Thursday, February 28, 2019

War On Peace - Ronan Farrow


I know that war is the failure of diplomacy and the failure of leaders to make alternative decisions.
அமெரிக்க வெளியுறவு மற்றும் ராஜதந்திரம் எப்படி படிப்படியாக சரிந்து கொண்டிருக்கிறது என்று எடுத்துக்கூறும் புத்தகம் இது. ரொனன் பார்ரோவ் எனக்கு பரிச்சியமான எழுத்தாளர். அவரின் பல கட்டுரைகளை வாசித்திருக்கிறேன்.இவரின் Harvey Weinstein பற்றிய கட்டுரை #Me Too  இயக்கத்தில் பெரும் தாகத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. ரொனன் ஒரு முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி. அமெரிக்க ராஜதந்திர உத்திகளை உள்ளிருந்து அறிந்தவர் இது அவரின் முதல் புத்தகம்.
If you don’t fund the State Department fully, then I need to buy more ammunition ultimately.
புத்தகம் "Mahogany Row Massacre" என்னும் ட்ரும்பின்  வெளியுறவு  துறை அதிகாரிகளின் வேலைநீக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறது. State Department-ன் சரிவு ட்ரும்பிற்கு முன்பே ஆரம்பித்துவிட்டது என்கிறார். அது உண்மையும் கூட. வியட்நாம் போருக்கு பின் வந்த அனைத்து ஜனாதிபதிகளும் பேச்சுவார்த்தையை விட இராணுவதையே அதிகம் நம்பினார்கள். படிப்படியாக ஒவ்வொரு ஜனாதிபதியும் மேலும் மேலுமென்று தங்களைச் சுற்றி இராணுவ அதிகாரிகளையே வைத்துக்கொண்டார்கள். தற்போதைய ஜனாதிபதி டிரம்ப்தான் State Department-ன் பட்ஜெட்டை மிக அதிகமாக குறைத்து. பல முக்கியமான பொறுப்புக்களுக்கு இன்னும் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. தாமஸ் கண்ட்ரிமேன் என்னும் ஆயுதங்கள் கட்டுப்படுத்தும் துறையின் நிபுணர் மூன்றே நாட்களில் நீக்கப்பட்டார். கொடுமை என்னவென்றால் அவர் ஒருவரே அந்த துறையில் அமெரிக்க நிபுணர்.
American leadership no longer valued diplomats, which led to the kind of cuts that made diplomats less valuable. Rinse, repeat.
'70 மற்றும் 80-களில் கூட எதிரி நாடுகளோடு நேரடியாக பேச்சுவார்த்தை செய்து கொண்டிருந்தது. பல முக்கியமான முடிவுகள் இரவு பகலாக வெளியுறவு அதிகாரிகள் உழைத்ததின் விளைவாக கிடைத்ததுதான். போஸ்னிய போர் நிறுத்தம் , ஆப்கான் போர் மற்றும் பல.  ஆப்கான் போர் அமெரிக்காவிற்கு பெரிய பாடம் ஆனால் அதன் இராணுவமோ அதிலிருந்து இன்னும் பாடம் கற்றதாக தெரியவில்லை.  இராணுவ அணுகுமுறையே சிறந்தது என்று திரும்ப திரும்ப சொல்லி பேச்சுவார்த்தை என்னும் அம்சத்தையே வெளியுறவு கொள்கையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள். இந்த அணுகுமுறையே அமெரிக்காவின் சரிவுக்கு காரணமென்று ரொனன் கூறுகிறார்.

புத்தகத்தில் திரும்ப திரும்ப வரும் ஒரு நாடு பாகிஸ்தான். அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள உறவு ஒரு வினோதமானது. முதலில் கம்யூனிசியத்தை எதிர்க்க பின்னர் தீவிரவாத ஒழிப்பில் அமெரிக்காவிற்கு பாகிஸ்தானின் ஒத்துழைப்புத் தேவைப்பட்டது இன்னும் தேவைப்படுகிறது இந்த சூழ்நிலையை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக மிகவும் சாதுரியமாக பயன் படுத்திக்கொண்டது. அமெரிக்காவிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்து கொண்டே இருக்கிறது. எப்படி அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் உறவு ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மிகவும் தெளிவாக எழுதியுள்ளார். பாகிஸ்தானுடன் இராணுவ உறவுவை மட்டுமே அனைத்து ஜனாதிபதிகளும் மேற்கொண்டனர். மக்களுடன் பேசுவதற்கு எந்த அமெரிக்க அரசும் அதிகாரிகளை நியமிக்கவில்லை. இதுவே இந்த உறவின் பிரச்சனை என்கிறார் ரொனன்.

State Department-ல் எந்த தவறே இல்லையென்று ரொனன் சொல்லவில்லை  மாறாக அதற்கும் மற்றும்  USAID-விற்குள்ளும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்றே கூறுகிறார்.  ஆனால் இன்று நடப்பதோ அந்த அமைப்புகளையே முழுவதும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் அதைத்தான் அவர் எதிர்கிறார் . அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பலரை தற்போதைய அமெரிக்க அரசு வேலையிலிருந்து நீக்கிக் கொண்டே இருக்கிறது.

ரொனன் இருநூறுக்கும் மேற்பட்ட அதிகாரிகளையும் அமைச்சர்களையும் இந்த புத்தகத்திற்காக பேட்டி கண்டுள்ளார். அதில் சிலர் சொல்வது அப்பட்டமான பொய். அதையும் ரொனன் ஆதாரங்களோடு நிரூபிக்கிறார். புத்தகம் முழுவதும் பல ஆச்சிரியமூட்டும் விசயங்கள் உள்ளன. பேச்சுவார்த்தையும் இராணுவ வியூகமே சரியான வெளியுறவு துறை அணுகுமுறை .

வாசிக்க வேண்டிய கட்டுரை :
The Machine  That Fails 

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.