Tuesday, April 24, 2018

The Sweet Orange Tree - Jose Mauro de Vasconcelos


பிரேசிலில் மிகவும் பிரபலமான புத்தகம் இது .என் மகளோடு நூலகத்திற்கு சென்ற பொழுது அங்கு  குழந்தைகள் பகுதியில் இந்த புத்தகத்தைப் பார்த்தேன் .  இதற்கு முன் இந்த புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டதில்லை.  உள்ளே "இது வலியை கண்டுபிடித்த  ஒரு சிறுவனின் கதை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது . அது என் ஆவலை மேலும் கூட்டியது . உடனே எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன் .

இது  ஐந்து வயது சிறுவன் ஸிஸியின் (Zeze) கதை. அப்பா வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறார். அம்மா ஒருவரின் சம்பாத்தியத்தில் மட்டுமே குடும்பம் நடந்துகொண்டிருக்கிறது . சோகமான ஏழை குடும்ப கதையில்லாமல்  சிறுவனின் அழகான கதையை சொன்னதற்காகவே ஆசிரியரை பாராட்டவேண்டும் . ஸிஸிதான் அனைவருக்கும் பிடித்தமானவன் அவனே அனைவராலும் வெறுக்கப்படுபவனும் கூட .

ஸிஸி செய்யும் குறும்புகள் அலாதியானது.அவன்  தம்பிக்கு  அவன் உருவாக்கும் விலங்கியல் பூங்கா , அண்டை வீட்டார் மற்றும் பாதிரியாரோடு அவன் செய்யும் குறும்புகள் பக்கங்களை கடகடவென திருப்பப்  செய்கிறது . சில இடங்களில் அவன் சிறுவன் என்பதையே நம்ப முடியவில்லை . அவன் தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று திடமாக நம்புகிறான் . கிறிஸ்துமஸ் அன்று அவனுள் குழந்தை இயேசு பிறக்கவில்லையென்றும் சாத்தான் பிறக்கிறான் என்றும் நம்புகிறான் .

ஆசிரியர் பல சமுக பிரச்சனைகளை அவன் மூலம் கடந்து செல்கிறார். குறிப்பாக இன மற்றும் வர்க வேறுபாடுகளை சின்ன சின்ன விசயங்களில் மிக மெல்லிதாக சிறுவனுக்கே உரிய முறையில் தொட்டுச் செல்கிறார். ஸிஸி அனைத்தையும் வெளிப்படையாக பேசுபவன். அதை மற்றவர்களால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை . அதனால் எப்போதும் அடி வாங்கிக்கொண்டே இருக்கிறான். அவனுக்கு ஆறுதல் தரும் விஷயங்களில் முக்கியமானவை  ஆரஞ்சு மரமும் அவனை அவனாகவே ஏற்றுக்கொண்ட பாட்டுப் புத்தகம் விற்கும் சிறுவனும் மற்றும் கார் வைத்திருக்கும் பெரியவர்.

யாரும் விரும்பாத ஆரஞ்சு மரத்தை அவன் தனது நண்பனாக ஏற்றுக்கொள்கிறான் . தனது இன்பத்தையும் துன்பத்தையும் அதோடு பகிர்ந்து கொள்கிறான். பாட்டு புத்தகம் விற்கும் சிறுவனுடன் உள்ள உறவு கள்ளமில்லாத பால்யத்திற்கே உரிய உறவு . கார் வைத்திருக்கும் பெரியவருடனான உறவு மகன் தந்தை உறவு போல. தன்னை தானாகவே நேசித்தால் அவரை அவனுக்கு மிகவும் பபிடித்தது .

இது ஆசிரியரின் சொந்த கதை என்று சொல்லப்படுகிறது .பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற புத்தகம் . திரைப்படமாகவும் வந்துள்ளது .அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் .

No comments: