தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டுமென்ற ஆசை.அதனால் இந்த புத்தகத்தையும் நூலகத்தில் இருந்து எடுத்தேன்.இது அவரது வரலாறு சார்ந்த கட்டுரைகளைக் கொண்ட புத்தகம். இதில் அவர் எழுதியுள்ள பல விசயங்கள் எனக்கு இதற்கு முன் தெரியாது. நம் கலாச்சாரத்தையும் வரலாறையும் தெரியாதது எவ்வளவு மோசமான விசயம். ஏனோ பாடப்புத்தகத்தில் படித்த வரலாற்று நிகழ்வுகள் சாதாரணமாக தெரிந்தது ஆனால் அவற்றையே கொஞ்சம் விரிவாகவும் சுவாரசியமாக எழுதினால் வசிப்பதற்கு விருப்பம் வருகிறது. இந்த புத்தகம் அப்படிப்பட்ட புத்தகம்.
"தஞ்சாவூர் பெரியகோவில் கல்வெட்டுகள்" என்ற தலைப்பில் உள்ள கட்டுரை பெரியகோவிலைப் பற்றி ஒரு ஆழமான அறிமுகத்தைக் கொடுக்கிறது என்றால் மிகையாகாது. படித்தவுடன் தோன்றியது ஏன் இந்த கோவிலின் கட்டுமான பணிகளை வைத்து பெருமளவு நாவல்கள் வரவில்லை என்றுதான். இருந்தாலும் இருக்கும் ஆனால் எனக்கு இன்னும் அறிமுகமாகவில்லை."ஏழு கன்னிமார்கள்: கலையும் கதையும்" கட்டுரையில் சப்தமாதர்களின் வழிபாடு இந்தியா முழுவதும் இருந்தாலும் அவர்களுக்கு கோவில்கள் எழுப்பும் வழக்கம் தென்னிந்தியாவில் தான் உள்ளது என்கிறார். சப்தமாதர்களின் கதை மிகவும் சுவாரசியமானது.
"வேட்டை நாயும் தக்கோலாப் போரும்" கட்டுரையில் வரும் ஆதகூர் நடுகல் பற்றிய குறிப்பு வியப்பை அளிக்கிறது. ஒரு பேரரசன் வேட்டை நாய் ஒன்றை போற்றி வளர்த்தும் பின்னர் அவனது தளபதி அந்த நாயை கோவில் வளாகத்திலலேயே அடக்கம் செய்தது மட்டுமால்லாமல் தினசரி பூசை செய்ய ஏற்பாடு செய்ததும் பெரும் வியப்பு. குதிரைகளும் யானைகளும் தான் பொதுவாக கல்வெட்டுகளில் இருக்கும் ஆனால் இங்கு ஒரு நாய் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது."திராவிடச் சான்று: தாமஸ் டிரவுட்மன் நேர்காணல் " இந்த புத்தகத்தில் இந்த நேர்காணல் மிக முக்கியமானது மற்றொன்று அஸ்கோ பார்ப்பொலாவின் நேர்காணல்.இரண்டும் கண்டிப்பாக வாசிக்க வேண்டியவை.
இப்படி பல வரலாற்று நிகழ்வுகளை வாசிப்பதற்கு எளிமையாக எழுதியுள்ளார் தியடோர் பாஸ்கரன் அவர்கள். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.
No comments:
Post a Comment