Monday, October 14, 2019

ரன்னிங் டைரி -11

12-10-2019  19:35
கிழக்கு கடற்கரை பூங்கா

கடந்த சில நாட்களாக ஓடவில்லை. வீட்டில் மகனுக்கு உடம்பு சரியில்லாமல் போனதும் அலுவலக வேலையும் சேர்ந்து ஓட முடியாமல் செய்தது. ஆனால் இன்று எலியட் கிப்சோகேவின் பெரும் சாதனை என்னை அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் ஓட வைத்தது. நீண்ட தூர ஓட்ட வீரர்களுக்குத் தெரியும் இது எவ்வளவு பெரிய சாதனை என்று. 

ஓட ஆரம்பித்தவுடன் கிப்சோகேவின் சிரித்த முகம்தான் மனதில் வந்தது. அழகு!  கடற்கரையை அடைந்தவுடன் மனது நிலவை நோக்கி சென்றது. கிட்டத்தட்ட முழுநிலவு இன்று. கடலில் நிலாவைப் பார்ப்பது ஒருவிதமான பரவசம். கடலை கையை உயரே உயர்த்தி வணங்குவது என் இயல்பு. இன்றும் அப்படியே செய்து விட்ட ஓட்டத்தைத் தொடர்ந்தேன். சனிக்கிழமை இரவில் ஓடுவது அதுவும் கிழக்கு  கடற்கரையில் ஓடுவது கடினமானது. மக்கள் கூட்டம். இங்கும் அங்குமாக குழந்தைகள் ஓடிக்கொண்டே இருப்பார்கள் இன்றும் அப்படித்தான்.ஒரே வேகத்தில் ஓட முடியவில்லை.

வாக்மேனில் "உயிரின் நாதனே" மலையாள பாடல் ஓட ஆரம்பித்தது. எனக்கு மிகவும் புடித்த பாடல். என்னை அறியாமல் வேகத்தை கூட்டினேன். பங்களாதேசி இளைஞர்கள் சிலர் ஹிந்தி பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர். சுற்றிருந்த அனைவரும் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தனர், சற்று தூரத்தில் இரண்டு மூன்று இந்திய குடும்பங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். கோழிக்கறியின் மணம் மூக்கையைத் துளைத்தது. ஒரு ஆணும் பெண்ணும் மாமல்லபுர சந்திப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். சீனா அரசியலை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும் அவர்கள் இந்த மாதிரி சந்திப்புக்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வார்கள் என்று.சீனாவை பற்றி யோசித்துக் கொண்டே ஓடி முடித்தேன்.

No comments:

Post a Comment

welcome your comments