Silence என்று பெயரிட்ட புத்தகம் ஒன்றை இரண்டு வருடங்களுக்கு முன் பழைய புத்தகக் கடையில் வாங்கினேன் .அதுவரை ஸுசக்கு என்டோ (Shusaku Endo) என்ற பெயரைக் நான் கேள்விப்பட்டதேயில்லை. கூகுளில் தேடியபோது இந்த புத்தகம் எவ்வளவு பிரபலமானதென்று தெரிந்தது .எந்த புத்தகம் வாங்கினாலும் உடனே 10-20 பக்கங்கள் வாசிப்பது என் வழக்கம் .இந்த புத்தகத்தையும் அதுபோல உடனே வாசித்தேன் . நாற்பது பக்கங்கள் வாசித்த பிறகு இனி ஒரேமூச்சில் வாசிக்க முடிவு செய்து புத்தகத்தை எங்கோ வைத்தேன் . உண்மையில் இந்த புத்தகம் எங்கு இருக்கிறதென்று மறந்தேவிட்டது .
கடந்த வருடம் ஒரு magazine-ல் மார்ட்டின் ஸ்கோர்செஸி (Martin Scorsese) இந்த புத்தகத்தின் கதையை திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று படித்தேன் .உடனே புத்தகத்தைத் தேடி கண்டுபிடித்து படிக்க ஆரம்பித்தேன். ஒரு சேசு சபை (Jesuits) பாதிரியார் தனது குரு கிறிஸ்துவத்தை துறந்தார் என்று கேள்விப்பட்டு அவரை தேடி ஜப்பான் செல்கிறார் அங்கு அவர் சந்திக்கும் பிரச்சனைகளே இந்த நாவலின் கதை .இந்த கதை ஒரு உண்மை சம்பவத்தைத் தழுவியது . புனித பிரான்சிஸ் சேவியர் 1549-ஆம் ஆண்டு ஜப்பான் சென்று இரண்டு வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றுகிறார் .அவரைத் தொடர்ந்து அடுத்த 50 ஆண்டுகளில் பல்வேறு கிறிஸ்தவ குழுக்கள் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை மதம் மாற்றினர் . இந்த குழுக்களுக்குள் நடந்த உள் மோதலால் .அவர்களை 1587-ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது . உச்சக்கட்டமாக 1597-ல் இருபத்தியாறு கிறிஸ்தவர்கள் ஆறு பாதிரியார்கள் உட்பட நாகசாகியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டனர் .
பதினேழாம் நூற்றாண்டு ஜப்பானில் கிறிஸ்தவர்கள் பெரும் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இந்த சூழ்நிலையில்தான் இரண்டு பாதிரியார்கள் ரொட்ரிகோஸ் மற்றும் கர்ப்பே தங்களின் குருவை தேடி வருகிறார்கள்.அங்கு அவர்களை மறைந்து வாழும் கிறிஸ்தவர்கள் ஆதரித்து அடைக்கலம் கொடுக்கிறார்கள் .அந்த மக்களின் இறை நம்பிக்கையும் அதற்காக அவர்கள் படும் துன்பமும் பாதிரியார்கள் இருவரையும் ஆச்சரியப்படுத்துகிறது .அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றுகிறார்கள் .அவர்களுக்கு வழிகாட்டியாக கிச்சிஜிரோ ,ஒரு கோழை மொழிப்பெயர்ப்பாளர். .அப்படி வெளியே சென்ற ஒரு தடவை விசாரணைக் குழு ஒன்று கிராமத்தின் மூன்று முக்கிய பெரியோரை மிகக் கொடுமையாக கொலை செய்கிறது.அவர்கள் செய்த குற்றம் இயேசு கிறிஸ்துவின் படத்தை(fumi-e) மிதிக்காதது . இந்த சம்பவம் இரு பாதிரியார்களையும் மிகவும் பாதிக்கிறது . அவர்கள் நினைத்தது தாங்கள்தான் இம்மக்களை மீட்க வேண்டுமென்று ஆனால் நடந்து கொண்டிருப்பதோ நேரெதிர் .ரொட்ரிகோஸ் இவ்வளவு கொடுமைக்கு பிறகும் எப்படி கடவுள் அமைதியாக இருக்கிறார் என்று தனக்குள் கேள்வி கேட்கிறார் .
