Wednesday, October 18, 2017

19வது சீன தேசிய கம்யூனிச கட்சியின் கூட்டம்


உலக வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் சீனா இன்று இருக்கிறது. சீனாவின் இதே  வளர்ச்சி  தொடருமா? உலக அரசியலில் சீனாவின் பங்கு அடுத்த ஐந்து ஆண்டிற்கு எப்படிஇருக்கும் ? சீ  ஜின்பிங் (Xi Jinping) அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பாரா ? என்ற பல முக்கியமான விடைகளுக்கு நாளை  (18-10-2017) கூடும்  இந்த கூட்டம் ஓரளவு பதில் சொல்லும் .

இந்த கூட்டம் ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் கூட்டம். நம்ம தேர்தல் போல . இந்த கூட்டத்தில்தான்  புதிய தலைவர் , பொலிட்பீரோ  (Politburo Standing Committee (PSC)) மற்றும்  மத்திய இராணுவ கமிஷன்  உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவர். இந்த முறை பெரும் சிக்கலுக்கிடையே இந்த கூட்டம் கூடுகிறது. சீ  தலைவரானவுடன் செய்த முதல் காரியம் ஊழலுக்கு எதிரான பெரும் போராட்டம். நூறுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் .விசாரணையில் உண்மையிருந்தாலும் சீ தனக்கு போட்டி எனக் கருதும் அனைத்து தலைவர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறார் என்று மேற்கத்திய ஊடகங்கள் கூறுகின்றன.

சீ தலைவரான பிறகு  சீன இராணுவத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவந்தார் . குறிப்பாக அனைத்து இராணுவத்துறையையும் ஒரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் . அரசின் மிக முக்கிய பணியாக வறுமை ஒழிப்பை கொண்டு வந்து அதை ஓரளவு நடத்தியும் காட்டினார். மீண்டும் 'சீனர்களின் கனவு' (Chinese Dream)  என்ற  கொள்கையின்  கீழ் மேம்ப்பட்ட வாழ்வு என்பதை சீனர்களுக்கு எடுத்துரைத்தார் . வெளியுறவு கொள்கையில் வெகு அழுத்தமாக அனைத்து நாடுகளுடன் சீனா சீயின் கீழ் செயல்பட துவங்கியுள்ளது . தனது "ஒன்பது கோடு " எல்லைக்குள் எந்த ஒரு நாட்டையும் அனுமதிக்காமல் அந்த எல்லையை இராணுவ வலிமை கொண்டு பாதுகாக்கிறது.

சீ  அனைத்து முக்கியமான பொறுப்புக்களையும் தன் கீழ் வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் அடுத்த ஐந்து ஆண்டிற்கு பிறகு பதவியில் தொடர்வாரா? தொடர்வார் என்றுதான் எனக்குப்படுகிறது  . பொதுவாக சீன அதிபர்கள் பத்து வருடங்களுக்கு மேல் பதிவியில் இருக்க மாட்டார்கள். ஆனால் ஒருவர் கம்யூனிச கட்சியின் தலைவராக பத்து வருடங்களுக்கு மேல் பதவியில் இருக்கலாம் . சீ  தனது கனவான "பட்டு பாதை" நிறைவேறாமல் பதவியை விடமாட்டார்.   மாவோ மற்றும் டெங் ஜியோபிங்கிற்கு பிறகு சீயின் எழுத்துக்களும் பேச்சுக்களும் கம்யூனிச கட்சியின் அரசியலமைப்பில் இணைத்துக்கொள்ளபட இருக்கிறது .

வலுவான சீனா இவ்வுலகிற்கு அவசியம் ஆனால் அது எவ்வாறு இப்போது இருக்கும் உலக அமைப்பை மாற்றி அமைக்கும் என்பதே பெரிய கேள்வி. அமெரிக்காவும்  சீனாவும் "Thucydides's Trap"-ஐ தவிர்க்குமா? வியட்நாமை சீனா தன்னுடன் இணைத்து கொள்ளுமா? தெற்கு சீன கடல் பகுதியில் அமைதி நிலவுமா?  மற்றும் பல முக்கியமான கேள்விகளுக்கான பதில் கிடைக்காவிட்டாலும் சீனா அடுத்த ஐந்து வருடத்திற்கு எவ்வாறு இந்த கேள்விகளை எதிர்கொள்ளும் என்று இந்த கூட்டத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம் .

No comments:

Post a Comment

welcome your comments