Monday, September 16, 2019

ரன்னிங் டைரி -4

14-09-2019 05:50
கிழக்கு கடற்கரை பூங்கா

சனிக் கிழமைகளில் பொதுவாக காலை 4:30 மணிக்கே ஓட ஆரம்பித்து விடுவேன். ஆனால் இன்று தாமதமாகியது. குளிர் காற்று.கிழக்கு கடற்கரை பூங்கா எனக்கு மற்றொரு வீடு மாதிரி. வீடு மற்றும் அலுவலகத்திற்கு பிறகு நான் அதிகமாக நேரம் செலவழிக்கும் இடம் . வீட்டிலிருந்து பூங்கா செல்லும்வரை மழை பெய்யுமா பெய்யாதா என்று கேட்டுக்கொண்டிருந்தேன். பூங்காவை அடைந்தவுடன் கடல் காற்று என்றும் கொடுக்கும் ஒருவிதமான புத்துணர்வை கொடுத்தது.கடல் தாயை கையெடுத்து வணங்கிவிட்டு ஓட்டத்தைத் தொடர்ந்தேன்.


ஏனோ தெரியவில்லை அம்மாச்சி ஞாபகம் திடீரென்று வந்தது. தூங்கும் முன் கதை சொல்லும்  அம்மாச்சி அப்பத்தா எங்கள் யாருக்கும் அமையவில்லை. அப்பத்தா நான் சிறுவனாக இருக்கும் போதே இறந்துவிட்டார். பாட்டி என்றால் அம்மாச்சி மட்டும்தான். அம்மாச்சி பல டாக்டர்களுக்கு சமம். அம்மாச்சி எனக்கு எப்போ உடம்பு சரியில்லையென்றாலும் உடனே வருபவர். இன்னுமே  எனக்கு உடம்பு சரியில்லாமல் போகும்போதெல்லாம் வரும் முகங்கள்  அம்மாச்சி மற்றும் அம்மாவுடையது.

அம்மாச்சியின் ஞாபகத்திலிருந்து பாம்பன் கடற்கரை ஞாபகம் வந்தது. இதுவரை ஊர் கடற்கரையில் ஓடியதில்லை. இந்த முறை பாம்பன் பாலத்தில் ஓடியது மறக்க முடியாதது. நான் சென்ற அனைத்து  நாடுகளிலும் ஓடி இருக்கின்றேன் ஆனால் சொந்த ஊரில் ஓடியது இந்த வருடம்தான்.பாம்பன் பாலத்தின் பராமரிப்பையும் கிழக்கு கடற்கரை பூங்காவின் பராமரிப்பையும் நினைத்து ஒரு நிமிடம் நின்றே விட்டேன். ஒரு விதமான சோகம் என்னைப் பற்றிக்கொண்டது. நல்லவேளை எனக்கு மிகவும் பிடித்த பாடலான "மாங்குயிலே பூங்குயிலே" பாடல் ஒலிக்க ஆரம்பித்தது அந்த சோர்விலிருந்து மீண்டேன். இந்த பாடல் ஒலிக்கும்போதெல்லாம் நானே இளையராஜா நானே எஸ்பிபி நானே ஜானகி நானே ராமராஜன் நானே கனகா! என்னை அறியாமலேயே என் கைகள் இசைக்கேற்ப அசைய ஆரம்பித்துவிட்டன .இது எப்போதும் நடப்பவைதான். பலபேர் என்னை நிறுத்தி என்ன பாட்டு கேட்டுகிட்டு இருக்கீங்க? என்று கேட்டதுண்டு. நானும் சிரித்துக்கொண்டே பதில் கூறுவேன். இன்று யாரும் அப்படி கேட்கவில்லை. என்ன இசை! ராஜா ராஜாதான்!

லேசாக வெளிச்சம் வர ஆரம்பித்தது.  வயதானவர்கள் தாய் சீ (Tai chi) மற்றும் qigong பயிற்ச்சி செய்ய தொடங்கினர். அவர்களது உடல் அசைவு ஓர் ஓவியம் போன்றது. மெதுவான கை கால்கள் அசைவு. பல தடவை என் ஓட்ட வேகத்தை குறைத்து அதை ரசித்ததுண்டு. இன்று அவ்வாறு செய்யவில்லை. பெடோக் jetty-யைத் கடக்கும்போது மெஸ்ஸியின் ஞாபகம் வந்தது . மெஸ்ஸியில்லாமல் வார இறுதி football-லே interest இல்லை."நிகரா  தன் நிகரா " என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. வினீத் ஸ்ரீனிவாசனின் குரலோ குரல் . திடீரென்று ஒரு பெண்கள் குரூப் பிங்க் கலர் டீ-ஷர்ட் மற்றும் பிங்க் கலர் ஷூவிலும் side வழியிலிருந்து என் முன்னே ஓடினர். நான் அவர்களின் shoes-ஐ பார்த்து சிரித்துக்கொண்டே அவர்களுக்கு ஈடாக எனது வேகத்தை அதிகரித்தேன். சற்று தூரம் கடந்தவுடன் மற்றொரு பெண்கள் குரூப் அதே பிங்க் கலர் டீ-ஷர்ட்ல். ஏதோ போட்டி என்று எண்ணிக்கொண்டேன். அப்படியே எண்ணங்கள் அடங்கி மூச்சில் வந்து நின்றது வீடு வரும்வரை எதையும் எண்ணியதாக ஞாபகமில்லை.

Thursday, September 12, 2019

ரன்னிங் டைரி -3

12/09/2019 08:10
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

வாக் மேனை எடுக்க மறந்து விட்டேன். அருமையான காலை. வெய்யில் லேசாக அடித்துக்கொண்டிருந்தது. வாரநாட்களில் காலையில் ஓடினாள் சில காட்சிகளை ஒவ்வொரு நாளும் காணலாம். இரண்டு இந்திய பள்ளிக் குழந்தைகள் அவசர அவசரமாக பேருந்து எண் 30-ஐ பிடிக்க ஓடுவார்கள். இன்றும் அதே நடந்தது. எப்பவும் யோசிப்பது போல் இன்றும் அதே யோசனை அவர்களின் பெற்றோர்கள் ஏன் அவர்களை சற்று நேரம் முன்பாக பேருந்து நிலையத்திற்கு போக சொல்லக் கூடாது?? இந்த மொபைல் அப்ளிகேசனால் வருகின்ற வினை.

சர்ச்க்குள் ஒரு ஐயா இரண்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டு புரட்டி பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு "அருள் நிறைந்த மரியே" சொல்லிக்கொண்டே கடந்து ஓடினேன்.யூனுஸ் மேம்பாலம் வரை என்ன எண்ணினேன் என்று ஞாபகமில்லை. திடீரென்று அமெரிக்கா ஏன்  குர்டிஸ்தானை கைவிட்டது என்ற கேள்வி எழுந்தது. அதற்கு காரணம் நேற்று தான்  "The Empire And Five Kings" புத்தகத்தைப் வாசிக்க ஆரம்பித்தேன். சிவப்பு  சிக்னல் வந்தது அதில் ஒரு இந்தியர் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார் என்னை உற்றுப் பார்த்தார் நான் ஹலோ என்றேன். "என்னண்ணே DMK கலர்ல டிரஸ் பண்ணிருக்க " என்று கேட்டார். நான் சிரித்துக்கொண்டு கடந்து சென்றேன். நான் சிவப்பு கலர் டீ-ஷர்ட்டும் கருப்பு ஷார்ட்ஸும் சிவப்பு ஷூவும் அணிந்திருந்தேன் !

அலுவலகத்தை நெருங்கும்போது திடீரென்று "The Final Countdown" பாடல் நினைவில் வந்தது.அலுவலகத்தை அடைந்ததும் அதைப்  பற்றிய நினைப்பே. 1996 உலக கோப்பை கிரிக்கெட் கவுண்டன் நிகழ்ச்சி ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியின் டைட்டில் பாடல் இது. எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த beat song! 

Wednesday, September 11, 2019

ரன்னிங் டைரி -2

10-09-2019 18:20

அலுவகத்திலிருந்து வீடுவரை:

ஓட ஆரம்பித்தவுடன் ஒலித்த முதல் பாடல் " மொச்சக்கொட்ட பல்லழகி" இந்த பாட்டை எப்ப கேட்டாலும் பள்ளி நாட்கள்தான் ஞாபகத்தில் வரும் ஏனென்றால் நான் இந்த பாட்டிற்கு டான்ஸ்  ஆடி இருக்கேன். எங்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்தவர் இலங்கை தமிழர். முகம் மட்டும்தான் ஞாபகத்தில் இருக்கிறது. எனக்கு முகம் முழுவதும் பெயிண்ட் அடிச்ச மாதிரி மேக்கப்! அப்படியே எண்ணம் மாறி இந்திய பிரதமர் மோடியின் "Chief of Defence" பற்றிய அறிவிப்பு வந்தது. ஒருவரின் கண்காணிப்பில் மொத்த பாதுகாப்பு துறை!அந்த பதவியை யாருக்கு கொடுப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே .சீமானிற்கு கொடுத்தால் ?? நானே சிரித்துக்கொண்டேன்!

நேற்றைவிட இன்று சற்று வேகமாக ஓடினேன். கவனம் மூச்சில் சென்று நின்றது. வழக்கம்போல எவ்வளவு நேரமென்று தெரியவில்லை. கவனம் திரும்பியபோது பாரதீய ஜனதா கட்சியின் தமிழிசை அவர்களின் முகம் வந்தது.இன்று மதியம் நண்பர் ஒருவர் தமிழிசை அவர்களின் புதிய புகைப்படத்தைக் காண்பித்தார். அவர்களின் தோற்றத்தை எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்தாலும் அவற்றை புன்னகையோடு எதிர்கொண்ட விதம் அருமை!  தமிழிசை அவர்களை பற்றி நினைக்கும்போது எப்போதும் கூட வரும் முகம் நிர்மலா சீத்தாராமன்! ஏன் என்று தெரியவில்லை.

திரும்பவும் கவனம் இசைக்கு திரும்பியபோது மலேசியா வாசுதேவனின் குரலில் "ஆசை நூறு வகை"  பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது. இவரது குரலில் ஒரு விதமான ஈர்ப்பு!  இவரின் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் சுகாவின் இந்த கட்டுரையும் கூட வரும்.வீட்டை நெருங்கும்போது தயிர் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் திரும்பி சென்று வாங்கலாமா என்ற யோசனையுடன் வீட்டை அடைந்தேன்.

Tuesday, September 10, 2019

ரன்னிங் டைரி -1

நான் சிங்கப்பூர் வந்த பிறகுதான் நீண்ட தூர ஓட்டத்தை ஆரம்பித்தேன் . அதுவரை  கிரிக்கெட் வாலிபால் மட்டுமே விளையாண்டு கொண்டிருந்தேன். இது இரண்டுமே குழு விளையாட்டு அதனால் தொடரமுடியவில்லை. உட்கர்ந்து கொண்டே வேலைப் பார்ப்பதால் எதாவது விளையாட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கையில் என் பாஸ் "நீ ஏன் மரத்தானிற்கு பயிற்சி செய்யக்கூடாது என்று கேட்டார் ?" அதுவே என்னை முதல் முறை நீண்ட தூரம் ஓடவைத்தது. இது நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.  உடற்பயிற்சிக்கென்று ஆரம்பித்த ஓட்டம் படிப்படியாக ஒருவகையான தியானமாகியது.

ஓடும்போது ஒருவகையான மன அமைதி என்னுள் உண்டாகுகிறது என்றால் அது மிகையாகாது.பலவகையான எண்ணங்கள் சிலநேரம் ஒற்றை சிந்தனை சிலநேரம் ஒன்றொன்றுக்கு தொடர்பில்லாதது. பலபேர் நீங்கள் ஓடும்போது என்ன நினைத்துக் கொள்வீர்கள் என்று கேட்பதுண்டு . அதற்கான விடையைத் தேடி  இந்த ரன்னிங் டைரி. ஓடும் நாட்களில்  ஓடிமுடித்தவுடன் எழுதலாம் என்று நினைத்து இன்று(9-9-2019) முதல் பதிவை எழுத ஆரம்பித்தேன்.

09-09-2019 18:30

அலுவகத்திலிருந்து வீடுவரை:

ஓட ஆரம்பித்தவுடன் மனதில் வந்தது இன்று அலுவகத்தில் நடந்த விசயமொன்று. நேற்றிரவு ஒரு அப்ளிகேஷனின்  இறுதி வடிவத்தை கஸ்டமர் கணினியில் install செய்திருந்தோம். இன்ஸ்டால் செய்தவர் அனைத்தும் நன்றாக இருக்கிறது என்றார் நாங்களும் சரி என்று சொல்லி தூங்கிவிட்டோம் .ஆனால் இன்று காலை அப்ளிகேஷனில் ஒரு பிரச்சன்னை. நான் உடனே டெவலப்பரிடம் போன் செய்து இப்படி பிரச்சன்னை வருகிறது என்றேன். அவர் அது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றார். எனக்கு அது அதிர்ச்சியளித்தது.அதை ஏன் எங்களிடமோ கஸ்டமரிடமோ சொல்லவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர் மௌனத்தையே பதிலாக அளித்தார்.நேர்மையின்மை!.
நான் கேட்டுக் கொண்டிருந்த பாடல் முடிந்து அடுத்தது ஆரம்பித்தது அது என் சிந்தனையை மாற்றியது. அது ஒரு இசைக்கோர்வை தாரைதப்பட்டை திரைப்படத்தின் தீம் மியூசிக்.  நாதஸ்வரம் மற்றும் மேளம்  என்ன ஒரு இணை ! இசை ஆரம்பித்தவுடன் மனதிற்கு தோன்றியது  இளையராஜாவின் முகம்தான். மனுசன் பின்னிட்டாரு ! என்னத்த சொல்ல!  இசை மட்டுமே மனதில் ஓடியது. இந்த இசை முடிந்தவுடன்  திடீரென்று சந்திரயானைப் பற்றி எண்ணம் வந்தது. முகுல் கேசவன் எழுதிய கட்டுரை நினைவில் வந்தது. இஸ்ரோவை அவர்கள் வழியிலேயே விட்டால் இந்தியாவிற்கு நல்லது என்று தோன்றியது. ட்ராபிக் சிக்கனலில் ஒரு அம்மாவும் குழந்தையும்  என்னைக் காட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர், நான் சாலையைக் கடந்து சென்றபோது ஹலோ என்று சொன்னேன். குழந்தைக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை. கொள்ளை அழகு !
அடுத்த பல நிமிடங்கள்  மனது அமைதியாக மூச்சுக்காற்றை கவனித்துக் கொண்டிருந்தது எத்தனை பாடல்கள் கேட்டேன் என்று தெரியவில்லை. திடீரென்று எண்ணம் இசையில் திரும்பியபோது "சின்ன மணிக்குயிலே " எஸ் பி பியின் குரலில் ஒலித்துக்கொண்டிருந்தது. இளையராஜா மட்டும் இல்லையென்றால் என்ற கேள்விகேட்டுக்கொண்டே வீட்டை அடைந்தேன் .

Tuesday, July 2, 2019

சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்



நான் கிளாசிக்கல் இசை கேட்க ஆரம்பித்தப் போது வாங்கிய முதல் இரண்டு இந்திய இசை சிடிக்கள்  திருவாரூர் ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசை தொகுப்பும் விக்கு விநாயகத்தின் கடம் இசை தொகுப்பும்தான். நாதஸ்வர இசைக்கு ஒரு விதமான ஈர்ப்பு தன்மை உண்டு. ஒரு விதமான கம்பீரம் ஒரு வகையான சோகம் கலந்த இசை. எனக்கு நாதஸ்வரத்தையும் வித்துவான்களைபயும்  பற்றி ஒன்றும் தெரியாது. பலமுறை கேட்டதுண்டு. இதுவே நாதஸ்வரத்திற்கும் எனக்கும் உள்ள உறவு.

ரத்தினம் என்ற நாதஸ்வர கலைஞர் பிடரியில் அடி வாங்குகிறார். இதுவும் இந்த சொற்களோடு "தாயோளி, நிறுத்துறா, சாமிக்கு யாரு வில்லு குடுக்கிறதுங்கிற பிரச்சனையே முடியல, அதுக்குள்ளே வாயில வச்சி ஊத ஆரம்பிச்சிட்டீங்க" .இந்த  முதல் பத்தியிலேயே .எஸ்.ரா நாவலின் கதையை சொல்லிவிடுகிறார்.  இந்த நாவல் நாதஸ்வர கலைஞர்களின் இன்றைய நிலையை தெளிவாக பிரதிப்பலிக்கிறது.

பக்கிரி மற்றும் ரத்தினம் இருவரும் நாதஸ்வர கலைஞர்கள். ஒரு ஊர் திருவிழாவிற்கு சென்றபோது மேல் சாதியினருக்கு இடையே நடந்த சண்டையில் இவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த ஊர்க்காரர்கள் அவர்களை கட்டி வைத்து அடிக்கிறார்கள். பூசாரி அவர்கள் கட்டுகளை அவிழ்த்து  உதவி செய்கிறார். விழா மேடையை தீவைத்து விட்டு தப்பித்து சொல்கிறார்கள். அவர்கள் ஊர் ஊராக சுற்றுகிறார்கள். இந்த சுற்றல் வாழ்க்கைதான் நாவலின் கதை.

ஒவ்வொரு அத்தியாமமும் ஒரு ஊர்பெயரில் தொடங்குகிறது. கரிசல் காட்டில் தொடங்கிய கதை கொடுமுடி, தொடுமாக்கல், தாம்பரம், வேப்பங்காடு, கோவை, நடுக்கோட்டை, மருதூர், டெல்லி, லண்டன் என பல இடங்களுக்கு பயணிக்கிறது.ஒவ்வொரு ஊரிலும் ஒரு கதை. எஸ்.ரா கதைக்குள் கதை சொல்வதில் வல்லவர் . அவருடைய மற்ற நாவல்களைப் போல இதிலும் அப்படியே.பல வகையான கதாப்பாத்திரங்கள் வருகின்றன ,ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்லிச் செல்கின்றனர். எங்கே சென்றாலும் அவர்களுக்கு இகழ்ச்சிதான். சாதியை சொல்லி திட்டுதல் ,பேசியே கூலியை கொடுப்பதில்லை ,திருமண வீட்டில் சாப்பிட போராட்டம் மாறும் பல இன்னல்கள்.

 குழிக்கரை பிச்சையா, நல்லடை சண்முக சுந்தரம், வல்லம் தெட்சிணாமூர்த்தி,ஒதியூர் கண்ணுச்சாமி, சாமிநாதபிள்ளை, தன்னாசி போன்ற பல நாதஸ்வர ஜாம்பவான்கள் வருகிறார்கள். அவர்கள பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. "எப்படி  இருந்திருக்காங்க  இப்படி ஆயிட்டாங்களே " என்று மட்டும்தான் என்னால் சொல்ல முடிகிறது.

இந்த புத்தகம்  சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது. எஸ் ரா அதற்கு தகுதியானவர் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் .