Thursday, October 31, 2019

ரன்னிங் டைரி -21

30-10-2019 18:35
அலுவகத்திலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பிக்கும் சற்று முன் ஒரு போன் கால் வந்தது. எங்கள் கஸ்டமர் ஒருவர் தங்களது வெப்சைடில் சில மாற்றங்கள் செய்யவேண்டுமென்று என்னிடம் எவ்வளவு நேரம் எடுக்கும் என்று கேட்டார். நான் அவருக்கு maintenance என்றால் என்ன என்று ஒரு பெரும் உரையை நிகழ்த்திவிட்டு ஓட ஆரம்பித்தேன்.ஓடும்போதும் அந்த கஸ்டமரைப் பற்றியே யோசனை. இந்த ப்ராஜெக்ட் தொடக்கம் முதல் முடியும் வரை ஒரேயொரு டீமோடுதான் எங்களுக்கு தொடர்பு கடந்த வாரம் அந்த மொத்த டீமே மாறிற்று. இப்போது சம்பந்தமே இல்லாதவர்களோடு தொடர்பில் இருக்கவேண்டும் . ஒவ்வொருமுறையும்  அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். எங்களின் நேரத்தைப் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.நாளைக்கு என்ன செய்ய வேண்டுமென்று எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

Wednesday, October 30, 2019

ரன்னிங் டைரி -20

29-10-2019 18:16
அலுவலகத்திலிருந்து வீடுவரை

நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் இன்று ஓடினேன். ஓட ஆரம்பித்த உடன் உடம்பில் எங்காவது வலிக்கிறதா என்று கவனமாக கண்காணித்தேன். வழக்கமாக வலிக்கும் இடங்களில்தான் கொஞ்சம் வலித்தது. எப்போதும் அப்படிதான் கொஞ்ச நாட்கள் ஓடவில்லை என்றால் சில இடங்களில் வலிக்கும்.மிக வேகமாக ஓடினேன். எதையும் யோசித்த ஞாபகமில்லை. மூன்றாவது சிக்னலில் வைத்து ஒரு பெண் சைக்கிளில் என்னை முந்திச் சென்றார். நானும் அதே வேகத்தில் ஓட வேண்டுமென்று முடிவெடுத்து சிக்னல் மாறியவுடன் வேகத்தைக் அதிகரித்தேன்.ஒரு நிமிடத்திற்குக்குள் அவரை முந்திச் சென்றேன். என்னைப் பார்த்த அவர் மேலும் வேகமாக சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். எங்களுக்குள் பேசாத ஒரு பந்தயம். இருவரும் ஒருவரை ஒருவர் முந்தி முன்னேறினோம்.  நூலகத்தை நெருக்கும்போது  அவர் மற்றொரு ரோட்டுக்குள் சென்றார். நான் அதே வேகத்தில் வீட்டை அடைந்தேன்.

Tuesday, October 29, 2019

ரன்னிங் டைரி -19

24-10-2019 08:15
வீட்டிலிருந்து அலுவலகம் வரை

ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது மலையாள திரைப்படங்கள் தான். ஏனென்றால் தீபாவளியையொட்டி அனைத்து டிவி சேனல்களும் இலவசம். வீட்டிலிருந்து கிளம்பும் முன் ஏதோ மலையாள படம் ஓடிக்கொண்டிருந்தது அதன் தொடர்ச்சிதான் ஓடும்போது வந்த எண்ணம். கல்லூரி படிக்கும்போதுதான் முதன்முதலில் மலையாள படங்கள் பார்க்க தொடங்கியது. அதன் பிறகு நான் அதிகம் பார்த்தது மலையாள படங்கள்தான். 2015 முதல் 2017 வரை மலையாள படங்கள் பார்க்காத நாட்களே இல்லையெனலாம். தேடித் தேடி பார்த்தேன். என்னை முதலில் வசீகரித்தது கதை நடக்கும் இடம்தான். எந்த ஒரு அலங்காரமும் இல்லாத வீடுகளும் கிராமங்களும் என்னை மலையாள படங்களை ரசிக்க வைத்தன. சண்டேஷம் படத்தின் காமெடியைத் எண்ணிக் கொண்டே அலுவலகம் அடைந்தேன்.

Friday, October 25, 2019

ரன்னிங் டைரி -18

24-10-2019 08:20
வீட்டிலிருந்து அலுவலகம் வரை

ஓட தொடங்கும் ஒருசில நிமிடத்திற்கு முன் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த Raspberry Pi ப்ராஜெக்ட் பற்றி என் பாஸ் என்னிடம் சில தகவல்களைக்  கேட்டார். அத்தோடு எனக்கு ஓட மனமில்லாமல் போனது. இருந்தாலும் ஒடித்தான் ஆகவேண்டும்.  மொபைலை கையில் வைத்துக் கொண்டே ஓடினேன். நான் எப்போதும் அப்படி ஓடியது கிடையாது. அதுவே ஒரு அசுகை. இரண்டு கிலோமீட்டர் ஓடிய பிறகு அருகிலிருந்த பேருந்து நிலயத்தில் பேருந்து பிடித்து அலுவலகம் சென்றேன். 

ரன்னிங் டைரி -17

22-10-2019 18:20
அலுவதிலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது குர்து மக்கள்தான். எல்லா பக்கங்களிலும் தாக்குதல். உலகத் தலைவர்கள் பெரும்பாலும் மக்களின் விருப்பங்களைக் கேட்பதில்லை.அப்படியே ராஜன்குறை மற்றும் யமுனா ராஜேந்திரனின் முகநூல் சண்டை ஞாபகத்தில் வந்தது. தேவையில்லாத ஒன்று. "ராஜராஜ சோழன் நான் " பாடல் ஒலிக்க ஆரம்பித்தபோது கவனம் அதில் சென்றது அப்படியே "Alex in Wonderland" ஜேசுதாஸ் பற்றிய யூடுப் வீடியோ ஞாபகத்தில் வந்தது. அலெஸ் ஒரு நல்ல மேடை நகைச்சுவை பேச்சாளர்.  நான் சிங்கப்பூர் வந்த பிறகுதான் இந்த மாதிரி  ஸ்டண்ட் அப் காமெடி பார்க்க ஆரம்பித்தேன். Kevin Hart, Russel Peters ,Joe Wong , Eddie Murphy மற்றும் பலரின் வீடியோவை பார்க்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரு கூட்டத்தைக் சிரிக்க வைப்பது எளிதல்ல. இவர்கள் அதை அழகாக செய்கிறார்கள். Alex in Wonderland முழுவதும் பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே வீட்டைச் சென்றடைந்தேன்.

Wednesday, October 23, 2019

கையிலிருக்கும் பூமி - தியடோர் பாஸ்கரன்


எனக்கு இந்த புத்தகம் பர்வீன் சுல்தானா அவர்களின் youtube நூல் ஆய்வு உரையின் மூலம் தான் அறிமுகம். அந்த பேச்சைக் கேட்டவுடன் கண்டிப்பாக வாசிக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். ஆனால் இவ்வளவு விரைவில் இந்த புத்தகம் கிடைக்குமென்று நான் நினைக்கவே இல்லை. பூகிஸ் (Bugis) தேசிய நூலத்தில் கிடைத்தது. எடுத்தவுடன் வாசிக்க ஆரம்பித்தேன்.

தியடோர் பாஸ்கரன் அவர்களின் இயற்கை சார்ந்த கட்டுரைத் தொகுப்பு இந்த புத்தகம். எண்ணிலடங்கா தகவல்கள். நம் நாட்டில் இவ்வளவு இயற்கை வளங்கள் உள்ளதா ? என்று கேள்வி கேட்கும் அளவுக்கு இயற்கையை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் தியடோர் பாஸ்கரன். புத்தகம் பல பிரிவுகளாக உள்ளது ஒரு பெரும் வசதி. ஏனென்றால் வாசகர் எந்த பகுதியிலும் எந்த கட்டுரையையும் வாசிக்க தொடங்கலாம். நான் நேர்கோடாக படிக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து முடித்தேன்.

ஏறு தழுவுதல் என்ற கட்டுரையில் " இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்த பாரம்பரியம்.நகரங்களில் குளுகுளு அறைக்குள் அமர்ந்து கணினியைத் தட்டிக் கொண்டிருக்கும் நாம், கால்நடைகளை எவ்வாறு பேண வேண்டும் என்று குடியானவர்களுக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை" என்கிறார். எவ்வளவு உண்மை.தெருநாய்களும் வெறிநாய்களும் கட்டுரையில் காந்தி எவ்வாறு வெறிநாய்களை சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்தார் என்பதை படிக்கும் பொது ஆச்சிரியமாக இருக்கிறது. பங்களிப்பாளர்கள் பகுதியில் பல தெரியாத ஆளுமைகளைப் பற்றி மிகவும் தெளிவாக அவர்களின் நிறை குறை இரண்டையும் எழுதியுள்ளார். நான் ஸ்டீவ் எர்வினின் ரசிகன்.எங்கள் வீட்டில் அனைவரும் அவரது "crocodile hunter" நிகழிச்சியின் ரசிகர்கள்.அவரைப் பற்றியும் தியடோர் பாஸ்கரன் எழுதியுள்ளார்.இந்த பகுதியில் குமரப்பா , மா.கிருஷ்ணன்,ஜிம் கார்பெட்,A.O ஹ்யூம்,கே.எம் மேத்யூ, ராமுலஸ் விட்டக்கேர்,உல்லாஸ் கரந்த் ,மசனொபு புகோக்கோ ஆகியோரைப் பற்றியும் கட்டுரைகள் உள்ளன. இந்த அனைத்து கட்டுரைகளும் வாசகனை இந்த ஆளுமைகளைத்  தேடிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைக் ஏற்படுத்துகிறது.

