Monday, August 31, 2020

ரன்னிங் டைரி - 100

 29-08-2020 05:45

தஞ்சோங் காத்தோங் ரோடு

இன்று நீண்ட தூரம் ஓடவேண்டும் ஒன்று முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன்.  ஆனால் எந்த பக்கம் செல்வது என்று முடிவு செய்யாமல் ஓட ஆரம்பித்தேன்.  கால்கள் தானாகவே கிழக்கு கடற்கரை சாலையின் பக்கம் சென்றது. மெஸ்ஸியைப்  பற்றிய செய்திகள்  மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவரின் கோல்கள் மனதில் படம் போல ஓடிக் கொண்டிருந்தது. எனக்கு அவரின் முக்கியமான கோல்களின் ஆங்கில வர்ணனை மனப்பாடமாகத் தெரியும் அதிலும் ரே ஹட்ஸன் ,ராப் பாமர் மற்றும் மார்டின் டைலரின் வார்த்தைகள் மறக்கவே முடியாது. அவர் எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் மீண்டும் விளையாட வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Thursday, August 27, 2020

ரன்னிங் டைரி - 99

 27-08-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு -சாங்கி ரோடு -கிழக்கு கடற்கரை சாலை 

நல்ல வெய்யில். இன்று வேறு வழியில் ஓடலாம் என்று எண்ணி சாங்கி ரோட்டை நோக்கி ஓடினேன்.மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கவனம் எல்லாம் யார் மீதும் மோதாமல் ஓடுவதில்தான் இருந்தது. யுனோஸ் வளைவில் இருந்து மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை நான் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தேன். வீடுகள் மிக அழகாக இருந்தன. அனைத்து வீடுகளின் வெளிப்புறத்தில் கார்களும் நாய்களும் இருந்தன.நான் பராக்கு பார்த்துக் கொண்டே ஓடினேன்.திடீரென்று மெஸ்ஸியின் ஞாபகம் வந்தது.மீண்டும் பார்சிலோனாவிற்கு மெஸ்ஸி விளையாடுவாரா என்று  எண்ணிக் கொண்டே அவரின் பல கோல்கள் கண்முன்னே படமாக வந்தன. வரம் வரம் எனக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்துக் கொண்டிருக்கும் வீரனுக்கு இப்படி ஒரு நிலை என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.


Wednesday, August 26, 2020

ரன்னிங் டைரி - 98

    26-08-2020 08:30

தஞ்சோங் காத்தோங் ரோடு

இன்று குறைவான தூரமே ஓட வேண்டுமென்று முடிவெடுத்திருந்தேன். அதன்படி இன்று குறைவான தூரமே ஓடினேன். மிக வேகமாக ஓடினேன்.  எண்ணம் முழுவதும் சுவாசத்தில்தான் இருந்தது. வீட்டை அடைந்ததே தெரியவில்லை.

ரன்னிங் டைரி - 97

   25-08-2020 08:35

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓட ஆரம்பித்ததே வேகமாகத் தான். எப்போதும் மெதுவாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்டுவதுதான் சரி. சில கிலோமீட்டர்களுக்கு பிறகு வேகத்தைக் குறைத்தேன். சரியான வேகம் வரும் வரை வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் ஓடினேன். சீரான வேகம் எது என்பது ஒரு வீரனுக்கு தெரியும். எனக்கு என் வேகம் எது என்பது தெரியும். அப்படித் தெரியும் என்பதால் நான் உடனே அந்த வேகத்தை அடைய முடியாது. பல நேரங்களில்அந்த வேகத்தைக் கண்டடையாமல் ஓடுவதை நிறுத்தி நடந்திருக்கிறேன். இன்று என்னால் எனது சீரான வேகத்தை அடைய முடிந்தது. ஏனோ மனதில் "Civilization State " என்று வார்த்தைகள் வந்து கொண்டே இருந்தது.சென்ற வாரம் இதைப் பற்றி இரண்டு கட்டுரைகளை படித்தேன். அந்த கட்டுரைகளின் சாராம்சத்தை எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன். 

Monday, August 24, 2020

ரன்னிங் டைரி - 96

  24-08-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது இன்று அனுப்பவேண்டிய ஒரு ஈமெயில் தான். வெள்ளிக்கிழமையே நான் அனைத்தையும் தயாராக வைத்துவிட்டேன். ஆனால் மற்றொரு என்ஜினீயரின் ஒப்புதல் இல்லாமல் நான் அந்த ஈமெயிலை அனுப்ப முடியாது. இந்த ப்ராஜெக்ட் ஒரு இந்திய கம்பெனிக்கு செய்ய டெமோ காட்ட வேண்டும். அதற்குரிய flowchart-ஐ நான் வரைந்து வைத்திருக்கிறேன். ஈமெயிலுடன் அதையும் சேர்த்து அனுப்ப வேண்டும். அப்படியே எண்ணம் முழுவதும் நான் இதுவரை வரைந்த flow diagrams மேல் சென்றது. Microsoft Visio-தான் எனக்கு எல்லாமாகி போனது. ஒரு மணிநேரம் பேச வேண்டியதை ஒரு flow diagram ஐந்து நிமிடத்தில் புரிய வைத்து விடும்.  இந்த 12 வருடங்களில் நான் பல மீட்டிங்களுக்கு சென்றுள்ளேன் என்னைப் பொறுத்தவரை diagrams இல்லாமல் ப்ரொஜெக்ட்டை  கஸ்டமருக்கு விளக்குவது பெரும்  கஷ்டம்.  அப்படி யோசித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று  "Hi Sasi" என்று ஒருவர் என் முன்னாள் ஓடி வந்துகொண்டிருந்தார். எனக்கு உடனே அது யாரென்று புலப்படவில்லை. மிக அருகில் வந்தவுடன் தான் அது யாரென்று எனக்கு தெரிந்தது -அவர் என் பாஸ்(Boss). அவரும் ஓடிக்கொண்டிருந்தார். அவருக்கு "Hi" சொல்லிவிட்டு இருவரும் நிற்காமல் எதிரெதிர் திசையில் ஓடினோம். அப்போதுதான் கவனித்தேன் எனக்கு முன்னால் ஒருவர் சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தார். அவரை பின்தொடர முடிவு செய்து வேகத்தை கூட்டி அவருக்கு மிக அருகில் ஓடினேன். வீடு வரும் வரை அவரை பின் தொடர்ந்தேன்,  மனதெல்லாம் அவரின் கால்கள் தான் ... அவர் என் வீட்டைத் தாண்டி ஓடினார். வீட்டிற்குள் வந்ததும் மொபைலைப் பார்த்தேன் "Hope u had a good run 👍" என  என் பாஸ்  மெசேஜ் அனுப்பியிருந்தார்.