Friday, September 23, 2011

Nice Poems

விமலாதித்த மாமல்லன்

முடிச்சு

முடிச்சிலிருந்து விடுபடவேண்டும்.
முடிந்தால் இந்த முடிச்சை அவிழ்க்க உதவுங்கள்.
முடிச்சு, ஏன் முதலில் விழுந்தது என்றோ
அல்லது ஏன் போட்டுக்கொண்டாய் என்றோ
காலாட்டியபடி வக்கணை பேசாதீர்கள்.

நாளுக்குநாள் முடிச்சு இறுக்கிக் கொண்டிருக்கும்
மரணாவஸ்தையின் வலியையும்
கொஞ்சம் பரிசீலியுங்கள்.

ஒரு முனையைப் பிடித்து இழுத்தால்
எளிதில் அவிழ்ந்துவிடக்கூடிய
சுளுக்குமுடிச்சுகளைப் போடவே
பயிற்சியளிக்கப்பட்டிருந்தது.
அதைத்தான் பயின்று தேர்ந்ததாய்
கர்வித்துப் போட்டுப்பார்க்கப்போனது.

போடச் சொல்லிக்கொடுத்தவர்
போட்டுக் காண்பிக்கையில்
சுலபமாய்த் தெரிந்தது,
போடும்போது எப்படி இவ்வளவு சிடுக்காகிக்
கழுத்தை நெரிக்கிறது?

விடைகளை வைத்துக் கொண்டு
கேள்விகளைத் தயாரிக்கும் பயிற்சிக்கூடம்போல்
ஆசுவாசமானதல்ல,
மிருகவாடைவீசும்
பாதையற்ற கானகத்தில்
தப்பிக்க வழிதேடி
தத்தளித்து அலையும் வாழ்க்கை.

    -
விக்ரமாதித்யன்
ரத்தத்தில்


ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு

சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு

திருடிப்பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம்வாங்கி வாழநேர்கிறது எனக்கு

கூட்டிக்கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக்கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு

காட்டிக்கொடுத்ததில்லை நான்
எனினும்
காட்டிக்கொடுப்பவர்களின்
கருணையில் காலம் கழிக்க நேர்கிறது எனக்கு

பாபத்தில் வந்த பலனைக் கையாடினால்
பாபம் படியாதோ சாபம் கவியாதோ

முதலில் என்னை
நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்
என்னை
நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்

இல்லெங்கில்
எச்சில் பிழைப்புதான்
இரண்டும்கெட்டான் வாழ்க்கைதான்

--


சக்திஜோதி
தருணம்


கிளர்ந்தெழும் நினைவுகளின்சுழலில் சுழல்கிறது மனம்
நதியில் நீந்தும் மீன்களைப்போல
நினைவுகளில் பயணிக்கிறதுஒரு சொல்
அருகாமை நறுமணம் உணவுப் பொருட்கள் உடைகளின் வண்ணங்கள் என
ஏதாவது ஒன்றிலிருந்து
ஊற்றுப்போல நினைவுகள் உருக்கொள்கிறது.
குளத்துத் தாமரைக் கொடிகளில் சிக்கி
மிதப்பதுபோலவும்
சுழித்து ஓடும் நீரில்வந்தடையும்
சிறுதுரும்பெனவும்
நினைவுகளில் தடுமாறி நிற்கிறது சில தருணங்கள்
தாமரை இலைகளில் உருளும் நீர்த்துளிகளென
அத்தருணங்கள் மாறிமாறி வெவ்வேறு காலவெளிகளில்
ஓடுகிறது முழுதாய் விடுபடத் துடிக்கிறது
உன் நினைவு
தாமரை இலைமேல்படர்கிறது
ஒரு பூவைப் பறித்துக் கொண்டு திரும்புகிறேன்
கூடவே
நதிக்கரையில் காத்திருந்த தருணத்தையும்.




1 comment:

Senthil said...

Nice poems..Goodoos..