வேல்முருகன் இளங்கோவின் எழுதிய எதையுமே இதற்குமுன் நான் வாசித்ததில்லை. எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் இந்த புத்தகத்தைப் பற்றி முகநூலில் மிகவும் பாராட்டி எழுதி இருந்தார். அப்படித்தான் இந்த புத்தகத்தின் அறிமுகம் கிடைத்தது. சென்ற வாரம் நூலகம் சென்றபோது இந்த புத்தகத்தைப் பார்த்தவுடன் எடுத்தேன். மிகவும் எதிர்பார்ப்போடு வாசிக்க ஆரம்பித்தேன். மூன்று நாட்களில் வாசித்து முடித்தேன். பல மறக்க முடியாத கதாப்பாத்திரங்கள்.
கதைக்களம் நெய்தல் நிலம். எம் மக்களின் நிலம். எனக்குத் தெரிந்து நெய்தல் நிலத்தைக் கதைக்களமாக கொண்ட தமிழ் நாவல்களின் பட்டியல் மிகவும் சிறியது.வேல்முருகன் இளங்கோ என்ன கதைக்கருவை கையாளப்போகிறார் என்ற ஆவலுடன் வாசிக்க ஆரம்பித்தேன்.ஆரம்பம் முதல் இறுதிவரை தொய்வே இல்லாமல் கதை சொல்லிருக்கிறார்.இரண்டு குடும்பங்களின் கதை.திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் மணல்மேல்குடி தான் கதையின் முக்கிய இடங்கள். மீனவர்களின் வரலாறு தெரிந்தால்தான் தற்போது இருக்கும் சிக்கல்களுக்கு முடிவு காண முடியும் . அப்படித்தான் இந்நிலங்களின் சிறப்பு மற்றும் அங்கு வாழப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கலை வரலாற்று பின்னணியில் சொல்லிருக்கிறார் வேல்முருகன் இளங்கோ. கடல் பற்றிய விவரிப்புகளும் வர்ணனையும் நன்றாக இருக்கிறது. அந்திமழை இதழுக்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு கூறியிருந்தார் :
கடல் பற்றி நாவலில் விரிவாக பேசப்பட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியமானது, இதற்கு எவ்வாறு சிரத்தை எடுத்துக்கொண்டீர்கள்?
............ ஒரு சிறுவனைப் போல் கடலை அணுகியதால் தான் அது தாய்மனதோடு நாவலுக்குள் ஓடி நிறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
வாசிக்கும் நம்மையும் ஒரு சிறுவனைப்போல் கடலுக்குள் இழுத்துச்செல்கிறார்.கதை வெவ்வேறு தளத்தில் வெவ்வேறு மாந்தர்களால் சொல்லப்பட்டாலும் அனைத்தையும் ஒரு மையப்புள்ளியில் இணைத்திருக்கிறார். முதலில் இசக்கி - தனசேகர் , பின்பு இசக்கி - நஞ்சுண்டான் இறுதியில் நஞ்சுண்டான் -இருதயராஜ் உறவுகளின் வழியே ஒரு பெரும் வரலாற்றைச் உயிருடன் சொல்லியிருக்கிறார்.
கடலின் பார்வையில் கடலோடி என்பவன் அதன் ஒரு துளி நீருக்கு மட்டுமே ஒப்பானவன்.
பரதவர்களின் எதிரி அவர்களே என்று பலபேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இந்த நாவலில் அது அப்படியே வெளிப்பட்டிருக்கிறது. இரு குடும்பங்களின் போட்டி பொறாமை வெறி எப்படி பல மதம் மற்றும் சாதிகளின் ஒற்றுமையைக் கெடுத்தது என்பதை அக்காலகட்டத்தின் தூத்துக்குடியின் பொருளியல் வன்முறை வரலாற்றோடு சொல்லியிருப்பது நன்று.ஜோஸ்லின் விக்டோரியா ,ராணி ,மரியா டிசோசா மற்றும் மங்கம்மாள் - இவர்களின் கதை எளிதில் மறக்க முடியாது.அவர்கள் கதையில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறாரகள்.மதம் சாதி மாறி திருமணம் செய்யும் ஜோஸ்லின்,மதப் போதகர்களால் கொல்லப்படும் மரியா டிசோசா,சொந்த அப்பா மற்றும் அண்ணன்மார்களால் கொல்லப்படும் மங்கம்மாள் இவர்கள்தான் ஆண்களின் வாழ்வையும் தீர்மானிக்கிறார்கள். நஞ்சுண்டான் கதாப்பாத்திரத்தை இன்னொரு நாவலாகவே எழுதலாம். தமிழ் தேசியம் பேசும் அவரின் பாத்திரப்படைப்பு கதையுடன் அழகாக பொருந்துகிறது. இவர் மாதிரியான ஆட்களை பற்றி நான் எங்கள் ஊரில் கேள்விப் பட்டிருக்கிறேன்.
ஜெரோம் என்ற கதாப்பாத்திரம் பின்வருமாறு ஓரிடத்தில் சொல்கிறது :
தட்டு மடி வைப்பதோ அல்லது வலை விரித்து காத்திருப்பதோ மரியாளிடம் வேண்டுதல் வைப்பது மாதிரியானது.நமது தேவைகளை உணர்ந்து அவளே நமக்கான மீன்களை நமது வலையில் கொண்டுவந்து சேர்ப்பாள். ஆனால் இழுவை மாடி இழுப்பது என்பது அவளது அனுமதியோ விருப்போமோயின்றி அவளது வயிற்றிலிருந்து சின்னஞ்ச சிறுப் பிள்ளைகளை பறித்து வருவதற்கு ஒப்பானது.
என் பெரியப்பா இதையே சற்று வேறு விதமாக சொல்வார் "இரட்டை மடியும் இழுவை மடியும் நம்மல அழிச்சிரும் " . அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.
சீரான எளிமையான எழுத்து நடை. எந்த சமரசமும் செய்யாமல் சொன்னது கதையின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது.
அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.