தமிழில் இந்த மாதிரி புத்தகங்கள் அதிகம் வரவேண்டும். அறிவியல் மற்றும் வனவிலங்குகளின் பெயர்கள் மீண்டும் தமிழில் பொது வெளியில் மக்களால் பேசப்பட வேண்டும். தியடோர் பாஸ்கரன் அய்யா கூறுவது போல சங்ககாலம் தொட்டே தமிழில் இயற்கை சார்ந்த வாழ்வுமுறையும் மொழியும் இருந்து வருகிறது ஆனால் நாம்தான் இந்த இரண்டையும் விட்டு விலகி வந்துகொண்டே இருக்கிறோம்.  இதற்கு ஊடகங்களில் வரும் விலங்குகள் பெயர்களே சாட்சி.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில புத்தகங்கள் கீழே உள்ள லிங்கில் கிடைக்கும் :

Noah's Ark Method 
The Deer And The Tiger A Study Of Wildlife In India - George Schaller 
Botanical Survey of India
An Ode to an Engineer
The Elephant in Tamil Land - Varadharaja Aiyar
The Bookf of Indian Birds - Salim Ali
Flora Of Madras Presidency - Gamble
The Madura Country : A Manual - Nelson
Stray Feathers - Hume
The Rifle and Hound in Ceylon - Samuel Baker
Thirteen years Among the wild beasts of India - Sanderson
Walden-Henry David Thoreau
சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்  - A L  சாமி 
தமிழ்  கலைக்களஞ்சியம் 

மற்ற புத்தகங்கள் :

மூதாதையரைத் தேடி  - சு.கி. ஜெயகரன்
யானைகள் :அழியும் பேருயிர்கள்  - ச.முகமது அலி & க.யோகானந்த்
தமிழ் நாட்டுப் பறவைகள் - க.ரத்தினம்
நம் நாட்டு பாம்புகள்  - ராஜேந்திரன்
பாம்பு என்றால் ... - முகமது அலி
கடல்வாழ் பாலூட்டிகள் - Whales and Dolphins Conservation Society
நீலகிரி ஆர்கிட்கள் - ஜோசப்

The Song of the Dodo - David Quammen
A Concise of Field Guide to Indian Insects & Arachnids - Meenatchi
On A Trial with Ants. A Handbook of Ants Of Peninsular India - Ajay Narendra & Sunil Kumar
Wetland Birds of Tamil Nadu - Robert & Shailaja
The Story of Asia's Lions - Divyabhanu
Origin of Species - Charles Darvwin
The Beak of the Finch -  Jonathan Weiner
SPIDERS: An Introduction
Climb every mountain- Dorothy Wilson
Pain:The Gift Nobody Wants-Paul Brand
Toda Grammar and Text - Emeneau
Animal liberation - Peter Singer
Large Dams in India : Environmental Social & Economic Impacts -Shekar Singh & Pranab Banerji
Maneater of Yelagiri - Anderson
Carpet Sahib: A Life of Jim Corbett
Forster and Further: The Tradition of Anglo-Indian Fiction - Sujith Mukerjee
Lord of the Flies  - William Holding
The Great Arc - John Keay
The Exotic Flora of Kodaikanal Hills- K.M Mathew
Materials for a Flora of the Tamilnadu Carnatic-K.M Mathew
Illustrations on the Flora of Tamilnadu Carnatic-K.M Mathew
The Flora of Tamilnadu Carnatic-K.M Mathew

புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படங்கள் :

Final Solution
In the Name of the Father
An Inconvenient Truth
The Artist
Rabbit-Proof Fence

Tuesday, October 22, 2019

ரன்னிங் டைரி -16

21-10-2019 18:15
அலுவதிலிருந்து வீடுவரை

மெதுவாக ஓடவேண்டுமென்று முடிவெடுத்து மிகவும் மெதுவாக ஓட ஆரம்பித்தேன். முதல் சிக்கினலில் நின்றேன் அதன்பின் என்னை அறியாமலேயே எனது வழக்கமான வேகத்தில் ஓட ஆரம்பித்தேன். யூனுஸ் பாலத்தைக் கடக்கும்போது இன்று வாசித்த கட்டுரை ஒன்று நினைவில் வந்தது. "Science-Backed Strategies to PR Your Next Marathon" இதில் குறிப்பிட்டுள்ள பல விசயங்கள் நான் செய்ததே கிடையாது. முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

திடீரென்று "global warming " என்ற வார்த்தை எண்ணத்தில் வந்தது. மகளுக்கு global warming பற்றி இரண்டு நிமிடம் பேசுவதற்கு material தயார் செய்ய வேண்டும் அதனால்தான் அதைப் பற்றி எண்ணம் இப்போது வந்தது.அப்படியே "foldscope" பற்றி எண்ணம் தோன்றியது. மகளுக்கு இந்த வருட பிறந்தநாளுக்கு நாங்கள்  இதைத் தான் பரிசளித்தோம் . இன்னும் முழுவதுமாக fit பின்னவில்லை. இது அபாரமான கண்டுபிடிப்பு. ஒரு telescope வாங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே வீட்டைச் சென்றடைந்தேன்.

Sunday, October 20, 2019

ரன்னிங் டைரி -15

19-10-2019 18:15
கிழக்கு கடற்கரை பூங்கா

ஓட தொடங்கியவுடன் எதிரே பச்சை வெள்ளை டி சேர்ட் அணிந்த சிறுவன் ஒருவன் அவனது பெற்றோர்களுடன் வந்து கொண்டிருந்ததை  கவனித்தேன் .டி சேர்ட்டில் அயர்லாந்து என்று எழுதியிருந்தது. அப்போதுதான் இன்றைய உலக கோப்பை ரக்பி காலிறுதி போட்டி  ஞாபத்தில் வந்தது. நியூசிலாந்து அயர்லாந்து மோதுகிறது. அப்படியே எனது எண்ணங்கள் நியூசிலாந்து அணியின் பக்கம் சென்றது. எப்போது அந்த அணியின் விளையாட்டை ரசிக்க ஆரம்பித்தேன் என்ற ஞாபகம் இல்லை. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் விளையாடிய அனைத்து போட்டிகளையும் பார்த்திருக்கின்றேன். ஒரு விளையாட்டுக் குழு விளையாட்டிலும் சரி தங்களின் நடத்தையிலும் சரி இவ்வளவு ரசிக்கும் படி இருந்ததாக எனக்கு தெரியவில்லை . ஸ்டீவ் வாக்கின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அனைத்தையும் வென்றார்கள் ஆனால் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவர்களைப் பிடிக்காது. அதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்தையும் வென்றார்கள் ஆனால் அப்போது நான் பிறக்கவே இல்லை.ஆல் பிளக்ஸ் (ALL BLACKS ) என்று அழைக்கப்படும் நியூசிலாந்து ரக்பி அணி  ஒரு விளையாட்டு குழு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

எனக்கு  இன்று  அவர்கள் தோல்வி அடைவார்கள் என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது. கடவுளிடம் வேண்டிக்கொண்டேன் அவர்கள் வெற்றி அடைய வேண்டுமென்று. சட்டென்று எனது கவனம் திசைமாறி எதிரே ஓடிக்கொண்டிருந்த இருவர் மீது சென்றது. இருவரும்  "200 Runners ,2000 Kilometers , 200 Years " என்று அச்சிட்ட டி சேர்ட் அணிந்திருந்தார்கள். சற்றே வயதானவர்கள் போன்ற தோற்றம்.  ஆனால் அவர்களின் ஓட்டம் அவர்கள் அனுபவசாலிகள் என்று காட்டியது. அவர்களைத் தொடர்ந்து ஒரு கிலோமீட்டருக்கும் மேல் சென்றேன்.அவர்களைத் கடந்து சென்ற போது எதிரே ஒரு தமிழ் குடும்பம் வந்தது. "சீமான் சொன்னது தப்புதான்" என்று ஒருவர் சொன்னார். மற்றொருவர் "வர வர அரசியலே பேசாதபடி பண்ணிருவாய்ங்க போல " என்றார்.இருவரும் பயங்கர சத்தமாக பேசிக்கொண்டு சென்றனர். பொது இடத்தில் சத்தமாக  பேசுவதில் தமிழருக்கு இணை வேறு யாரும் கிடையாது.

இரண்டு சைக்கிள்கள்   சிவப்பு லைட் போட்டுக்கொண்டு என்னை கடந்து சென்றது பின்னால் ஒருவர் மிக விரைவாக ஓடி வந்து கொண்டிருந்தார். எதோ ஓட்டப் பந்தயம்போல. தொடர்ந்து வீரர்கள் ஓடிக்கொண்டே வந்தனர்.அவர்களை பார்ப்பது அழகு.நான் பந்தயம் முடியும் இடத்தை அடைந்தபோது தான் தெரிந்தது அது ஒரு biathlon - நீண்ட தூர ஓட்டமும் நீச்சலும். பல வருடங்களாக என்னுடை குறிக்கோள் ironman போட்டியில் பங்கேற்பதுதான் ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல என்பது எனக்கு மிக விரைவில் தெரிந்ததும் அந்த எண்ணத்தையே விட்டுவிட்டேன் . அதற்கு முக்கிய காரணம் எனக்கு நீச்சல் அப்போது தெரியாது. கடந்த வருடம்தான் ஒழுங்காக நீச்சல் அடிக்க கற்றுக்கொண்டேன் .அதையே யோசித்துக்கொண்டு அந்த வீரர்களை பின் தொடர்ந்து ஓட்டத்தை முடித்தேன்.

ரன்னிங் டைரி -14

18-10-2019 08:10
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்ததிலிருந்து புது ப்ராஜெக்ட் பற்றிய நினைப்பே வந்தது. ரெம்ப சின்ன ப்ராஜெக்ட்தான் ஆனால் எங்களை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. எனக்கு basic எலக்ட்ரானிக்சே மறந்து விட்டது. இது raspberry pi கொண்டு செய்யப்படும் ப்ராஜெக்ட். எங்கள் அலுவலகத்தில் யாருக்கும் raspberry pi அறிமுகமில்லை. சுவாரசியமாக இருந்தாலும் அதைப் புரிந்து கொள்வதற்கு சில நாட்கள் தேவை. ஆனால் அந்த நாட்கள்தான்  எங்களிடம் இல்லை. குறிப்பிட்ட நாட்களுக்குள் ப்ராஜெக்டை முடித்துக்கொடுக்க வேண்டும். இதற்கு முன் Wiegand என்றால் என்னவென்றே தெரியாது. இப்போது சற்று தெரியும் ஆனால் அதை வைத்து இந்த ப்ராஜெக்டை முடிக்க முடியாது.என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு ஓடி முடித்தேன்.

