Tuesday, September 10, 2019

ரன்னிங் டைரி -1

நான் சிங்கப்பூர் வந்த பிறகுதான் நீண்ட தூர ஓட்டத்தை ஆரம்பித்தேன் . அதுவரை  கிரிக்கெட் வாலிபால் மட்டுமே விளையாண்டு கொண்டிருந்தேன். இது இரண்டுமே குழு விளையாட்டு அதனால் தொடரமுடியவில்லை. உட்கர்ந்து கொண்டே வேலைப் பார்ப்பதால் எதாவது விளையாட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கையில் என் பாஸ் "நீ ஏன் மரத்தானிற்கு பயிற்சி செய்யக்கூடாது என்று கேட்டார் ?" அதுவே என்னை முதல் முறை நீண்ட தூரம் ஓடவைத்தது. இது நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.  உடற்பயிற்சிக்கென்று ஆரம்பித்த ஓட்டம் படிப்படியாக ஒருவகையான தியானமாகியது.

ஓடும்போது ஒருவகையான மன அமைதி என்னுள் உண்டாகுகிறது என்றால் அது மிகையாகாது.பலவகையான எண்ணங்கள் சிலநேரம் ஒற்றை சிந்தனை சிலநேரம் ஒன்றொன்றுக்கு தொடர்பில்லாதது. பலபேர் நீங்கள் ஓடும்போது என்ன நினைத்துக் கொள்வீர்கள் என்று கேட்பதுண்டு . அதற்கான விடையைத் தேடி  இந்த ரன்னிங் டைரி. ஓடும் நாட்களில்  ஓடிமுடித்தவுடன் எழுதலாம் என்று நினைத்து இன்று(9-9-2019) முதல் பதிவை எழுத ஆரம்பித்தேன்.

09-09-2019 18:30

அலுவகத்திலிருந்து வீடுவரை:

ஓட ஆரம்பித்தவுடன் மனதில் வந்தது இன்று அலுவகத்தில் நடந்த விசயமொன்று. நேற்றிரவு ஒரு அப்ளிகேஷனின்  இறுதி வடிவத்தை கஸ்டமர் கணினியில் install செய்திருந்தோம். இன்ஸ்டால் செய்தவர் அனைத்தும் நன்றாக இருக்கிறது என்றார் நாங்களும் சரி என்று சொல்லி தூங்கிவிட்டோம் .ஆனால் இன்று காலை அப்ளிகேஷனில் ஒரு பிரச்சன்னை. நான் உடனே டெவலப்பரிடம் போன் செய்து இப்படி பிரச்சன்னை வருகிறது என்றேன். அவர் அது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றார். எனக்கு அது அதிர்ச்சியளித்தது.அதை ஏன் எங்களிடமோ கஸ்டமரிடமோ சொல்லவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர் மௌனத்தையே பதிலாக அளித்தார்.நேர்மையின்மை!.
நான் கேட்டுக் கொண்டிருந்த பாடல் முடிந்து அடுத்தது ஆரம்பித்தது அது என் சிந்தனையை மாற்றியது. அது ஒரு இசைக்கோர்வை தாரைதப்பட்டை திரைப்படத்தின் தீம் மியூசிக்.  நாதஸ்வரம் மற்றும் மேளம்  என்ன ஒரு இணை ! இசை ஆரம்பித்தவுடன் மனதிற்கு தோன்றியது  இளையராஜாவின் முகம்தான். மனுசன் பின்னிட்டாரு ! என்னத்த சொல்ல!  இசை மட்டுமே மனதில் ஓடியது. இந்த இசை முடிந்தவுடன்  திடீரென்று சந்திரயானைப் பற்றி எண்ணம் வந்தது. முகுல் கேசவன் எழுதிய கட்டுரை நினைவில் வந்தது. இஸ்ரோவை அவர்கள் வழியிலேயே விட்டால் இந்தியாவிற்கு நல்லது என்று தோன்றியது. ட்ராபிக் சிக்கனலில் ஒரு அம்மாவும் குழந்தையும்  என்னைக் காட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர், நான் சாலையைக் கடந்து சென்றபோது ஹலோ என்று சொன்னேன். குழந்தைக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை. கொள்ளை அழகு !
அடுத்த பல நிமிடங்கள்  மனது அமைதியாக மூச்சுக்காற்றை கவனித்துக் கொண்டிருந்தது எத்தனை பாடல்கள் கேட்டேன் என்று தெரியவில்லை. திடீரென்று எண்ணம் இசையில் திரும்பியபோது "சின்ன மணிக்குயிலே " எஸ் பி பியின் குரலில் ஒலித்துக்கொண்டிருந்தது. இளையராஜா மட்டும் இல்லையென்றால் என்ற கேள்விகேட்டுக்கொண்டே வீட்டை அடைந்தேன் .

No comments:

Post a Comment

welcome your comments