Wednesday, January 22, 2020

ரன்னிங் டைரி -57

அலுவலகத்திலிருந்து வீடுவரை
22-01-2020 18:15

ஓட ஆரம்பித்தவுடன் வாக்மேனில் "என்னை தாலாட்ட வருவாளா" பாடல் ஒலித்தது. இந்த பாடல் என்னை தூத்துக்குடிக்கு கொண்டு சென்றது. நான் "காதலுக்கு மரியாதை" அங்குதான் முதன்முதலில் பார்த்தேன். "கரகாட்டக்காரன்" படத்திற்க்கு பிறகு நான் திரையரங்கில் பார்த்த படம்.அக்கா திருமணம் முடித்த அவர்கள் வீட்டிற்கு முதல் தடவை தூத்துக்குடி சென்றேன். கார்னேசன் திரையரங்கு என்று நினைக்கிறேன். சரியான கூட்டம். எனக்கு அது பெரும் அனுபவம். இதற்கு முன்பு அவ்வளவு கூட்டத்துடன்  திரைப்படம் பார்த்ததில்லை. பலபேர் நின்றுகொண்டு பார்த்தனர். அப்படியே தூத்துக்குடியிலிருந்து க்ரிஷ்ணகிரிக்கு சென்றது மனம். அங்கு ஒரு திரையரங்கில் ஒரு படம் நானும் நண்பனும் பார்த்தோம் படப்பெயரும் திரையரங்கு பெயரும் ஞாபகம் இல்லை ஆனாலும் அந்த அனுபவத்தை மறக்க முடியாது. அந்த படம் முழுவதையும் கழுத்தை ஒரு பக்கம் நீட்டிக் கொண்டுதான் பார்த்தோம். திரையரங்கே ஒரு சாய்த்து காட்டியிருக்கிறார்கள். சிரித்துக் கொண்டே ஓடி முடித்தேன்.


Tuesday, January 21, 2020

If Cats Disappeared From The World - Genki Kawamura


In order to gain something, you have to lose something.

சில திரைப்படங்களை "feel good movie"-னு சொல்வோம். அந்த மாதிரி இந்த புத்தகம்ஒரு "feel good" வாசிப்பு. ஆனால் நம்மை பெரிதும் சிந்திக்க வைக்கிறது. ஒரு இளம் தபால்காரர் தனக்கு மூளை கேன்சர்  இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறார்.இன்னும் சில நாட்களே உள்ளன அதனால் தான் விருப்புவதை செய்யாலாம் என்று எண்ணி ஒரு பட்டியலை(bucket list) போடுகிறார். திடீரென்று அவனை போலவே உருவமுள்ள ஒரு பேய் தோன்றுகிறது. அது அவனிடம் பேரம் பேசுகிறது அதாவது தான் அவனுக்கு இருக்கும் வாழ் நாட்களில் மேலும் ஒரு நாள் தருவதாகவும் அதற்கு அவன் பேய் ஏதாவது ஒன்றை மறைய ஒப்புக் கொள்ளவேண்டும் என்கிறது. ஒவ்வொரு முறை மறையவைக்கும் போது ஒரு நாள் கூடும்.அவனுக்கு அது என்றும் பெரிதாக தெரியவில்லை அதனால் சம்மதிக்கிறான். அந்த பேயை அலோஹா என்று அழைக்கிறான்.
Like love, life is beautiful because it has to end.
முதலில் உலகளிலுள்ள அனைத்து தொலைபேசிகளும் மறைய வைக்கப் போவதாக சொல்லி அதற்கு முன் யாருக்காவது ஒரு தடவை அழைத்துக் கொள்ளலாம்  என்கிறது அலோஹா. அவன் அவனது முன்னாள் காதலியை  அழைக்கிறான்.அவர்கள் அவர்களின் உறவைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதற்கு அவர்கள் இருவரும் முக்கியமான நேரத்தில் பேசிக்கொள்ளவில்லை என்பதுதான். ஆனால் அவன் அதை இப்போது தான் உணர்கிறான்.
With freedom comes uncertainty, insecurity, and anxiety. Human beings exchanged their freedom for the sense of security that comes from living by set rules and routines—despite knowing that they pay the cost of these rules and regulations with their freedom.
இரண்டாவது அனைத்து திரைப்படங்களும்  மறைய வைக்கப் போவதாக சொல்லி அதற்கு முன் அவன் விரும்பிய படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்கிறது. அவன் "Limelight" என்கிற சார்லி சாப்ளின் படத்தை தேர்வு செய்து முன்னாள் காதலி வேலை செய்யும் திரை அரங்கிற்கு செல்கிறான். ஆனால் அங்கு சென்றபின் தான் தெரிகிறது. அந்த dvd கவரில் ஒன்றும் இல்லையென்று. அப்போது தன் அப்பாவோடு பார்த்த திரைப்படம் ஞாபகத்தில் வருகிறது. அவனுக்கு கண்ணீர் வழிந்தோடுகிறது.

மூன்றாவதாக அனைத்து கடிகாரங்களையும்  மறையவைக்கிறது அலோஹா. அவன் நேரமே ஒன்று இல்லாததாக உணர்கிறான். நேரம் என்பதை மனிதன் இயற்கைக்கு எதிராக ஏற்றுக் கொண்டுவிட்டான் என்று எண்ணுகிறான்.  அவனது அப்பா கடிகாரங்கள் சரி செய்பவர். அவருக்கு என்ன ஆகும்?நான்காவதாக அனைத்து பூனைகளையும் மறையவைக்கிறது அலோஹா. அப்போது அவன் அவனுக்கும் பூனைகளுக்குமான உறவைப் பற்றி சிந்திக்கிறான். அவனது தாய் இறந்த பிறகு அவனோடு இருப்பது ஒரு பூனை மட்டும்தான் . அவனது தாய் ஒரு பூனை வந்த பிறகே மீண்டும் புத்துயிர் பெற்றாள். அவன் வாழ்க்கையில் பூனைகள் பெரும் பங்கு வகிக்கிறது. அவனுக்கு தனது பூனையின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கதையின் இடையில் அவனின் பூனை அவனோடு பேசுகிறது.
Love has to end. That’s all. And even though everyone knows it they still fall in love. I guess it’s the same with life. We all know it has to end someday, but even so we act as if we’re going to live forever.
இறுதியாக அவன் இந்த உலகைவிட்டு மறைவதற்கு முன் தன் அப்பாவிற்கு கடிதம் எழுத ஆரம்பிப்பதோடு கதை முடிகிறது. அப்பா நான்கு தெரு தாண்டிதான் இருக்கிறார் ஆனால் கடந்த நான்கு வருடங்களில் ஒருமுறை கூட அவரை சென்று பார்க்கவில்லை . எப்பவோமே நாம் நம் அருகில் இருப்பதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவே மாட்டோம்  ஆனால் அது அல்லது அவர்கள் இல்லாமல் போகும்போது தான் அதன்/அவர்களின் சிறப்பை நாம் உணர்வோம். நாம் வாழ்வில் எது முக்கியம் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும். சிறந்த உறவுகள்தான் வாழ்க்கை மிகவும் முக்கியம் இக்கதையும் அதையே சொல்கிறது .

வாசிக்கலாம்.

ரன்னிங் டைரி -56

அலுவலகத்திலிருந்து வீடுவரை
21-01-2020 18:18

ஓட ஆரம்பித்தபோது வாக்மேனில் சைக்கோ படத்தின் "தாய்மடியில் .." பாடல் ஒலித்தது. என்ன ஒரு composition.வீடு செல்லும்வரை இதே பாடலை திரும்ப திரும்ப ஒலிக்க செய்தேன். இளையராஜாவை என்னத்த சொல்ல... மனுஷன் பின்னிட்டாரு ! இந்த பாடலைக் கேட்டுக் கொண்டே வீடை அடைந்தேன்.

Monday, January 20, 2020

விசாரணைக் கமிஷன் - சா. கந்தசாமி


நீண்ட காலமாக வாசிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த புத்தகம் இது, ஏனோ இந்த நாவலின் பெயர் என்னுள் ஏதோ செய்தது. ஏதோ கிரிமினல் நாவலாக இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தேன்.கடந்த வாரம் நூலகத்தில் பார்த்தவுடன் எடுத்து விட்டேன் ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் தான் வாசிக்க நேரம் கிடைத்தது. ஒரே மூச்சில் வாசிக்க கூடிய புத்தகம்தான்.
வாழ்விலே மதிப்பு , மரியாதை எனபதை உணர்த்த நல்லது தீயது என்ற பாகுபாட்டில் எல்லாமே அடங்கி இருக்கிறது.
முதலில் நான் எதிர்பார்த்த மாதிரி இது ஒரு கிரிமினல்நாவல் இல்லை.இது ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு. தங்கராசு ஒரு பேருந்து நடத்துனர். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர். அவரின் மனைவி ருக்குமணி ஒரு ஆசிரியர். இவர்கள் இருவரின் நட்பு மிகவும் எதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.  தங்கராசு பத்தாம் வகுப்பில் தோற்றவன் ஆனால் ருக்குமணியோ படித்தவள். அந்த வித்தியாசம் அவர்களின் தினசரி வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது. அவன் கோபப்படும்போது இவள் அமைதியாய் இருப்பதும் திரும்பி அவனே அவளிடம் பேசுவதும் வெகு இயற்கையாக நடக்கிறது. தொண்டை வலியால் பத்து நாட்களுக்கு மேலாக ருக்குமணி அவதிப்படுகிறாள்.

பேருந்து டெப்போவில் நடக்கும் சம்பவங்கள் உண்மையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பேசும் தற்கால அரசியல்தான் கதையின் மய்யம். நடத்துனர்கள் ஓட்டுனர்களின் பிரச்னைகள் மற்றும் அங்கு நடக்கும் அரசியல் ஒரு பக்கமென்றால் மற்றொரு பக்கம் ஆசிரியர்களின் உலகம். இந்த இரண்டிற்கும் இடையில் அவர்கள் இருவரின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் நாட்டின் அரசியலிலும் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.  ஒரு சாதராண ஆசிரியரும் பேருந்து நடத்துனரும் எப்படி அரசியல் தலைவர்களாக மாறுகிறார்கள் என்பதை பாரதிவாணன் மற்றும் கணபதி மூலம் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் சுயநலவாதிகள். பாரதிவாணன் ருக்குமணிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் புத்தகம் தருவதாக சொல்லி இறுதிவரை அவளிடம் கொடுக்கவே இல்லை.தற்போது அவன் அமைச்சர்.

போலீசுக்கும் ஓட்டுநர் நடத்துங்கருக்கும் இடையே நடந்த சண்டையில் சம்பந்தமே இல்லாமல் தங்கராசு கைது செய்பப்டுகிறான். அந்த கலவரத்தை ஆய்வு செய்ய ஒரு விசாரணைக் கமிஷன் நியமிக்கப் படுகிறது. இது கூறும் நீதியே இந்த நாவலின் அடிநாதம். தங்கராசு போலீசாரால் கொல்லப்படுகிறான்.அரசியல்வாதிகள் தங்களுக்கு எது தேவையோ அதை மட்டுமே செய்வார்கள் என்பதற்கு இந்த கொலையும் ஒரு எடுத்துக்கட்டு. கதையில் அங்கும் இங்குமாக சாதி எட்டிப் பார்க்கிறது அதிலும் ஆசிரியர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள்  அதின் உச்சம்.ஆனால் இறுதிவரை தங்கராசும் ருக்குமணியும் என்ன சாதி என்று ஆசிரியர் கூறவில்லை.

எனக்கு இக்கதையில் வரும் நாய் டைகர் பிடித்திருந்தது. டைகருக்கு பின்னல் ஒரு கதையுண்டு அது ருக்குமணியின் கதாபாத்திரத்திற்கு மேலும் வழுச் சேர்க்கிறது.டைகருக்கு தெரிந்திருந்தது யாரை வீட்டிற்கு உள்ள விடவேண்டும் என்று. எனக்கு பிடித்த மற்றொரு கதாபாத்திரம் ஓட்டுநர்  சையத் முகமது. அவர் பேசுவதும் செய்வதும் தொழில் பக்கிதியின் உச்சம். சில இடங்களில் தேவையில்லாத தலபுராணங்கள் வருகின்றன. ஏன் என்று தெரியவில்லை. ஒரு காலகட்டத்தின் சமூக அரசியல் மற்றும் கலாச்சாரத்தை கண்முன் கொண்டுவந்துள்ளார் சா.கந்தசாமி. இந்நூல் 1998 ஆண்டு சாகித்ய அகாடமி பரிசைப் பெற்றது.

வாசிக்க வேண்டிய புத்தகம் .

Friday, January 17, 2020

ரன்னிங் டைரி -55

வீட்டிலிருந்து அலுவலகம்வரை
17-01-2020 08:18

நல்ல வெய்யில். நேற்று படித்து முடித்த "விசாரணை கமிசன்" என்று நாவலின் கதைதான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. எத்தனை தங்கராசுகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நினைக்கவே மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. மனித வாழ்க்கை ஒரு பெரிய மர்மம் என்று எண்ணிக் கொண்டே அலுவலகத்தை அடைந்தேன்.

Thursday, January 16, 2020

ரன்னிங் டைரி -54

வீட்டிலிருந்து அலுவலகம்வரை
16-01-2020 08:20

மழை மேகம். ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது சத்குரு ஜக்கிவாசுதேவ் தான். ஏனென்றால் இன்று  அலுவலகத்தில் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். இரண்டு தடவை நான் அவரின் சிறுவானி மையத்திற்கு சென்றிருக்கிறேன். ஏனோ பெரிதாய் இந்த மையத்திலும் சத்குரு மேலும் ஈடுபாடு இல்லாமல் போனது.  அப்படியே NT Wright பற்றி எண்ணம் வந்தது.அவரின் எழுத்துக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அவரின் "Paul" என்ற நூலைப் படித்து முடிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி -53

அலுவலகத்திலிருந்து வீடுவரை
15-01-2020 18:18

இன்று வேகமாக ஓட வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன் அதுபோல வேகமாகவே ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஒரே வேகத்தில் ஓடி முடித்தேன். மனதில் வேறு ஏதும் வரவில்லை. சுவாசத்தில் தான் எண்ணம் முழுதும் இருந்தது. 

Wednesday, January 15, 2020

ரன்னிங் டைரி -52

14-01-2020 18:07
அலுவகத்திலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது தமிழ் இலக்கிய சண்டைகள். facebook-ல் இன்று காலை வாசித்தேன். ஒரு படைப்பின் மேல் வைக்கப்படும் விமர்சனத்தை விட்டுவிட்டு அவர் அந்த ஊர்க்காரர் அதனால் அவர் எப்படி இந்த ஊர் எழுத்தாளர்களின் படைப்பு பற்றி விமர்சிக்கலாம் என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது. ஒரு விமர்சகர் அவரின் பார்வையில் ஒரு விமர்சனத்தை பொதுவெளியில் வைக்கிறர். அதை ஏற்றுக்கொள்வதும் எதிர்ப்பதும் அவர் அவரின் உரிமை. நல்ல விசயங்களை எடுத்துக் கொண்டு முன்னே செல்வதுதான் ஒரு படைப்பாளிக்கு அழகு. இரண்டு வருடங்களுக்கு முன் ஜெயமோகனின் சிங்கப்பூர் வருகை பெரும் சர்ச்சைக்குளானது. தேவையில்லாத வாக்குவாதங்கள் போலீஸ் கேஸ் வரை சென்றது. அதை நினைத்துக் கொண்டே ஓடி முடித்தேன்.



Monday, January 13, 2020

உலகின் மிக நீண்ட கழிவறை - அகரமுதல்வன்


ஐந்து குறுநாவல்களைக் கொண்ட இத்தொகுப்பு ஈழத்தின் போர் வாழ்க்கையின் ஆவணங்கள் என்றால் மிகையாகாது. நான் இதற்கு முன் இந்த மாதிரி ஈழக் கதைகளைப் படித்ததில்லை. ஒரு விதமான பரிதாபம் கோபம் மற்றும் பயத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கதைகள்.
வெள்ளி விழுவதற்கெல்லாம் நீ கூச்சலிடாதே.. எங்களுக்கு வானமே இல்லை. கொஞ்சநேரம் இந்த கடலையே பார்த்துக்கொண்டிரு.. இதுதான் உன் மூதாதையருக்கான கல்லறை.
இக்கதைகளில் வரும் போராளிகள் அனைவரும் தியாகத்தின் உருவமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இடிமுரசு என்னும் போராளியின் சித்தரிப்பு என்னை ஏதோ செய்ததென்றால் போராளியாக்காவின் செயல் கண்ணில் நீர் வர வைத்துவிட்டது. கடும் சண்டைக்கிடையில் நாய்க்குட்டியைக் காப்பாற்றும் போராளியாக்கா வேனை ஒட்டிச் சென்று எதிரியின் அர்ட்லெறியின் மேல் மோதி ஈழத்திற்காக உயிரை விடுகிறாள்.
சொல்லத்துடிக்கும் இத்துன்பமே இன்பம்.
"எனக்கு சொந்தமில்லாத பூமியின் கடல்" என்னும் கதையில் காதலும் காமமும் கடலைப் போல வருகிறது. அகதி என்பவன் ஓரிடமும் இல்லாதவனாகிறான். அதே கதையில் வரும் கிரேசி அக்காவின் வாழ்க்கை மற்றும் ஒரு பெரும்துன்பம். அதுவும் வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்களால் தமிழ் நாட்டில் வாழும் ஈழத்துப் பெண்களுக்கு வரும் துன்பத்தை இக்கதையில்தான்  முதன்முதலாக படித்தேன்.
நீ வாழ்க்கையின் உவகையை அடைய வேண்டுமெனில் சாவின் சமீபத்தையாவது தரிசிக்க வேண்டும்.
"சித்தப்பாவின் கதை"  என்னும் கதையில் வரும் ஒசாமா சித்தப்பா கதாப்பாத்திரம் பல தமிழக அரசியல்வாதிகளை ஞாபகப் படுத்துகிறது. அவரும்தான் என்ன செய்வார்.அவரால் என்னதான் செய்ய முடியும் பணத்திற்காக இயக்கத்தினரை காட்டித்தான் கொடுக்க முடியும். இயக்கமும் தண்டனை விதிப்பதில் இராணுவத்திற்கு நிகரானதுதான். "அகல்" என்னும் கதையில் இயக்கத்தினரால் கட்டாயமாக சேர்க்கப்படும் வாலிபர்களை பற்றியது. இரண்டு பக்கமும் சாவுதான். எதிர்காலம் அற்ற வாழ்வு .ஒன்று வீரச்சாவு மற்றொருன்று தண்டனைச் சாவு.
எனக்கு போரும் பிடிப்பதில்லை.போர் செய்பவர்களையும் பிடிப்பதில்லை.
"உலகின் மிக நீண்ட கழிவறை " என்னும் கதையில் வரும் இன்பம் மற்றும் ஆமைக்குளம் மறக்க முடியாதது. காலங்காலமாக தாங்கள் குளித்து திரிந்த ஆமைக்குளம் ஆர்மிக்குளமாக மாறிய கதை. இறுதியில் அவர்கள் வாழ்வில் எல்லா சூழ்நிலையிலும் இருந்த கடல் அவர்களுக்கு உலகின் நீண்ட கழிவறையாக மாறுகிறது.

அகரமுதல்வன் என்ற கவிஞன் இந்த புத்தகம் முழுதும் எட்டிப் பார்க்கிறான். எல்லாவாற்றையும் வர்ணனையுடன் விவரிக்கிறார் . போர்ச்சுழலின் வாழ்க்கையை கண்முன் கொண்டுவந்திருக்கிறார் அகரமுதல்வன். இக்கதைகளை வாசகனால் எளிதில் தாண்டிச் செல்ல முடியாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதம்தான் கொல்லப்பட்டது ஈழத்தில். போர் வாழ்க்கையைப் பற்றிய கதைகள் மேலும் எழுதப்பட வேண்டும். அப்போதுதான் அது நினைவில் இருந்து கொண்டே இருக்கும். யூதர்கள் அதை மிகச் சரியாக செய்து கொண்டிருக்கின்றனர.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

ரன்னிங் டைரி -51

11-01-2020 15:30
வீட்டிலிருந்து சிங்கப்பூர் எக்ஸ்போ

வீட்டில் அனைவரும் "zak salaam India " கண்காட்சிக்கு செல்லவேண்டுமென்றார். வேறுவழியில்லாமல் சம்மதித்தேன். வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. நான் ஓடியே அங்கு வருவதாக சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன். ஓட ஆரம்பித்தவுடன் எந்த வழியில் செல்வது என்று ஒரு குழப்பம். ஏற்கனவே மூன்று முறை வீட்டிலிருந்து எக்ஸ்போவிற்கு ஓடியிருக்கிறேன். ஆனால் அந்த மூன்று முறையும் சாயங்காலம் ஓடினேன். இப்போதோ மதியம் மழை வரலாம் இல்லையென்றால் ஓடுவது சற்று கடினம்தான். ஓட ஆரம்பித்தவுடன் உடல் முழுக்க ஒருவித புழுக்கம். சற்று நேரத்தில் ஓடும்போது எப்போதும் வரும் அமைதி வந்தது. சீராக ஓட ஆரம்பித்தேன்.

பச்சை சிக்னல் எங்கெல்லாம் வந்ததோ அந்த வழியிலேயே ஓடினேன். கேம்பங்கான் முதல் பிடோக் வரை சற்று செங்குத்தான பாதை. மிகவும் சிரமப்பட்டு ஓடினேன். கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. "Church of Our Lady of Perpetual Succour " வந்தவுடன் தொப்பியை கழட்டிவிட்டு "அருள் நிறைந்த மரியே" சொல்லிவிட்டு ஓடினேன். இந்த கோவிலுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நான் சிங்கப்பூர் வந்து சென்ற முதல் கோவில். நான் இந்த கோவிலுக்கு செல்லும்போது வியட்நாமிலிருந்து ஒரு பாதர் இருந்தார். எனக்கு அவரை ரெம்ப பிடிக்கும். அவர் இன்னும் இருக்கிறாரா என்று என்னையே கேட்டுக் கொண்டேன் .  விரைவில் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு இந்த கோவிலுக்கு வரவேண்டுமென்று முடிவுசெய்தேன்.

பிடோக் ரயில்நிலையத்தை தாண்டியவுடன் சிக்னலில் சரியான கூட்டம். நான் நின்று நடந்து சிக்னலைக் கடந்தேன்.மீண்டும் ஓட ஆரம்பித்தபோது நான் பிடோக் ஸ்டேடியத்தில் பார்த்த முதல் கால்பந்து போட்டி ஞாபகத்தில் வந்தது. அதுதான் நான் என் வாழ்வில் பார்த்த முதல் கால்பந்து போட்டி.இப்போது அங்கு கட்டிட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. நான் வழி தவறி ஓடிவிட்டேன். அங்கு வேலை செய்து கொண்டிருந்தவரிடம் வழியைக் கேட்டு மீண்டும் திரும்பி ஓடி சரியான பாதைக்கு வந்தேன்.வெய்யில் அடிக்க ஆரம்பித்தது. விரைவாக ஓடி முடித்தேன்.


Friday, January 10, 2020

ரன்னிங் டைரி -50

09-01-2020 18:17
அலுவதிலிருந்து வீடுவரை

வீட்டிற்கு செல்லும்வரை மனதில் எதுவுமே எழவில்லை. சுவாசத்தில்தான் முழு கவனமும் இருந்தது. அற்புதமான அனுபவம்.

Thursday, January 9, 2020

Penguins Stopped Play - Harry Thompson


பழைய புத்தகக் கடையில் என்னை எடு என்று என்னைப் பார்த்து ஏங்கி கேட்டுக் கொண்டிருந்தது. விட்டுவிட்டு வரமுடியாமல் வாங்கி வந்தேன். நான் இந்த அளவுக்கு விளையாட்டு சம்மந்தமான புத்தகங்களில் சிரித்ததில்லை.   இது இரண்டு நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய கிரிக்கெட் குழுவின் கதை.ஹரி தாம்சன் மற்றும் பெர்க்மன் இருவரும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்கள். கிரிக்கெட் மேல் இருந்த ஆர்வத்தால் அருகில் இருந்த நண்பர்களை சேர்த்து "Captain Scott Invitation XI" என்ற அணியை உருவாக்குகிறார்கள். பெர்க்மன் வேலையின் நிமித்தம் அணியை விட்டு விலகுகிறார். ஹரி தாம்சன் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுகிறார். இதிலிருந்தான் இந்த புத்தகம் தொடங்குகிறது.

அனைத்து கண்டங்களிலும் சென்று கிரிக்கெட் விளையாட வேண்டுமென்று முடிவு செய்த அப்படியே செய்கிறார்கள். இந்த அணியில் பல நாட்டவரும் உண்டு. பலரும் சராசரிக்கு கீழாக கிரிக்கெட் விளையாடுவார்கள். கிராமத்து அணிகளைவிட சற்று மோசமாக விளையாட கூடியர்கள். இவர்களை வைத்துக் கொண்டு உலகைச் சுற்றி வந்தால் எப்படி இருக்கும். நான் நகைச்சுவையாக இருக்கும் என்று எண்ணினேன் ஆனால் இந்த அளவுக்கு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. 

ஒவ்வொரு நாட்டிற்கும் சொல்லும் முன்னும் சென்ற பின்னும் விளையாடும் போதும் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் நம்மை காட்டுப்படுத்தமுடியாமல் சிரிக்க வைக்கிறது.ஹரி தாம்சனுக்கும் பிரிட்டிஷ் ஏர் பணியாளருக்கும் நடக்கும் உரையாடல்கள் நகைச்சுவையின் உச்சம்.அணியின் வீரர்கள் ஒவ்வொருவரின் திறமைகளை கூறும்போது வாசகனுக்கு சிரிப்பு வராமல் இருக்க வாய்ப்பே இல்லை .விளையாடிய கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் Captain Scott Invitation XI தோல்வி அடைகிறது. பெரும்பாலான போட்டிகளில் சில வீரர்கள் வேண்டுமென்றே வெற்றிக்கு எதிராக செயல்படுகிறார்கள். இந்த குணத்தைத்தான் ஹரி தாம்சனால் மாற்றவே முடியவில்லை .

சிங்கப்பூரில் அவர்கள் சிங்கப்பூர் ஸ்ரீலங்கா கிளப் அணியுடன் விளையாடுகிறார்கள். அங்கு நடக்கும் குளறுபடிகள் -கிளாசிக்! அதேபோல மலேசிய அணியுடன் விளையாடி வெல்கிறாரக்ள். அவர்கள் "கிளப்பிடம் தோற்றாலும் ஒரு தேசிய அணியை வென்றோம்" என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு நாட்டின் உணவுகளை பற்றி ஹரி தாம்சன் மிகவும் ரசித்து எழுதியுள்ளார்.

இந்த புத்தகம் வாசிக்கும் போது நான் விளையாடிய அனைத்து கிரிக்கெட் குழுக்களும் நினைவில் வந்தது.முதலில் த்ரி ஸ்டார் குழு.அது என் குடும்பம். அனைவரும் ஓரளவு விளையாடுபவர்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு பணி அதனால் எங்களுக்கு எந்த பிரச்சனைகளும் வந்ததில்லை. பல பந்தயங்களில் வென்றோம்.பலவற்றில் தோற்றோம். அடுத்து கல்லுரியில் விளையாடியது அதுவும் ஹாஸ்டல் அணியில் விளையாடியது. எங்கள் ஹாஸ்டல் அணியும் கிட்டத்தட்ட ஹரியின் அணிபோல தான்.எல்லோருக்கும் கிரிக்கெட்டில் ஈடுபாடுண்டு ஆனால் நன்றாக விளையாடதான் மாட்டோம்.இப்போது அந்த போட்டிகளைப் பற்றிப்  பேசி பேசிச்  சிரிக்கிறோம்.

இறுதியில்தான் வாசகருக்கு தெரிகிறது ஹரி தாம்சன் கேன்சர் நோயால் இறந்து விட்டார் என்று. இறுதிவரை Captain Scott Invitation XI அணிக்காக விளையாடினார். விளையாட்டு எழுத்தில் இவர் தனி ஒரு வகையை உருவாக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

ரன்னிங் டைரி -49

08-01-2020 18:16
அலுவகத்திலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்ததிலிருந்து ஒரே ஒரு சிந்தனைதான் மனதில் ஓடியது. ஒரு வாட்சப் குரூப்பில் நண்பன் ஒருவன் இனிமேல் குரூப்பில் அரசியல் பதிவுகள் அனுப்பக் கூடாது என்று பதிவிட்டிருந்தான். ஏனோ அது என்னை உறித்திக் கொண்டே இருந்தது. தற்பொழுது நாட்டில் நடப்பதைப் பார்த்தல் அரசியல் பேசாமல் இருப்பது மிகவும் கடினம், நம்மையும் அறியாமல் பேசத்தான் செய்கிறோம். எதையும் ஆராயாமலும்  படிக்கமாலும் பதிவுகள் இடுகிறோம். யாராவது அதைப் பற்றிக் கேட்டல் நமக்கு கோபம் வருகிறது.முடிவில் உறவில் விரிசல் ஏற்படுகிறது.என்னத்த சொல்ல ... என்று எண்ணிக் கொண்டே ஓடி முடித்தேன்.

Wednesday, January 8, 2020

ரன்னிங் டைரி -48

07-01-2020 16:21
அலுவலகத்திலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்தவுடன் "Enno Ratrulosthayi Gani" தெலுங்கு பாடல்தான் ஒலித்தது. இசை ஆரம்பித்தவுடன் அலெக்ஸின் காமெடி தான் ஞாபகத்தில் வந்தது.அந்த பாடல் முடிந்தவுடன் "மாசி மாசம்" பாடல் ஆரம்பித்தது. கண்டிப்பாக இந்த பாடலிற்கும் வித்தியாசம் உண்டு. எனக்கு இரண்டு பாடல்களுமே பிடிக்கும்.திடீரென்று தத்தோவ்ஸ்கியின் புத்தங்களை முழுவதும் படிக்க வேண்டுமென்று எண்ணம் வந்தது. இதற்கு முக்கிய காரணம் ஓடுவதற்கு முன்பு எஸ்.ராமகிருஷ்ணனின் உரையைக் கேட்டதுதான். நேராக நூலகம் ஓடினேன் அங்கிருந்த இரண்டு தத்தோவ்ஸ்கியின் புத்தங்களை எடுத்தேன். இந்த வருடம்  தத்தோவ்ஸ்கி வருடம் என்று எண்ணிக்கொண்டே ஓடி முடித்தேன்.

Tuesday, January 7, 2020

Silence - Erling Kagge


Keep in mind that the silence you experience is different from that which others experience. Everyone possesses their own.

எர்லிங் ககே மூன்று துருவங்களை அடைந்த முதல் மனிதன். வாட துருவம் தென் துருவம் மற்றும் எவெரெஸ்ட் மலை மூன்றையும் தனியாக அடைந்தவர்.  அவருடைய இந்த புத்தகம் அமைதியின் தியானம் என்றே சொல்லலாம்.இந்த புத்தகத்தில் அவர் மூன்று கேள்விகளை எழுப்புகிறார். அதாவது
1)what is silence?
 அமைதி என்றால் என்ன ?
2)Where is it?
 அமைதி எங்கு இருக்கிறது ?
3)why is it more important than ever ?
 அது ஏன் அவசியம் ?

இந்த மூன்று கேள்விகளுக்கும் முப்பத்திமூன்று பதில்களை அளித்துள்ளார். புத்தகத்தின் அட்டையே பல விசயங்களை நமக்கு உணர்த்துகிறது.நீல நிற பின்னணியில் மலைகள் தங்கநிறத்தில் ஜொலிக்கிறது.

Shutting out the world is not about turning your back on your surroundings, but rather the opposite: it is seeing the world a bit more clearly, staying a course and trying to love your life.
Life is long, if we listen to ourselves often enough, and look up. 
I believe it's possible for everyone to discover this silence within themselves. It is there all the time, even when we are surrounded by constant noise. Deep down in the ocean, below the waves and ripples, you can find your internal silence. Standing in the shower, letting the water wash over your head, sitting in front of a crackling fire, swimming across a forest lake or taking a walk over a field: all these can be experiences of perfect stillness too. I love that. 
What we are experiencing is experiential poverty. Such poverty may not only be about a lack of experiences, where nothing is happening. An abundance of activities can also create a feeling of experiential poverty. 
When you’ve invested a lot of time in being accessible and keeping up with what’s happening, it’s easy to conclude that it all has a certain value, even if what you have done might not be important. This is called rationalization. 
 The secret to walking to the South Pole is to put one foot in front of the other, and to do this enough times. On a purely technical scale this is quite simple. Even a mouse can eat an elephant if it takes small enough bites. The challenge lies in the desire.
Satisfaction is also a matter of sacrifice. 
we fear death to varying degrees, but the fear of not having lived is even stronger. That fear increases towards the end of life, when you understand that it will soon be too late. 
Boredom can be described as a lack of purpose....boredom always gives the feeling of being held captive. 
I believe silence is the new luxury. Silence is more exclusive and long-lasting than other luxuries. 
Silence is about rediscovering, through pausing, the things that bring us joy. 

சிறிய புத்தகம் ஆனால் எப்போதும் அருகிலேயே வைத்துக்கொள்ள கொண்டியே ஒன்று.அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். 

யவனி - தேவி யசோதரன்


"Empire" என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு தான் இந்த யவனி. இந்த புத்தகத்தைப் பல தடவை நூலகத்தில் பார்த்திருக்கிறேன் ஆனால் கடந்த வாரம் தான் எடுத்தேன். இந்த புது வருடத்தில் நான் வாசித்த முதல் புத்தகம். வரலாற்று நாவல் என்றாலே ஒருவிதமான tension அடுத்து என்ன நடக்குமோ என்று.

இது ராஜேந்திர சோழர் காலத்து கதை. அடிமைப் யவன பெண்ணான அரெமிஸ் பயிற்சிகளுக்குப் பிறகு மன்னனின் தற்காப்பு வீராங்கனயாக நியமிக்கப் படுகிறாள். அவளை அனைவரும் யவனி என்று அழைக்கின்றனர். எவருமே அவளை மதிப்பதில்லை. அவளும் தனக்கு தோன்றியதை விளைவை யோசிக்காமல்  செய்கிறாள். மன்னன் கூறும் அனைத்தையம் செய்து முடிக்கிறாள்.

ஔவை என்று அழைக்கப்பட்ட சோழ சேனாதிபதி அனந்தன் தான் யவனியை சிறைபிடித்து வந்தவன்.மன்னருக்கு நெருக்கமானவர் .அவருக்கு மனைவியும் குழந்தைகளும் இருந்தாலும் மந்தாகினி என்ற ஆசைநாயகி உண்டு. அவர் அவளோடுதான் இரவுகளை செலவழித்தார். மந்தாகினி போதையினால் இறந்து போகிறாள். யார் போதை பொருட்களை நாட்டுக்குள் விற்பது என்று தெரிந்து வரும்படி யவனியிடம் கூறுகிறன். அதிலிருந்து கதை அப்படியே மாறுகிறது. இறந்தவர் என்று நினைத்த அரசியார் மீண்டும் வருகிறார் . அவர்  உண்மையான அரசிதானா? ஏன் சீன அரசர் சோழ அரசர் எழுதிய கடிதங்களுக்கு சரியான பதில் எழுதவில்லை?

அனைத்து வரலாற்று புதினங்களில் வரும் அதே மாதிரியான துரோகங்கள் இக்கதையிலும் உண்டு.ஆனால் இக்கதையில் பிரதான கதாப்பாத்திரம் வேறு நாட்டவர். அதுவும் ஒரு பெண் .இந்நாவலின் கதை சொல்லிகள் அரெமிசும் அனந்தனும் தான். அவர்கள் இருவரின் பார்வையில்தான் அனைத்தும் விரிகிறது.யவனிக்கு சோழர்களின்  பழக்கவழக்கங்கள் குழப்பமாக இருக்கிறது ஆனால் அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது சாதிய அடுக்குகளை மீறி ஏதும் நாடாக்கதென்று அரசரே ஆனாலும் . நாகபட்டினத்தின் கட்டமைப்பே அப்படித்தான்.

சோழர்களை பற்றிய வரலாற்று குறிப்புக்கள் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.நாம் பெரும்பாலும் ராஜ ராஜா சோழனை பற்றித்தான் படித்திருப்போம் ஆனால் அவரது மகனான ராஜேந்திர சோழ பூபதி தந்தையை மிஞ்சும் அளவுக்கு ஆட்சி செய்திருக்கிறார்.இக்கதையில் அவரின் கடல் படையின் வெற்றிகளைப் பற்றிய குறிப்புகள்  பல இடங்களில் வருகிறது. இவர்தான் சோழ பேரரசின் கடல் வணிகத்தை உலகம் வியக்கும் வண்ணம் உயர்த்தியவர்.

நான் ஒரு உணவு பிரியன்.இந்த புத்தகத்தில் உணவு பற்றி பல இடங்களில் வருகிறது. ஆப்பம் ,நெய்யில் வறுத்த வாழைப் பழம், ஆடு  மற்றும் பல உணவு வகைகள் எச்சில் வரும் அளவுக்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.அந்த காலத்து ஆப்பம் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வி இன்னும் எனது மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.இந்த நாவலை எழுதிய தேவி யசோதரன் இன்போசிஸில் வேலை பார்த்தவர். சோழர்கள் வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.அந்த ஈடுபாட்டின் வெளிச்சம்தான் இந்த நாவல். வாசிக்கலாம்.


Monday, January 6, 2020

பனை விடிலி - சி.கணேசன்


இந்த புத்தகத்தின் பெயரையோ அல்லது எழுத்தாளரின் பெயரையோ இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை. விடிலி என்பதற்கு என்ன அர்த்தமென்று எனக்கு தெரியாது. நூலகத்தில் இருந்து எடுத்து வந்தவுடன் படிக்க ஆரம்பித்தேன். என்னை கணேசன் மற்றொரு உலகத்திற்கே கொண்டு சென்றுவிட்டார். வசித்து முடியும் வரை  எதோ இனம்புரியாத மகிழ்ச்சி.

பாதி படித்தவுடன் அப்பாவிடம் "விடிலி " என்றால் என்ன என்று கேட்டேன். அப்பா அதற்கு பதநீர் காய்ச்சும் பனை குடிசை என்றார். எங்களின் பூர்விகம் கன்னிராசபுரம் அங்கு எங்கு பார்த்தாலும் பனை மரங்கள்தான் சிறு வயதில் பார்த்த ஞாபகம்.இந்த நாவல் நாடார் சமூகத்தின் வளர்ச்சியைப் பற்றியது. ஒரு குடும்பத்தின் கதை சிறுவனின் பார்வையில் விரிகிறது. அவன் பள்ளியில் சேர்வதிலிருந்து தொடங்குகிறது.அவன் எல்லோருக்கும் பிடித்தவனாகிறான். ஆசிரியர் மாணவன் உறவை மிக நேர்மையாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

அவனின் முதல் நண்பர்கள்,முதல் மரணம் ,முதல் தொழில் ,முதல் காதல் என அனைத்தையும் nostalgic உணர்வோடு சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.சாதிய வேறுபாடுகளும் கட்டுப்பாடுகளும் அவனின் அனைத்திலும் வெளிப்படுகிறது. அவன் வளர வளர அவன் குடும்பமும் செழிப்படைகிறது. அதற்கு அவர்களின் கடின உழைப்புதான் முக்கிய காரணம். எந்த தொழிலாக இருந்தாலும் அதை  ஆர்வமுடன் செய்தார்கள்.இவன் மட்டுமே அந்த குடும்பத்தில் படிக்கிறான்.

ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கவிதையோடு தொடங்குகிறது. அதுவே அந்த அத்தியாயத்தின் போக்கை முடிவு செய்கிறது. 1940 ,1950 காலகட்டத்தைக்  கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஆசிரியர். கதைசொல்லியின் குடும்பம் திருச்செந்தூர் செல்லும் பகுதியின் விவரிப்பு அற்புதம். நாமும்  அவர்களோடு பயணிக்கிறோம்.

நான் ரசித்து வாசித்த புத்தகம் .

How Democracies Die - Steven Levitsky & Daniel Ziblatt


ஒரு நாடு எப்படி ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்திற்கு மாறுகிறது என பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்கள் ஆசிரியர்கள்.  சர்வாதிகார நடத்தையின்  நான்கு அறிகுறிகள் என ஆசிரியர்கள் கூறுவது:

1.Rejection of ( or weak commitment to) democratic rules of the game.
  ஜனநாயக விதிகளை நிராகரித்தல்.

2.Denial of the legitimacy of political opponents.
 எதிர்கட்சிகளை சட்டவிரோதமாக்குதல்.

3.Toleration or encouragement of violence.
வன்முறையை ஆதரித்தல்.

4.Readiness to curtail civil liberties of opponents including media.
ஊடகங்கள் மற்றும் சமூகத்தினரின் தனி உரிமைகளை குறைப்பது

இன்று உலகத்தில் பல நாடுகளின் தலைவர்கள் மேல கூறியுள்ளவற்றை செய்கிறார்கள். இன்று இது பெரும்பாலும் வலதுசாரிகளால் மேற்கொள்ளப்படுகிறது. ஐரோப்பா மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளின் அரசியலைப் சார்ந்து தான் இந்த புத்தகத்தை எழுதியுள்ளனர்.  அமெரிக்காவில் அரசியலமைப்பு எவ்வாறு பல உருவாக்கப்பட்டது அதை அரசியல் கட்சிகளும் தலைவர்களும் எப்படி பயன்படுத்தினர் என்பதை விரிவாக எழுதியுள்ளனர்.
“Institutions become political weapons, wielded forcefully by those who control them against those who do not. This is how elected autocrats subvert democracy—packing and “weaponizing” the courts and other neutral agencies, buying off the media and the private sector (or bullying them into silence), and rewriting the rules of politics to tilt the playing field against opponents. The tragic paradox of the electoral route to authoritarianism is that democracy’s assassins use the very institutions of democracy—gradually, subtly, and even legally—to kill it.”
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டதை விட குறிப்பிடப்படாதது அதிகம். அதனால் தலைவர்கள் சிலவற்றை எக்காரணத்தைக் கொண்டும் செய்வதில்லை அதற்கு சட்டத்தில் இடம் இருந்தாலும். அப்படிதான் பெரும் பிரச்சனைகளை அமெரிக்க கட்சிகள் எதிர்கொண்டன. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அது மாறி தேர்தல் வெற்றியே கட்சிகளின் ஒரே குறிக்கோளானது. அதனால் அனைத்து வகையான மீறல்களும் தொடங்கின.

ஒரு நல்ல ஜனநாயகத்திற்கு முக்கியம் பரஸ்பர சகிப்புத்தன்மை (Mutual toleration ) மற்றும் நிறுவன பொறுமை (Institutional forbearance) என்கிறார்கள் இவ்விருவரும்.  பரஸ்பர சகிப்புத்தன்மை என்பது "the idea that as long as our rivals play by constitutional rules, we accept that they have an equal right to exist, compete for power and govern. We may disagree with , and even strongly dislike, our rivals, but we nevertheless accept them as legitimate.This means our political rivals are decent, patriotic, law abiding citizens that they love our country and respect Constitution just as we do." நிறுவன பொறுமை (Institutional forbearance) என்பது "avoiding actions that , while respecting the letter of the law, obviously violates its spirit. When norms of forbearance are strong, politicians do not use their institutional prerogatives to the hilt, even if it is technically legal to do so, for such action could imperil the existing system."

நாம் இந்த அளவுகோல்களை பல நாடுகளின் அரசியலில் பொருத்தி பார்த்தால் தெரியும் இன்று ஜனநாயகம் எப்படி இருக்கிறதென்று. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் .

ரன்னிங் டைரி -47

04-01-2020 14:25
கிழக்கு கடற்கரை பூங்கா

இன்று மழை மோகத்துடன் இருந்ததால் மதியம் ஓடினேன். வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் மழை தூரியது . இதமாக இருந்தது. வாக்மேனை எடுத்துச் செல்லவில்லை. கடற்கரையை அடைந்தபோது மழை சுத்தமாக நின்றிருந்தது. வெய்யில் வேகமாக அடித்தது.பூங்காவில் கூட்டமில்லை. சமீபத்தில் மீண்டும் பார்த்த "Tokyo Story" திரைப்படம் மனதில் தோன்றியது. எவ்வாறு குழந்தைகள் பெற்றோர்களைவிட்டு பிரிகிறார்கள் என்பதை மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் யசுஜிரோ ஓஸு. என்ன ஒரு அற்புதமான திரைப்படம். அவரின் மற்ற திரைப்படங்களையும் பார்க்க வேண்டுமென்று முடிவு செய்தேன். இந்த படத்தின் காட்சிகள் மனதில் ஓடியபடியே ஓடி முடித்தேன்.


ரன்னிங் டைரி -46

01-01-2020  05:40
கிழக்கு கடற்கரை பூங்கா

வருடத்தின் முதல் நாள் கண்டிப்பாக ஓட வேண்டுமென்று முடிவெடுத்திருந்தேன் . அதன்படி  இன்று காலையிலேயே ஓடினேன். ஓட ஆரம்பித்தபோதே இந்த வருடம் என்ன resolutions எடுக்கலாம் என்று யோசித்தேன். List of  resolutions 2020:

1)வாரத்திற்கு குறைந்தபட்சம்  நான்கு நாட்களாவது ஓட வேண்டும்.
2)பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
3)ஐம்பது புத்தகமாவது படிக்க வேண்டும் குறிப்பாக உலக பொருளாதாரத்தைப்  பற்றி .
4)நண்பர்களுக்கு கடிதம் எழுத வேண்டும்.
5)இன்னும் அதிகமாக சிம்பொனி இசை கேட்க வேண்டும்.

இப்படி பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. நான் கடந்த வருடம் எடுத்த தீர்மானங்களை நினைத்தேன். பெரிதாக ஒன்றும் ஞாபகத்தில் வரவில்லை. சிரித்தபடியே ஓடி முடித்தேன்.



Sunday, January 5, 2020

ரன்னிங் டைரி -45

28-12-2019 17:45
கிழக்கு கடற்கரை பூங்கா

மழை வருமா என்ற கேள்வியுடன் ஓட ஆரம்பித்தேன். ஓட ஆரம்பித்தவுடன் இன்று காலை டாக்சி டிரைவர் சொன்னதுதான் ஞாபகத்தில் வந்தது. அவர் சொன்னார் இன்றைய சிங்கப்பூர் சுத்தமான நகரமல்ல அது சுத்தப்படுத்தப்பட்ட நகரம் என்று. ((Today's Singapore is not a clean city but cleaned city). அதற்கு இந்த கிழக்கு கடற்கரை பூங்காவே ஒரு எடுத்துக்காட்டு. எப்படி இருந்த கடற்கரை இப்போது இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணிக் கொண்டே ஓடி முடித்தேன்.