01-02-2021 08:50
கிழக்கு கடற்கரை பூங்கா
நல்ல வெய்யில். ஓட ஆரம்பித்ததே சற்று வேகத்துடன் தான். 22 நிமிடத்தில் ஐந்து கிலோமீட்டரை கடந்திருந்தேன். இப்படியே கண்டிப்பாக தூரம் முழுமைக்கும் ஓட முடியாது என்று எனக்குத் தெரியும் அதனால் ஐந்து கிலோமீட்டருக்கு சற்று கூடுதலாக ஓடியவுடன் வேகத்தைக் குறைத்தேன். ஏழு கிலோமீட்டருக்குள் மூச்சு வாங்கியது.மேலும் வேகத்தைக் குறைத்தேன்.எதிரே சென்ற வாரம் பார்த்த தாத்தா ஓடி வந்து கொண்டிருந்தார். நான் கை காட்டினேன். அவரும் அதையே செய்தார். நான் அவரைக் கடந்து சென்றேன்.அப்போதுதான் காதில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலுக்கு கவனம் சென்றது "Right Round -Flo Rida" ஓடிக் கொண்டிருந்தது. shuffle-லில் போடும்போது பல மாதங்களுக்கும் மேலாக இந்த பாடல் வந்ததே இல்லை. இன்றுதான் வந்தது. இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் சில வருடங்களுக்கு முன் என்னோடு வேலைப் பார்த்தவர் தான் ஞாபகத்தில் வருவார். அவர்தான் இந்த பாடலை எனக்கு அறிமுகப் படுத்தினார். அவர் இப்போது எங்கு இருக்கிறாரோ என்று எண்ணிக் கொண்டேன்.பாடலில் இருந்து கவனம் எதிரே நடந்து வந்து கொண்டிருந்த இரு இந்தியவர்கள் மீது சென்றது. அவர்கள் சத்தமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு வந்தனர். அதைக் கேட்டவுடன் அரவிந்தன் கண்ணையன் அவர்களின் நேற்றைய முகநூல் பதிவுதான் ஞாபகத்தில் வந்தது. அந்த பதிவு ஒரு வகையான உரையாடலை நடத்திக் கொண்டிருக்கிறது. வீட்டிற்கு சென்று பார்ப்போம் என்று எண்ணிக் கொண்டேன். பத்தாவது கிலோமீட்டரிலிருந்து ஓட முடியவில்லை. நடந்தே வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment