Wednesday, September 11, 2019

ரன்னிங் டைரி -2

10-09-2019 18:20

அலுவகத்திலிருந்து வீடுவரை:

ஓட ஆரம்பித்தவுடன் ஒலித்த முதல் பாடல் " மொச்சக்கொட்ட பல்லழகி" இந்த பாட்டை எப்ப கேட்டாலும் பள்ளி நாட்கள்தான் ஞாபகத்தில் வரும் ஏனென்றால் நான் இந்த பாட்டிற்கு டான்ஸ்  ஆடி இருக்கேன். எங்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்தவர் இலங்கை தமிழர். முகம் மட்டும்தான் ஞாபகத்தில் இருக்கிறது. எனக்கு முகம் முழுவதும் பெயிண்ட் அடிச்ச மாதிரி மேக்கப்! அப்படியே எண்ணம் மாறி இந்திய பிரதமர் மோடியின் "Chief of Defence" பற்றிய அறிவிப்பு வந்தது. ஒருவரின் கண்காணிப்பில் மொத்த பாதுகாப்பு துறை!அந்த பதவியை யாருக்கு கொடுப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே .சீமானிற்கு கொடுத்தால் ?? நானே சிரித்துக்கொண்டேன்!

நேற்றைவிட இன்று சற்று வேகமாக ஓடினேன். கவனம் மூச்சில் சென்று நின்றது. வழக்கம்போல எவ்வளவு நேரமென்று தெரியவில்லை. கவனம் திரும்பியபோது பாரதீய ஜனதா கட்சியின் தமிழிசை அவர்களின் முகம் வந்தது.இன்று மதியம் நண்பர் ஒருவர் தமிழிசை அவர்களின் புதிய புகைப்படத்தைக் காண்பித்தார். அவர்களின் தோற்றத்தை எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்தாலும் அவற்றை புன்னகையோடு எதிர்கொண்ட விதம் அருமை!  தமிழிசை அவர்களை பற்றி நினைக்கும்போது எப்போதும் கூட வரும் முகம் நிர்மலா சீத்தாராமன்! ஏன் என்று தெரியவில்லை.

திரும்பவும் கவனம் இசைக்கு திரும்பியபோது மலேசியா வாசுதேவனின் குரலில் "ஆசை நூறு வகை"  பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது. இவரது குரலில் ஒரு விதமான ஈர்ப்பு!  இவரின் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் சுகாவின் இந்த கட்டுரையும் கூட வரும்.வீட்டை நெருங்கும்போது தயிர் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் திரும்பி சென்று வாங்கலாமா என்ற யோசனையுடன் வீட்டை அடைந்தேன்.

No comments:

Post a Comment

welcome your comments