Thursday, February 14, 2019

காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக்


 கட்டாயங்களை விருப்பங்களாகக் காட்டிக்கொள்வது குடும்பத்தின் வலிமைகளில் ஒன்று.
இந்தப் புத்தகத்தைப் பற்றி பலபேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சென்ற வாரம் நூலகத்தில் இந்த புத்தகத்தைப் பார்த்தவுடன் வாசிக்க ஆரம்பித்தேன். ஒரே நாளில் வாசித்து முடித்த சிறிய புத்தகம் . பல முறை கேள்விப்பட்ட கதைதான். ஆனால் அதை வாசிக்கும்போது தற்போதைய குடும்ப கட்டமைப்புகளைப் பற்றி கேள்விகள் எழுந்தது. இது ஒரு கன்னட புத்தகம் . தமிழில் கே நல்லதம்பி மொழிப்பெயர்த்துள்ளார்.

ஒரு கீழ் நடுத்தரக் குடும்பம் அதில்  வேலையில்லாத அப்பா ,வீடே எல்லாமென்று எண்ணும் அம்மா  கணவனை விட்டுத்  தனியாக வாழும் தங்கை மாலதி  ,குடும்பத்தின் பொருளாதார மய்யம் சித்தப்பா மற்றும் கதைச்சொல்லி .இந்த குடும்பம் மேல்தட்டுக்கு முன்னேறும் பொது அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதுதான் கதை. கதைச்சொல்லி திருமணம் முடிக்கிறான் அவனின் மனைவி அனிதா. அனிதா அக்குடும்பத்தில் புதிதாக வந்தவள் அவள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறாள். புதிய வசதியும்  பொருட்களும் அவர்களை புது உறவுகளை ஏற்க மறுக்கிறது. இது ஒரு புரியாத புதிர் அதுவரை மகிழ்ச்சியாக இருந்த குடும்பம் மற்றொருவர் வந்தவுடன் அதை இழக்கிறது.
பணம் நம்மை ஆட்டிவைக்கும் என்ற பேச்சு  பொய்யல்ல.அதற்கும் ஒரு இயல்பு,பலம் இருக்குமோ என்னமோ.குறைவாக இருக்கும்போது நம் கட்டுப்பாட்டிலிருந்து,அதிகமானதும் அதன் வலு பெருகி நம்மையே ஆட்டிப் படைக்கும் என்று தோன்றுகிறது.
கதைச்சொல்லி படிக்கும் போது எப்படியாவது நல்ல வேலையில் சேரவேண்டுமென்று நினைத்ததும் தான் பணக்காரனாக பிறகு அது அப்படியே தலைகீழாக மாறியதும்  தற்கால புது பணக்காரர்களை கண்முன் காட்டுகிறது. மாதம் மாதம் சம்பளம் வரும்போது தான் ஏன் வேலைக்கு செல்லவேணுடுமென்று கூட நினைக்கிறான். அம்மா மருமகளிடம் சமையலை விடுவதாக இல்லை. மகளும் தன் பங்கிற்கு தனது அதிகாரத்தை விடுவதாக இல்லை. அவர்கள் மூவருக்கும் அப்பா வேறுயாருக்காவது சொத்தை எழுதிவிடுவார் என்ற பயம் .மருமகள் அனைவரையும் கேள்வி கேட்கிறாள். அவளால் அக்குடும்பத்தின் சமநிலை தடுமாறுவதாக கதைசொல்லி நினைக்கிறான். 

சித்தப்பா ஒரு புரியாத புதிர் யாரும் அவரைக் கேள்வி கேட்பதில்லை. அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே  அக்குடும்பத்தின் ஒரே நோக்கம் .அதற்க்காக எதுவும் செய்ய அவர்கள் தயார்.அவரைத் தேடி பெண் ஒருத்தி வருகிறாள் அங்கு பெரும் குழப்பம் நிலவுகிறது ஆனால் சித்தப்பாவோ எதுவும் பேசாமல் தன் அறையிலேயே இருக்கிறார். அவர் தொழிலின் பொருட்டு வன்முறையையும் பயன்படுத்தினார். அவர் அதைப் பற்றி பேசும்போது யாரும் எதுவும் சொல்லவில்லை. அப்பா ஒருவரே சிறிது தயங்கினார்.  அப்பா அவரை யாரும் மதிப்பதில்லை அவர் அவரின் சொந்த ஜோக்குகளுக்கு சிரித்து கொள்கிறார்.

அப்பா ஏன் யாரிடமும் தைரியமாக பேசுவதில்லை ? சித்தப்பா ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? மாலதி ஏன் கணவன் வீட்டிலிருந்தே அதிகாரம் செய்யாமல் மீண்டும் இவ்வீட்டிற்கே வந்தாள் ? கதைச்சொல்லி ஏன் தனது மனைவியிடம் அனைத்தையும் மறைக்கிறான் ? இப்படி பல கேள்விகள் எழுகிறது .அவர்கள் ஒருவரையொருவர் அன்பு செய்கிறார்களா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறிதான்.  குடும்பம் என்ற ஒன்றிற்காக சேர்ந்து வாழ்கிறார்கள் வேறுவழியின்றி . அறம் இல்லாத வாழ்வு. இறுதியில் அனிதா வீடு திரும்பினாளா இல்லையா என்று சொல்லாமலேயே கதை முடிகிறது.

இக்கதையில் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரம் அந்த காபி கடையும் அங்கு வேலை செய்யும் வின்செண்டும். காலையிலும் மாலையிலும் கதைச்சொல்லி அங்குதான் தன் நேரத்தை செலவிடுகிறான். அவ்வப்போது வின்சென்ட் ஒரு வரி செய்திகளையும் பழமொழிகளையும் அவனிடம் சொல்கிறான். கதைச்சொல்லிக்கோ அந்த ஒரு வரிகள் பல சிந்தனைகளுக்கு இட்டுச்செல்கிறது. கதை தொடங்குவதும் முடிவதும் அங்குதான். காச்சர் கோச்சர் என்றால் விடுவிக்கமுடியாத சிக்கல் எனலாம்.

இப்புத்தகம் 103 பக்கங்கள்தான் ஆனால் அது உருவாக்கிய குடும்ப சித்திரம் நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.வறுமை தந்த மகிழ்ச்சியும் ஒற்றுமையும் வணிக செல்வம் தரவில்லை. மனிதர்கள் ஏன் செல்வம் வந்தவுடன் அப்படி மாறுகிறார்கள் என்பதுவும் ஒரு கேள்விக்குறிதான் .
கே நல்லதம்பி மிக அருமையாக மொழிப்பெயர்த்துள்ளார்.சரளமான மொழி நடை.
அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.