நான் கிளாசிக்கல் இசை கேட்க ஆரம்பித்தப் போது வாங்கிய முதல் இரண்டு இந்திய இசை சிடிக்கள் திருவாரூர் ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசை தொகுப்பும் விக்கு விநாயகத்தின் கடம் இசை தொகுப்பும்தான். நாதஸ்வர இசைக்கு ஒரு விதமான ஈர்ப்பு தன்மை உண்டு. ஒரு விதமான கம்பீரம் ஒரு வகையான சோகம் கலந்த இசை. எனக்கு நாதஸ்வரத்தையும் வித்துவான்களைபயும் பற்றி ஒன்றும் தெரியாது. பலமுறை கேட்டதுண்டு. இதுவே நாதஸ்வரத்திற்கும் எனக்கும் உள்ள உறவு.
ரத்தினம் என்ற நாதஸ்வர கலைஞர் பிடரியில் அடி வாங்குகிறார். இதுவும் இந்த சொற்களோடு "தாயோளி, நிறுத்துறா, சாமிக்கு யாரு வில்லு குடுக்கிறதுங்கிற பிரச்சனையே முடியல, அதுக்குள்ளே வாயில வச்சி ஊத ஆரம்பிச்சிட்டீங்க" .இந்த முதல் பத்தியிலேயே .எஸ்.ரா நாவலின் கதையை சொல்லிவிடுகிறார். இந்த நாவல் நாதஸ்வர கலைஞர்களின் இன்றைய நிலையை தெளிவாக பிரதிப்பலிக்கிறது.
பக்கிரி மற்றும் ரத்தினம் இருவரும் நாதஸ்வர கலைஞர்கள். ஒரு ஊர் திருவிழாவிற்கு சென்றபோது மேல் சாதியினருக்கு இடையே நடந்த சண்டையில் இவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த ஊர்க்காரர்கள் அவர்களை கட்டி வைத்து அடிக்கிறார்கள். பூசாரி அவர்கள் கட்டுகளை அவிழ்த்து உதவி செய்கிறார். விழா மேடையை தீவைத்து விட்டு தப்பித்து சொல்கிறார்கள். அவர்கள் ஊர் ஊராக சுற்றுகிறார்கள். இந்த சுற்றல் வாழ்க்கைதான் நாவலின் கதை.
ஒவ்வொரு அத்தியாமமும் ஒரு ஊர்பெயரில் தொடங்குகிறது. கரிசல் காட்டில் தொடங்கிய கதை கொடுமுடி, தொடுமாக்கல், தாம்பரம், வேப்பங்காடு, கோவை, நடுக்கோட்டை, மருதூர், டெல்லி, லண்டன் என பல இடங்களுக்கு பயணிக்கிறது.ஒவ்வொரு ஊரிலும் ஒரு கதை. எஸ்.ரா கதைக்குள் கதை சொல்வதில் வல்லவர் . அவருடைய மற்ற நாவல்களைப் போல இதிலும் அப்படியே.பல வகையான கதாப்பாத்திரங்கள் வருகின்றன ,ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்லிச் செல்கின்றனர். எங்கே சென்றாலும் அவர்களுக்கு இகழ்ச்சிதான். சாதியை சொல்லி திட்டுதல் ,பேசியே கூலியை கொடுப்பதில்லை ,திருமண வீட்டில் சாப்பிட போராட்டம் மாறும் பல இன்னல்கள்.
குழிக்கரை பிச்சையா, நல்லடை சண்முக சுந்தரம், வல்லம் தெட்சிணாமூர்த்தி,ஒதியூர் கண்ணுச்சாமி, சாமிநாதபிள்ளை, தன்னாசி போன்ற பல நாதஸ்வர ஜாம்பவான்கள் வருகிறார்கள். அவர்கள பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. "எப்படி இருந்திருக்காங்க இப்படி ஆயிட்டாங்களே " என்று மட்டும்தான் என்னால் சொல்ல முடிகிறது.
இந்த புத்தகம் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது. எஸ் ரா அதற்கு தகுதியானவர் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் .
No comments:
Post a Comment
welcome your comments