தஞ்சோங் கத்தோங் ரோடு
நல்ல குளிர். சிறிது தூரம் நடந்து விட்டு ஓட ஆரம்பித்தேன். மனதில் இளையராஜா வந்துகொண்டே இருந்தார். இன்று அவரின் பிறந்தநாள். எத்தனை எத்தனை பாடல்கள் .எல்லாவிதமான situationக்கும் அவரின் பாடல்கள் உண்டு.என் வாக்மேனில் "காதோரம் லோலாக்கு" ஓடிக் கொண்டிருந்தது. என் மகளுக்கும் அவரின் பாடல்கள் பிடித்திருக்கிறது.விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல இளையராஜா. எனக்கும் அவர்மேல் பல விமர்சனங்கள் உண்டு ஆனால் அவரின் இசை எல்லாவற்றையும் சரிசெய்து விடுகிறது. பல தமிழர்கள் போல எனக்கும் வாழ்வின் மிக முக்கிய நேரத்தில் என்னை கைபிடித்து நடத்திச் சென்றது இளையராஜாவின் பாடல்கள் தான். மனதில் பல பாடல்கள் ஓடிக் கொண்டே இருந்தன. பலவிதமான உணர்வுகளோடு ஓடிக்கொண்டிருந்தேன். அண்ணன் இறந்த செய்தி கேட்டு பர்வின் டிராவல்ஸில் சென்றுகொண்டிருந்த போது இரண்டு பாடல்கள் என்னை கதறி அழவைத்தன. ஒன்று "சின்ன தாயவள் (தளபதி )" மற்றும் "பூங்காற்றிலே(பாம்பே)". இன்றும் இந்த பாடல்கள் கேட்கும் போது கண்ணில் நீர் வரும். "கல்யாண மலை" படலைக் கேட்கும் போதெல்லாம் மறைந்த சித்தப்பா மனதில் தோன்றி அந்த பாடலை பாடுவார். "இளமை இதோ" கேட்கும் போதெல்லாம் அண்ணனின் முகம் என் முன் தோன்றும்.மகள் பிறந்தபோது "ராஜா ராஜா சோழன்". மகன் பிறந்தபோது "தாரை தப்பட்டை தீம் மியூசிக்". "பழமுதிர் சோலை " கேட்கும் போதெல்லாம் அக்காமார்களுடன் விளையாடியதுதான் மனதில் ஓடும். இப்படி எத்தனை பாடல்கள். இதை டைப் செய்து கொண்டிருக்கும் போது "இளையநிலா பொழிகிறது" கேட்டுக் கொண்டிருக்கிறேன்.ராஜா ராஜாதான் ! வாழ்க பல்லாண்டு என்று சொல்லிக் கொண்டே வீட்டை அடைந்தேன் கண்ணில் கண்ணீருடன்!
இனிமை :)
ReplyDelete