Monday, January 4, 2021

ரன்னிங் டைரி - 161

04-01-2021 8:30

தஞ்சோங் காத்தோங் ரோடு - மவுண்ட் பேட்டன் ரோடு - கிழக்கு கடற்கரை பூங்கா 

குளிர் காற்று. மூன்று நாட்களுக்குப் பிறகு சற்று வெய்யில் அடித்தது ஆனால் எனக்கு குளிராகத்தான் இருந்தது.ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் வந்தது முகநூலில்  நடக்கும்  "இளையராஜாவா ரஹ்மானா?" விவாதம்தான். எனக்கு இளையராஜாவின் இசைப் பிடிக்கும். இதுவரை என் வாழ்நாட்களில் அதிகம் கேட்டது அவரது இசையைத் தான். அதிலும் இந்த பத்து வருடங்களில் மேகத்திய கிளாசிக்கல் இசை குறிப்பாக பீத்தோவனின் இசையைக் கேட்க ஆரம்பித்தப் பிறகு இளையராஜாவின் இசையை என்னால் மேலும் ரசிக்க முடிகிறது.  அதற்காக ரஹ்மானின் இசை குறைவானது என்று என்றுமே நான் சொன்னதில்லை சொல்லப்போவதும் இல்லை. என் வாழ்வில் மறக்க முடியாத துயரமான  இரவில் ரஹ்மானின் இசை தான் என்னோடு எனக்கு ஆறுதலாக இருந்தது. எதிரே ஓடி வருபவர் கை காட்டினார் கவனம் இசையில் இருந்து அவருக்கு சென்றது. ஊற்று நோக்கினேன் அவர் நான் செல்லும் கோவிலின் பங்குதந்தை. "Good morning father" என்றேன். அவரும்  "Good morning, happy new year" என்றார். சற்று வேகமாக ஓடுவது போல் தோன்றியது. அப்போதுதான் கவனித்தேன் பத்து நிமிடத்திற்குள் கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்திருந்தேன். வேகத்தை குறைத்தேன். கவனத்தை மூச்சில் கொண்டு நிறுத்தினேன். வழக்கம் போல் சற்று நேரம்தான் அதை செய்ய முடிந்தது. எண்ணம் முழுவதும் வாக்மேனில் ஓடிக் கொண்டிருக்கும் பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பனிக்கு சென்றது. என்ன செய்தாலும் எங்கு சென்றாலும் இந்த சிம்பனியை கேட்காவிட்டால் ஏதோ மாதிரி ஆகிவிடுகிறது. அப்போதுதான் முதல் movement ஆரம்பித்திருந்தது. என்னத்த சொல்ல! வலது பக்கத்தில் நீலக் கடல் காதில் பீத்தோவன், இதற்கு மேல் என்ன வேண்டும். பத்து கிலோமீட்டர் ஓட முடிவு செய்திருந்தேன். ஆனால் இசையின் உந்துததால் பதினான்கு கிலோமீட்டர் ஓடி வீடு திரும்பினேன்.

No comments: