"Empire" என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு தான் இந்த யவனி. இந்த புத்தகத்தைப் பல தடவை நூலகத்தில் பார்த்திருக்கிறேன் ஆனால் கடந்த வாரம் தான் எடுத்தேன். இந்த புது வருடத்தில் நான் வாசித்த முதல் புத்தகம். வரலாற்று நாவல் என்றாலே ஒருவிதமான tension அடுத்து என்ன நடக்குமோ என்று.
இது ராஜேந்திர சோழர் காலத்து கதை. அடிமைப் யவன பெண்ணான அரெமிஸ் பயிற்சிகளுக்குப் பிறகு மன்னனின் தற்காப்பு வீராங்கனயாக நியமிக்கப் படுகிறாள். அவளை அனைவரும் யவனி என்று அழைக்கின்றனர். எவருமே அவளை மதிப்பதில்லை. அவளும் தனக்கு தோன்றியதை விளைவை யோசிக்காமல் செய்கிறாள். மன்னன் கூறும் அனைத்தையம் செய்து முடிக்கிறாள்.
ஔவை என்று அழைக்கப்பட்ட சோழ சேனாதிபதி அனந்தன் தான் யவனியை சிறைபிடித்து வந்தவன்.மன்னருக்கு நெருக்கமானவர் .அவருக்கு மனைவியும் குழந்தைகளும் இருந்தாலும் மந்தாகினி என்ற ஆசைநாயகி உண்டு. அவர் அவளோடுதான் இரவுகளை செலவழித்தார். மந்தாகினி போதையினால் இறந்து போகிறாள். யார் போதை பொருட்களை நாட்டுக்குள் விற்பது என்று தெரிந்து வரும்படி யவனியிடம் கூறுகிறன். அதிலிருந்து கதை அப்படியே மாறுகிறது. இறந்தவர் என்று நினைத்த அரசியார் மீண்டும் வருகிறார் . அவர் உண்மையான அரசிதானா? ஏன் சீன அரசர் சோழ அரசர் எழுதிய கடிதங்களுக்கு சரியான பதில் எழுதவில்லை?
அனைத்து வரலாற்று புதினங்களில் வரும் அதே மாதிரியான துரோகங்கள் இக்கதையிலும் உண்டு.ஆனால் இக்கதையில் பிரதான கதாப்பாத்திரம் வேறு நாட்டவர். அதுவும் ஒரு பெண் .இந்நாவலின் கதை சொல்லிகள் அரெமிசும் அனந்தனும் தான். அவர்கள் இருவரின் பார்வையில்தான் அனைத்தும் விரிகிறது.யவனிக்கு சோழர்களின் பழக்கவழக்கங்கள் குழப்பமாக இருக்கிறது ஆனால் அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது சாதிய அடுக்குகளை மீறி ஏதும் நாடாக்கதென்று அரசரே ஆனாலும் . நாகபட்டினத்தின் கட்டமைப்பே அப்படித்தான்.
சோழர்களை பற்றிய வரலாற்று குறிப்புக்கள் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.நாம் பெரும்பாலும் ராஜ ராஜா சோழனை பற்றித்தான் படித்திருப்போம் ஆனால் அவரது மகனான ராஜேந்திர சோழ பூபதி தந்தையை மிஞ்சும் அளவுக்கு ஆட்சி செய்திருக்கிறார்.இக்கதையில் அவரின் கடல் படையின் வெற்றிகளைப் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் வருகிறது. இவர்தான் சோழ பேரரசின் கடல் வணிகத்தை உலகம் வியக்கும் வண்ணம் உயர்த்தியவர்.
நான் ஒரு உணவு பிரியன்.இந்த புத்தகத்தில் உணவு பற்றி பல இடங்களில் வருகிறது. ஆப்பம் ,நெய்யில் வறுத்த வாழைப் பழம், ஆடு மற்றும் பல உணவு வகைகள் எச்சில் வரும் அளவுக்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.அந்த காலத்து ஆப்பம் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வி இன்னும் எனது மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.இந்த நாவலை எழுதிய தேவி யசோதரன் இன்போசிஸில் வேலை பார்த்தவர். சோழர்கள் வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.அந்த ஈடுபாட்டின் வெளிச்சம்தான் இந்த நாவல். வாசிக்கலாம்.
No comments:
Post a Comment
welcome your comments