படித்து முடித்தவுடன் தோன்றியது. இப்புத்தகத்தில் வரும் மனிதர்களை என் மகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்று தான். இப்புத்தகத்தைப் படிக்கும் போது பல தடவை அழுதேன். ஒரு நாள் பேருந்து நிலையத்தில் வாசித்துக் கொண்டிருக்கையில் என்னை அறியாமேலேயே கண்ணில் கண்ணீர் வடிந்தது. அருகில் நின்று கொண்டிருந்த பாட்டி என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தேன். கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். அவரை பார்த்து சிரித்தேன்.
புத்தகத்தை படித்து முடித்த பிறகுதான் தெரிந்தது இது ஆனந்த விகடனில் தொடராக வந்ததென்று. இதில் வரும் மாந்தர்கள் உண்மையில் இருக்கிறார்களா இல்லையா என்பது கேள்வியே இல்லை. இது வாழ்க்கை கதை. நாம் தெரிந்து கொள்ளவேண்டிய கதை.புத்தகத்தின் தொடக்கமே பிணவறையில். அங்கு வேலை செய்யும் இருவரைப் பற்றியது. "அன்பு தான் இன்னொரு உயிரக் கொல்லும்… மரியாத எப்பவுமே மரியாதையாத்தான் இருக்கும்… " . திருப்பாலை என்னால் வாழ்வில் மறக்க முடியாது என்று நினைக்கிறேன். அவர்களின் தினசரி வாழ்வே நமக்கு பல விசயங்களை கற்றுக் கொடுக்கிறது. இந்த கதையில் இறுதியில் நடிகையின் நிர்வாண உடலை அந்த 'பெரிய' டாக்டர்கள் கண் மூடாமல் பத்து நிமிடங்களுக்கு மேல் பார்த்துக் கொண்டிருந்தனர் என்று வருகிறது. ஒரு பக்கம் திருப்பால் மற்றுமொரு பக்கம் இப்படியான ஆட்கள். அதுதானே உலகம்.
"மாமா பையா"- வில் வரும் சட்டநாதன் மற்றும் கல்யாணியின் உறவு , "மைலோ"-வில் வரும் மைலோ மற்றும் அந்த பெண்ணின் உறவு , "பசுமை போர்த்திய பிள்ளைகள்"-லில் வரும் மனிதர்களின் உறவு - இவை எதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் தூய்மையான கள்ளம் கபடம் அற்ற நட்பு. சாமானிய மனிதர்களாகிய நமக்கு அந்நட்பு அவ்வளவு எளிதல்ல ஏனென்றால் நமக்கு சமூகம் வேறொன்றை சொல்லிக் கொடுத்திருக்கிறது.
மகிழ்ச்சி என்பது ஒரு நிறத்தினாலானது அல்ல . அது , ஒவ்வொருவரின் அகத்திற்கேற்ப அதன் நிறங்கள் மாறுபடும் . மகிழ்ச்சியைப் பழகத் தேவையில்லை. ஆனால் துக்கங்களை நாம் பழக்கவேண்டி இருக்கிறது.
டீ.எம்.எஸ் என்கிற திருச்சி லோகநாதன் ,கால்பந்தே வாழ்கை என்று இருக்கும் மெஸ்ஸி மற்றும் அரசியல் பிரச்சாரம் செய்யும் பூகம்பம் பூமணி இவர்களின் வாழ்வில் எவ்வளவு கற்றுக் கொள்ள வேண்டும் . வாழ்க்கையை அதில் உள்ள இன்ப துன்பங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதென்பது எளிதல்ல.இவர்களால் அது முடிகிறது.
ஒருவரின் வலியை மட்டும் நாம் வாங்கி கொள்ளவே முடியாது என்பதுதான் நிஜம்.பெயின்டர் டீஸோசா மற்றும் பாடிமேன் தருமனின் கதை நாம் அறிந்த ஆனால் உணராமல் இருக்கும் வாழ்க்கையை நம் கண்முன்னால் காட்டியிருக்கிறார் பாக்கியம் சங்கர்." காற்றில் மிதக்கும் கூடாரம்" மற்றும் "தொம்பரக் கூத்தாடிகள் " நம்மிடம் பல கேள்விகளைக் கேட்கின்றன. "மலாரம் ..ஒய்யாரம்"-மில் வரும் "நமது கழிவுகளை வாரிக் கொட்டுகிற ஒரு சமூகத்தை இப்படி நோயிலும் சகதியிலும் வாழப் பழக்கிவிட்ட நாம் எவ்வளவு கீழ்மையானவர்கள்." என்ற வரி எவ்வளவு உண்மையானது.
இருள் என்பது குறைந்த ஒளிதான் .ஆனால் , துக்க வாசனையின் மேல் இருள் என்பது அடர்ந்த இருள்தான் .பலவிதமான மனிதர்கள் பெரும்பாலும் அவர்களின் வேலையின் மூலம் நாம் அறிந்தவர்கள் ஆனால் ஒருபோதும் அவர்களின் வாழ்வை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. இந்த புத்தகம் மனிதர்களை புரிந்து கொள்வதற்கு நமக்கு ஒரு அறிமுகத்தைக் கொடுக்கிறது.
அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
I couldn't finish the full article, first few paragraphs are intriguing me to read this book.
ReplyDeleteI will comment after I read the book, Bro! thanks for introducing.
where can i find this book in singapore ?:) by the way nice write up .. Thanks for sharing your views.
ReplyDeleteThis book is in Marine Parade Library.I borrowed it from there only.
ReplyDelete