இது கலாப்ரியாவின் முதல் நாவல் என்றால் நம்ப முடியாது. மிக அழகாக ஒரு நாவலை எழுதியுள்ளார் . ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறை கதையை சொல்கிறது வேனல். பிரதான கதாபாத்திரங்கள் அனைத்தும் பெண்களே. இது அப்பெண்களின் கண்ணீர் நிறைந்த கதை.இந்த நாவல் ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு. பெரியாரின் பேச்சு திமுகாவின் வளர்ச்சி மற்றும் திரைப்படங்களின் தாக்கம் என்று அந்த காலகட்டத்தின் அனைத்தும் இக்கதையில் வருகிறது.
பல அடுக்கு கதைகளை கொண்டது இந்த நாவல். கொட்டகை வீடு தான் இக்கதையின் மய்யம் . இந்த வீட்டின் மனிதர்கள் மட்டும் அல்ல வீடும்தான் சூழ்நிலையால் மாறுகிறது . வீட்டின் பெரியார் சிவசுப்பிரமணியன் முன்னாள் அரசு அதிகாரி பெரிய பணக்காரர் .வீட்டம்மா சிவஞானம் . இவர்களுக்கு ஒரே மகன் திரவியம். அவனது மனைவி மீனா .அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறது. பெரியவரின் தம்பி தொய்வு அவனின் மனைவி சாந்தா. திரவியம் எதையுமே பெரிதாக செய்பவன். செலவைப் பற்றி யோசிக்கவே மாட்டான். அவளது மனைவியை சரியாக கவனிக்காதவன். அவனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பும் உள்ளது.
தொய்வு மற்றும் சாந்தாவின் கதைதான் இந்நாவலின் கதாப்பாத்திரங்களை ஒன்றோடொன்று இணைக்கிறது. இருவரும் நாடகத்தில் ஒன்றாக நடித்தவர்கள். சாந்தா ஒரு மலையாளியாக இருந்தாலும் அவளை விரும்பி தொய்வு திருமணம் செய்கிறான்.சாந்தா எப்படி இருப்பாள் என்று ஏங்கும் அளவுக்கு அவளின் அழகை சிலாய்த்து எழுதியுள்ளார் கலாப்ரியா. அவர்கள் இருவருக்கும் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகள் கவிதைகள் போல எழுதப்பட்டுள்ளது. சாந்தாவை பார்க்கும் அனைத்து ஆண்களும் அவள் மேல் மோகம் கொள்கிறார்கள். அதற்கு திரவியமும் அவன் மருமகனும் விதிவிலக்கல்ல. ஆணின் காமத்திற்கு எல்லையே இல்லை போல. சாந்தா இந்த மாதிரி பார்வைக்கு பழக்கமானாலும் அது அவளை வருத்தப்படத்தான் செய்கிறது.
மற்றொரு குறிப்பிடத்தக்க குடும்பம் வெங்கு அண்ணாச்சி உமையாள் மற்றும் அவர்களின் மகன். இக்குடும்பம் கொட்டகை வீட்டிற்கு எதிர்மாறானது.இங்கு உமையாளுக்கு அனைத்து சுதந்திரமும் உள்ளது. அவள் நினைத்தத்தைச் செய்கிறாள். வெங்கு அண்ணாச்சியும் அவளின் சுதந்திரத்திற்கு தடையாக இல்லை. மகனை அவனது விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் முடித்து வைக்கிறாள். அவள் எம்.ஜி.ஆர் -ஐ பார்க்க செல்லும் பகுதி குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு குடும்பங்களைப் பார்த்தல் அந்தஸ்தில் கீழே இருக்கும் குடும்பத்தில்தான் பெண்களுக்கு சுதந்திரம் அதிகம்.சாந்தாவின் பக்கத்து வீட்டு பாலம்மா இக்கதையின் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரம். கணவனை இழந்தவள். மிகவும் அழகானவள். இவள்தான் சாந்தாவிற்கு அனைத்தையும் எடுத்துக் சொல்கிறவள். அவளின் தனிமையும் காமமும் சாந்தாவிற்கு புரிந்தது.
நாடக கலையின் வீழ்ச்சியும் திரைப்படத்தின் வளர்ச்சியும் மிக அழகாக இக்கதையினூடே வெளிப்படுகிறது.நாவலில் ஒரு பக்கம் சமய சடங்குகள் , தீர்த்தயாத்திரை இருந்தால் அடுத்த பக்கம் materialistic வாழ்க்கை என்று மாறி மாறி வருகிறது.விதவிதமான மனிதர்கள் கதை முழுவதும் வந்துகொண்டே இருக்கிறார்கள்.அவர்களின் வாழ்க்கையும் நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக திரவியத்தின் நண்பர்களின் கதைகள். கதையில் வரும் உணவு பண்டங்களின் விவரிப்பு வாயில் எச்சில் வர வைக்கிறது. அதுவும் போத்தி கடை சாப்பாடும் சாந்தாவின் பாயாசமும் மறக்க முடியாதது. தமிழ் இலக்கியத்தில் மற்றொரு பெரும் படைப்பு வேனல்.
அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
No comments:
Post a Comment
welcome your comments