Monday, January 13, 2020

ரன்னிங் டைரி -51

11-01-2020 15:30
வீட்டிலிருந்து சிங்கப்பூர் எக்ஸ்போ

வீட்டில் அனைவரும் "zak salaam India " கண்காட்சிக்கு செல்லவேண்டுமென்றார். வேறுவழியில்லாமல் சம்மதித்தேன். வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. நான் ஓடியே அங்கு வருவதாக சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன். ஓட ஆரம்பித்தவுடன் எந்த வழியில் செல்வது என்று ஒரு குழப்பம். ஏற்கனவே மூன்று முறை வீட்டிலிருந்து எக்ஸ்போவிற்கு ஓடியிருக்கிறேன். ஆனால் அந்த மூன்று முறையும் சாயங்காலம் ஓடினேன். இப்போதோ மதியம் மழை வரலாம் இல்லையென்றால் ஓடுவது சற்று கடினம்தான். ஓட ஆரம்பித்தவுடன் உடல் முழுக்க ஒருவித புழுக்கம். சற்று நேரத்தில் ஓடும்போது எப்போதும் வரும் அமைதி வந்தது. சீராக ஓட ஆரம்பித்தேன்.

பச்சை சிக்னல் எங்கெல்லாம் வந்ததோ அந்த வழியிலேயே ஓடினேன். கேம்பங்கான் முதல் பிடோக் வரை சற்று செங்குத்தான பாதை. மிகவும் சிரமப்பட்டு ஓடினேன். கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. "Church of Our Lady of Perpetual Succour " வந்தவுடன் தொப்பியை கழட்டிவிட்டு "அருள் நிறைந்த மரியே" சொல்லிவிட்டு ஓடினேன். இந்த கோவிலுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நான் சிங்கப்பூர் வந்து சென்ற முதல் கோவில். நான் இந்த கோவிலுக்கு செல்லும்போது வியட்நாமிலிருந்து ஒரு பாதர் இருந்தார். எனக்கு அவரை ரெம்ப பிடிக்கும். அவர் இன்னும் இருக்கிறாரா என்று என்னையே கேட்டுக் கொண்டேன் .  விரைவில் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு இந்த கோவிலுக்கு வரவேண்டுமென்று முடிவுசெய்தேன்.

பிடோக் ரயில்நிலையத்தை தாண்டியவுடன் சிக்னலில் சரியான கூட்டம். நான் நின்று நடந்து சிக்னலைக் கடந்தேன்.மீண்டும் ஓட ஆரம்பித்தபோது நான் பிடோக் ஸ்டேடியத்தில் பார்த்த முதல் கால்பந்து போட்டி ஞாபகத்தில் வந்தது. அதுதான் நான் என் வாழ்வில் பார்த்த முதல் கால்பந்து போட்டி.இப்போது அங்கு கட்டிட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. நான் வழி தவறி ஓடிவிட்டேன். அங்கு வேலை செய்து கொண்டிருந்தவரிடம் வழியைக் கேட்டு மீண்டும் திரும்பி ஓடி சரியான பாதைக்கு வந்தேன்.வெய்யில் அடிக்க ஆரம்பித்தது. விரைவாக ஓடி முடித்தேன்.


No comments:

Post a Comment

welcome your comments