Thursday, February 6, 2020

வரப்புகள் - பூமணி


ஒரு பள்ளியின் ஆசிரியர்களின் வாழ்க்கை பற்றிய சிறிய நாவல். பூமணியின் கதையில் எப்போதும் சாதி ஒரு சருகாக ஓடிக் கொண்டே இருக்கும் இதிலும் அப்படித்தான். இந்த நாவலின் சிறப்பேஆசிரியர்களுக்குள் இருக்கும் உறவை எதார்த்தனமாக பிரதிபலிப்பதில் தான்.

கதை பெரும்பாலும் பாண்டியன் , ரங்கராஜன் மற்றும் தமிழய்யா மூலம் நகர்கிறது. இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். பாண்டியன் விளையாட்டு வாத்தியார். விளையாட்டைத் தவிர பல விசயங்களை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பவர். ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதிர்ப்பவர். எல்லோரிடமும் அன்பாக பழகுபவர்.ரங்கராஜன் வரலாற்று ஆசிரியர். பிராமணர். அவர் குடும்பம் அவரது சம்பளத்தை நம்பித்தான் இருக்கிறது. வயதாகியும் பெண் அமையாமல் திருமணம் செய்யாமல் இருப்பவர். தமிழய்யா திருமணமானவர்  இரண்டு வயது வந்த பிள்ளைகள் இருக்கிறது. எதையும் நிதானமாகவும் யோசித்து செய்யக் கூடியவர். இந்த மூவருக்கும் தனி கதை உண்டு.

ஆண்கள் மட்டும் ஆசிரியர்களாக இருந்த பள்ளியில் திடீரென்று பெண் ஒருவர் ஹிந்தி சொல்லிக் கொடுக்க வருகிறார். ருக்குமணி டீச்சர். ரங்கராஜனுக்கு ருக்குமணி டீச்சரை பார்த்த சில நாட்களிலேயே பிடித்துவிட்டது.ஆனால் அவர் அதை அவரிடம் சொல்லவே இல்லை.சில நாட்கள் கழித்து ராஜேஸ்வரி டீச்சர் பணியில் சேர்ந்தார். பாண்டியனுக்கு ராஜேஸ்வரி டீச்சரை பிடித்துவிட்டது. அவருக்கும் பாண்டியனை பிடித்து விட்டது.

"டீச்சரம்மா அக்ராரத்துப் பொண்ணுன்னுதான சாமி இப்பூட்டுக் கணக்குபோட்ருக்காரு. இதே வேதக்கார எட் மாஸ்டர் அய்யராருந்து இல்ல அந்தம்மா வேற ஒரு அய்யரத் தேடிக்கிட்ருந்த பள்ளிக்கூடத்துக்குள்ள பத்துப் பேருக்கு முன்னால சண்ட நடந்திருக்குமா. என்னக் கேட்ட நடந்துருக்காதுன்னுதான் சொல்லுவேன்" - இதைவிட சாதியின் இறுக்கத்தை சொல்ல முடியாது . ரங்கராஜனின் கோபம் எதனால்? இந்த விவரம் தெரிந்திருந்தால் அப்படி பேசியிருப்பானா ?
"பாரம் ஏறீட்டா வேல ஓடாது."
பள்ளியில் வேலை செய்யும் மாணிக்கம் மற்றும் வையாபுரியின் கதாபாத்திரங்கள் கதைக்கு மேலும் வலுவூட்டுகின்றன.அதிலும் அவர்களின் சாதியைப் பற்றிய பேச்சுக்கள் சாதிய படிநிலையை மிக தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. கதையில் மெரும்பாலான பகுதி உரையாடலில் தான் இருக்கிறது.பலவிதமான ஆசிரியர்கள் நம் கண்முன் வந்து செல்கிறார்கள். ஆசிரியர்களின் அரசியலும் அங்கும் இங்கும் வருகிறது.இக்கதையில் வரும் கிருஷ்ணசாமி வாத்தியார் விவசாயம் செய்து கொண்டே ஆசிரியர் பணி செய்கிறார்.அவரைப் போல ஒவ்வொருவரும் மற்றொரு வேலையும் செய்கிறார்கள்.

வாட்ச்மேன் வீரணன் எம்ஜியார் படம் பார்த்துவிட்டு செய்யும் செயல்கள் பெரும் நகைச்சுவை.வாசிக்கலாம்.

Tuesday, February 4, 2020

ரன்னிங் டைரி -60

04-02-2020 08:17
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்தவுடனே ரோஜர் பெடெரெர் (Roger Federer) தான் ஞாபகத்தில் வந்தார்.  தற்போதைய டென்னிஸ் உலகின் மும்மூர்த்திகளின் காலம் முடியும் தருவாயில் இருக்கிறது என்றே எனக்கு தோன்றுகிறது. ரோஜர் பெடெரெர் ஒரு கலைஞன். அவரின் ஓய்வை நினைக்கும் போதே வருத்தமாக இருக்கிறது.சிறு வயதில் எங்கள் தெருவில் ஜிம் கூரியர் (Jim Courier) மற்றும்அகசிக்கும்(Agassi)  தான் அதிக ரசிகர்கள் .பெண்களில் ஸ்டெபி கிராஃ (Steffi Graff) மற்றும் சபாடினி. ஏனென்று தெரியவில்லை அலுவலகம் வரும் வரை டென்னிஸ் பற்றிய எண்ணங்கள் வந்து கொண்டிருந்தன.

ரன்னிங் டைரி -59

03-03-2020 18:16
அலுவலகத்திலிருந்து வீடுவரை

ஓடலாம் என்று எண்ணி ஆடை மாற்றி தயாரானதும் வாக்மேனை தேடினால் வாக்மேன் எப்போதும் இருக்கும் இடத்தில இல்லை.தேடியும் கிடைக்கவில்லை. வேறுவழியில்லாமல் போனின் earphone-ஐ மாட்டிக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். "உன்ன நெனச்சேன்" ஆரம்பித்தது.  பாடலில் மூழ்கியபடிய ஓடினேன். சிக்னலில் பட்ஜெட் பற்றிய எண்ணம் வந்தது. இன்னும் முழுமையாக படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். எண்ணம் முழுவதும் வருமானவரியிலேயே இருந்தது அதையே நினைத்துக் கொண்டு வீட்டை அடைந்தேன்.

புக்கேத் பயணம் -1

நாள் 1:
நாங்கள் தாய்லாந்து செல்வது இது மூன்றாவது முறை. இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. ஆனால் ஏர்போர்ட்டில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து எவ்வளவு தாய்லாந்து பணம் கொண்டுவந்துள்ளோம் என்பதை அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.  நாங்கள் படிவத்தை ஆன்லைனில் டவுன்லோட் செய்து ப்ரிண்ட் அவுட் எடுத்து அதை சிங்கப்பூரிலேயே பூர்த்தி செய்து எடுத்துச் சென்றோம் ஏனென்றால் கடந்தமுறை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் படிவத்தை பூர்த்தி செய்ய செலவானது. அதிகாரி ப்ரிண்ட் அவுட்டை பார்த்தவுடன் சிரித்துக்கொண்டு "very good" என்றார். அடுத்த பத்து நிமிடத்தில் நாங்கள் ஏர்போர்ட்டிற்கு வெளியே வந்துவிட்டோம்.

ஒரு ஜப்பானிய தொலைகாட்சி தொடரில் ஒருவர் கூறுவார் "ஒரு நாட்டின் கலாச்சாரத்தை அதன் உணவு பட்டியலில்(மெனு கார்டு) இருந்து தெரிந்து கொள்ளலாம் " என்று . எனக்கு அது பொருந்தும்.நான் எங்கு சென்றாலும் அங்குள்ள உணவின் சுவையை அறிவதில் தான் அதிகம் நேரம் செலவழிப்பேன். உணவின் மூலமே அந்த நாட்டைப் பற்றி அறிய முற்படுவேன்.இந்தமுறையும் அதே நோக்கம்தான். ஏர்போர்ட்டிற்கு வெளியே வந்தவுடன் அருகில் இருந்த 7eleven-ல் "oishi chicken sandwich" வாங்கினேன். மகள் சாக்லேட் பிஸ்கட் வாங்கினாள். "oishi chicken sandwich" மிகவும் சுவையாக இருந்தது. இது தாய்லாந்து உணவு கிடையாது.இது ஜப்பானிய முறையில் செய்தது. நான் இந்த sandwich-ஐ பலமுறை உண்டிருக்கிறேன். ஆரம்பமே சுவையாக ஆரம்பித்ததில் பெரும் மகிழ்ச்சி.

ஹோட்டலில் இருந்து எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வேன் வந்தவுடன் அதில் ஏறி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஹோட்டலை அடைந்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்  புக்கேத்தின் தெற்கு எல்லையில் இருக்கும்  ரவாய் கடற்கரை அருகில் இருக்கிறது. ஹோட்டலின் பெயர் "#roost glamping". அறை காலியாக இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கிறது என்று சொன்னவுடன் வரவேற்பு அறையிலேயே இருந்தோம். நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல்  ஒரு அழகான குன்றிமேல் இருந்துது. அறை ரெடியாவதற்குள் சாப்பிடலாம் என்று எண்ணி மெனு கார்டை பார்த்தல் ஒரு சில தாய்லாந்து உணவுகளைத் தவிர அனைத்தும் மேற்கத்திய உணவு வகைகள். சிறு ஏமாற்றம் இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணி சில உணவு வகைகளை ஆர்டர் செய்தோம். சாப்பிட்டதில் மிகவும் பிடித்தது "பாட் தாய் (pad thai)" தான்.
பாட் தாய் (pad thai)

பார்க்கத்தான் காரமாக தெரிந்தது ஆனால் அவ்வளவு காரம் இல்லை. நூடுல்ஸ் சற்று சவுக் சவுக் என்றிருந்தது. ஆனால் அனைத்தையும் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருந்தது. இந்த பாட் தாய் (pad thai) தாய்லாந்தின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும். தெரு ஓரங்களில் வண்டிகளில் விற்றுக் கொண்டிருப்பார்கள். இது தாய்லாந்தின் தேசிய உணவு வகைளில் ஒன்று. இதற்கு பல வரலாறு உள்ளது. நான் கேள்விப்பட்டது வரை இதன் base ஆகிய நூடுல்ஸ் சீனாவில் இருந்து வந்ததென்றும் உலகப்போரின் போது உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது  கிடைத்தவற்றை ஒன்று சேர்த்து செய்ததுதான் இந்த பாட் தாய் (pad thai).  சிங்கப்பூரில் கிட்டத்தட்ட அனைத்து food court-லும் கிடைக்கும்.



அறை தயாரானதும் அங்கு சென்றோம் எங்கள் அறை குன்றின் கீழ் இருந்தது. உண்மையில் அது அறை இல்லை அது ஒரு கூடாரம். மிகவும் அழகாக இருந்தது . என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.ஏசி இல்லை ஒரேயொரு பேன் மட்டும்தான் இருந்தது.  ஏசி கூடாரத்திற்கு  மூன்று மடங்கு கட்டணம் அதிகம். எங்களுக்கு அது தேவையில்லை என்று தோன்றியது.

மாலை வரை ஓய்வு நாங்கள் தூங்கினோம். என்ன செய்யலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது ஹோட்டலின் வரவேற்ப்பாளர் நடக்கும் தூரத்தில்தான் ரவாய் கடற்கரை என்றார்.  நாங்கள் கடற்கரையை அடையும்போது தண்ணீர் உள்ளே சென்றிருந்தது (low  tide).  அழகான கடற்கரை அரை மணி நேரம் கடற்கரையில் நடந்தோம். இதமான காற்று மற்றும் வெள்ளை மணல் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. இருட்ட ஆரம்பித்தது சாப்பிட்டுவிட்டு கூடாரத்திற்கு செல்வதாக முடிவு செய்து உணவகத்தைத் தேடினோம். கடல் உணவு விடுதியை தேர்வு செய்து அங்கு சென்றோம். எனக்கு அங்கு சாப்பிட்டதில் பிடித்தது oyster தான். oyster-னா தமிழ என்னன்னு தெரியல.
ஆலிவ் எண்ணெயில் பூண்டும் சோயா சாசும் கலந்து சுடப்பட்டது. அற்புதமான சுவை . மிகவும் மெதுவாக ரசித்து சாப்பிட்டேன். பணியாளரிடம் இது எங்கிருந்து வந்தது என்று கேட்டேன் அவர் அருகில் இருக்கும் தீவிலிருந்து என்றார். நான் சிங்கப்பூரில் இந்த அளவிற்கு சுவையாக oyster சாப்பிட்டதில்லை. ஹிரோஷிமாவில் சாப்பிட oyster தான் நான் இதுவரை சாப்பிட்டதிலேயே சிறந்தது.


சாப்பிட்டு முடித்துவிட்டு கார் பிடித்து கூடாரத்திற்கு வந்து சேர்ந்தோம். இரவில் ஹோட்டல் இன்னம் அழகாக இருந்தது .


இரவு நல்ல குளிர். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கினோம்.

Monday, February 3, 2020

ரன்னிங் டைரி -58

25-01-2020 05:12
வீட்டிலிருந்து முஸ்தபா வரை

வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் எங்கு ஓடுவதென்று ஒரு கேள்வி. எப்போதும் கிழக்கு கடற்கரைதான் முதல் சாய்ஸ் ஆனால் இன்று அங்கு ஓட தோன்றவில்லை. சரி ஸ்டேடியம் பக்கம் ஓடலாம் என்று எண்ணி அந்த பக்கம் ஓட ஆரம்பித்தேன். வாக்மேனில் இளையராஜா தனது மாயாஜாலத்தை நிகழ்த்த ஆரம்பித்திருந்தார். அந்த மனுஷனுக்கு எப்படித்தான் நமது சூழ்நிலை தெரிகிறதோ! சீரான வேகத்தில் ஓடினேன். இருள் குளிர்ந்த காற்று ஓட்டத்தை மேலும் இனிதாக்கியது. ஸ்டேடியத்தை தாண்டி ஓடிக்கொண்டிருந்தேன். திடீர்ரென்று ஏன் முஸ்தபா வரை ஓடக்கூடாது என்று எண்ணி அந்த பக்கம் வளைந்து ஓடினேன். மனதில் எதுவுமே எண்ணவில்லை . ஏன் முஸ்தபாவிற்கு  ஓடினேன் என்று எனக்கு தெரியாது. யோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.