கப்பூர் வந்த பிறகுதான் அமெரிக்க மற்றும் உலக அரசியலை படிக்க ஆரம்பித்தேன். வெளியுறவு துறையே மிகவும் சுவாரசியமானது அவர்களின் ஒவ்வொரு சொல்லிற்கும் பல பொருட்கள் இருக்கும். இந்த தேர்தலில் மீண்டும் டிரம்ப் வந்தால் என்ன நடக்கும் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன் .

ரன்னிங் டைரி - 132

  03-11-2020 08:20

தஞ்சோங் காத்தோங் ரோடு 

இன்று சற்று குறைந்த தூரமே ஓட வேண்டுமென்று முடிவெடுத்து ஓட ஆரம்பித்தேன். ஆனால் ஓட ஓட ஒருவிதமான புத்துணர்வு ஏற்பட்டது அதனால் ஓடிக் கொண்டே இருந்தேன். மிகவும் சேர்வன பிறகுதான் நின்றேன். மிகவும் திருப்தியான ஒரு ஓட்டம். ஒரு சில நாட்கள் தான் அப்படி அமையும்.

ரன்னிங் டைரி - 131

 02-11-2020 08:30

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஒரு வாரத்திற்கு பிறகு இன்று ஓடினேன். ஓட ஆரம்பித்தவுடனே மனதுக்குள் ஒரே குழப்பம் எந்த பக்கம் ஓடுவதென்று. மெதுவாக நேர ஓடுவது நல்லது என்று முடிவு செய்து நேரே எந்த பக்கமும் திரும்பாமல் ஓடினேன். எதையும் கவனிக்க வில்லை. மனதில் எதுவும் தோன்றவும் இல்லை. அப்படியே வீட்டை அடைந்தேன்.


Wednesday, November 4, 2020

ரன்னிங் டைரி - 130

  26-10-2020 08:25

தஞ்சோங் காத்தோங் ரோடு 

மழை மேகம் .ஓட ஆரம்பித்தவுடனே எண்ணத்தில் வந்தது. "Failure to launch" திரைப்படம் தான். மகனை வீட்டை விட்டு வெளியேற்ற விரும்பும் பெற்றோர் மற்றும் அதை எதிர்கொள்ளும் மகனின் கதை. நமது கலாச்சாரத்திற்கும் அமெரிக்க கலாச்சாரத்திற்கும் இருக்கும் வேறுபாடு மிக வெளிப்படையாக இப்படத்தில் நமக்கு தெரிகிறது. ஒன்று சாகும்வரை பெற்றோருடன் வாழ்வதை பெருமையாக கருதுவது மற்றொன்று பதின் வயதில் பெற்றோரை விட்டு பிரிந்நது சென்று வாழ்வதை பெருமையாக கருதுவது. இரண்டிலும் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. எனக்கு அந்த படம் மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தை நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 129

 23-10-2020 08:35

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது அமெரிக்க தேர்தல் தான்.  அடுத்த வாரம் என்ன நடக்கும் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 128

 21-10-2020 06:05

தஞ்சோங் காத்தோங் ரோடு 

நல்ல குளிர். மழை வரும் என்று எண்ணிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன். முதலில் எண்ணத்தில் வந்தது நேற்று நடந்த உரையாடல் .மீண்டும் அந்த கஸ்டமர் நேற்று சாயங்காலம் அழைத்தார்.  ஆனால் இந்த முறை அவர்கள் ஏன் வேறொரு கம்பெனியை பயன்படுத்தினார்கள் என்பதை விளக்கினார். பெரிய கம்பெனிகளில் இப்படி நடப்பது சகஜம் தான். அது என்னவென்றால்  எங்களிடம் ஒப்பந்தம் செய்த முழு அணியும் இப்போது மற்றொரு துறைக்கு மாற்றப் பட்டர்கள். இப்போது புதிதாக வந்திருக்கும் அணி பழைய அணியோடு வேலை செய்த அனைத்து பாட்னர்களையும் ஓரம் கேட்டுகிறது. ஆனால் எங்களை அவர்களால் அப்படி செய்ய முடியவில்லை ஏனென்றால் எங்களுக்குத் தான் அவர்களின் அனைத்து wofklow தெரியும்.  இந்த புதிய அணியோடு எப்படி வேலை செய்ய வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.


