நூலகத்தில் எதார்த்தமாக பார்த்தவுடன் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். இந்த புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கதையைப் பற்றி ஒன்றும் தெரியாது . படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றியது இவ்வுலகு எவ்வளவு பயங்கரமானாலும் மனிதம் ,காதல் மற்றும் அன்பு என்றும் வெல்லும். கதை நடக்கும் இடம் கற்பனை நகரமான சமனா (zamana). இஸ்லாமியர்கள் பெரும்பான்மை ஆனால் அவர்களுக்குள்ளும் பிரிவினை. இங்கு கிறிஸ்தவர்கள் மிகவும் கீழ்த்தனமாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கென்று எல்லாமே தனி . இந்த சூழ்நிலையில்தான் மசூத் மற்றும் நர்கிஸ் தம்பதியர் ஒரு கிறிஸ்தவ குடும்பத்திற்கு வெகுநாட்களாக உதவி செய்து வந்தனர். மசூத் மற்றும் நர்கிஸ் இருவரும் முற்போக்கு சிந்தனை உடையவர்கள் . அவர்கள் கிறிஸ்தவ பெண்ணான ஹெலனை படிக்க வைத்து தங்கள் சொந்த பெண்போல நடத்துகிறார்கள்.
This world is the last thing the God will ever tell usமசூத் புத்தகங்களை புது கட்டிடத்திற்கு மாற்றிக்கொண்டிருக்கும் போது அமெரிக்கன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்படுகிறான். இந்த சம்பவம் நர்கிஸ் மற்றும் ஹெலன் குடும்பத்தையே தலைகீழாக மாற்றி அமைக்கிறது. நர்கிஸ் அந்த அமெரிக்கனை மன்னிக்க வேண்டுமென்று அரசாங்கம் நிர்பந்திக்கிறது . அவளோ அதில் எதிலும் தனக்கு விருப்பமில்லை என்று விலகிச்செல்கிறாள் . ஆனால் அரசாங்கம் அவளை மிரட்டுகிறது. மற்றொரு பக்கம் இஸ்லாமியர்கள் நர்கிஸ் அவனை மன்னிக்கக்கூடாது என்று மிரட்டுகிறார்கள் . இதற்கிடையில் கிறிஸ்தவரான லில்லி (ஹெலனின் தந்தை) மற்றும் முஸ்லீம் விதவையான ஆயிஷாவின் காதல் .இந்தக் காதலால் சமனா கலவரபூமியாக மாறுகிறது. நர்கிஸ் ஹெலன் மற்றும் இம்ரான் தங்கள் வீட்டிலிருந்து தப்பித்து மசூத் மற்றும் நர்கிஸ் கட்டிய தீவிற்கு செல்கிறார்கள் .அங்கு ஹெலனும் இம்ரானும் காதல் கொள்கிறார்கள். இந்த இருவரின் கடந்த காலம் வன்முறையால் நிறைந்தது. மதத்தைத் தாண்டின மனிதநேயம் அவர்களை ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவுகிறது.
அந்த தீவு ஒரு குறியீடு . அந்த தீவில் உள்ள கட்டிடங்கள் மத நல்லிணக்கத்திற்காகக் கட்டப்பட்டவை ஆனால் அது முழுதாகக் கட்டிமுடிக்கப்படவில்லை . இறுதியில் ஒருவரும் அங்கு தங்கவில்லை. அங்குதான் யாரும் தங்களைத் தேட மாட்டார்கள் என்று அவர்கள் மூவரும் அங்கு செல்கிறார்கள். அவர்கள் அங்கு தங்கியிருந்த நாட்கள் மிகவும் மகிழ்ச்சியானவை . இம்ரான் தன் கதையைச் சொல்கிறான். காஷ்மீரில் நடந்த மற்றும் நடக்கும் பிரச்சனைகளை ஆசிரியர் அவன் மூலம் விவரிக்கிறார். இந்திய இராணுவத்தின் (தீய)செயல்களைப் பெரிதாக விளக்குகிறார்.
இன்னொரு முக்கியமான கதாப்பாத்திரம் கிறிஸ்தவ ஆயர் சாலமன். அவர் இராணுவ அதிகாரியிடம் கூறும் பதில் முக்கியமானது -
Major Burhan : I would do anything for Pakistan
Bishop Soloman : For the Pakistani state, perhaps. Not the Pakistani people
பாகிஸ்தானிய அரசு அமெரிக்க அரசின் அடிமைபோல செயல்படுவதாக காட்டப்படுகிறது . அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆயர் சாலமன் நீதிமன்றத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறார். ஏன் நீதிமன்றத்தில்? அவருக்கு தெரியும் அங்கு அவருக்கும் அவரை சார்ந்தவருக்கும் நீதி கிடைக்காதென்று.
மசூதின் வீடு பலவிதமான பொருட்களால் அலங்கரிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக ஹாகிய சோபியா மற்றும் கொர்டோபா மசூதியின் மாதிரி வடிவங்கள். இந்த இரண்டும் இஸ்லாமிய படையெடுப்புக்கு முன்பு கிறிஸ்தவ ஆலயங்கள். ஏன் ஆசிரியர் இந்த இரண்டு கட்டிடங்களை மட்டும் தேர்ந்தெடுத்தார் ? நர்கிஸின் ரகசியம் இதில்தான் உள்ளதா? அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் ஏனென்றால் நர்கிஸும் கிறிஸ்தவள் சூழ்நிலை காரணமாக இஸ்லாமியராக வாழ்கிறாள். மற்றொரு முக்கியமான பொருள் " That They Might Know Each Other" என்ற புத்தகம். தலைப்பே ஒரு விதமான கேள்வியை எழுப்புகிறது. மசூதிற்கு நர்கிஸின் ரகசியம் தெரிந்திருக்கலாம்.
எளிய மொழிநடை . பல இடங்களில் கவிதை ததுமும் வாக்கியங்கள் வாசிப்பை மேம்படுத்துகிறது. இந்த உலகின் வீழ்ச்சிக்கிடையிலும் அதில் உள்ள இயற்கையின் அழகை ஆசிரியர் மிக அழகா எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் இன்றைய பாகிஸ்தான் எப்படி உள்ளது என்று புரிந்துகொள்ள ஓரளவு உதவும். கிறிஸ்தவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை வாசிக்க நம்ப முடியவில்லை ஆனால் அதுதான் உண்மை.
நல்ல கதை.வாசிக்கலாம்.
No comments:
Post a Comment