Thursday, February 25, 2021

Messi : Lessons in Style - Jordi Punti



இந்த புத்தகத்தை ஒரு வருடத்திற்கும் மேலாக தேடினேன். இந்த புத்தகத்தைப் பற்றி பலர் நல்ல விதமாக கூறியுள்ளனர்.அதிலும் நான் விரும்பி வாசிக்கும் கால்பந்து கட்டுரையாளர்கள் மிகவும் நல்ல விதமாக கூறியிருந்தால் எனக்கு எப்போது இந்த புத்தகம் கையில் கிடைக்கும் என்ற ஏக்கமும் தேடலும் இருந்து கொண்டே இருந்தது. வேறொரு புத்தகத்தை தேசிய நூலக இணையதளத்தில் தேடிக் கொண்டிருந்தபோது திடீரென்று இந்த புத்தகம் ஞாபகத்தில் வந்தது.தேடினேன் புத்தகம் நூலகத்தில் இறக்குகிறது என்று தெரிந்தது. அன்று காலையே நூலகத்திற்கு சென்று இந்தப்  புத்தகத்தை எடுத்தேன். நூலகத்திலிருந்து அலுவலகத்தை அடையும் முன்னரே பாதி புத்தகத்தை வாசித்துவிட்டேன்.

மெஸ்ஸியைப் பற்றி வெளியான புத்தகங்களில் பெருபானவற்றை நான் வாசித்திருக்கிறேன். அவரைப் பற்றி தெரியாத விசயங்கள் என்று பெரிதாக ஏதும் இல்லை இணையத்தில் தேடினாலே அனைத்தும் கிடைக்கும்.ஆனால் இந்த புத்தகம் சற்று வித்தியாசமானது. இது ஒரு ரசிகன் அதுவும் அவர் ஒரு பிரபலமான எழுத்தாளர் பார்வையில் மெஸ்ஸி விவாதிக்கப்பட்டுள்ளார். உண்மையைச் சொன்னால் இப்புத்தகம் "ode to Messi". இருப்பது ஒன்று குறு அத்தியாகங்களில் மெஸ்ஸியை அணு அணுவாக ரசித்து எழுதியிருக்கிறார் ஜோர்டி. 

ஜோர்டி ஒரு catalan மொழி எழுத்தாளர். பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இவரும் ஒரு உறுப்பினர். கடந்த பத்து வருடங்களில் கேம்ப் நூவ்வில் (camp nou) நடந்த அனைத்து போட்டிகளையும் நேரில் பார்த்தவர்.மைதானத்தில் மெஸ்ஸியின் ஒவ்வொரு அசைவையும் மக்கள் எப்படிப் பார்த்தார்கள். அவர்களின் நினைவில் மெஸ்ஸி எப்படி உருமாறுகிறார் என்பதை அற்புதமாக எழுதியுள்ளார்.மெஸ்ஸி விளையாடுவதை நிறுத்தினால் இவர்கள் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்றும் ஊகித்து எழுதியிருக்கிறார்.  மரடோனாவா மெஸ்ஸியா ? என்ற கேள்விக்கு எல்லாவிதத்திலும் பதில் தேட முயற்சித்திருக்கிறார். பதினெட்டாவது அத்தியாயத்தில் மெஸ்ஸி மற்றும் ஹாரிப்போட்டார் ஒப்பீடு அருமை. இருவரும் மேஜிக் செய்பவர்கள். அவர்களின் படிப்படியான வளர்ச்சியும் அவர்களோடு வளர்ந்த ரசிகர்கள் எப்படி மெஸ்ஸியை எதிர்கொண்டார்கள் என்பதையும் அழகாக விவரித்துள்ளார் ஜோர்டி .

"I remember" என்ற இருபதாவது அத்தியாயம் தான் எப்போதும் நினைவில் கொண்டிருக்கும் மெஸ்ஸியின் கோல்கள் மற்றும் இதர சாதனைகளின் பட்டியல் ஒன்றை கொடுத்துள்ளார். ரசித்து ரசித்து தயார் செய்துள்ளார்.2019-ல் நானும் அப்படி ஒரு  பட்டியல் தயார் செய்தேன். விளையாட்டு ரசிகனுக்கு அது ஒரு சுகம். ஒன்பதாவது அத்தியாயத்தில் இட்டாலோ கால்வினோ Six Memos for the Next Millennium புத்தகத்தில் ஒரு நல்ல  இலக்கிய படைப்பு கீழேயுள்ள ஐந்து குணங்களை கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.

  1. Lightness
  2. Quickness
  3. Exactitude
  4. Visibility
  5. Multiplicity 

ஜோர்டி இந்த ஐந்து குணங்களும் மெஸ்ஸியிடம் இருப்பதாக கூறுகிறார். ஒவ்வொன்றையும் எடுத்துக்காட்டோடு விளக்கியுள்ளார்.இப்படி ஒரு எழுத்தாளர் ஒரு விளையாட்டு வீரனுக்கு கிடைப்பது பெரும் தவம். அந்த விதத்தில் மெஸ்ஸி அதிர்ஷ்டசாலி. நாமும் தான்.

கால்பந்து ரசிகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

No comments:

Post a Comment

welcome your comments