Saturday, October 19, 2019

ரன்னிங் டைரி -13

23-10-2019 08:16
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

இன்று முதல்முறையாக ரூடி ப்ராஜெக்ட் (Rudy Project) பிராண்டின் லேட்டஸ்ட் கண்ணாடியைப் அணிந்து கொண்டு ஓடினேன். எனது கவனம் முழுவதும் கண்ணாடியில் தான் இருந்தது. என்னிடம் இந்த புதிய கண்ணாடியாத் தவிர மூன்று ரூடி ப்ராஜெக்ட் கண்ணாடிகள்என்னிடம் உள்ளன. அவற்றை அணிந்த போது இல்லத ஒரு குளிர்ச்சி இந்த கண்ணாடியில் உணர்ந்தேன். காற்று உள்ளே வருவதற்கு frame-ல் ஓட்டைகள் உள்ளன .நான் வெய்யிலில் ஓடினேன். வெய்யிலேயே உணரவில்லை . முதல் கண்ணடி கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு முன்னால் கிடைத்தது. சிவப்பு கண்ணாடி. அதை அணிவதற்கு எனக்கு வெட்கம்.இரண்டு வருடங்களுக்கு மேல்  தலையில் வைத்துக் கொண்டுதான் ஓடினேன். அதை அணிந்து ஓடுவது ஒரு அழகு. வேர்வை நெற்றியைத் தாண்டி வரவே வராது.எனக்கு மிகவும் பிடித்த கண்ணாடி அதுதான்.இந்த புதிய கண்ணாடியில் நான் பார்க்க எப்படி இருப்பேன் என்று நினைத்துக் கொண்டே ஓடி முடித்தேன்.

Tuesday, October 15, 2019

ரன்னிங் டைரி -12

14-10-2019 18:25
அலுவதிலிருந்து வீடுவரை

இன்றும் ஓட ஆரம்பித்தவுடன் கிப்சோகேவின் முகம்தான் மனதில் வந்தது. இனிமேல் அவரை நினைக்காமல் ஓட முடியாதென்று நினைக்கிறேன். சிக்னலில் ஒருவர் கையில் சிகப்பு கயிறு கட்டிருந்தார் அதைப் பார்த்தவுடன் சமீபத்தில் பார்த்த டாக்குமெண்டரிதான் ஞாபகத்தில் வந்தது. என்ன கொடுமை.சிறுவயதிலிருந்து நமக்கு சாதியைப் பற்றி எதுவுமே சொல்லிக்கொடுக்கவில்லை, அப்படியொன்றே இல்லை என்றளவுக்குதான் எனக்கெல்லாம் சொல்லிக்கொடுக்கப்பட்டது. இனி யார் சிகப்பு கயிறு கட்டிருந்தாலும் இப்படித்தான் தோன்றும்.

திடீரென்று பாடலில் பக்கம் கவனம் சென்றது 'காதல் கசக்குதய்யா' ஓடிக்கொண்டிருந்தது. இளையராஜா இளைஞர்களுக்கு அட்வைஸ் சொல்லிக்கொண்டிருந்தார். அப்படியே "Wonder Woman " திரைப்படம் ஞாபகத்தில் வந்தது நேற்றுதான் நான் அந்த படத்தைப் பார்த்தேன். என் மகள் படத்தின் முதல் இருபது நிமிடத்திலேயே 'எனக்கு புடிக்கவில்லை" என்றாள். எனக்கும் சுத்தமாக படம் பிடிக்கவில்லை. எனக்கு சூப்பர் ஹீரோ படங்களே பிடிப்பதில்லை. ஆனால் காமிக் புத்தங்கள் பிடிக்கும். ஏன் நமது உணவு வகைகளைப் பற்றி ஒரு காமிக் எழுதக்கூடாது என்று எண்ணிக்கொண்டே இன்று எப்படியும் அசைவம் சாப்பிட வேண்டுமென்று நினைத்து வீட்டை அடைந்தேன். வீட்டினுள் சென்றவுடன் பொறித்த கோழிக்கறி வாடை (Old Chang Kee  Chicken Wings ).. நன்றி கடவுளே என்று சொல்லிக்கொண்டேன்.

Monday, October 14, 2019

ரன்னிங் டைரி -11

12-10-2019  19:35
கிழக்கு கடற்கரை பூங்கா

கடந்த சில நாட்களாக ஓடவில்லை. வீட்டில் மகனுக்கு உடம்பு சரியில்லாமல் போனதும் அலுவலக வேலையும் சேர்ந்து ஓட முடியாமல் செய்தது. ஆனால் இன்று எலியட் கிப்சோகேவின் பெரும் சாதனை என்னை அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் ஓட வைத்தது. நீண்ட தூர ஓட்ட வீரர்களுக்குத் தெரியும் இது எவ்வளவு பெரிய சாதனை என்று. 

ஓட ஆரம்பித்தவுடன் கிப்சோகேவின் சிரித்த முகம்தான் மனதில் வந்தது. அழகு!  கடற்கரையை அடைந்தவுடன் மனது நிலவை நோக்கி சென்றது. கிட்டத்தட்ட முழுநிலவு இன்று. கடலில் நிலாவைப் பார்ப்பது ஒருவிதமான பரவசம். கடலை கையை உயரே உயர்த்தி வணங்குவது என் இயல்பு. இன்றும் அப்படியே செய்து விட்ட ஓட்டத்தைத் தொடர்ந்தேன். சனிக்கிழமை இரவில் ஓடுவது அதுவும் கிழக்கு  கடற்கரையில் ஓடுவது கடினமானது. மக்கள் கூட்டம். இங்கும் அங்குமாக குழந்தைகள் ஓடிக்கொண்டே இருப்பார்கள் இன்றும் அப்படித்தான்.ஒரே வேகத்தில் ஓட முடியவில்லை.

