Monday, October 7, 2019

ஆப்பிளுக்கு முன் -சி. சரவணகார்த்திகேயன்


படித்து முடித்ததும் தோன்றியது எவ்வளவு  பொருத்தமான தலைப்பு என்றுதான். ஏவாள் ஆப்பிளை கடிப்பதற்கு முன் நிர்வாணம் ஒரு பொருட்டே இல்லை. அதைத்தான் காந்திஜி தன் சோதனையின் மூலம் அடைந்தார். அவரின் அந்த கடின சோதனையின் ஒரு பகுதிதான் இந்த கதை.
உறவுக்கு தான் பரஸ்பர சம்மதம் தேவை துறவுக்கு அல்ல
இந்தியாவில் காந்திஜி  அளவுக்கு  எந்த தலைவரும் விமரிசனங்களை எதிர்கொண்டவர்கள் இல்லை. இந்த பிரம்மச்சரிய முயற்சி அதன் உச்சம். அவரின் நண்பர்கள் அனைவரும் அந்த முயற்சியை கைவிட சொன்னார்கள். ஆனால் அவர் இறுதிவரை கைவிடவில்லை. "My life is my message " என்று சொல்வதற்கு பெரும் தைரியம் வேண்டும், காந்திஜி அதை செய்து காட்டினார். இந்த நாவல் காந்தி மற்றும் மநுவின் உறவைப் பற்றியது.

"என் பிரம்மச்சரியப் பரிசோதனைகளின் நோக்கம் ஆண், பெண் உடல்களுக்கிடையேயான வேறுபாட்டைக் களைவதே. இது எதிர்பாலின உடல் என்ற எண்ணமெழாத நிலைக்குப் போவது. மனதில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே பிரம்மச்சரியம் என்று கொள்ள முடியாது. ஒரு பெண்ணுடன் நிர்வாணமாகப் படுத்திருக்கும் உணர்வே இல்லாமல் போகும்போதுதான் பிரம்மச்சரியம் பூர்த்தியடையும் 

மநு கஸ்தூரிபாவிற்கு உதவியாக இருப்பதற்கு அங்கு வருகிறாள். வயதிற்கு மீறிய பக்குவம் அநுவிற்கு . அவள் அங்கு வந்த சில மாதங்களில் கஸ்தூரிபா இறந்து விடுகிறார். அங்கு வந்த முதலே காந்திஜி மநுவை  மெல்ல மெல்ல தன்வசப் படித்துக்கொள்கிறார்.மநுவிற்கு முன் பத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் இந்த சோதனையை(நிர்வாணமாக படுப்பது) செய்திருக்கிறார்.ஆனால் மநு அளவிற்கு யாரும் தங்களை ஒப்புக்கொடுக்கவில்லை. அதனால் மநுவை பெரிதும் அன்பு செய்கிறார் .தான் அவருக்கு அன்னை என்கிறார். அவளும் காந்திஜி தான் தனக்கு எல்லாம் என்று வாழ்கிறார்.

அவர்களது உறவு மற்ற பெண்களிடம் பொறாமையை ஏற்படுத்துகிறது. அதிலும் சுசீலா வெளிப்படையாகவே பொறாமை கொள்கிறாள். மநு வருவதற்கு முன் அவள்தான் காந்திக்கு எல்லாம். அவர்களது அந்த உறவு படிப்படியாக ஆசிரமத்தில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. பல்வேறு வழிகளில் அவர்களது இந்த பரிசோதனைகளை நிறுத்தப் பார்கிறார்கள்.அதில் தக்கர் பாபா முக்கிய பங்கு வகிக்கிறார். இந்த புத்தகத்தின் சாராம்சமே தக்கர் பாபாவிற்கும் காந்திஜிக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள்தான்.நாம் கேட்க நினைக்கும் அனைத்து கேள்விகளையும் பாபா காந்தியிடம் கேட்கிறார் காந்தியும் எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதிலளிக்கிறார். சில பதில்கள் எனக்கு புரியவில்லை. காந்தி தான் எடுத்த விசயத்தில் பின்வாங்குபவர் அல்ல.  பாபா காந்தியின் மனதை மாற்ற முடியவில்லை. அதனால் அவர் மநுவிடம் எடுத்துச் சொல்லி அவரை சம்மதிக்க வைக்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

உலக தலைவர்களில் காந்தியைப் போல வெளிப்படையாக இருந்தவர்கள் எவரும் இல்லை.இறுதிவரை தான் எடுத்த முடிவில் பின்வாங்காதவர். காந்தியின்  இந்த சோதனைகளை பற்றி எழுத தைரியம் வேண்டும். எடுத்த விசயத்தை எந்த ஒரு சமரசம் இல்லாமல் எழுதி இருக்கிறார் சரவணகார்த்திகேயன்.  காந்தியின் இன்னொரு பரிமாணம் இது.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.


No comments:

Post a Comment

welcome your comments