அவர்கள் கைது செய்யப்படுமுன்புவரை மக்களை இயேசு கிறிஸ்துவின் படத்தை மிதித்து உயிரைக் காப்பாற்றுமாறு வேண்டுகிறார்கள் ஆனால் அவர்கள் அதைச் செய்ய மறுக்கிறார்கள். ஜப்பான் அதிகாரிகள் பாதிரியாரை துன்புறுத்தாமல் அவர் முன் மக்களை துன்புறுத்துகிறார்கள். அதிகாரிகள் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான் பாதிரியார் ரொட்ரிகோஸ் கிறிஸ்துவை நிராகரித்து அவரின் படத்தை மிதிக்க வேண்டும். முகுந்த மன போராட்டத்திற்குப்பிறகு ரொட்ரிகோஸ் இயேசு கிறிஸ்துவின் படத்தை மிதிக்கிறான் .அப்போது சேவல் கூவுகிறது. ஒரு குரல் கேட்கிறது "மிதி ,மிதி , யாரையும் விட உனது காலின் வலி எனக்கு தெரியும்.மிதி, மனிதனால் மிதிக்கப்படுவதர்காகவே இந்த பூமியில் பிறந்தேன்.அவர்களின் வலியில் பங்கெடுப்பதர்காகவே சிலுவை சுமந்தேன் ." இது யாருடைய குரல் இயேசுவின் குரலா அல்லது சாத்தானின் குரலா? சேவல் கூவுவது எதைக் குறிக்கிறது - பீட்டரின் மறுப்பை போன்றதா?
ரொட்ரிகோஸ் தனது குரு பெரேராவை சந்திக்கிறான் .அவன் அவரைப் பற்றி கேள்விப்பட்ட அனைத்தும் உண்மையென்று உணர்கிறான் . பெரேரா ஜப்பான் ஒரு சதுப்பு நிலம் அதில் கிறிஸ்தவம் வளராது என்கிறார் .ரொட்ரிகோஸும் பெரேராவைப் போல மாறுகிறார் .சில காலங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் ஜப்பான் அரசிற்கு வேலை செய்கிறார்கள் -அவர்களின் வேலை ஜப்பானுக்குள் வரும் பொருட்களில் கிறிஸ்தவம் சார்ந்த ஏதாவது இருக்கிறதா என்று சோதிப்பது. அடுத்த முப்பது வருடங்கள் மீண்டும் மீண்டும் இயேசு கிறிஸ்துவின் படத்தை ஜப்பானிய அரசுக்கினங்க மிதிக்கிறான்.அவ்வாறே வாழ்ந்து மடிகிறான் .
சேவல் கூவுவது என்னைப் பொறுத்தவரை பீட்டரின் மறுப்பைப் போன்றதல்ல ஏனெனில் பீட்டர் திருந்தி இறுதிவரை கிறிஸ்துவிற்காக வாழ்ந்தார் .ஆனால் ரொட்ரிகோஸ் இறுதிவரை மறுதலித்துக் கொண்டே இருக்கிறான். இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் கிச்சிஜிரோ. அவன் பாதிரியார்களைக் காட்டிக் கொடுத்தாலும் மனம் திரும்பி மன்னிப்பு வேண்டுகிறான்.பலமுறை தவறு செய்தாலும் மனம் மாறுகிறான்.கிச்சிஜிரோ கிறிஸ்துவைத் துறந்தாலும் கிறித்தவர்களுக்கு உதவுகிறான் .
பல விதமான கேள்விகளுடன் இந்த நாவல் நிறைவடைகிறது.மக்களைக் காப்பாற்ற பாதிரியார் கிறிஸ்துவைத் துறப்பது சரியா ? கிறிஸ்துவிற்காக உயிர் துறக்கும் மக்களின் நம்பிக்கை பெரிதா? எப்படி கடவுளின் அமைதியைப் புரிந்துக்கொள்வது?
இந்த நாவல் வாசித்த பிறகு அதே பெயரில் வந்த படத்தையும் பார்த்தேன் . மார்ட்டின் ஸ்கோர்செஸி நாவலுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும் .இந்த திரைப்படத்திற்கும் நாவலுக்கும் உள்ள பெரிய வேறுபாடு இறுதி காட்சிதான். திரைப்படத்தில் பாதிரியார் ரொட்ரிகோஸ் இறந்த பிறகு அவரது சவப்பெட்டிக்குள் அவரது ஜப்பானிய மனைவி ஒரு சிலுவைவையை யாருக்கும் தெரியாமல் வைக்கிறார் அதோடு படம் நிறைவடைகிறது.இந்த குறியீடு எதைக்குறிக்கிறது ?
கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.
1 comment:
Interesting writing...
Post a Comment