வாக்மேனில் "உயிரின் நாதனே" மலையாள பாடல் ஓட ஆரம்பித்தது. எனக்கு மிகவும் புடித்த பாடல். என்னை அறியாமல் வேகத்தை கூட்டினேன். பங்களாதேசி இளைஞர்கள் சிலர் ஹிந்தி பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர். சுற்றிருந்த அனைவரும் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தனர், சற்று தூரத்தில் இரண்டு மூன்று இந்திய குடும்பங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். கோழிக்கறியின் மணம் மூக்கையைத் துளைத்தது. ஒரு ஆணும் பெண்ணும் மாமல்லபுர சந்திப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். சீனா அரசியலை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும் அவர்கள் இந்த மாதிரி சந்திப்புக்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வார்கள் என்று.சீனாவை பற்றி யோசித்துக் கொண்டே ஓடி முடித்தேன்.

Monday, October 7, 2019

ஆப்பிளுக்கு முன் -சி. சரவணகார்த்திகேயன்


படித்து முடித்ததும் தோன்றியது எவ்வளவு  பொருத்தமான தலைப்பு என்றுதான். ஏவாள் ஆப்பிளை கடிப்பதற்கு முன் நிர்வாணம் ஒரு பொருட்டே இல்லை. அதைத்தான் காந்திஜி தன் சோதனையின் மூலம் அடைந்தார். அவரின் அந்த கடின சோதனையின் ஒரு பகுதிதான் இந்த கதை.
உறவுக்கு தான் பரஸ்பர சம்மதம் தேவை துறவுக்கு அல்ல
இந்தியாவில் காந்திஜி  அளவுக்கு  எந்த தலைவரும் விமரிசனங்களை எதிர்கொண்டவர்கள் இல்லை. இந்த பிரம்மச்சரிய முயற்சி அதன் உச்சம். அவரின் நண்பர்கள் அனைவரும் அந்த முயற்சியை கைவிட சொன்னார்கள். ஆனால் அவர் இறுதிவரை கைவிடவில்லை. "My life is my message " என்று சொல்வதற்கு பெரும் தைரியம் வேண்டும், காந்திஜி அதை செய்து காட்டினார். இந்த நாவல் காந்தி மற்றும் மநுவின் உறவைப் பற்றியது.

"என் பிரம்மச்சரியப் பரிசோதனைகளின் நோக்கம் ஆண், பெண் உடல்களுக்கிடையேயான வேறுபாட்டைக் களைவதே. இது எதிர்பாலின உடல் என்ற எண்ணமெழாத நிலைக்குப் போவது. மனதில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே பிரம்மச்சரியம் என்று கொள்ள முடியாது. ஒரு பெண்ணுடன் நிர்வாணமாகப் படுத்திருக்கும் உணர்வே இல்லாமல் போகும்போதுதான் பிரம்மச்சரியம் பூர்த்தியடையும் 

மநு கஸ்தூரிபாவிற்கு உதவியாக இருப்பதற்கு அங்கு வருகிறாள். வயதிற்கு மீறிய பக்குவம் அநுவிற்கு . அவள் அங்கு வந்த சில மாதங்களில் கஸ்தூரிபா இறந்து விடுகிறார். அங்கு வந்த முதலே காந்திஜி மநுவை  மெல்ல மெல்ல தன்வசப் படித்துக்கொள்கிறார்.மநுவிற்கு முன் பத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் இந்த சோதனையை(நிர்வாணமாக படுப்பது) செய்திருக்கிறார்.ஆனால் மநு அளவிற்கு யாரும் தங்களை ஒப்புக்கொடுக்கவில்லை. அதனால் மநுவை பெரிதும் அன்பு செய்கிறார் .தான் அவருக்கு அன்னை என்கிறார். அவளும் காந்திஜி தான் தனக்கு எல்லாம் என்று வாழ்கிறார்.

அவர்களது உறவு மற்ற பெண்களிடம் பொறாமையை ஏற்படுத்துகிறது. அதிலும் சுசீலா வெளிப்படையாகவே பொறாமை கொள்கிறாள். மநு வருவதற்கு முன் அவள்தான் காந்திக்கு எல்லாம். அவர்களது அந்த உறவு படிப்படியாக ஆசிரமத்தில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. பல்வேறு வழிகளில் அவர்களது இந்த பரிசோதனைகளை நிறுத்தப் பார்கிறார்கள்.அதில் தக்கர் பாபா முக்கிய பங்கு வகிக்கிறார். இந்த புத்தகத்தின் சாராம்சமே தக்கர் பாபாவிற்கும் காந்திஜிக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள்தான்.நாம் கேட்க நினைக்கும் அனைத்து கேள்விகளையும் பாபா காந்தியிடம் கேட்கிறார் காந்தியும் எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதிலளிக்கிறார். சில பதில்கள் எனக்கு புரியவில்லை. காந்தி தான் எடுத்த விசயத்தில் பின்வாங்குபவர் அல்ல.  பாபா காந்தியின் மனதை மாற்ற முடியவில்லை. அதனால் அவர் மநுவிடம் எடுத்துச் சொல்லி அவரை சம்மதிக்க வைக்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

உலக தலைவர்களில் காந்தியைப் போல வெளிப்படையாக இருந்தவர்கள் எவரும் இல்லை.இறுதிவரை தான் எடுத்த முடிவில் பின்வாங்காதவர். காந்தியின்  இந்த சோதனைகளை பற்றி எழுத தைரியம் வேண்டும். எடுத்த விசயத்தை எந்த ஒரு சமரசம் இல்லாமல் எழுதி இருக்கிறார் சரவணகார்த்திகேயன்.  காந்தியின் இன்னொரு பரிமாணம் இது.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.


Wednesday, October 2, 2019

ரன்னிங் டைரி -10

01-10-2019 (18:25)
அலுவதிலிருந்து நூலகம் வரை

மழை வருமா  என்ற கேள்வியுடன் வானத்தைப் பார்த்துக்கொண்டே ஓட ஆரம்பித்தேன். ட்ராபிக் சிக்னல் வந்தவுடன்தான் எந்த பாட்டு ஓடிக்கொண்டிருக்கிறது என்று கவனித்தேன். "கேளடி கண்மணி" ஓடிக் கொண்டிருந்தது. திடீரென்று காபி ஞாபகம் வந்தது. இன்று "சர்வதேச காபி நாள்". காபி என்றவுடன் எனக்கு "தையல்நாயகி " என்ற பெயர்தான் முதலில் ஞாபகத்தில் வரும். தையல்நாயகி ஒரு உணவகம். கோயம்புத்தூர் சூலூரில் உள்ளது. அங்கு காபி பிரபலம். 2003 முதல் 2005 வரை சூலூரில் வீடெடுத்து நாங்கள் தங்கி இருந்தோம். வீட்டிற்கு பக்கத்தில்தான் தையல்நாயகி உள்ளது. அங்கு காபி குடிப்பதென்பது எங்களுக்கு ஒரு ஆடம்பர நிகழ்வு. பலதடவை எங்கள் வீட்டிற்குமேல் தங்கி இருந்த எங்கள் professors தான் வாங்கிக் கொடுப்பார்கள்.

அப்படியே அங்கிருந்து சிங்கப்பூர் காபி ஞாபகம் வந்தது. மாமா வீட்டில் அத்தை பில்டர் காபி போடுவார்கள். அது ஒரு தனி ருசி. அலுவலகத்தில் 3 in 1 காபிதான். முதலில் Nescafe அடுத்து Owl brand 2 in 1 . Nescafe-யை விட Owl brand பலமடங்கு better .சிங்கப்பூரில் பாலுக்கு பதிலாக condensed milk தான் .எனக்கு முதலில் பிடிக்கவில்லை . சிங்கப்பூர் kopitiam களில் ஓரளவு காபி நான்றாக இருக்கும். நாங்கள் தம்பினீஸில் இருக்கும்போது Toastbox காபி அருமையாக இருந்தது இன்று அந்த சுவை இல்லை. எனக்கு favourite என்றால் தமிபின்ஸ் wet மார்க்கெட்டில் இருக்கும் ஒரு காபி கடையும் haigh road food courtல் இருக்கும் "Coffee Boy" கடையின் காபிதான். "Coffee Boy" கடை ஐயா காபி போடுவதே ஒரு அழகு.அவரையே நினைத்துக் கொண்டு நூலகத்தை அடைந்தேன். அங்கு சென்று புத்தகத்தை return பண்ணிக்கொண்டிருக்கும் போது அருகிலிருந்த கஃபேவிலிருந்து காபி மனம் வந்துகொண்டிருந்தது. புத்தகத்தை return பண்ணிவிட்டு ஒரு காபி குடித்துவிட்டு பேருந்தில் வீடு திரும்பினேன் .

Tuesday, October 1, 2019

The Empire And The Five Kings - Bernard Henri Levy


We are in a situation when our leader of the free world, Donald Trump, plays muscles, but the real strength is on the side, alas alas alas alas, of the five kings: Chinese, Arabs, Iranians, Ottomans (Turks) and Russians.
இந்த புத்தகம் எப்படி அமெரிக்கா தனது அதிகாரத்தை மெதுவாக இழந்து வருகிறது என்றும் இந்த சூழ்நிலையை மற்ற நாடுகள் அதிலும் குறிப்பாக சீனா, ரஷ்யா,ஈரான் ,துருக்கி மற்றும் அரபு நாடுகள் உபயோகப் படுத்திக்கொள்கிறார்கள் என்பதைப்  பற்றி விவரிக்கிறது. இப்புத்தகம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதி அமெரிக்கா எவ்வாறு வல்லரசானது என்றும் இரண்டாவது அது எப்படி பலவீனமாகி வருகிறதென்றும் பெர்னார்ட் விவரிக்கிறார்.
“A time is coming that is no longer the time that emerged from the death of communism, from the triumph of liberal values, and from the pronounced “end of history,” an ending to which I never subscribed but that was beginning to take on a truly sinister face.” 
எனக்கு இந்த எழுத்தாளரை இதற்கு முன் தெரியாது. யார் இவர்? கூகிளில் தேடியபோது இவர் ஒரு பன்முகம் கொண்டவர் என்பது தெரியவந்தது. Philosopher, டாக்குமெண்டரி இயக்குநர் ,activist மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர். இந்த புத்தகம் குர்து(kurd)  இன படுகொலையைத் தொடர்ந்து எழுதப்பட்டது. இவர் அந்த போராட்டத்தில் நேரடியாக பங்குபெற்றவர்.  பல அரபு நாடுகள் இவரைத் தடை செய்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஐரோப்பா கண்டமே புத்துயிர் பேர போராடிய சூழ்நிலையில் எந்த நாடு அதைக் காப்பாற்ற போகிறது என்பது பெரும் குழப்பமாக இருந்தது. பிரான்ஸ் ,ரஷ்யா மற்றும் இங்கிலாந்து தலைமை ஏற்க முடியவில்லை அதற்கு பெர்னார்ட் கூறும் காரணம் அவற்றின் வரலாறு. இந்த தலைமைப் பொறுப்பு அமெரிக்காவிடம் சென்றது. அதை அவர்கள் தேடிச் செல்லவில்லை("involuntary Romans "). ஆனால் பொறுப்பு வந்தவுடன் அதை இறுக்கிப் பிடித்து தங்களை முன்னிறுத்தி உலகையே ஆள ஆரம்பித்தனர் (Pax  Americana) . அமெரிக்கர்கள்  இந்த பொறுப்பு தங்களின் உரிமை (American Exceptionalism) என்று எண்ணினர் அது மட்டுமல்லாமல் அதற்கு அவர்கள் வரலாற்றைக்  காரணமாக எடுத்துக்கொண்டனர். அமெரிக்கா பல ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை தன் காலனி மாதிரி வைத்திருந்தது என்றால் மிகையாகாது.இருந்தாலும் தங்களின் "openness" மற்றும் "transparency" மூலம் ஒரு ஜனநாயக ஆட்சியைக் கொடுக்க முடியம் என்ற நம்பிக்கையை மற்ற நாடுகளிடம் விதைத்தனர். அடங்காத நாடுகளை இராணுவம் கொண்டு அடக்கினர். இப்படித்தான் அமெரிக்கா வல்லரசானது என்கிறார் பெர்னார்ட். சிரியாவில் ஒபாமா தலையீடாதது ,குர்திஸ்தானை டிரம்ப் கைவிட்டது இப்படி சில விஷயங்களால் அமெரிக்கா அதிகாரம் சரிந்து வருகிறது என்கிறார் பெர்னார்ட் . என்னை கேட்டல் ட்ரம்பின் தேர்தல் வெற்றியே சர்வதேச அளவில் அமெரிக்காவின் தோல்வி.

குர்து இன மக்களின் போராட்டத்தை எவ்வாறு அமெரிக்கா மற்றும் மேற்கூறிய மற்ற ஐந்து நாடுகள் எதிர்கொண்டனர் என்பதிலிருந்து அவர்களின் நோக்கம் என்ன என்பதை விவரிக்கிறார்.அல் கொய்தவிற்கு அனைத்து உதவிகளையும் சவுதி அரேபியா செய்தது என்று அவர்களே ஒத்துக்கொண்ட பின்னரும் அவர்களுடன் அமெரிக்கா நல்லுறவை நீடித்தது.துருக்கிக்கும் ,ரஷ்யாவிற்கும்  ஐரோப்பா நாடுகளுக்கும் பிரச்சன்னைதான். ஆனால் அமெரிக்க எதிர்ப்பு என்ற பேரில் துருக்கியும் ரஷ்யாவும் ஒன்று சேர்ந்தனர். ஈரான் புரட்சிக்கு பிறகு அமெரிக்காவை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. சீனா வேகமாக வளர்ந்து அமெரிக்காவிற்கு எதிராக அனைத்து துறைகளிலும் சவால்விடுகிறது.இந்த ஐந்து நாடுகளுக்குள் ஒரு ஒற்றுமை உண்டு. ஐந்துமே ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் பிரதமர்களையும் ஜனாதிபதிகளையும் (autocratic) கொண்டுள்ளது. சீனா ஒரு கம்யூனிச நாடு ஆனால் சீ பிங்கை அந்த லிஸ்டில் சேர்க்கலாம் என்கிறார் பெர்னார்ட். இந்த ஐந்து நாடுகளையும் விவிலியத்தில் வரும் ஐந்து அரசர்களோடு (Joshua 10)ஒப்பிடுகிறார்.

மற்றொரு ஒற்றுமை இந்த ஐந்து நாடுகளுக்கும் உள்ளது. அது அவர்களின் வரலாறு. ஐந்துமே ஒரு காலத்தில் பலம்வாய்ந்த பேரரசாக இருந்தது. இந்த ஐந்து நாட்டு தலைவர்களும் பழம்பெருமை பேசுபவர்கள். மீண்டும் அந்த பழைய பெருமையை மீட்டெடுக்க வேண்டுமென்று மக்களிடம் சொல்பவர்கள். ஆனால் பெர்னார்ட் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை இன்றும் அமெரிக்காதான் வல்லரசு ஆனால் அது தனது அதிகாரத்தை மீட்டெடுக்கவில்லை(Western Civilization , liberty , Democracy ) என்றால் உலகமே மாறிவிடும் என்று கூறி இந்த புத்தகத்தை முடிக்கிறார் இடையில் ஏன் சமூக வலைத்தளங்கள் பற்றி எழுதினார் என்று தெரியவில்லை. May be, எனக்கு புரியாமல் இருக்கலாம்.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.