Tuesday, November 3, 2020

ரன்னிங் டைரி - 127

 20-10-2020 16:10

தஞ்சோங் காத்தோங் ரோட்டிலிருந்து உபி வரை 

மகனை பள்ளியில் இருந்து அழைத்துவர வேண்டும். சரி ஓடலாம் என்று முடிவு செய்து. கண்ணாடி தொப்பி மற்றும்  பேருந்து கார்டு எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். நல்ல வெய்யில் . ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் வந்தது லத்தின் மொழிதான். ஏனோ அந்த மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு தெரிந்த முதல் லத்தீன் வார்த்தைகள்  "Totus tuus". போப் இரண்டாம் ஜான் பாலின் motto. அதன் அர்த்தம் "all yours" - எல்லாம் உமதே". அன்னை மரியிடம் அவருக்கு இருந்த பற்றால் இதை வைத்துக் கொண்டார். எனக்கும் இப்படி ஒரு லத்தீன் மொழியில் ஒரு motto வைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டே யூனுஸ் ஸ்டேஷனை அடைந்தேன். அங்கிருந்து பஸ் பிடித்து மகனின் பள்ளிக்குச் சென்றேன்.


ரன்னிங் டைரி - 126

20-10-2020 08:25

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓட ஆரம்பித்தவுடன் நேற்று இரவு கஸ்டமருடன் நடந்த உரையாடல்தான் ஞாபகத்தில் வந்தது. அவர்கள் நாங்கள் செய்த வெப்சைட்டை  முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டும் என்றார். நான் அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன். இறுதியில் அவர் கூறியதைக் கேட்டவுடன் எனக்கு என்ன சொல்லவேண்டுமென்று தெரியவில்லை. அவர்கள் ஏற்கனவே மற்றொரு கம்பெனியின் மூலம் அதை செய்துவிட்டார்கள். அதனால்  நான் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். என்னத்த சொல்ல!  நான் சரியென்றுதான் சொல்லியாக வேண்டும் ஏனென்றால் எங்களுக்கு அவர்களுடன் எங்களுக்கு  அக்ரீமெண்ட் உள்ளது.  ஏன் அவர்கள் அப்படி செய்தார்கள் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 125

 19-10-2020 08:20

தஞ்சோங் காத்தோங் ரோடு

மழை மேகம் மற்றும் குளிர்ந்த காற்று என்னை நீண்ட தூர ஓட்டத்திற்கு அழைத்து. இளையராஜா பாடல்களைப் போட்டு விட்டு ஓட ஆரம்பித்தேன். ஓடிய சற்று நேரத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் முக்கிய கதாப்பாத்திரம் எண்ணத்தில் வந்தார். அந்த பெரியவரைப்  போல் மனிதர்களைப் பார்ப்பது இந்த காலத்தில் அரிது. என்னால் எங்கள் ஊரிலிருந்த சில பெரியவர்களை மறக்க முடியாது. அனைவரும் என் சொந்தக்காரர்களே. ஒருவரை நாங்கள் ஜாண்டி ரோட்ஸ் என்று அழைப்போம். அவர்  எங்களை கம்பெடுத்து அடிக்க வருவார். நாங்கள் சிரித்துக் கொண்டே ஓடுவோம். மற்றொவர் எங்களிடம் நான்றாக பேசுவார் ஆனால் நாய்களைக் கண்டால் குடித்துக் கொண்டிருக்கும் பீடியை அதன் மேல் எரிவார். அவர்களை நினைத்துக் கொண்டே ஓடி வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி - 124

 12-10-2020 08:35

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது பீத்தோவனின் ஐந்தாவது சிம்பனிதான். நேற்று இரவு இருமுறை அதை கேட்டேன். என்னவொரு கோபம்! பல நேரங்களில் நான் இந்த இசைக் கோர்வையைக் கேட்டு பயந்திருக்கிறேன். ஆனால் ஓடும்போது எனக்கு பயம் வருவதில்லை மாறாக உற்சாகம் தான் வரும் . இன்றும் அப்படியே. சிம்பனி முடியும்வரை ஓடி வீடு திரும்பினேன்.