Tuesday, November 5, 2019

ரன்னிங் டைரி -26

05-11-2019 08:10
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓடுவதற்கு ரெடியாகுமுன்பே heart rate monitor-ஐ பைக்குள் வைத்து விட்டேன். இன்றும் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. மெதுவாகதான் ஓடவேண்டும் என்று முடிவெடுத்து மிக மெதுவாக ஓடினேன். "ஹவா ஹவா "  பாடல் ஆரம்பித்தவுடன் ஒரு புத்துணர்வு தொற்றிக்கொண்டது. வேகம் என்னை அறியாமலேயே கூடியது.பாட்டு முடியும் போது புளியம்தோப்பு பழனியின் பாடல்கள்தான் மனதில் வந்தது. இந்த இரு குரல்களுக்கும் ஒருவிதமான வசீகரம். சிறுவயதில் எங்கள் பெரியப்பா புளியம்தோப்பு பழனியின் பாடல்களை கேசட் பிளேயரில் அடிக்கடி போடுவார்.அப்படியே பெரியாப்பாவின் ஞாபகம் வந்தது. என் பெற்றோரை அடுத்து அதிகம் நேசிக்கும் முந்தின தலைமுறை நபர். அப்பாவின் பெரியம்மா பையன்.பெரும் ரசனைக்காரர். அனைத்தையும் ரசித்து செய்பவர்.பெரியப்பா பாடுவதை கேட்பது ஒரு சுகம். எனக்கு தெரிந்து ஊரில் புத்தகம் படிக்கும் சிலரில் பெரியப்பாவும் ஒருவர். பெரியப்பா மூலம் தான் இந்தியா டுடே ,தமிழன் எக்ஸ்பிரஸ் மற்றும் பல மாத/வார பத்திரிகைகள் அறிமுகமானது.மீனவர்கள் பற்றிய ஏராளமான புத்தகங்களை வைத்திருப்பார்.  ஊருக்கு எப்போது சென்றாலும் முதலில் போகும் வீடு பெரியப்பா வீடுதான். பெரியப்பாவை நினைத்துக் கொண்டே அலுவலகம் அடைந்தேன்.

No comments: