Monday, January 20, 2020

விசாரணைக் கமிஷன் - சா. கந்தசாமி


நீண்ட காலமாக வாசிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த புத்தகம் இது, ஏனோ இந்த நாவலின் பெயர் என்னுள் ஏதோ செய்தது. ஏதோ கிரிமினல் நாவலாக இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன்.கடந்த வாரம் நூலகத்தில் பார்த்தவுடன் எடுத்து விட்டேன் ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் தான் வாசிக்க நேரம் கிடைத்தது. ஒரே மூச்சில் வாசிக்க கூடிய புத்தகம்தான்.
வாழ்விலே மதிப்பு , மரியாதை எனபதை உணர்த்த நல்லது தீயது என்ற பாகுபாட்டில் எல்லாமே அடங்கி இருக்கிறது.
முதலில் நான் எதிர்பார்த்த மாதிரி இது ஒரு கிரிமினல்நாவல் இல்லை.இது ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு. தங்கராசு ஒரு பேருந்து நடத்துனர். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர். அவரின் மனைவி ருக்குமணி ஒரு ஆசிரியர். இவர்கள் இருவரின் நட்பு மிகவும் எதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.  தங்கராசு பத்தாம் வகுப்பில் தோற்றவன் ஆனால் ருக்குமணியோ படித்தவள். அந்த வித்தியாசம் அவர்களின் தினசரி வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது. அவன் கோபப்படும்போது இவள் அமைதியாய் இருப்பதும் திரும்பி அவனே அவளிடம் பேசுவதும் வெகு இயற்கையாக நடக்கிறது. தொண்டை வலியால் பத்து நாட்களுக்கு மேலாக ருக்குமணி அவதிப்படுகிறாள்.

பேருந்து டெப்போவில் நடக்கும் சம்பவங்கள் உண்மையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பேசும் தற்கால அரசியல்தான் கதையின் மய்யம். நடத்துனர்கள் ஓட்டுனர்களின் பிரச்னைகள் மற்றும் அங்கு நடக்கும் அரசியல் ஒரு பக்கமென்றால் மற்றொரு பக்கம் ஆசிரியர்களின் உலகம். இந்த இரண்டிற்கும் இடையில் அவர்கள் இருவரின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் நாட்டின் அரசியலிலும் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.  ஒரு சாதராண ஆசிரியரும் பேருந்து நடத்துனரும் எப்படி அரசியல் தலைவர்களாக மாறுகிறார்கள் என்பதை பாரதிவாணன் மற்றும் கணபதி மூலம் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் சுயநலவாதிகள். பாரதிவாணன் ருக்குமணிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் புத்தகம் தருவதாக சொல்லி இறுதிவரை அவளிடம் கொடுக்கவே இல்லை.தற்போது அவன் அமைச்சர்.

போலீசுக்கும் ஓட்டுநர் நடத்துங்கருக்கும் இடையே நடந்த சண்டையில் சம்பந்தமே இல்லாமல் தங்கராசு கைது செய்பப்டுகிறான். அந்த கலவரத்தை ஆய்வு செய்ய ஒரு விசாரணைக் கமிஷன் நியமிக்கப் படுகிறது. இது கூறும் நீதியே இந்த நாவலின் அடிநாதம். தங்கராசு போலீசாரால் கொல்லப்படுகிறான்.அரசியல்வாதிகள் தங்களுக்கு எது தேவையோ அதை மட்டுமே செய்வார்கள் என்பதற்கு இந்த கொலையும் ஒரு எடுத்துக்கட்டு. கதையில் அங்கும் இங்குமாக சாதி எட்டிப் பார்க்கிறது அதிலும் ஆசிரியர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள்  அதின் உச்சம்.ஆனால் இறுதிவரை தங்கராசும் ருக்குமணியும் என்ன சாதி என்று ஆசிரியர் கூறவில்லை.

எனக்கு இக்கதையில் வரும் நாய் டைகர் பிடித்திருந்தது. டைகருக்கு பின்னல் ஒரு கதையுண்டு அது ருக்குமணியின் கதாபாத்திரத்திற்கு மேலும் வழுச் சேர்க்கிறது.டைகருக்கு தெரிந்திருந்தது யாரை வீட்டிற்கு உள்ள விடவேண்டும் என்று. எனக்கு பிடித்த மற்றொரு கதாபாத்திரம் ஓட்டுநர்  சையத் முகமது. அவர் பேசுவதும் செய்வதும் தொழில் பக்கிதியின் உச்சம். சில இடங்களில் தேவையில்லாத தலபுராணங்கள் வருகின்றன. ஏன் என்று தெரியவில்லை. ஒரு காலகட்டத்தின் சமூக அரசியல் மற்றும் கலாச்சாரத்தை கண்முன் கொண்டுவந்துள்ளார் சா.கந்தசாமி. இந்நூல் 1998 ஆண்டு சாகித்ய அகாடமி பரிசைப் பெற்றது.

வாசிக்க வேண்டிய புத்தகம் .

No comments: