பழைய புத்தகக் கடையில் என்னை எடு என்று என்னைப் பார்த்து ஏங்கி கேட்டுக் கொண்டிருந்தது. விட்டுவிட்டு வரமுடியாமல் வாங்கி வந்தேன். நான் இந்த அளவுக்கு விளையாட்டு சம்மந்தமான புத்தகங்களில் சிரித்ததில்லை. இது இரண்டு நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய கிரிக்கெட் குழுவின் கதை.ஹரி தாம்சன் மற்றும் பெர்க்மன் இருவரும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்கள். கிரிக்கெட் மேல் இருந்த ஆர்வத்தால் அருகில் இருந்த நண்பர்களை சேர்த்து "Captain Scott Invitation XI" என்ற அணியை உருவாக்குகிறார்கள். பெர்க்மன் வேலையின் நிமித்தம் அணியை விட்டு விலகுகிறார். ஹரி தாம்சன் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுகிறார். இதிலிருந்தான் இந்த புத்தகம் தொடங்குகிறது.
அனைத்து கண்டங்களிலும் சென்று கிரிக்கெட் விளையாட வேண்டுமென்று முடிவு செய்த அப்படியே செய்கிறார்கள். இந்த அணியில் பல நாட்டவரும் உண்டு. பலரும் சராசரிக்கு கீழாக கிரிக்கெட் விளையாடுவார்கள். கிராமத்து அணிகளைவிட சற்று மோசமாக விளையாட கூடியர்கள். இவர்களை வைத்துக் கொண்டு உலகைச் சுற்றி வந்தால் எப்படி இருக்கும். நான் நகைச்சுவையாக இருக்கும் என்று எண்ணினேன் ஆனால் இந்த அளவுக்கு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
ஒவ்வொரு நாட்டிற்கும் சொல்லும் முன்னும் சென்ற பின்னும் விளையாடும் போதும் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் நம்மை காட்டுப்படுத்தமுடியாமல் சிரிக்க வைக்கிறது.ஹரி தாம்சனுக்கும் பிரிட்டிஷ் ஏர் பணியாளருக்கும் நடக்கும் உரையாடல்கள் நகைச்சுவையின் உச்சம்.அணியின் வீரர்கள் ஒவ்வொருவரின் திறமைகளை கூறும்போது வாசகனுக்கு சிரிப்பு வராமல் இருக்க வாய்ப்பே இல்லை .விளையாடிய கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் Captain Scott Invitation XI தோல்வி அடைகிறது. பெரும்பாலான போட்டிகளில் சில வீரர்கள் வேண்டுமென்றே வெற்றிக்கு எதிராக செயல்படுகிறார்கள். இந்த குணத்தைத்தான் ஹரி தாம்சனால் மாற்றவே முடியவில்லை .
சிங்கப்பூரில் அவர்கள் சிங்கப்பூர் ஸ்ரீலங்கா கிளப் அணியுடன் விளையாடுகிறார்கள். அங்கு நடக்கும் குளறுபடிகள் -கிளாசிக்! அதேபோல மலேசிய அணியுடன் விளையாடி வெல்கிறாரக்ள். அவர்கள் "கிளப்பிடம் தோற்றாலும் ஒரு தேசிய அணியை வென்றோம்" என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு நாட்டின் உணவுகளை பற்றி ஹரி தாம்சன் மிகவும் ரசித்து எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் வாசிக்கும் போது நான் விளையாடிய அனைத்து கிரிக்கெட் குழுக்களும் நினைவில் வந்தது.முதலில் த்ரி ஸ்டார் குழு.அது என் குடும்பம். அனைவரும் ஓரளவு விளையாடுபவர்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு பணி அதனால் எங்களுக்கு எந்த பிரச்சனைகளும் வந்ததில்லை. பல பந்தயங்களில் வென்றோம்.பலவற்றில் தோற்றோம். அடுத்து கல்லுரியில் விளையாடியது அதுவும் ஹாஸ்டல் அணியில் விளையாடியது. எங்கள் ஹாஸ்டல் அணியும் கிட்டத்தட்ட ஹரியின் அணிபோல தான்.எல்லோருக்கும் கிரிக்கெட்டில் ஈடுபாடுண்டு ஆனால் நன்றாக விளையாடதான் மாட்டோம்.இப்போது அந்த போட்டிகளைப் பற்றிப் பேசி பேசிச் சிரிக்கிறோம்.
இறுதியில்தான் வாசகருக்கு தெரிகிறது ஹரி தாம்சன் கேன்சர் நோயால் இறந்து விட்டார் என்று. இறுதிவரை Captain Scott Invitation XI அணிக்காக விளையாடினார். விளையாட்டு எழுத்தில் இவர் தனி ஒரு வகையை உருவாக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.
No comments:
Post a Comment
welcome your comments