Monday, October 22, 2018

நிழலற்ற பெருவெளி - தாஹர் பென் ஜீலோவ்ன்


இது ஒரு ரகசிய சிறைச்சாலையில் நடக்கும் கதை. 1971-ல் மொராக்கோ அரசருக்கு எதிரான கொலை முயற்சியில் ஈடுப்பட்ட வீரர்களில் 58 பேரை Tazmamart சிறையில் அடைப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. இந்த சிறை ஒரு கொடூரமான இடம்.பத்தடி நீளம் ஐந்தடி அகலம் மட்டுமே கொண்ட இருட்டு அறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். அவர்கள் நேராக எழுந்து நிற்க முடியாது. அது அறையல்ல அது ஒரு கல்லறை -வாழும் கல்லறை.
நம்பிக்கை என்பது பயம் இல்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் .தற்கொலை என்பது தீர்வாகாது.கடும்சோதனை என்பது சவால் . எதிர்ப்பு என்பது கடமை,வேண்டுகோள் அல்ல.
சலீம் என்ற கைதிதான் இந்த கதையின் கதை சொல்லி.  கதை சொல்லியென்றுதான் சொல்ல வேண்டும் ஏனென்றால் அவன் தான் விடுதலை ஆகும் வரை மற்றவர்களுக்கும் தனக்கும் கதை சொல்லிக் கொண்டே இருக்கிறான்.பலவிதமான கதாப்பாத்திரங்கள் பலவிதமான பின்னணிகள் கொண்ட கதை இது. அது கைதிகளின் துயரத்தை மட்டும் சொல்லும் கதை அல்ல. என்னை பொறுத்தவரை தேடல் தான் இக்கதையின் மய்யம். அவன் வெளியில் வாழ்ந்த வாழ்க்கை மற்றும்  சிறை வாழ்க்கை  இரண்டிலும் மாறி மாறி தன்னை தேடுகிறான். வெளி வாழ்வை மறக்க பெரிதும் சிரமப்படுகிறான்.
The hardest and most unbearable silence was that of light.  A powerful and manifold silence.  There was the silence of the night, always the same, and then there was the silence of the light.  A long and endless absence.
வெளி வாழ்வில் அவன் மதத்தை பெரிதும் பொருட்படுத்தாதவன் ஆனால் சிறையோ அவனை ஒரு சூஃபி அளவிற்கு மாற்றுகிறது. தனிமை அவனை கேள்வி கேட்க வைக்கிறது.கடந்த காலத்தை மறந்தும் எதிர் காலத்தைப் பற்றி நினைக்காமலும் தனது அனைத்து புலன்களையும் சிந்தனைகளையும் நிகழ்காலத்தில் நிறுத்தி தனது வாழ்வை இறைவனுக்கு ஒப்படைத்து சிறை வாழ்க்கையை நடத்துகிறான்.அவனுடைய ப்ளாக்கில் உள்ள மற்ற கைதிகள் ஒவ்வொருவராக இறக்கிறார்கள். இறப்பு அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு இறப்பும் ஒரு பக்கம் அவர்களை துயரப்படுத்தினாலும் மற்றொரு பக்கம் அவர்களுக்கு அது நிம்மதியையும் போர்வைகளையும் கொடுக்கிறது. 

கரீம் ஒரு அற்புத பிறவி.அவன்தான் மற்ற சிறைவாசிகளுக்கு நேரம் சொல்லி. அவனால் நேரத்தை துல்லியமாக சொல்ல முடியும். தொழுகை நேரத்தை அவனே மற்றவர்களுக்கு சொல்கிறான் .அவனது சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக நிசப்தமாகிறது.ஒரு விதத்தில் கரீம் தான் அவர்களின் நம்பிக்கையும் கூட. அவனது இறப்பு அவர்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்துகிறது .மற்றொருவன் ஆச்சார் அவன் ஒரு முன்னாள் போர் வீரன். எப்போதும் அடுத்தவர்களை வசைபாடிக்கொண்டே இருக்கிறான். அவனுக்கு எழுத படிக்க தெரியாது. அவனுக்கும் சலீமிற்கும் நடக்கும் உரையாடல் பல விசயங்களை நாம் புரிந்து கொள்ள உதவும். ஆச்சாருக்கு சலீம் குரானை வாசிக்க கற்றுக்கொடுக்கிறான். அவனும் கற்க ஆரம்பிக்கிறான். இருந்தாலும் அவனது வெறுப்பு குறையவே இல்லை.சலீம் கூறுவது போல "பசியைவிட வெறுப்பே அங்கு பலரைக்  கொன்றது".

மற்றொரு கதை சலீமிற்கும் அவனது தந்தைக்குமான உறவு. அவனது தந்தை சலீம் தன் மகனே அல்ல என்கிறான்.தன் மகன் ஒரு போதும் அரசருக்கு எதிராக போராடுபவன் அல்ல என்கிறார். சலீமை பொறுத்தவரை அவனது தந்தை அரச மாளிகை கோமாளி.அவனது அம்மாவும் சரி அவனும் சரி அந்த மனிதனை வெறுக்கவில்லை.சிறையில் சலீம் அனைவரையும் அன்பு செய்ய கற்றுக்கொள்கிறான்.இக்கதையில் ஒளியின்மைற்கு முக்கியான பங்கு உண்டு. ஒளி இல்லாததால் ஒருவன் எவ்வாறு உளவியல் பூர்வமாக பாதிக்கப்படுகிறான் என்பதை இக்கதை தெள்ளத்தெளிவாக கூறுகிறது. ஒரு சிறிய வெளிச்சம் கூட அவர்களை பல மடங்கு ஊக்கப்படுத்துகிறது.
We had two assets: our bodies and our minds. I quickly decided to use all possible means to save my brain. I protect my conscience and intellect. The body belongs to our captors, was in their power. They tortured without touching it, amputating a limb or two simply by denying us medical care. But my thoughts had to remain out of reach: my real survival, freedom, my refuge, my escape.
பதின்னெட்டு ஆண்டுகளுக்கு பிறகு சலீம் மற்றும் சிலர் விடுவிக்கப் படுகிறார்கள்.  சிறைச்சாலையை இடித்துவிட்டார்கள். அவர்கள் அனைவரும் பட்ட துயரத்தின் சின்னம் இனிமேல் உலகில் இல்லை ஆனால் துயரத்தின் வடு என்றும் அவர்களோடு இருக்கும். இந்த கதை உண்மை சம்பவத்தைத் தழுவியது.சுயசரிதை போன்ற தோற்றத்தைத் தந்தாலும் இது சுயசரிதை அல்ல.பல இடங்களில் எனக்கு கண்ணீர் வந்தது. வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒருவித உணர்ச்சி. இக்கதை மனிதனின் துயரத்தை மட்டும் பேசவில்லை அவனின் வாழ்வு போராட்டத்தின் மகத்துவதைத்தான் அதிகமாக பேசுகிறது.

இது நான் வசிக்கும் தாஹர் பென் ஜீலோவ்னின் இரண்டாவது புத்தகம். இதுவே இரண்டில் சிறந்தது.தமிழில் எஸ்.அர்ஷியாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வாசிக்க கடினமாக இருந்தது. முக்கியமாக பெயர்கள். நான் பலப் பக்கங்களை ஆங்கிலத்திலும் வாசித்தேன் .இது பல பெரிய பரிசுகள் பெற்ற படைப்பு. இந்த புத்தகத்தின் ஆங்கில பெயர் -"This Blinding Absence Of Light".

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

No comments: